ss

Saturday, June 23, 2012

கூடங்குளமும் நானும் ( 3 )


கூடங்குளம் படிப்பினை!

கூடங்குளம் அணுஉலைகளால் அங்கு வாழும் மக்களுக்கு நிரந்தரமான பயமும் மனநோயும் என்று ஆகிவிட்டது. உரிய காலத்தில் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். காலங்கடந்த முயற்சி பயனளிக்கவில்லை.

ஆனால் இந்தியாவில் இனி எங்கும் புதிதாக அணு உலை நிறுவ மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்கிற அளவு நாடு முழுவதும் போராட்டம் ஈர்த்துள்ளது. அதுவே ஒரு வெற்றிதான். 

அடுத்து நாடு முழுக்க எங்கெங்கு அணுஉலைகள் உள்ளதோ அங்குள்ள மக்களையெல்லாம் ஒரு அணியில் திரட்டக் கூடங்குளப் போராட்ட முன்னோடிகள் முயற்சி செய்யவேண்டும்.

கூடங்குள அணுஉலை எதிர்ப்புப்போராட்டம் தோல்வியடைந்ததற்கான காரணங்களை விரிவாக ஆராயவேண்டும்.

என்ன செய்திருந்தால் இந்தப் பொராட்டம் வெற்றி பெற்றிருக்கும் அப்படிச் செய்ய ஏன் முடியவில்லை என்பதை எல்லாம் ஆராய வேண்டும்.


இந்தத் திட்டம் துவங்கும்போதே அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அன்று அந்த அளவு மக்களிடம் அணுஉலை பற்றிய பயமோ எதிர்ப்பு உணர்வோ போதுமான அளவு இல்லாததால் அது சாத்தியப்படவில்லை.

ஜப்பானின் புக்ஸிமாவுக்கு முன்பே ரஷ்யாவின் செர்னோபில் அணுஉலை விபத்து நடந்திருந்தாலும் அது இந்திய மக்களின் மனதில் பெரிய பாதிப்பை உண்டுபண்ணவில்லை.

இப்போது சுனாமியால் ஏற்பட்ட புக்ஸிமா அணுஉலை விபத்து அணுஉலைகள் சம்பத்தப்பட்ட அச்சத்தை உலகம் முழுக்கவே ஏற்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் குறிப்பாக கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கு அதிக அளவு அச்ச உணர்வு ஏற்பட்டது. 

பொதுவாகவே எந்த ஒரு பிரச்சினையானாலும் தங்களைப் பாதிக்கக்கூடிய ஒன்றாக இல்லாத வரைக்கும் அதைக் கண்டுகொள்ளாத போக்குதான் நமது மக்களின் பொதுப்பண்பாகும். நதி நீர்ப் பிரச்சினையில் இருந்து மீனவர் பிரச்சினையில் இருந்து ஈழத்தமிழர் பிரச்சினைவரை அதைத் தானே பார்க்கிறோம்?

அதுபோல அணுஉலைப் பிரச்சினையிலும் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு ஈடான அளவு மற்ற மக்களை இந்த அச்ச உணர்வு பாதிக்கவில்லை.

ஆனாலும் அந்த மக்கள் தடுத்தே தீருவது என்ற முனைப்புடன் போராட்டத்தில் இறங்கினார்கள். 

இறங்கிய பின்னாவது மற்ற மக்கள் அதை ஆதரித்தார்களா என்றால் அதுவும் போதுமான அளவு இல்லை.

அப்படிப் போதுமான ஆதரவு கிடைக்காததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்;. ஒன்று காலங்கடந்து போராடுவதால் பயனில்லை என்பது. இரண்டாவது அதை ஒரு வட்டார மக்களுக்கான பிரச்சினையைப் போல் பார்த்ததும் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கவந்த ஒரு மாயக் கண்ணாடிபோல் சித்தரிக்கப்பட்டதும் ஆகும். 

பொதுவாக நமது அரசாங்கங்கள் போராட்டங்களை இழுத்தடிப்பது, பொய்ப் பிரச்சாரம் செய்வது, பயமுறுத்துவது பொய்வழக்குப் போடுவது போன்ற பல வழிமுறைகளைத்தான் எப்போதும் கையாள்வது வழக்கம். தவிர்க்க இயலாத ஒரு நிலையில்தான் போராட்டங்களைக் கண்டு கொள்வார்கள்.

அரசாங்கம் போராட்டங்களைப்பற்றி ஒரு மதிப்பீடு வைத்திருக்கும். ஆதாவது போராட்டத்தை மதித்து அதன் நியாயத்தை உணர்ந்து ஒப்புக் கொள்வதெல்லாம் கிடையாது. 

ஒப்புக்கொள்வதால் இழப்பு அதிகமா? அதை நிராகரித்து விட்டு ஒடுக்குவதால் இழப்பு அதிகமா என்று பார்ப்பார்கள். எதில் இழப்பு அதிகமோ அதைத் தவிர்த்துவிட்டு இழப்புக் குறைவான வழியைப் பின்பற்றுவார்கள்.

இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை போராட்டத்தை ஏற்று கூடங்குளம் அணுமின்சார நிலையத்தை மூடுவதைவிட போராட்டத்தைச் சமாளிப்பது இல்லாவிட்டால் ஒடுக்குவது என்பதுதான் எளிய வழியாக இருந்தது.

அந்த வழியைப் பின்பற்றி போராட்டத்தை ஒடுக்கிவிட்டார்கள்

இதேபோராட்டம் நாடுதழுவிய போராட்டமாக அந்தத் திட்டத்துக்கு ஆனசெலவைவிடக் கூடுதலான இழப்பு போராட்டங்களினால் ஏற்படும் அல்லது அரசுக்கே ஆபத்து ஏற்படும் அல்லது மக்கள் தேர்தலில் தோற்கடிப்பதற்கு அதுவே காரணமாகிவிடும் என்கிற அளவு  வலிமையான போராட்டமாக இருந்திருந்தால் அரசு இணங்கியிருக்கும்.

ஆனால் இதைப்பொருத்துவரை மேலும் ஒரு விஷயத்தையும் அரசு கணக்கில் எடுக்கவேண்டி வரும்.

ஆதாவது போராட்டத்தை முன்னிட்டுத் திட்டத்தை கைவிட்டால் அதை எதிர் நோக்கியுள்ள மின்சாரத் தேவைக்கு மாற்றுவழி இல்லை என்பதோடு இயங்கிக்கொண்டிருக்கும் மற்ற அணுமின்சார நிலையங்களையும் மூடவேண்டிய சட்டப்பிரச்சினைகள் வரலாம் நிச்சயம் வரும்.

அதனால் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதை உணரவேண்டும்.

உலகளாவிய ஒரு பிரச்சினையை ஒரு நாட்டுக்குள் ஒரு பகுதிக்குள் ஒரு வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் எப்படி சமாளிக்கமுடியும்.

தவிர அணுசக்திப்பயன்பாட்டால் வரக்கூடிய விளைவுளை உணரச்செய்து மக்களைத் திரட்ட முயற்சிசெய்வதைவிட அது ஏதோ தமிழ் மக்களுக்கு எதிரான சதிபோலவும் அதனால் தமிழ் மக்கள் மட்டும் அழிவார்கள் என்பதுபோலவும் முன்வைக்கப்பட்டதெல்லாம் அனைத்து மக்களையும் ஈhப்பதற்குப் பதிலாக எதிரும் புதிருமாக நிறுத்தியது. 

ஆதாவது பிரிவினை எண்ணங்கள் உணர்வு பூர்வமாக இல்லாத மக்களிடையே பிரிவினை எண்ணங்களையும் சேர்த்து முன்வைக்கும்போது போராட்டம் போதுமான ஆதரவு இல்லாமல் போவது இயல்பாகிவிடுகிறது.

கூடங்குளம் அணுமின்சார நிலையம் மூடப்படவேண்டுமானால் அதற்கு முன்னதாக ஏற்படவேண்டிய சில மாற்றங்களாக நான் கருதுபவை:

நாட்டில் சுயநலம்தான் அரசியல் என்ற நிலைமை மாறி மக்களின் நலன் காப்பதுதான் அரசியல் என்ற பண்பாடு வளரவேண்டும்.

தேசவிரோத மக்கள்விரோத மக்களைக் காட்டிக்கொடுக்கும் கட்சிகளும் அரசுகளும் துடைத்தெரியப்பட்டு உண்மையான மக்களாட்சியும் தேசபக்த அரசியல் இயக்கங்களும் மலரவேண்டும்.

கூடங்குளம் திட்டத்தைக் கைவிடவேண்டுமானால் நாட்டிலுள்ள மற்ற திட்டங்களையும் கைவிடவேண்டும். காரணம் இது கைவிடப்பட என்ன காரணங்களோ அந்தக் காரணங்கள் பிற அனைத்துத் திட்டங்களுக்கும் பொருந்தும். நீதிமன்றங்களும் பாரபட்சமற்ற முடிவைத்தான்  எடுக்கவேண்டி வரும். குறிப்பிட்ட ஒரு திட்டத்தைமட்டும் மூடியது சரி, மற்றதை மூடக்கூடாது என்று அது உத்தரவிடமுடியாது!

அத்தனை திட்டங்களையும் கைவிடுமளவு நமது நாட்டின் பொருளாதார வல்லமையோ மாற்று மின்சக்தித் திட்டங்களோ வளரும் தேவைக்கு ஏற்ற அளவு கிடையாது. அவை முதலில் உருவாக்கப்படவேண்டும்.

தவிர அணுஉலை விபத்துக்களுக்குப் பின்னும் இன்னும் உலகநாடுகளிடையே அணுஉலைக்கு எதிர்ப்பு போதுமான அளவு அச்சுறுத்தக் கூடியதாக இல்லை. வளர்ந்த நாடுகள் கூட இழுத்து மூட உடனே தயாராக இல்லை. அப்படி இருக்க பற்றாக்குறை காரணமாக கடன்கார நாடாக ஏற்கனவே உள்ள நிலையில் மற்றவர்கள் செய்யாத ஒன்றை இங்கு எதிர்பார்க்க முடியாது. எனவே ஒரு பொருளாதார வல்லரசாக இந்தியா மாறவேண்டும்.

இறுதியில் நியாயமான போராட்டங்களுக்காக அனைத்து மக்களும் ஓரணியில் திரளும் வண்ணம் நேர்மையான தலைமையின் கீழ் மக்கள் திரட்டப்பட்டிருக்கவேண்டும்.

இப்போது நமது மக்கள் செய்யக்கூடியதெல்லாம் உலகளாவிய அணுசக்திப்பயன்பாட்டுக்கு எதிரான இயக்கத்தைக் கட்ட முன்முயற்சி எடுப்பதும் நாட்டு அரசியலில் நேர்மையயை முன்னிறுத்தி நல்ல அரசியல் சக்திகளை உருவாக்குவதுமே!

உலக அணுசக்திப்பயன்பாட்டு ஒழிப்பு இயக்கம் என்பது கூடங்குளத்தில் உருவாகி உலகம் பூராவும் பரவட்டுமே!

அதற்கு முன்னதாக ஓடும் ரயில் வண்டிக்குள் எதிர்த் திசையில் பயணிக்க முயல்வதால் எந்தப்பயனும் இல்லை!

No comments:

Post a Comment