ss

Saturday, June 9, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 25 )


பிரபஞ்சக் கண்ணோட்டம்


நாம் வாழும் இந்தப்பூமியில்  அடங்கியுள்ள வகை வகை யான பொருட்களும் தாவரங்களும் உயிர்களும் அவைகளில் அடங்கியுள்ள அடிப்படை மூலக்கூறுகளும் அந்த மூலக்கூறுகளின் இயக்கங்களும் சாதாரண மனிதன் புரிந்துகொள்ள முடியாதவை.
 
அதேபோல நாம் வசிக்கும் இந்தப் பூமியைச் சுற்றியுள்ள வாயுக்கள், அதற்கப்பால் உள்ள புறவெளி, அதன் எல்லையற்ற தன்மை, அதில் இயங்கி வருகின்ற கணக்கிலடங்காத கோடானு கோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், அந்த நட்சத்திரங்களையெல்லாம் உள்ளடக்கிய எண்ணற்ற நட்சத்திர மண்டலங்கள், அதற்கப்பால் என்ன, இதன் முடிவென்ன என்றே புரியாத புதிரான இப்பிரபஞ்சம் இதைப்பற்றி யெல்லாம் சாதாரண மனிதன் புரிந்து கொள்வது கடினம்.
 
ஆனால் சாதாரண மனிதனில் இருந்து மிகப்பெரும் அறிவாளி வரை ஒவ்வொருவரும் இதனுள்தான் வாழ்ந்து வருகிறோம். எனவே நாம் வாழும் பூமியை உள்ளடக்கிய இப் பிரபஞ்சத்தைப் பற்றி இதுவரை அறியப்பட்டுள்ள அடிப்படையிலாவது தெரிந்து கொள்வது நாம் இவ்வுலகில் வாழவேண்டிய சரியான வழியைப் புரிந்து கொள்ள உதவும்.

இதுவரை நாம் அறிந்துள்ளவற்றில் மிகச் சிறியதான அணுவும் அதனுள் இருக்கும் எலெக்ட்ரான், புரோட்டான் நியூட்ரான், போன்றவற்றில் இருந்து மனதால் எண்ணிப் பார்க்கும் தூரத்துக்கு அப்பாலும் விரிந்திருக்கும் பிரபஞ்சத்தின் அத்தனை உறுப்புகளுமாக சதா இயங்கிக் கொண்டே உள்ளன.
 
அணுவுக்குள் இயக்கம் உள்ளது. அத்தகைய அணுக்களைப் பல்வேறு விதமான விகிதங்களில் உள்ளடக்கிய பல் வேறு வடிவங்களைக் கொண்ட எண்ணற்ற பொருட்களும் அதனதன் தனித்த குணங்களுக்கேற்ப இயங்குகின்றன.

புறச் சூழ்நிலைமையை உட்கிரகித்து வளரும் வாழும் மீண்டும் அழியும் குணம் கொண்ட கோடிக் கணக்கான தாவரங்கள், மற்றும் உயிரினங்கள் ஆகியவை இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

அவையாவும் உள்ளடங்கிய உலகமான பூமியும் சதா இயங்கிக் கொண்டு உள்ளது. அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதோடு சூரியனையும் சுற்றிக் கொண்டுள்ளது.

சூரியனைச் சுற்றிலும் பல்வேறு கிரகங்களும் அவற்றின் துணைக் கோள்களும் அதனதன் பாதையில் இயங்குகின்றன.

விண்கற்களில் இருந்து வால்நட்சத்திரம் வரை பல விந்தையான இயக்கங்கள் சூரிய மண்டலத்தில்உண்டு. அறிந்தது போக இன்னும் அறியப்படாத கோள்கள்கூட இருக்கலாம்.

சூரியனைப் போன்ற குணமுடைய சிறியதும் பெரியதுமான கோடானு கோடிக் கணக்கான சூரியன்களான நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதிகள் எண்ணற்றவை உள்ளன. அதுதான் பிரபஞ்சம்.

காலத்துக்கும் தூரத்துக்கும் தொடக்கமும் முடிவும் கிடையாது. எனவே பிரபஞ்சத்தின் எல்லையை இதுதான் என்று வரையறுக்கவும் முடியாது.

அப்படி ஒரு எல்லையை வரையறுத்தால் அதற்கு அப்பால் என்ன என்ற கேள்வியும் காலம் நிர்ணயித்தால் அப்புறம் என்ன அதற்கு முன் என்ன என்ற கேள்விகளும் உடனே எழும்.

ஆனால் பிரபஞ்ச எல்லை இதுதான் என்று சொல்ல முடியாவிட்டாலும் பெருவெடிப்பின் மூலம் சிதறி விரிவடைந்து சென்றுகொண்டே இருக்கும் இந்தப் பிரபஞ்சம் அந்த விசை முடிந்தவுடன் மீண்டும் சுருங்கத் துவங்கி மீண்டும் ஒரு புள்ளியில் மறையும்.

விரிந்து செல்லும் பிரபஞ்சம் மீண்டும் சுருங்கத் துவங்கும் எல்லைதான் பிரபஞ்சத்தின் எல்லை!

ஆனால் அது எவ்வளவு தூரத்தில் அல்லது காலத்தில் என்று நாம் இன்னும் நிச்சயமாக அறியவில்லை!

அது எண்ணற்ற பிரபஞ்சத் தொகுதிகள் அடங்கிய அண்டமாக விரிவடைதுகொண்டே செல்லும்.

அன்னடத்தின் எல்லை இன்னதென்று  யாராலும் பதில் சொல்ல முடியாது.
 
எனவே எல்லையற்ற பிரபஞ்சத்தில், அண்டத்தில்  நாம் வாழும் இவ்வுலகமே ஒரு தூசினைப் போன்றது.

அப்படிப்பட்ட ஓர் உலகில் வாழும் மனிதராகிய நாம் நம் நிலையைப் புரிந்து கொள்ளாமல் பொருத்தமில்லாத முரண்பட்ட வாழ்வு வாழ்ந்து மடிவதைவிட இப்பிரபஞ்சத்தை, இவ்வுலகை, அதில் அடங்கியுள்ள அளவற்ற அம்சங்களை, அதன் ஒரு பகுதியான மனித வாழ்வை, அந்த வாழ்வுக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பை, அத்தகைய வாழ்வில் எது சரியானது என்ற ஞானத்தைப் பெறுவது உயர்ந்த கடமையாகும்.
 
அத்தகைய ஞானம் இவ்வுலக வாழ்வின் உண்மையான பொருளை உணரவைக்கும்.

அதனால் வளர்ச்சி விதிகளோடு முரண்பட்டு துன்பப் படுவதற்குப் பதிலாக சகல இயக்கங்;களுக்கும் ஈடு கொடுத்து பிற சக்திகளுக்கும் உயிர்களுக்கும் சமுதாயத்துக்கும் இணக்கமாக உயர்ந்த வாழ்வு வாழ முடியும்.

அதுதான் மனித வடிவிலான தோற்றத்தின் மாண்புமிக்க பண்பாய் இருக்க முடியும்.
 
இத்தகைய பிரபஞ்சத்தைப் பற்றிய சரியான பார்வையை வளர்த்து அறிஞர்களின் கண்டுபிடிப்புகளோடு இணைத்து மேலும் மேலும் பிரபஞ்சக் கண்ணோட்டதை வளர்த்துக் கொள்வது உயர்ந்த நெறியாகும்.

அதுவே நமது வாழ்க்கை என்கிற பாத்திரத்தையும் வருங்காலத்தையும்  மிகச் சிறப்பானதாக்க உன்னத வழி ஆகும்!

No comments:

Post a Comment