ss

Sunday, June 3, 2012

பலசரக்கு ( 2 )


கலையும் கொலையும்

நண்பர்களே! நேற்று ஒரு நண்பர் வெளிநாட்டில் இருந்து தொலைபோசியில் என்னுடன் பேசினார். அவர்சொன்ன செய்தி கேட்பதற்கு வேதனையாக இருந்தது. அவர் சொன்னதில் இருக்கும் நியாயமும் உண்மையும் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற சம்பளம் இங்கு கிடைக்கவில்லை. வெளிநாடு சென்றால் கைநிறையக் காசு பார்த்துக்கொண்டு சொந்த நாட்டில் வந்து நல்லமுறையில் வாழ்க்கை அமைத்துக்கொள்ளலாம் என்று வெளிநாடு செல்பவர்கள் ஒரு பகுதியினர்.

படிப்பு இல்லாவிட்டாலும் வெளிநாட்டில் கிடைத்த வேலைக்குப் போகலாம் நமக்குத் தேவை நல்ல சம்பளம் அவ்வளவுதானே! எத்தனை நாள்தான் இந்தக் கஷ்டம் படுவது என்று கிடைத்த வேலைக்குச் சென்று பிழைப்பவர்கள் மறுபகுதியினர்.

யாராக இருந்தாலும் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கும் தாம் விரும்பும் வாழ்க்கை வாழ்வதற்கும் இங்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதால்தான் இந்த முடிவுக்கு வருகிறார்கள். நம்முள் பலரும் சொல்வதைப்போல நமது நாட்டு நலனில் அக்கரையில்லாமல் வெளிநாட்டுக்குச் சேவைசெய்ய விரும்பிப் போகின்றவர்கள் இருக்க முடியாது. 

இப்படிப் போகின்றவர்கள் அனைவரும் தாம் நினைத்த படியே வசதியான வாழ்க்கையை அடையப் பெறுகிறார்களா? 

அதில் ஒரு பகுதிவேண்டுமானால் நிறைவேறி இருக்கலாம். மறுபகுதியினர் இரண்டுங்கெட்டான் வாழ்க்கைக்கு ஆளாகி துன்பப்படுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். 

முதலாவதாக நல்ல படிப்பு ஓரளவு வசதி என்ற பின்னணியுடன் வெளிநாட்டுக்கு வேலைக்கு உத்திரவாதத்துடன் சென்று கைநிறைய சம்பாதித்து தானும் வாழ்ந்து தங்களைச் சார்ந்தவர்களுக்கும் பணம் அனுப்பி இரண்டு பக்கமும் திருப்தியாக வாழ்பவர்கள். 

இரண்டாமவர்கள் எப்படியாவது வெளிநாடு சென்று சம்பாதித்துத் தங்களின் கஷ்டத்தைத் தீர்த்தே தீருவது என்று அதற்காகப் படாத பாடுபட்டு கடன் வாங்கி வெளிநாடு செல்பவர்கள். அநியாய வட்டிக்கு வாங்கியிருப்பார்கள்.

ஆனால் பெரிய உத்திரவாதம் இல்லாமல் ஒரு புரோக்கரின் வார்த்தைகளை மட்டும் நம்பிச் சென்றபின் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை பலர் உணர்கிறார்கள். வேறுவழி இல்லாமல் கிடைத்த சம்பளத்துக்கு வேலைசெய்யும் நிலைக்கும் ஆளாகிறார்கள்.

அவர்கள் வாங்கும் சம்பளம் அவர்கள் விரும்புவதைப்போல் செலவு செய்தால் அவர்களின் செலவுக்கே போதாது என்கின்ற நிலையில் வீட்டுக்கு அனுப்பவேண்டும் கடன்காரருக்கு அனுப்பவேண்டும் வாங்கிய கடனை அடைக்காமல் கைநிறையப் பணம் கொண்டுபோகாமல் நாடு திரும்பமுடியாது என்கிற சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். 

வெளிநாடு சென்றவன் நல்லா சம்பாதிக்கிறான் பணம் அனுப்புகிறான் என்பதற்கு மேல் அவனுடைய நிலை அங்கு என்ன என்பதைப் பெரும்பாலோர் எண்ணுவதில்லை. இங்கிருப்பவர்கள் மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காக வெளியில் படும் சிரமத்தை அவர்களும் சொல்வதில்லை.

வெளிநாடு செல்லும் அனைவருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை திருமணம். எல்லோராலும் திருமணத்துக்குப்பின் இருவருமே வெளிநாடு சென்று வேலைக்குப்போவது சாத்தியம் இல்லை. 

அதனால் ஒன்றா வெளியில் போய் சம்பாதித்துக்கொண்டு வந்து அதன்பின் திருமணம் செய்துகொள்கிறார்கள். அல்லது வெளிநாட்டில் இருக்கும்போதே திருமணமும் செய்துகொண்டு மனைவியை அழைத்துப் போகிறார்கள். அவர்களைப் பொறுத்து பெரிய அளவில் பிரச்சினை இல்லை. 

ஆனால் திருமணம் செய்தபின் மனைவியையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு வெளிநாடு செல்பவர்கள் அல்லது வெளிநாட்டில் இருந்துவந்து திருமணம் செய்துகொண்டு மீண்டும் மனைவியை இங்கேயே விட்டுவிட்டு தாம் மட்டும் மீண்டும் திரும்பி வெளிநாட்டுக்கே வேலைக்காகச் செல்பவர்கள் வேறுவகையானவர்கள் ஆகிறார்கள்.

பொதுவாக அந்தந்த வயதில் திருமணம் செய்வதுதான் நல்லது என்ற கட்டாயத்தால் திருமணம் செய்தாலும் பிரிந்து வாழ்பவர்களின் வாழ்க்கை அவர்கள் விரும்பும்படி எல்லோருக்கும் இருப்பதில்லை.

காரணம் சேர்ந்திருக்க வேண்டிய வயதில் பிரிந்திருப்பது துன்பமான ஒன்று. 

தான் வெளிநாட்டில் இருக்கும்போது தன் மனைவியும் குழந்தைகளும் யார் பராமரிப்பில் இருப்பது என்பது ஒரு பிரச்சினை. அவர்கள் வெளியில் இருந்து யார் பெயரில் பணம் அனுப்புவது என்பது ஒரு பிரச்சினை. அவர்கள் வெளியில் இருந்து அனுப்பும் பணத்தை இங்கு செலவு செய்வது அல்லது பராமரிப்பதில் மனைவிக்கும் பெ;றறோருக்கும் ஏற்படும் கவுரவப் பிரச்சினை இவையெல்லாம் ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி மிகவும் நல்ல பண்பாட்டோடும் பரிந்துணர்வோடும் சிறப்பாக வாழ்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.

ஆனால் இரண்டுபேரும் பிரிந்திருக்கும் நிலையில் வரும் பிரச்சினைகளால் முரண்பாடு முற்றிப்போக விடுபவர்களும் மனதில் கசப்புணர்வை வளர்த்துக் கொள்பவர்களும் ஒருவருக்கொருவர் வேறுவகையான சந்தேகங்களையும் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

அப்படிக் கசப்பான வாழ்வு வாழ்பவர்கள் அதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணத்துக்கும் உள்ளாகி பொறுப்பற்ற வாழ்வு வாழத் தலைப்பட்டு விடுகிறார்கள்.

அந்த நிலையில் அவர்களுக்கிடையே செய்திப் போக்குவரத்தில் மென்மையும் இனிமையும் இருக்காது. அவநம்பிக்கையும் கசப்புணர்வும் வெறுப்பும்தான் இருக்கும். தங்களிடம் இருக்கும் அதற்கான காரணங்களைத் திருத்திக் கொள்ளாமல் மற்றவர்களின்மேல் தவறான முடிவுக்குப்போய் இவர்களை நம்பி நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலையை எட்டிவிடுவார்கள். 

அப்போதுதான் வாழ்க்கையில் கணவனுக்குரிய முக்கியத்துவம் மனைவியின் மனதிலும் மனைவிக்குரிய முக்கியத்துவம் கணவன் மனதிலும் குறைந்துகொண்டே வந்து இவனை அல்லது இவளை நம்பி நாம் வாழமுடியாது அல்லது ஏன் வாழவேண்டும் என்ற எண்ணத்துக்கு இரையாகிவிடுகிறார்கள்.

அப்படியொரு எண்ணம் வந்துவிட்டால் ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்பதெல்லாம் ஆட்டம் கண்டுவிடுகிறது. கணவனிடம் எப்படியெல்லாம் பணம் கரக்கலாம் என்று மனைவியும் இவளை எப்படியாவது கைகழுவிவிட்டு நிம்மதியாக வாழ்வது எப்படி என்று கணவனும் நினைக்கத் துவங்கிவிட்டால் அப்புறம் சொல்ல வேண்டுமா? வாழ்க்கையே நரகம்தான்.

முதலில் ஒருவருக்கொருவர் வேற்றுமையான எண்ணங்கள் வளர்கிறதே என்று கவலைப்பட்டது போய் அப்படிப்பட்ட வேற்றுமையையும் பிரிவையும் விரும்பும் நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஊசலாட்டமான நிலையில் வாழ்பவர்களைக் கெடுப்பதுதான் இன்றைய நவீனக் கலைவடிவங்களின் வேலையாக உள்ளது. கிராமியக்கலைகளின் இடத்தைப் பிடித்துக்கொண்டு பேயாட்டம் போடும் ஒழுக்கக் கேடான கலைவடிவங்களும் சிறப்பாகச் செய்கின்றன. 

ஒரு காலத்தில் கண்ணால் காண்பதுவும் காதால் கேட்பதுவும் வாயால் பேசுவதும் ஆபாசம் என்று கருதப்பட்ட சங்கதிகள் எல்லாம் இன்று அனைவர் வீடுகளிலும் நடுநாயகமாக ஆட்டம்போட, குழந்தை முதல் முதியவர்வரை கூட்டாக அமர்ந்து பார்க்கும் பண்பாடு வளர்ந்துவிட்டது.

அது தவாறனது என்ற உணர்வு எப்போது மங்கிப்போகிறதோ அதைத் தொடர்ந்து தாமும் அப்படி நடப்பதில் உள்ள தவறு உணரப்படுவது இல்லை. நடந்தாலும் மனதளவில் குற்றஉணர்வுகூட ஏற்படுவது இல்லை. அதனால் பாலியல் நெறி பிறழ்தல் சகஜமாக ஆகிவிடுகிறது. 

தொலைக்காட்சிகளில் சின்னஞ்சிறிய குழந்தைகள்கூட ஆபாசமான பாடல்களுக்கு ஆபாசமான அங்க அசைவுகளுடன் ஆடுவதையும் பாடுவதையும் பார்க்கும்போது தவறான நடத்தை பற்றிய அறிவே அங்கு அடிபட்டுப் போகிறது. 

கிராமங்களில் கிராமியக்கலைகள் என்றால் என்ன என்பதை மறந்து நீண்டநாட்கள் ஆகிவிட்டன. கும்மியாட்டம், கோலாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், ஜிக்காட்டம் போன்றவையெல்லாம் மக்கள் கலைகளாக இருந்தது போய் இன்று சிலர் காசுக்காகவும் மதுபானத்துக்காகவும் சினிமாத்தனமாக ஆட்டம்போடும் சங்கதிகள் ஆகிவிட்டன.  நகரங்களில் வாழும் திரைப்படத்துறையினரும் கிராமியக் கலையின் பேரால் வாழ்பவர்களும் சொல்லித்தான் அவர்களின் மூலம் வெளிப்படும் கலைகளை வைத்துத்தான் இன்று கிராமங்களிலும் கலை என்கின்ற பெயரால் கிராமியக் கலைகளைக் கொலை செய்வது நடந்து வருகிறது. அந்த அளவு பண்பாட்டுச் சீரழிவு தலைவிரித்து ஆடுகிறது.

கிராமங்களில் கோயில் திருவிழாக்களில் கூட கரகாட்டம், ஆடல்பாடல் நிகழ்ச்சி என்கிற பெயரால் நடக்கும் ஆபாசக்கூத்துக்கள் வரம்புமீறிப் போய்க்கொண்டுள்ளன. குடிபோதையில் அந்தரங்கமான சங்கதிகளையெல்லாம் கூச்சநாச்சமின்றி பொது மேடைகளில் எந்த அளவு வரம்பு மீறமுடியுமோ அந்த அளவு மீறிக் கும்மாளம் போடுகிறார்கள். 

கலைஞர்கள் என்ற பெயரால் வருபவர்கள் காசுக்காகவும் தங்கள் பிழைப்புக்காகவும் செய்தாலும் அது கிராமப்புற மக்களைக்கூட தங்கள் பண்பாட்டுப் பின்னணியையும் மீறி ஆபாசக் குட்டையில் தள்ளியுள்ளது. பெண்களின் நாணம் என்ற பண்பு காணாமல்போன ஒன்றாக மாறிவருகிறது. 

இந்த நிலையில்தான் வெளிநாட்டில் இருந்து கணவன் அனுப்பும் பணத்தை வைத்து ஆடம்பர செலவுகள் செய்வதல்லாமல் கணவனுக்கே துரோகம்  செய்யும் துணிவுகூடப் பல பெண்களுக்கு ஏற்படுவதாக சம்பவங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய எண்ணங்களை வளர்ப்பதே இந்த கோயில் கொடைகளின்போது நடத்தப்படும் கூத்துகளும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளில் நடக்கும் ஆபாசங்களும்தான் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அப்படிப்பட்ட ஒரு மனைவியை வெளிநாட்டில் வாழும் கணவன் தொலைக்காட்சியில் கண்டித்ததைத் தொடர்ந்து அந்த மனைவி விஷம் கலந்த தின்பண்டத்தை கணவனின் நண்பர் மூலமாக வெளிநாட்டுக்குக் கொடுத்தனுப்பியதாகவும் அதைக் கணவன் உண்ணும் முன்பாகவே உண்ட நண்பர்கள் மூன்றுபோர் செத்துப்போனதாகவும் என்னுடன் தொலைபேசியில் பேசிய நண்பர் சொல்லி வருத்தப்பட்டார். 

பொதுவாக ஆண்கள் செய்யும் பல தவறுகளையும் மவுனமாக ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண்கள் செய்யும் தவறுகளை ஊதிப் பெரிதாக்கவே முயலும் என்கிற உண்மை ஒரு புறம் இருந்தாலும் இன்று கலைகள் என்ற பெயரால் நடக்கும் ஆபாசங்கள் மனைவி கணவனுக்கும் கணவன் மனைவிக்கும் துரோகம் செய்யும் பண்பாட்டை வளர்க்கின்றன என்பதே நாம் கவலைப்படவேண்டிய விஷயமாகும்!

7 comments:

 1. மிகவும் அருமை.

  உங்கள் சேவை தொடரட்டும்.

  நன்றி.

  ReplyDelete
 2. அட படுபாவி..

  ஆட்டையை போட்டுட்டு இப்படி சத்தியதீ என்று பெயர் வைத்திருக்கின்றாயே. இதெல்லாம் அடுக்குமா....

  கொலையும் கலையும் என்ற தலைப்பினை கலையும் கொலையும் என்று மாற்றுவதுதான் உங்கள் தாயும் தகப்பனும் சொல்லி தந்த சத்திய வாழ்வா?.

  ReplyDelete
  Replies
  1. நீர் யார் என்று தெரியவில்லை! என்ன உளறுகிரீர் என்றும் புரியவில்லை! என்ன ஆட்டைப் போட்டார்கள்? கோழியைப் போட்டார்கள்? வேறு எங்காவது எழுதவேண்டியதை இங்கு எழுதினீரா? நான் இத்தனை நாள் கவனிக்கவில்லை! உங்களிடம் நேர்மை இருந்தால் இப்படித் தகாத வார்த்தைகளை இங்கு கொட்டியதற்கு வருத்தப்படவேண்டும்!

   Delete
  2. என்னுடைய கட்டுரைகளைத் திருடிப் போடும் நபர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒருவன் திருடிப்போட்டதை உண்மை என்றும் உண்மையானதை திருடப்பட்டதுபோலவும் நினைத்துக்கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாக எழுதியதற்கு அவமானப் படவேண்டும்! அதுதான் சரி!

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. Just Huge Consistent Profits\\\\\\\நன்றி நண்பரே!

  ReplyDelete