ss

Tuesday, June 12, 2012

விவசாயம் (22)


ஏரோட்டம்

இந்தப் படத்தில் காட்டியுள்ள மாதிரி விவசாயிகள் ஏர் பிடித்துக் கண்களால் பார்த்தே நீண்ட காலம் ஆகிவிட்டது. 

இந்தப் படத்தில் நான்கு ஏர் கண்ணுக்குத் தெரிகிறது. ஒரு ஏர் சற்று மறைவாக போய்க்கொண்டு உள்ளது. சுத்தமாகக் கண்ணுக்குத் தெரியாமல் ஒன்றிரண்டு ஏர் இருக்கலாம்.

ஏர் உழுவதில் தொழில் நுட்பம் உண்டு. ஒரு ஏர் ஒட்டுவது எப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட ஏர்களை ஒன்றாக ஓட்டுவது எப்படி என்பதெல்லாம் பழக்கத்தினால் கைவந்த கலையாகிவிடும். நான் இப்படித் தனியாகவும் பல ஏர்களுடன் சேர்ந்தும் உழவு செய்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் என்ன செய்கிறார்கள் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. 




அவர்கள் அந்த வயலில் ஏதோ ஒரு தானியத்தைச் சால் போடுகிறார்கள். 

ஆதாவது மழைபெய்யும்போதோ கிணற்றுநீரைக் கொண்டு ஈரப்படுத்தப்பட்ட நிலத்திலோ மானாவாரியாக தானியம் விதைப்பார்கள். ஆதாவது விதைத்தும் அதன்மேல் உழவு செய்வார்கள். அல்லது ஏர் உழும்போதே உழவு காலில் கூடவே பெண்கள் தானியத்தை ஒவ்வொன்றாக விழும்படி கோலம்போடும்போது கோலப்பொடியை விடுவதுமாதிரி மெதுவாக தானியத்தை விட்டுக்கொண்டே வருவார்கள். 

சால்போடுவதும் ஒரு கலை! ஒரு எக்கருக்கு எவ்வளவு தானியம் விதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஏற்றபடி கூடக்குறைய ஆகாமல் சால்போட வேண்டும்.

முதல் ஏருக்குப்பின்னால் உழவு சாலில் ஒருவர் சால்போட்டு;க்கொண்டே போக பின்னால் வரும் ஏர் முன்னால் போட்ட விதைகளை மூடிக்கொண்டே போகும். முன்னால் செல்பவர் போட்ட விதைகளை மூடிக்கொண்டே போகும் அதே நேரம் அதற்குப்பின்னாலும் விதை விழுந்துகொண்டே வரும். 

ஒரு ஏர் ஓட்டும்போது ஒரு சுற்றில் விதைகளைப் போட்டுக்கொண்டே போய் அடுத்த சுற்றில் மூடிக்கொண்டே வரும். ஒரே நேரத்தில் சால்போடும் வேலையும் முன்னால் போட்டதை மூடும் வேலையும் நடக்கும்.

சுமார் பதினைந்தடிக்கு ஒரு விழா என்று கணக்கிட்டு ஏர் ஓட்டுவார்கள். ஆதாவது ஏர் ஓட்டிய தாரைகள் பதிநான்கு அல்லது பதினாறு அல்லது பெரியதாக வேண்டும் என்றால் இருபது தாரைகள் கூட இருக்கலாம் அவைஅடங்கிய ஒரு பகுதியைத்தான் ஒரு விழா என்பார்கள். அது சிறிதாகவும் பெரிதாகவும் நமது தேவையைப் பொருத்து விருப்பம்போல் ஓட்டலாம்.

தானிய விதைப்பு இல்லாமல் வெறும் உழவு மட்டும் செய்வதாக இருந்தால் அங்கு பெண்களுக்கு வேலை இல்லை. ஆண்கள் மட்டும் ஏர் ஓட்டுவார்கள்.

விதைப்பின்போது ஒருதடவை அல்லது இரண்டு தடவை ஏர் ஓட்டுவார்கள். ஆனால் உழவு மட்டும் செய்வதாக இருந்தால் இடைவெளிவிட்டுப் பலமுறை ஒட்டுவார்கள். அப்போதுதான் மேல் மண் கீழும் கீழ்மண் மேலும் மாறிமாறிக் கலந்து மண் வளம் அதிகமாகும் நிலத்தில் இருக்கும் புற்கள் குப்பைகள் போன்றவை எல்லாம் மண்ணுடன் கலந்து எருவாக மாறும்.

எந்த அளவு ஒரு நிலம் அதிகமான அளவு உழப்படுகிறதோ அந்த அளவு மண் வளம் பெருகும். அதில் செய்யப்படும் பயிர் சிறப்பான பயன் கொடுக்கும்.

இப்படி எர் ஓட்டும் மாடுகளை பகல் பன்னிரண்டு மணிவாக்கில் தீனி தின்பதற்காகவும் விவசாயி சாப்பிடுவதற்காகவும் இடைவேளை விட்டுவிடுவார்கள். 
பிற்பகலில் தேவையைப் பொறுத்து ஏர்ப்பூட்டி மாலை வரை உழவு செய்வார்கள்.

நான் அருமையாக உழவு செய்வேன். மாடுகளை ஏரில் எப்படிப் பூட்டுவது கலப்பையையும் நுகத்தையும் மேழியையும் பிணைக்கும் வலிவுள்ள கயிற்றை எப்படிப் பிணைப்பது என்பதெல்லாம் அனுபவத்தால் தெரியலாம். எனக்கு அதுவெல்லாம் அத்துபடி!

நமது கலாச்சாரப்படி பெண்கள் ஏர் ஒட்டுவது இல்லை. ஏன் என்று கேட்டால் ஆகாது என்று ஒரே பேச்சில் சொல்வார்கள். அதற்கும் மேல் வற்பறுத்திக் கேட்டால் அவர்களுக்கே காரணம் தெரியாது. ஆனால் தெரியாது என்று சொல்வதற்குப் பதிலாக ஏப்பா சொன்னாக் கேக்காதா? விண்ணாளமா பேசுரே என்று கேட்டு வாயை அடைத்து விடுவார்கள்.

ஏன் இப்படி பெண்களை ஏர் ஓட்டக்கூடாது கால்நடைகளிடம் வேலை வாங்கும் பெரும்பாலான வேலைகளைச் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் என்று நான் ஆராய்ந்திருக்கிறேன்.

பெண்கள் கால்நடைகளிடம் வேலை வாங்குவது ஆகாது என்று சொல்வது மூடநம்பிக்கை. ஆனால் அதற்கு ஒரு உண்மையான காரணம் இருக்கிறது.

ஆதாவது நமது பாரம்பரிய இனமான காங்கேய இனமாடுகளில் பெரும்பாலானவை அதுவும் குறிப்பாகக் காளை மாடுகள் பெண்கள் பக்கம் வந்தால் முட்டித் தள்ள முயற்சிக்கும். முட்டித் தூக்கி எறிந்தும் விடும். அதனால் பெண்கள் முட்டும் பழக்கமில்லாத பசுமாடுகளை மட்டும் மேய்ப்பார்கள். பிடித்துக் கட்டுவார்கள். பாலும் கரப்பார்கள். ஆனால் காளைமாட்டுப் பக்கம் செல்லமாட்டார்கள்.

சில துணிச்சல்காரப் பெண்கள் துணிந்து காளைமாடுகளைக் கொண்டு ஏரோட்டிவிடக் கூடாது என்பதற்காகவே பெண்கள் ஏரோட்டினால் ஆகாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அத்தகைய இனிமையான காலம் கடந்து போய்விட்டது. இப்போது கிராமங்களில் மழைபெய்தால்கூட யாரும் கண்டுகொள்வது இல்லை. காரணம் கால்நடைகள் இல்லை என்பதுமட்டுமல்ல மானாவாரி விவசாயமே கைவிடப்பட்டு விட்டது என்பதும் இருக்கும் வேலைகளும் இயந்திரக் கலப்பையால் செய்யப்படுவதுமே ஆகும். 

வரும் தலைமுறையினர்க்கு இந்த அனுபவங்கள் எல்லாம் தெரியாது என்பதை நினைக்கும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.

என்ன செய்ய!...

1 comment:

  1. ஐயா நான் எனது பள்ளி பருவத்தில் நிலக்கடலை சால் விட்டிருக்கேன்.

    ReplyDelete