சுரைக்காய்
இன்று ஒரு நண்பர் என்னைத் தொடர்புகொண்டு வெள்ளரிக்காய் பெரியதாகி முற்றும்போது பழுக்கிறதல்லவா அதுபோல சுரைக்காயும் முற்றும்போது பழுக்குமா என்று கேட்டார்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. நவீனகாலம் மக்களை எப்படித்தான் இயற்கையில் இருந்து பிரித்துவைத்து வெகுதூரம் வீசியடித்திருக்கிறது என்று நினத்துப்பார்த்தேன். அதனாலேயே இந்தக்கட்டுரை எழுத எண்ணினேன்.
பொதுவாகவே நமது நாட்டில் எது விலை அதிகமாக விற்கிறதோ அதை உயர்வாக நினைப்பதும் விலை மலிவாக விற்பதை உதாசீனம் செய்வதும் வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில் மக்களால் பெரிதும் புறக்கணிக்கப்படும் ஒரு காய்வகைதான் சுரைக்காய்.
ஒரே செடியில் இருந்து மற்ற எந்த ஒரு காய்களைவிடவும் கூடுதலான எடையுள்ள காய்கள் கிடைக்கும் என்று கருதுகிறேன்.
ஒரு செடி இருந்தாலே பல குடும்பங்கள் சாப்படுவதற்கத் தேவையான காய்கள் கிடைக்கும். அதனால் இதை அதிகமாக விரும்பி உண்பவர்கள் குறைவே!
சுரைக்காயின் சுவை மற்ற காய்களில் இருந்து சற்று வேறுபட்டது. கூட்டாகச்செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். பெரும்பாலோர் அப்படித்தான் செய்வார்கள்.
சுரைக்காயிலும் மருத்துவக்குணங்கள் உண்டு என்று படித்திருக்கிறேன்.
சுரைக்காயில் முக்கியமாக இரண்டு வகைகள் உண்டு. நீளரகம் மற்றும் உருண்டை ரகம்.
நீள ரகத்தைத்தான் அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.
சுரைக் காய்கள் முற்றினாலும் வெள்ளரியைப் போலப் பழுக்காது. அதனால் முன்னர் கிராமங்களில் கொஞ்சம் அறிவுக் கூர்மை குறைவானவர்களைச் சுரைப்பழம் என்று நையாண்டி செய்வார்கள்.
இந்தச் சுரைக்காய்கள் முற்றியபின்னால் காய்ந்துபோகும். காய்ந்தாலும் எடைகுறைவாக இருந்தாலும் வலிமையாக இருக்கும்.
காய்ந்துபோன சுரைக்காய்களைச் சுரைப் புரடை என்பார்கள்.
இதன் வலிமையின் மேல் நம்பிக்கை வைத்து முன்னர் எல்லாம் நீளச் சரைக்காய்ப் புரடையை மிதவையாகப் பயன்படுத்தி கிணறுகளில் நீச்சல் பழகுவார்கள்.
அதேபோல உருண்டைச் சுரைக்காய்களின் புரடைகளின் சிறியதாக உள்ள ஒரு ஓரத்தைமட்டும் வெட்டிவிட்டு உள்ளிருக்கும் விதைகளையும் கூளம்போன்ற பகுதியையும் எடுத்துவிட்டால் ஒரு சிறிய குடம்போல் இருக்கும். அதற்குச் சுரைக் குடுக்கை என்றும் பெயர் உண்டு.
தேன் எடுப்பவர்கள் மரங்களில் ஏறித் தேன் சேகரிக்கும்போது எடைக்குறைவாக இருப்பதால் இந்தச் சுரைக் குடுக்கைகையைத்தான் பயன்படுத்துவார்கள்.
இவ்வளவு பயன்களும் உள்ள சுரைக்காயைப் புறக்கணி;ககாமல் பயன்படுத்தினால் மிகக்குறைந்த செலவில் நிறையக்காய்கள் கிடைக்கும்.
இதற்குப் படர்ந்து காய்க்கும் குணம் உள்ளதால் கூரை வீடுகளின்மேல் கூட நன்கு படர்ந்து நிறையக் காய்க்கும்.
எனவே பாரம்பரியம் மிக்க சுரைக்காயையும் மறக்கவேண்டாமே!
No comments:
Post a Comment