ss

Saturday, June 9, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 26 )


தத்துவம்


அணுவுக்கு உள்ளே இருந்து எல்லையற்ற அண்டவெளியில் உள்ள அத்தனையும் வரை சதா இயங்கிக் கொண்டே இருக்கிறது.

அது பல்வேறு திட, திரவ, வாயுப் பொருளாகவும் வெப்பம், ஒளி, குளிர், பல்வேறு விதமான கதிர்கள் போன்றவையாகவும் இன்னும் வேறு பல அறிவியல் பொருட்களாகவும் உணரப்படுகிறது.  
    
இன்னும் பூமிக்கு உள்ளேயும் அண்ட வெளியிலும் மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டதை விட கண்டுபிடிக்கப் படாதவை கணக்கற்ற மடங்கு அதிகம்.

சுருங்கச் சொன்னால் மனிதனால் அறியப்பட்டதற்கு அளவுண்டு இன்னும் அறியப் படாததற்கு அளவே கிடையாது. 
    
நம்மால் அறியப்பட்ட இவ்வலகம் பல்வேறு குணங்களைக் கொண்ட எண்ணற்ற பொருட்களாகவும் தாவரங்களாகவும் உயிரினங்களாகவும் அவற்றுக்குள் இயங்கும் சக்தியாகவும் இயங்கிக் கொண்டுள்ளது. 

அதேபோல் பூமிக்கு வெளியிலும் இயக்கம் எல்லையற்று விரிந்து பரந்துள்ளது. 

நாம் வாழும் இவ்வுலகில் அடங்கியுள்ள பல்வேறு பொருட்களில் மிகப் பெரும்பாலானவை இன்னும் நாம் அறியாத பூமியின் உட்பகுதியில் அடங்கியுள்ளன. அது பெரும்பாலும் திட, திரவ நிலையில் உள்ள பெரும் வெப்பத்தை உள்ளடக்கிய பகுதியாக உணரப்படுகிறது. 

ஒருக்கால் நம் வரையறுப்புக்கு மாறாக பூமியின் உட்பகுதி வேறு வடிவத்திலும் குணத்திலும் இருக்கலாம்.

ஆனாலும் இயக்கம் என்பது பொதுவானது. மாற்ற முடியாதது. 
    
இப்பூமியில் நாம் அறிந்துள்ள மேற்பகுதியிலேயே கூட பெரும்பகுதியானவை வெளியில் புலப்படக்கூடிய முறையில் ஒரே திட்டவட்டமான உருவத்துடனும் குணத்துடனும் நிலையான தோற்றத்துடனும் இருப்பவைதான் அதிகம். (ஆனாலும் அவற்றின் உட்கூறுகள் இயங்கிக் கொண்டுதான் உள்ளன.) 

வாயுக்கள் தொடர்ந்து சலனமடைந்து கொண்டுள்ளன. மேற்பகுதி பல்வேறு வகையான மண்ணாலும் பாறைகளாலும் நீராலும் சூழப்பட்டுள்ளது. மேற்பகுதியில் நீர் ஆவியாதலும் மீண்டும் மழையாகப் பொழிதலும்  தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. 

பெருங் கடல்களும் துருவப் பிரதேசங்களும் உப்புநீராலும் பனியாலும் நிரம்பப்பெற்று அதற்குண்டான குணங்களுடன் விளங்குகின்றன. 

மண்ணும் பாறைகளும் நீரும் கலந்துள்ள பூமியின் மேல்தட்டுப் பகுதியில் பல்வேறு வகையான குணங்களைக் கொண்ட கனிமங்கள் நிரம்பியுள்ளன. 
   
பூமியின் புறப்பகுதியில் உள்ள மண், நீர், காற்று இவற்றை ஆதாரமாகக் கொண்டு எண்ணற்ற தாவரங்களும் உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன.

உயிரற்ற பொருட்களின் இயக்கம் தன்னளவில் நடந்து கொண்டே அதனுடன் கிரியை செய்யும் வேறு பொருட்களுடன் சேர்ந்தால் உடனடியாகவோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகவோ மாற்றமடைந்து பின் மீண்டும் வெளிப்படையான அசைவின்றி ஒரே நிலையில் காணப்படும
     
ஆனால் தாவரங்களும் உயிரினங்களும் வெளிப்புறச் சூழலில் தமக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு தொடர்ந்து தோன்றி வளர்ந்து வாழ்ந்து மறையும் குணம் கொண்டவை.

அதிலும் தாவரங்கள் இடம்விட்டு இடம் பெயராமல் அதன் ஆயுளைப் பெரும்பாலும் முடித்துக் கொள்கின்றன. (சில விதி விலக்குகள் இருக்கலாம். அவை பரவும் முறையும் வேறு வேறு.) 

ஆனால் உயிரினங்களான மனிதரும் மற்றவையும் தம் வாழ்நாளிலேயே தாம் வாழவும் தமது தேவைக்காகவும்  தொடர்ந்து இடம்விட்டு இடம் மாறுபவை.

அதுமட்டுமல்ல தாவரங்களும் மற்ற உயிரினங்களும் தமக்குப் பொருத்தமானதை உண்டுவாழக்கூடிய குணமும் கொண்டவை.

ஆனால் தாவரங்களில் இல்லாத மற்றொரு குணமான விருப்பு வெறுப்பு என்பவை குறைவான அளவில் இருந்து மிக அதிகமான அளவுவரை மனிதருக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு. 
    
இயற்கையான இயற்பியல் வேதியியல் குணங்களுக்கு அப்பால் உயிரியல் வாழ்க்கை யென்னும் குறிப்பிட்ட வடிவில் தோன்றி, உட்கொணடு, வளர்ந்து, வாழ்ந்து, மறையும் குணங்களுக்கு அப்பால்  இனப்பெருக்கம் செய்யும் பண்புகளுக்கு அப்பால் விருப்பு வெறுப்புடன் வாழும்  உயிரினங்களிலேயே  அதிகப்படியான விருப்பு, வெறுப்பைத் தன்னிடம் கொண்டு வாழும் உயிரினம் மனிதன்மட்டுமே! 
    
மற்ற உயிரினங்களில் இருந்து வித்தியாசமானவனாக மனிதனை மாற்றிய உழைப்பும் தொடர்ந்த இயந்திர வளர்ச்சியும் தொழில்நுட்பமும் ஆராய்ச்சியும் சிந்தனையும் கலையும் கலாச்சாரமும் அரசியலும் பண்பாடும் வாழ்வும் அழிவும் அத்தனையும் தொடக்க நிலையில் இருந்து தொடர்ந்து உயர்ந்த தரத்தில் மாறிக்கொண்டு போகும் விருப்பு வெறுப்பு என்னும் குணங்களின் பிரதிபலிப்புத்தான் ஆகும். 

மனித உணர்வுகள் மற்ற உயிரினங்களில் இருந்து  இன்று அற்புத வளர்ச்சி பெற்று விட்டது என்பது மட்டுமல்ல மற்ற எல்லா உயிரினங்களையும் இயற்கையின் இயல்பான இயக்கங்களின் போக்குகளில் சிலவற்றைக் கூட கட்டுப்படுத்தி மேலும் மேலும் முன் செல்லுமளவு முன்னேறி விட்டது.
   
 இந்த நிலையில் இத்தகைய மனிதவாழ்வு, நடைமுறை, எதிர்காலம், இயற்கை, இன்னும் அணுவிலிருந்து அண்டம்வரை அத்தனையும் சம்பந்தமான பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. 

அவை உண்மையில் நிலவும் நிகழ்முறைக்கு பொருத்தமானதாகவும் மாறானதாகவும் உள்ளன. அவை மிகச் சிறிய செயலில் அடங்கியுள்ள கருத்திலிருந்து உலகளாவிய புறவெளியில் கூட சஞ்சரிக்கும் உயர்ந்த கருத்துக்கள் வரை பலவகை உண்டு. 

அதில் மிகப்பெருமளவு மக்களின் மனதிலும் வாழ்விலும் பிரதிபலிக்கும் வரையறுக்கப்பட்ட கருத்துக்கள் உண்டு. அவை தனி மனிதனுடையவையாக அல்லாமல் சமூகத்தன்மை கொண்டவை.

அதைத்தான் தத்துவம் என்று கூறுகிறோம். 
    
தத்துவங்கள் சமுதாய வளர்ச்சிப் போக்கில் பெரும் பங்கு வகிக்கின்றன. 

சில உண்மையைப் பிரதிபலிப்பதாக உள்ளன. 

சில உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளிப்படுத்துபவை. 

அவை மேம்போக்கான உணர்வுகளால் வழிநடத்தப்பட்டு அங்கீகரிக்கப் படுபவை.

மனிதன் வாழ்வுத்தரத்திலும் அறிவியல் துறையிலும் நாகரிகத்திலும் மேம்பாட்டையடைய அடைய உண்மைக்கு மாறான பலவீனமான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள தத்துவங்கள் நிராகரிக்கப்பட்டு மறைந்து போகின்றன. 

உண்மைக்கும் வளர்ச்சி விதிகளுக்கும் பொருத்தமான தத்துவங்கள் என்றென்றும் அங்கீகரிக்கப் படுவதோடு காலப் போக்கில் வளர்ச்சிக்கேற்ப புதுப்புது சரியான தத்துவங்கள் தோன்ற அடிப்படையாகவும் ஆகின்றன. 

அத்தகைய உயிருள்ள தத்துவங்கள்தான் உண்மையில் நமக்கு வழிகாட்ட முடியும். அவைதான் நாம் பின்பற்ற வேண்டியவை. 

மாறாதது எதுவும் இல்லை என்ற தன்மையுடன் இயங்கும் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைச் சூழலில் அந்த மாற்றங்களுடன் இயைந்த முறையில் நாம் வாழவேண்டும்.

அதற்காக  அந்த மாற்றங்களுடன் மானிட அறிவும் இணக்கமான முறையில் வினை பரிந்து மேலும் மேலும் மாற்றத்தையே அற்புதமான வாழ்க்கை முறையாக மாற்றவேண்டும்.

அதற்கு மாற்றங்களைச் சரியாகக் கணக்கில்கொள்ளும்  இயக்க இயலை அடிப்படையாகக் கொண்ட சமூக அறிவியல் தத்துவங்களைப் பின்பற்றவேண்டும். 

முரண்பாடுள்ள தத்துவங்களில் எதுசரி என்பதை நடைமுறை உண்மைகளுடன் ஒப்பிட்டு சரியானதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அறிவுக்குத் திரைபோடும் தத்துவங்களைப் புறக்கணித்து முடிவற்ற வளரச்சிப்; பாதையில் நமது அறிவுத் திறனை இட்டுச் செல்லும் சரியான தத்துவங்களைப் புரிந்து கொள்வதும் கற்றுக் கொள்வதும் பின்பற்றுவதும் வளர்ப்பதும் உயர்ந்த வாழ்வுநெறியாகும்.

                                                                                   

No comments:

Post a Comment