ss

Wednesday, June 13, 2012

இயற்கை ( 3 )


கிராமிய மணம்

முன்பெல்லாம் கிராமங்களுக்குச் சென்றால் பருவத்துக்குத் தக்க மணம் வீசும்.

பாதையில் நடந்து சென்றால் ஒவ்வொரு பூமியிலும் ஒவ்வொரு வகையான பயிர் செய்யப்பட்டிருக்கும்.

அந்தப் பயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசனையைக் கொண்டிருக்கும். 

சோளப் பயிர் சின்னதாக இருக்கும்போது களை வெட்டிக் கொஞ்சம் காய்ச்சலுக்காக வாடப் போட்டிருப்பார்கள். ஆதாவது நாம் பசியான பின்பு உண்ண நினைப்பதுபோல. 

அப்போது மழை பேய்ந்து விட்டாலோ அல்லது உரிய நேரத்தில் கிணற்று நீர் பாய்ச்சப்பட்டிருந்தாலோ பயிர் மிக வேகவேகமாக வளரும் ஒவ்வொருநாளும் அதன் வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் காணமுடியும். அந்த நிலையில் நாம் தூரத்தில் செல்லும்பொதே மணத்தை நுகர முடியும்.

அது போல சோளப்பயிர் பூட்டையாக இருக்கும்போதும்  கதிர் வாங்கும்போதும் பால் பிடிக்கும்போதும் வாசனைகளில் வேறுபாடு தெரியும்.

அதேபோல துவரை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்து, மொச்சை போன்ற பயறு வகைப் பயிர்கள் எல்லாம் தமக்குரிய வாசத்தைக் கொண்டிருக்கும் அனுபவப்பட்ட ஒருவர் இரவு நேரத்தில் பாதையில் செல்லும்போதே இருட்டில்கூடப் பயிரைக் கண்ணால் பார்க்காமலே வாசத்தை வைத்தே இன்ன பயிர் என்று சொல்லிவிடுவார்.


மொச்சைக் காட்டில் மேய்ந்த மாடு நொச்சம் கூட்டினாலும் நிற்காது என்று ஒரு பழமொழியே சொல்வார்கள். அந்த அளவு மொச்சை சாகுபடி  செய்துள்ள பூமியில்  இருந்து மணம் வீசும். கால்நடைகளைக் கூட அதில் நுழைந்து மேயாமல்  கட்டுப் படுத்துவது கடினமாம். 

அந்தக் காலத்தில் பெரும்பாலும் ஊர்விட்டு ஊர் கால்நடையாகத்தான் பயணம் செய்வார்கள். அப்போது இடைப்பட்ட கிராமங்களில் சுமைகளை இறக்கி வைக்கும் சுமைதாங்கிகளும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளும் மக்கள் தண்ணீர் குடிக்கத் தண்ணீர்ப் பந்தல்களும் அமைத்திருப்பார்கள். அங்கு மரநிழலும் அவ்வளவு சுகமாக இருக்கும். அத்தகைய இடங்கள் இன்னும் சில இடங்களில் குட்டிச் சுவர்களாகக் கிடப்பதைக் காணலாம்.


இப்போதும் சாலைகளில் இருபக்கமும் வெட்டப் படாமல் எஞ்சியிருக்கும் புளியமரங்களையும் மற்ற மரங்களையும் ஆங்காங்கே பார்க்கலாம். அவையெல்லாம்  அந்தக்கால மக்கள் வெளியூர்ப் பயணங்களின்போது துன்பமில்லாமல் பயணம் செய்யவும் இளைப்பாரவும்தான். இவ்வளவும் இலவசமாகச் செய்திருப்பார்கள். 

அதேநேரத்தில் ஊர்களுக்கு இடையே போகும்போது தாகம் எடுத்தாலோ பசி ஆனாலோ ஆங்காங்கே இருக்கும் தோட்டங்களுக்குப் போவார்கள். இப்போது போல் அக்காலத்தில் நிறையத் தோட்டங்கள் கிடையாது. ஆங்காங்கே ஒன்றிரண்டுதான் இருக்கும் மற்றபடி மானாவாரி விவசாயம்தான் நடக்கும்.

அப்படித் தோட்டங்களுக்குப்போகும்போதே அங்கு கிணற்றைச் சுற்றிலும் இருக்கும் மரங்களில் இருந்து பலவகை மணம் வீசும். கால்நடைகளைக்கொண்டு கிணற்றுநீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். வழிப்போக்கர்கள் தண்ணீர்போகும் வாய்க்காலில் கைகால்முகம் கழுவிக்கொண்டு கட்டிச் சோற்று மூட்டையை அவிழ்த்து மரநிழலில் வைத்துச் சாப்பிடுவார்கள். 

அந்தக் கட்டுச் சோற்று மூட்டையை அவிழ்த்தாலே அது ஒரு வகை மணம் வீசும். சாப்பிட்டுவிட்டு இளைப்பாறிச் செல்வார்கள். 

அதேபோல பயிர்களின் மேல் மழைபெய்தால் ஒரு வகை மணமும் காய்ந்து கிடக்கும் மண்ணில் மழை பேய்ந்தால் ஒரு வகை மணமும் வரும் அதை மண்வாசம் என்றும் சொல்வார்கள்.

இப்போதெல்லாம் கிராமங்களில் புறம்போக்கு நிலங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. முன்னர் ஊர்களைச் சுற்றிலும் நிறையப் புறம்போக்கு நிலங்களும் குளம் குட்டைகளும இருக்கும். மானாவாரி விவசாயம் செய்பவர்கள் தங்கள் பயிர் அறுவடை செய்யும்போது அறுவடை செய்யப்பட்ட பயிர்களை மாட்டுவண்டிகள் மூலம் கிராமங்களைச் சுற்றிலும் புறம்போக்கில் இருக்கும் களங்களில் போட்டுக் கால்நடைகளைக் கொண்டு மிதிக்கச் செய்து தானியங்களைப் பிரிப்பார்கள்.

அறுவடை செய்யப்பட்ட கதிர்க் கட்டுக்களைக் களத்தில் பரப்பி நான்கு நான்கு மாடுகளாகப் பிணைக்கப்படடு இரண்டு அல்லது மூன்று அணி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வார்கள். அதற்குத் தாம்பு ஓட்டுதல் என்றும் போரடித்தல் என்றும் சொல்வார்கள்.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை என்ற ஒரு புகழ்பெற்ற பாடல்கூட உண்டு.

அப்படித் தாம்பு ஓட்டிக் கொண்டிருக்கும் களங்களில் இருந்தும் ஒருவிதமான மணம் வீசும். 

கால்நடைகளால் மிதிக்கப்பட்டதைக்  கூளமாக அல்லது வைக்கோலாக உதறிப் பிரித்தெடுத்து காற்றில் தூற்றி எடுப்பார்கள். அதைத்தான் காற்றுள்ளபோதே துற்றிக்கொள் என்று பழமொழியாகச் சொல்வார்க்ள்.

தூற்றியெடுத்துச் சுத்தம் செய்யப்பட்ட தானியங்களை மூட்டைகளாகக் கட்டி மாட்டுவண்டிகளின் மூலம் வீடுகளுக்குக் கொண்டு செல்வார்கள்.

தானியம் கொட்டப்பட்ட வீட்டினுள் நழையும்போதே தானிய மணம் வீசும். அதை மூங்கில் பாய்களைக் கொண்டு தயார்செய்யும் வட்டமான குதிரில் உள்ளே கொட்டி அதன்மேல் வைக்கோலைப் பரப்பி மாட்டுச்சாணம் கொண்டு அப்பி மூடிவிடுவார்கள்.

ஒவ்வொரு வகையான தானியத்துக்கும் என சேமிக்கும் வேறுவேறு முறைகள் உள்ளன.

தேவைப்படும்போது அந்தக் குதிரைக் கலைத்து அல்லது மூடிபோல் இருக்கும் மேல்பாகத்தைமட்டும் விலக்கித் தேவைப்படும் தானியத்தை எடுத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள். 

அதன்பின்னும் அந்தத் தானியங்களை வேகவைத்துப் பக்குவப் படுத்தும்போதும் உரலில்போட்டு உலக்கையால் குத்திப் புடைக்கும்போதும் மண்சட்டியில் வேகும்போதும் ஒவ்வொருவிதமான மணம் வீசுவதைக் காணலாம்.

தூரத்தில் நஞ்செய் நிலங்களில் பயிரிட்டுள்ள கரும்பு சாறுபிழியப்பட்டுக் கொப்பரைகளில் வெல்லம் காய்ச்சும் பாகு மணம் கிலோமீட்டர் கணக்கில் காற்றில் மிதந்துவந்து மூக்கைத் துளைக்கும்.

மழைபெய்யும் நாட்களின் இரவுகளில் குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீருக்குத் தவளைகள் எங்கிருந்துதான் வருமோ ஒரே இசைக் கச்சேரியாக இருக்கும். 

அந்தக் குட்டைகளில் நீர்க்கோழிகள் நீந்த ஒரங்களில் உள்ள நண்டுகள் வளைகளில் இருந்து வெளியில் வந்துவந்து போக குட்டைகளைச் சுற்றி இருக்கும் தும்பைச் செடிகளிலும் ஊமத்தைச் செடிகளிலும் மற்ற செடிகளிலும் தேனீக்கள் தேன் சேகரிக்க அந்த மணம் எங்கும் கமகமக்கும்.

இப்படிப்பட்ட கிராமங்களில் ஒரு மோட்டார் காரோ ஒரு மோட்டார் சைக்கிளோ நுழைந்தால்கூட அதன் வாடை வெகுதூரம் உணரப்படும். காற்று அவ்வளவு சுத்தமானதாக இருந்தது.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 

வாகனப் புகையை விட நாம் சுவாசிக்கும் காற்று நஞ்சாகிவிட்டதால் இப்போது கிராமங்களில் வாகனப் புகை நாற்றமெல்லாம் மூக்கில் உறைப்பதில்லை. 

இப்போது வரும் வாசமெல்லாம் ப+ச்சிக்கொல்லி தெளிப்பதால் வரும் நச்சு நெடியும் ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்கள் உட்படக் குப்பைகளைப் போட்டு எரிப்பதால் வரும் நெடியும் பல இடங்களில் பழைய டயர்களைக் கொழுத்தும் நெடியும்தான் வாசமாக வருகின்றன.

சர்க்கரைஆலைக் கழிவுகளில் இருந்து சாராயம் காய்ச்சும் ஆலைகளில் இருந்து வீசும் துர் நாற்றத்தையும் அந்தந்தப் பகுதி மக்கள் அனுபவித்துக் கொண்டுள்ளார்கள். 

முந்தைய வாசத்தையும் பூக்களின் மணத்தையும் கிராமங்கள் இழந்துவிட்டன. 

கிராமங்கள் மனதளவில் பண்பாட்டளவில் நகரங்களாகி வருகின்றன.

முந்தைய தலைமுறையினர் நுகர்ந்த மண் வாசனையை வரும் தலைமுறையினர் அனுபவிப்பார்களா?

1 comment: