ss

Friday, June 15, 2012

விவசாயம் ( 23 )


கால்நடைகளும் கயிறுகளும்

கால்நடைகளைப்பற்றி விவசாயம் செய்பவர்கள் செய்யாதவர்கள் இருவருக்கும் தெரியும்.  

ஆனால் கால்நடைகளுக்கும் கயிறுகளுக்கும் உள்ள உறவு விவசாயம் செய்பவர்களுக்கே நிறையப் பேருக்குத் தெரியாது. கொஞ்சம் தெரிந்துகொள்வோமே!

தலைக்கயிறு : இது மாடுகளைக் கட்டி நாம் இழுத்துப் பிடிப்பதற்கும் கட்டுத்தரையில் உள்ள முளைகளுடன் சேர்த்துக் கட்டுவதற்கும் பயன்படும் கயிறு ஆகும். இது ஒரு அல்லது ஒன்றரை செ மீ கனமும் ஆறடியில் இருந்து பத்தடிவரை நீளமுள்ளதாகவும்  இருக்கும்.


முக்கணாங்கயிறு: இது மாட்டை நேரடியாகக் கயிற்றால் கட்டி இழுத்துப் பிடிக்க முடியாது என்பதால் அதற்குத் தோதாக மாட்டின் மூக்கில் ஓட்டை போட்டு அதன்வழியாக கொம்புகளுக்குப் பின்னால் அதன் தலையைச் சுற்றிக்கட்டப்படும் கயிறாகும். அந்தக் கயிற்றில் தான் தலைக்கயிறு கட்டப்படும். அரை செ மீ கனம் இருக்கும் 

சுண்டு தும்பு: இது தலைக்கயிற்றையும் மூக்கணாங்கயிற்றையும் இணைக்கும் இரட்டையாக முறுக்கப்பட்ட சிறு கயிறு ஆகும். அதன் ஒரு முனை மூக்கணாங்கயிற்றுடனும் மறுமுனை தலைக்கயிற்றுடன் உள்ள திருகணிக் கொலுசுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒற்றையாக முக்கால் செ மீ கனம் இருக்கும்.

முகரைக்கயிறு: இது மாடுகள் பெரிய கன்றுகளாக இருக்கும்போது இன்னும் மூக்குக் குத்தும் வயது இல்லதபோது அதைக் கட்டுப்படுத்த முகத்தைச் சுற்றிக் கண்ணிபோல் கட்டப்படும் கயிறு ஆகும். மூக்கணாங்கயிறு குத்தும் வரை இந்த முகரைக் கயிற்றில்தான் தலைக்கயிறு பிணைக்கபட்டிருக்கும்.

கொம்புக்கயிறு: இது மாடுகளின் தலை அழகாக இருக்கதற்காகக் கொம்புகளைச் சுற்றிக்கட்டப்படும் அழகான கனமான கருப்புக் கயிறு ஆகும். மூக்கணாங்கயிற்றுடன் பிணைக்கப்ட்டிருக்கும் தலைக்கயிற்றை இந்தக் கொம்புக்கயிற்றுக்கு உள் நுழைத்துத்தான் இந்தப்பக்கம் கொண்டு வந்து நீளமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். இந்தக் கொம்புக்கயிற்றின் நுனியில் சுங்கம் என்று சொல்லப்படும் குஞ்சம்போன்ற ஒன்று இருக்கும். இந்தக் கயிற்றின் கனம் ஒன்றரை செ மீ வரை இருக்கும்.

சாட்டைக்கயிறு: ஒரு சிறு மூங்கில் குச்சியுடன் இணைக்கப்பட்ட கெட்டியாக முறுக்கேற்றப்பட்ட கயிறு. ஒரு முனை அரை செ மீ கனமும் மறுமுனை கால் செ மீ கனமும் இருக்கும் நல்ல விரைப்புடன் கம்பிபோன்று இருக்கும். மாடுகளை அடிப்பதற்குப் பயன்படுகிறது.

துளிர்: இது சாட்டையின் நுனியில் கயிறுடன் இணைந்திருக்கும் மெல்லிய கற்;றாழை நாரால் திரிக்கப்டும் கயிறு. இதன் நுனி மிக மெல்லியதாக இருக்கும். மாட்டை அடிக்கும்போது காயம் படாமல் வலிப்பதற்காகத்தான் சாட்டைக்கயிறு இப்படி இரண்டு விதமாக இணைக்கப்படுகிறது.

வாய்க்கூடை: இதுவும் தென்னை நார்க் கயிற்றால்  பின்னப்படும் ஒரு அங்குலத்துக்குக் குறையாத அளவுள்ள இடைவெளிகள் கொண்ட கூடைபோன்ற  ஒன்றாகும். இது மாடுகள் ஏர்ப்பிடிக்கும்போது அருகாமையில் உள்ள பயிர்களைக் கடிக்காமல் இருப்பதற்காக மாடுகளின் வாயை மூடிக்கட்டப்படும் அமைப்பாகும். கன்றுகள் பால்குடிக்காமல் பாதுகாப்புக்காகக் கட்டப்படும் சிறிய வாய்க்கூடைகளும் உண்டு.

அணைகயிறு: இது கரவை மாடுகள் பால்கரக்கும்போது காலால் உதைத்துவிடாமல் இருப்பதற்கும் இடம்விட்டு நகராமல் இருப்பதற்கும் வாலால் அடிக்காமல் இருப்பதற்கும் பின்னங்கால் இரண்டையும் வாலையும் சேர்த்து அணைத்துக் கட்டும் மெல்லிய கயிறு ஆகும். மூக்கணாங்கயிறு அளவுக்கு இருக்கும்.

கழுத்துக்கட்டி: இதுவும் ஒரு கனமான கயிறாகும் இது அழகுக்காக மாடுகளின் கழுத்தில் கட்டப்படும். அதில் மணி கட்டுபவர்களும் உண்டு. அதைப் பெரும்பாலும் வாடகை வண்டிக்காரர்கள்தான் முன்னர் கட்டுவார்கள் விவசாயிகள் அதிகமாக அப்படிச் செய்வது இல்லை. 

இதேபோல ஆடுகள், எருமைகள் போன்றவற்றுக்கென பலவிதமான அளவுகளில் கயிறுகள் பயன்படுத்தப்படும்.

தும்பு: இது இரண்டாக மடித்து முறுக்கப்பட்ட கெட்டியான கயிறு. இதைக்கொண்டுதான் வண்டியிலோ ஏர்க்காலிலோ நுகத்துடன் சேர்த்து மாடுகளைக் கழுத்துடன் சேர்த்துக் கட்ட வேண்டும். 

தாம்புக்கயிறு, இது களத்தில் மாடுகளைக் கொண்டு கதிர்களை மிதிக்கவைக்கும்போது நான்கு மாடுகளையும் பிணைக்கக்கூடிய வகையில் நான்கு தும்புகளை இணைத்ததுபோல் கயிற்றாலான அமைப்பு ஆகும்.

கலப்பைக் கயிறு: இது மாடுகள் பூட்டப்பட்ட நுகத்துடன் கலப்பையையும் கலப்பையுடன் நுகத்தை இணைக்கும் நீண்ட கெட்டியான நான்கு அங்குல கனமுள்ள மரத்தையும் சேர்த்துக்கட்டப் பயன்படும் கெட்டியான கயிறு ஆகும்.

இதுதவிர வண்டியில் பாரம் ஏற்றும்போது கட்டும் பாரக்கயிறு, மாடுகளைக்கொண்டு கிணற்று நீரை இறைக்கும் கமலை எனப்படும் அமைப்பில் பயன்படும் வால்கயிறு மற்றும் வடக்கயிறு, பல்வேறு கால்நடைதொடர்பான வேலைகளுக்குப் பயன்படும் சூடிக்கயிறு போன்றவையும் கால்நடைகளடன் தொடர்புள்ள கயிறுகள் ஆகும்.

இந்தக் கயிறுகளைப்பயன்படுத்திப் போடப்படும் முடிச்சுகள் பலவகைப்படும்.

சுருக்கு முடி, படுமுடி, ஆக்குப் பூட்டு, தும்புமுடி, முகரை முடி, கீழு;ப்பூட்டு, மேல்பூட்டு போன்ற பலவகையான முடிச்சுவகைகள் எல்லாம் உண்டு. 

இந்தக்கயிறுகள் அறுந்துபோகும்போது இணைப்பதற்கும் பல முறைகள் உண்டு.

பழைய முறை விவசாயத்தின் போது விவசாயிகள் பெரும்பாலான கயிறுகளைத் தாங்களே திரித்து உருவாக்கும் வல்லுனர்களே இருந்தார்கள்.

அவர்கள் கயிறு திரிப்பதற்காக கற்றாழை நார், சணல் நார், போன்றவற்றையும் நெசவாளர்கள் சேலை நெய்து முடிக்கும்போது இருபுறமும் துண்டித்து எடுக்கும் கரை என்று சொல்லப்படும் புதுத்துணியில் ஆன நீளமான துண்டுகளையும் பயன்படுத்தினார்கள்.

இந்தக்கயிறுகளின் பயன்பாடுகளில் பெரும்பாலானவைற்றை நான் அறிந்திருக்கிறேன் என்பதும் இன்றைய காலகட்டத்தில் ஒரு புதுமையில் ஒரு பழமை  ஆகும்.

1 comment: