ss

Tuesday, June 19, 2012

விவசாயம் ( 24 )


சாணம்

நமது பண்பாட்டின்படி பெரும்பாலோரால் மாட்டுச்சாணம் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

காரணம் மாடுகளின் விவசாயப் பயன்பாடுதான். ஆதிமனிதனில் இருந்து இன்றைய நவீன மனிதன் வாழும் உலகில்கூட இன்னும் கால்நடைகளின் பயன்பாடு இருந்துகொண்டுதான் உள்ளது.

வசிக்கும் வீடுகளின் தரைகளை மாட்டுச்சாணம் கொண்டு மெழுகுவது இன்னும் ஓரளவு நடைமுறையில் இருக்கும் பழக்கமாகும்.

அதேபோலக் கோவில்களிலும் திருவிழாக் காலங்களில் தெருவெங்கும் சாணம் கலந்த நீர் தெளிக்கப்பட்டு கோலமிட்டு அழகு செய்யப்படுவதைக் காண்கிறோம்.

பசுஞ் சாணத்தைக் கொழுகட்டை போலப் பிடித்து அதைப் பிள்ளையாருக்குப் பதிலாக வைத்து வணங்கும் வழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

அத்தகைய மாட்டுச் சாணத்துக்கும் மக்களுக்கும் மட்டுமல்ல விவசாயத்துக்கும் விசாயப் பயிர்களுக்கும் நெருக்கமான உறவு உள்ளது.

விவசாயிகளின் நிலத்தில் உழுவதும் வண்டி இழுப்பதும் கிணற்று நீரை இரைப்பதும் மட்டும் மாடுகளின் வேலையாக இருக்கவில்லை.

பசுமாடுகளில் இருந்து கரக்கும் பால் மற்றும் கால்நடைகளின் மாமிசம் இன்றளவும் புறக்கணிக்கமுடியாத ஒரு உணவுப்பொருளாக வழக்கில் உள்ளது. 

மக்களுக்காக உழைப்பதுமட்டுமல்ல மக்களுக்கான பசும்பாலைத் தருவதுமட்டுமல்ல, தன்னையே உணவாக மக்களுக்குத் தந்து விடுகிறது. 


அது எதையும் விரும்பித் தருவது இல்லை. நாம் தான் எடுத்துக் கொள்கிறோம்.

அதனால் அதை அடித்துத் தின்றுவிட்டு மறுபக்கம் வணங்கவும் செய்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, மாடுகள் இன்னோரு நன்மையையும் செய்கின்றன. ஆதாவது மனிதன் விளைவிக்கும் பயிர்;களில் இருந்து தானியங்களை அவன் எடுத்துக் கொண்டது போக மீந்திருக்கும் கழிவுப்பொருளான வைக்கோலையும் இதர தோகைகைளயும் எண்ணெய் எடுத்தது போக மீந்திருக்கும் சக்கையான புண்ணாக்கையும் தான் உண்டு வாழ்கிறது.

அதுமட்டுமல்ல தான் வெளியேற்றும் கழிவுப்பொருளான சாணத்தின் மூலம் நிலத்திலுள்ள மண்பழு உட்பட எண்ணற்ற உயிரினங்களுக்கு உணவாவது மட்டுமல்ல அதன் தொடர்ச்சியாக மண் பக்குவப்படுத்தப்பட்டு வளமடைகிறது. அதன்காரணமாக மேலும் மேலும் தொடர்ந்து விவசாயம் செய்து மகசூல் எடுத்து மக்கள் வாழ முடிகிறது.

இத்தகைள முக்கியத்துவம் இருந்ததால்தான் மாட்டுக்குக் கொடுத்த மரியாதை அதன் சாணத்துக்கும் கொடுக்கப்பட்டது. 

முன்னர் இயந்திரங்கள் பழக்கத்துக்கு வராதபோது ஒவ்வொரு விவசாயியிடமும் கால்நடைகள் குறிப்பாக மாடுகள் அவசியம் இருந்தன. அப்போது மாடுகளை கொட்டகைகளில் அடைக்க மாட்டார்கள். நிரந்தரமான கட்டுதரைகளிலும் கட்டமாட்டார்கள். 

அடைமழை காலங்கள் தவிர மற்ற காலங்களில் விவசாய நிலங்களிலேயே கட்டிவிடுவார்க்ள். அப்போதுதான் அவற்றின் சாணம் மட்டுமல்ல சிறு நீரும் வீணாகாமல் நிலத்தில் சேரும். சாணம் காய்ந்து போவதற்குள் மண்ணில் கலந்து விட்டால் அது எருக் குழிகளில் சேமிக்கபடும் சாணத்தைவிடக் கூடுதல் பயனளிக்கும் என்பதுதான் காரணம். 

சாணத்தின் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததால் அவற்றைக் காலால் தள்ளுவதைக்கூடப் பெரியவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

அப்போது நிறையக் கால்நடைகள் இருந்ததால் நடைபாதைகளிலும் தெருக்களிலும் காட்டு வழிகளிலும் சாணம் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும். தெருவில் போகின்ற விவசாயி கண்களில் அந்தச் சாணம் கண்ணில் பட்டால் ஒதுங்கிப் போகமாட்டார்கள். அப்படியே கைகளால் அள்ளிக்கொண்டு போய் காட்டுக்குப் போவதாக இருந்தால் தனது நிலத்திலும் வீட்டுக்குப் போவதாக இருந்தால் எருக் குழியிலும் போடுவார்கள்.

அப்போது எரிவாயு மண்ணெண்ணெய் போன்றவை சமையல் அடுப்புக்கு பயன்பாட்டுக்கு வராத காலத்தில் சாணமும் வட்டவட்டமாகத் தட்டி வெய்யிலில் காயவைத்து வரட்டிகளாக அடுப்பெரிக்கச் சேமித்து வைத்துக் கொள்வார்கள்.

சுடுகாட்டில் பிணங்களை எரிப்பதற்குக்கூட சமீபகாலம் வரை இந்த வரட்டிகள் பயன்பட்டு வந்தது.

அதன்காரணமாக விவசாயம் இல்லாதவர்கள்கூட சாணத்தைக்கண்டால் விடாமல் அள்ளிச்செல்வது வழக்கமாக இருந்தது.

இது தவிர சாணிக்கூடை என்று சொல்லப்படும் வாயகன்ற முங்கில் கூடைகளை எடுத்துக்கொண்டு மேய்ச்சல் பகுதிகளுக்குச் சென்று சாணம் சேகரித்துச் சுமந்து வருவது அக்காலப் பழக்கமாக இருந்தது. 

நான் சிறு வயதில் பத்து வயதிலேயே பள்ளி விடுமுறைநாட்களில் நான்கு கி மீ வரை சென்று சாணம் சேகரித்துந் சுமந்து வந்திருக்கிறேன். 

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. இயந்திரப் பயன்பாடு அதிகரித்த பின்பு கால்நடைகளின் வேலை குறைந்தது மட்டுமல்ல அவற்றிடம் வேலை வாங்கும் ஆட்களும் குறைந்து அதைத் தொடர்ந்து கால்நடைகளின் குறிப்பாக மாடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. 

இப்போதெல்லாம் தெருக்களில் முன்போல் சாணம் கிடப்பது இல்லை. அப்படியே கிடந்தாலும் இப்போது எல்லோரும் ஏதாவது ஒரு வண்டிகளில் பயணம் செய்வதால் சாணத்தைக் கொண்டுபோய் நிலத்தில் போடும் வழக்கம் அறவே ஒழிந்துவிட்டது. வாகனச் சக்கரங்களில் அரைபட்டு வீணாகத்தான் போய்க்கொண்டுள்ளது.

மாடுகளின் பயன்பாடு குறைந்ததால் நாட்டு இனமான காங்கேய மாடுகளெல்லாம் போய் நிறையப் பால்கரக்கவேண்டும் என்பதற்காக சீமைப்பசுக்களோடு சேர்த்துக் கலப்பினப் பசுக்கள் நடைமுறைக்கு வந்து காலப்போக்கில் சீமைப்பசுக்கள்தான் என்னும் நிலைமைதான் என்று ஆகிவிட்டது. 

அவற்றின் பாலோ பால்பொருட்களோ சவையாக இல்லை என்பது மட்டுமல்ல அவற்றின் சாணமும் தரமற்றதாகவே உள்ளது. 

இத்தனைக்கும் மேலாக முன்னர் மாடுகள் இயற்கையாக மேய்ந்து இயற்கையான தீவனத்தை உண்டு வளர்ந்த காலத்தில் சாணம் கெட்டியாகவும் நல்ல மணத்துடனும்; இருந்தது.

இப்போது மனிதன் மாதிரியே கால்நடைகளுக்கும் ஆலைத் தயாரிப்புத் தீவனங்கள் பயன்பாட்டுக்கு வந்தபின்னால் பால் நிறைய இருக்கவேண்டும் என்பதற்காக தானிய மாவைக் கூழாகக் காய்ச்சி அவற்றுக்குத் தீனியாகக் கொடுக்கத் துவங்கிய பின்னால் அவற்றின் சாணம் நாறத் துவங்கிவிட்டது.

இப்போதெல்லாம் மாட்டுச் சாணத்தைக் கைகளில் எடுக்க விரும்பும் நிலையில் இல்லை. வீடுகளின் தரைகளை மெழுகும் நிலையிலும் இல்லை. காரணம் துர்நாற்றமே!

மாடுகளின் பயன்பாடு பெரும்பாலும் பாலுக்கு மட்டுமே என்று ஆனபின்னால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதனால் மாடுகளின் மூலம் கிடைக்கும் சாணத்தின் அளவும் குறைந்து விட்டது.

அதுவும் விவசாய நிலங்களுக்குச் சம்பந்தமில்லாமல் பெரும்பாலும் சேமிக்கப்படுகிறது. முன்போல் நிலத்திலேயே பட்டி போடும் பழக்கமெல்லாம் மறைந்து விட்டது. அதனால் மாடுகளின் மூத்திரம் முழுவதுமாக வீணாக்கப் படுகிறது மட்டுமல்ல சாணமும் சாண எரிவாயு போன்ற வேறு உபயோகங்களுக்கும் பயன்படுத்துவதால் இருப்பதைக் கூட முழுமையாக நிலங்களுக்குக் கிடைக்கும்படி செய்வது கிடையாது.

மாடுகளுக்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்ததால் விவசாய வேலைகள் நடக்கலாம். ஆனால் விவசாயப் பயிர்களை உணவாக உட்கொண்டு சாணமாகப் போட இயந்திரங்களால் முடியுமா? 

ஆகையால் மாட்டுத் தீவனாமாகப் பயன்பட்டு சாணமாக மீண்டும் நிலத்துக்குப் போகவேண்டிய நிறையத் தீவனங்கள் தீக்கு இரையாக்கப்படுகின்றன.

ஒருபக்கம் தீவனம் தீக்கு இரையாக்கப்படுகிறது. மறுபக்கம் நிலத்துக்கு வேண்டிய சாணம் கிடைக்காமல் நிலங்கள் வெறும் வேதி உரங்களின் பயன்பாட்டால் கெட்டுப் போய்க்கொண்டு உள்ளன.

முன்னரெல்லாம் ஒரு விவசாயியிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று கேட்டால் பத்து ஏக்கர் நஞ்சையும் பத்து ஏக்கர் புஞ்சையும் இருக்கிறது. அதைத்தவிர ஒரு இருபது ஏக்கர் கொரை அல்லது மேய்ச்சல் நிலம் இருப்பதாகச் சொல்வார்கள். 

அந்தத் தரிசு நிலங்கள் கால்நடைகள் மேய்வதற்காகவே விடப் படுபவை. அவற்றின் நடுப் பகுதிகளில் மாடுகள் மேயும் வேலிக்கால்களில் ஆடுகள் மேயும் அதற்கெனவே நிறைய ஆடுமாடுகள் இருக்கும். அவற்றை விவசாய நிலங்களில் அடைத்துப் பட்டி போடுவதால் நிலத்தின் வளம் மிகுதியாகி என்ன பயிர் செய்தாலும் நல்ல மகசூல் கிடைக்கும்.

இத்தனை பயனுள்ள விவசாயியையும் விவசாய நிலங்களையும் தன்னிடமிருந்து பிரிக்கமுடியாத சாணத்தை நவீன விவசாயம் பிரித்துவிட்டது. அதனால் நிலங்கள் களர்த் தன்மையுடன் விவசாயத்துக்குப் பயனற்றதாகி வருகின்றன.

இந்த நிலைமையில் நவீன விவசாயத்தின் கேடுகளும் பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் அருமையும் உணரப்பட்டு வருகின்றது.

உடனடியாக நிலத்தைப் பாரம்பரிய விவசாயத்துக்கு மாற்ற அடிப்படை நிபந்தனையாக உள்ள கால்நடைகளுக்கும் அவை மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களுக்கும் அவற்றிடம் வேலை வாங்க வேலையாட்களுக்கும் என்ன செய்வது? 

இயற்கை வேளாண்மைக்கு வேண்டிய சாணத்தை வெளியில் இருந்து சந்தையில் வாங்கும் பொருட்களைப் போல் வாங்கி செய்துவிட முடியமா? 

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதரும்  விதத்தில் செய்தால்தான் இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்யமுடியும்.

இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்ய இது இல்லாமல் முடியாது 

அதுதான் சாணம்!

2 comments: