ss

Friday, June 15, 2012

எனது மொழி (42)



மிகமிக அதிநுணுக்கமான அறிவியல் உபகரணங்களை உருவாக்கிக் கையாள்பவர்கள்கூட அத்தகைய நுண்ணிய அடிப்படையில் இயக்கவியலை ஆராய்வதற்குப் பதிலாக அவற்றிற்கெல்லாம் அடிப்படையான ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருப்பதாக நம்புகிறார்கள்.

அதன்மூலம் தமது அறிவுவளர்ச்சிக்குத் திரை போட்டுக் கொள்வதோடு அல்லாமல் போலி ஆன்மீகவாதிகளின் போலித்தனமான அறிவியல் பார்வைக்குத் துணைநிற்பவர்;களாகவும் ஆகிவிடுகிறார்கள். 
----------------------------------------------------------------------------------------------------------
======================================================================
----------------------------------------------------------------------------------------------------------

அறிவின் குறைபாடு

பொருளியல் வாழ்வில் அறிவியல் உருவாக்கிய எண்ணற்ற கருவிகளோடு மக்கள் தம் வாழ்வைப் பிணைத்துக் கொண்டுள்ளார்கள். 

அந்தக்கருவிகளின் இயங்குவிதிகள் பற்றியும் அடிப்படை அறிவியல் கோட்பாடுகள் பற்றியும் அனைவரும் தெரிந்தவர்கள் அல்லர். 

ஆனாலும் அவற்றுடன் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாலும் அதன் இயக்கத்தைப்பற்றி மேலெழுந்தவாரியாகப் பேசப்படுவதைக் கேட்பதால் அதைக் கண்டுபிடித்து உருவாக்கியவர்கள் மனிதரே என்று தெரிந்திருகிறார்கள் 

அதனால் தனக்குத் தெரியாவிட்டாலும் அதை ஒரு அறிவியல் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். 

ஆனால் நடைமுறை வாழ்வில் தொடர்பில்லாத ஆனால் உள்ள அறிவைக் கொண்டு புரியாத சில செயல்களும் நடக்கின்றன.

அவற்றை மட்டும் அற்புதங்கள் என்றும் மாயா ஜாலங்கள் என்றும் மந்திர சக்திகள் என்றும் கடவுளின் லீலைகள் என்றும் சொல்லும்போது அச்செயல்கள் தமக்குப் பரிச்சயம் இல்லாத ஆனால் இயங்குவிதிகளுக்கு உட்பட்ட ஓர் அம்சம் என எண்ணுவதற்குப் பதிலாக நம்பி ஏமாந்துவிடுகிறார்கள்.

அவைதான் சமுதாயத்தைப் பாதிக்கும் மூட நம்பிக்கைகளாக வளர்ந்துவிடுகின்றன.
---------------------------------------------------------------------------------------------------------
======================================================================
---------------------------------------------------------------------------------------------------------

ஓவ்வொருவரும் உலகில் அடங்கியுள்ள அத்தனை வகையான இயக்கவியல் அம்சங்களையும் கற்கமுடியாது. 

இந்தநிலையில் தமக்குப்புரியாத அம்சங்களை அமானுஷ்ய சங்கதிகள் என்று எண்ணத்துவங்கினால் உலகமும் வாழ்க்கையும் மாயா ஜாலங்கள் அடங்கிய ஒன்றாகத்தான் தெரியும். 

அத்தகைய தவறான சிந்தனைமுறைதான் போலி ஆன்மீக வாதிகளின் வாதங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் அடிப்படையான வலுவூட்டும் அம்சமாக உள்ளது. 
--------------------------------------------------------------------------------------------------------
======================================================================
---------------------------------------------------------------------------------------------------------    

ஆன்மீகத்துக்கு ஆதரவான வாதங்கள் குறிப்பிட்ட எல்லையைத்தாண்டும் போது நடைமுறை விளக்கங்களுக்குப் பதிலாக முற்றிலும் கற்பனாவாதத்தையே நம்பி ஒரே அம்சத்துக்குப் பல்வேறு சம்பந்தமற்ற விளக்கங்கள் கொடுக்கப்படும். 

ஆனால் இயக்கவியல் கண்ணோட்டத்தில் எவ்வளவு பிரம்மாண்டமான விஷயங்களை எடுத்துக் கொண்டாலும் நடைமுறை அனுபவம் சார்ந்த ஏறக்குறைய முரண்பாடற்ற வாதங்களே முன்வைக்கப்படும். 
-----------------------------------------------------------------------------------------------------------
=======================================================================
-----------------------------------------------------------------------------------------------------------

ஆன்மீக வாதங்களுக்கு ஜீவனுள்ள அடிப்படையாக விளங்குவது கேட்பவர்களின் அறியாமையும் பலவீனமுமே ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------------------
=======================================================================
-----------------------------------------------------------------------------------------------------------

பிறப்பில் இருந்தே ஆன்மீகக் கருத்துக்கள் சார்ந்த நம்பிக்கைகளுடன் வளர்க்கப்படுவதாலும் அத்தகைய பண்பாடுசார்ந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் அந்த நம்பிக்கைச் சூழலிலேயே வாழ்வதாலும் பெரும்பாலோர் ஆத்திகர்களாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 

ஆனால் ஆன்மீகத் தத்துவங்களை நடைமுறை வாழ்வுடன், இயக்கத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து அறிவுக்குப் பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்து இயக்கவியல் கண்ணோட்டத்துக்கு வருகின்றவர்கள் சாராம்சத்தில் அற்புதமான சிந்தனாசக்தி உடையவர்களாக இருப்பதாலும் தவறான சிந்தனைக்கு எதிரான வீரர்களாக விளங்குவதாலும் மிக்க சிறப்புக்கு உரியவர்களாகின்றார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
======================================================================
---------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment