ss

Saturday, June 2, 2012

சிறுகதைகள் ( 8 )


பானம்மா

அப்படியொரு துயரம் அவளுக்கு நேர்ந்திருக்கவே கூடாது.

கல்யாணம் முடிந்து சரியாக இரண்டு வருடம்கூட ஆகவில்லை. அதற்குள் ஒரு வருடத்தில் ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு ஒரு விபத்தில்  தீபாவின் கணவன் போய்விட்டான்.

மாதம் மூன்றாகியும் இன்னும் துயரம் குறையவில்லை. ஏதோ ஒரு நினைவில் சிறிது மறந்தாலும் அதன்பின் திடீரென்று அப்போதுதான் நிகழ்ந்ததுபோல நினைத்துக் குமுறி அழுவது அவள் மட்டுமல்ல அந்தக் குடும்பத்தில் அத்தனை பேருக்கும் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்தது.

அண்ணன் தம்பி இருவர். அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட அம்மாதான் இருவரையும் வளர்த்து ஆளாக்கி திருமணம் முடித்து நல்லபடி வாழ்ந்துகொண்டிருந்தபோது இப்படியொரு சோகம் நிகழ்ந்து விட்டது.

இரண்டாவது மகனுக்கு வாழ்க்கைப்பட்டவள்தான் தீபா. 

அந்த அம்மாவின் பெயர் பானுமதி. ஆனால் பானு என்று அழைக்கத் துவங்கி வயதும் வசதியும் ஆனதானதால் இப்போது பானம்மா ஆகிவிட்டார்.


சிறுவயதிலேயே கணவனை இழந்ததால் தனது சொந்த உழைப்பாலும் முயற்சியாலும் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்தவர். மிகவும் கண்டிப்புக்காரி. கல்நெஞ்சக்காரி என்று சொல்பவர்களும்  உண்டு.

சிறுவயதுமுதல் தன் இரண்டு மகன்களையும் கண்டிப்பாக வளர்த்து வந்ததால் அவர்கள் நன்கு படித்துவிட்டு ஒரு சிறு அளவிலான எண்ணெய் மில் வைத்து திறமையாக நடத்தி வருகிறார்கள். இரண்டு இடங்களில் தென்னந் தோப்புகளும் வாங்கிப் போட்டுள்ளார்கள். ஆனால் இன்னும் பானம்மாவின் அனுமதியின்றி அண்ணன் தம்பி இருவரும் எந்த ஒரு முடிவையும் எடுப்பதில்லை.

எதற்கெடுத்தாலும் அம்மாவைக் கேட்கவேண்டும் என்பதுதான் அவர்களின் பதிலாக இருக்கும். அவர்கள் இருவருமே கெட்டிக்காரர்கள்தான். ஆனாலும் பானம்மாவின் அனுபவம் திறமை இவற்றின் முன்னால் பணிந்து போவதே அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. பெருமையாகவும் நினைத்தார்கள்.

"என்னைப்பார்த்துட்டே இருந்தா நீங்க எப்படா உங்க கால்லெ நிக்கப் போறீங்க" அப்படின்னு அந்த அம்மாவும்கூட அடிக்கடி சொல்றதுண்டு. ஆனாலும் அந்த அம்மாதான் அனைத்தும் என்ற நிலை மாற்ற முடியாததாகவே இருந்தது.

வந்த மருமகள்களும் பானம்மாவுக்குக் கீழ்ப்படிந்துபோவதைத் தவிர வேறு வழி இல்லை அதற்கு அவசியமும் இல்லை. வந்த மருகள்களுக்கு பிறந்த வீடுகள் வசதி குறைவாகவே இருந்தாலும் புகுந்த இடம் எல்லா வசதிகளும் கொண்டதாகவே இருந்தது. தவிர எந்த வகையிலும் பானம்மாவை எதிர்த்துப் பேசும் துணிவோ தகுதியோ இருப்பதாக அவர்களே நினைப்பதில்லை.

ஒன்றே ஒன்றுதான் இல்லை. ஒரே கூட்டுக்குடும்பமாக இருந்தாலும் குழப்பம் செய்வதற்கோ சோம்பேறித்தனமாகப் பொழுதுபோக்குவதற்கோ வழியில்லை. அவரவர் வேலையை அவரவர் ஒழுங்காகச் செய்யவேண்டும். போதாக்குறைக்கு சொத்துக்கள் எல்லாமும் பானம்மா பெயரில் இருந்ததால் அடங்கிப் போகவேண்டிய கட்டாயமும் இருந்தது. ஆனால் தப்பைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் அங்கு உரிமையும்  இருந்தது. 

இருந்தாலும் மருமகள்களுக்கே உண்டான வருத்தமான தங்கள் கணவன்மார்களின்மேல் எந்தச் சொத்தும் இல்லையே என்ற வருத்தம் உண்டு. அவர்கள் அதற்கு எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை. காரணம் அம்மாமேல் உள்ள சொத்து வேறு யாருக்குப் போய்விடும் என்பதுதான்.

இப்படியொரு இடி இறங்கும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவே இல்லை.

தீபாவின் பெற்றோர் இனி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்கள் 

இனியும் அந்த ஒட்டுக் குடும்பத்தில் வெறும் சோற்றுக்காக அங்கு விட்டுவைப்பது அவர்களுக்கு சரியாகப் படவில்லை!

பானம்மாவின் விருப்பத்துக்கு மாறாக அழைத்து வந்தாலும் சிக்கல் இருக்கிறது. அந்த அம்மாவின் மேலுள்ள சொத்தை வற்புறுத்திக் கேட்கவும் முடியாது. அதற்காக ஒரு வேலைக்காரியைப் போல தங்கள் பெண்ணை விட்டுவைக்கவும் மனமில்லை.

வேறொரு காரணமும் இருந்தது. இப்போதெல்லாம் மறுமணம் செய்துகொண்டால் யாரும் தப்பாக நினைப்பதில்லை என்பதால் அப்படியொரு எண்ணமும் இருந்தது. தங்கள் பெண் வாழ்நாளெல்லாம் இப்படியே இருக்கட்டும் என்று எந்தப் பெற்றோர்தான் நினைக்கமுடியும். அப்படிப்பட்ட காலம் மாறிவருவது ஒரு நல்ல அம்சம்!

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். பானம்மாவிடம் பெண்ணைக் கூட்டிப்போகிறோம் என்று சொல்லிக் கேட்பது. அந்த அம்மா இரக்கப்பட்டு ஏதாலும் கொடுத்தால் பார்ப்போம் இல்லாவிட்டால் சொத்தே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அழைத்து வந்துவிடுவது என்ற முடிவில் சில உறவினர்களையும அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள்.

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு ஒன்றாய் உட்கார்ந்து எப்படிப் பேச்சைத் துவங்குவதென்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் வேறு சிலருடன் வந்தபோதே பானம்மாவுக்குப் புரிந்துவிட்டது. ஏதோ திட்டத்துடன்தான் வந்திருக்கிறார்கள் என்று.

அந்த அம்மாவே பேச்சை எடுத்தார். "என்னமோ எல்லாரும் யோசிச்சுட்டே இருக்கீங்க. ஏதாலும் சொல்ல வந்தீங்களா" என்று கேட்கவும் வந்தவர்களுக்கும் பேசுவதற்குச் சுலபமாகப் போய்விட்டது.

"அம்மா! தீபா இனி இங்கிருக்கிறது நல்லா இல்லேன்னு நாங்க நினைக்கிறோம். அதுதான் உங்களோட சொல்லலாம், நீங்க என்ன வழி செய்வீங்களோ செய்யட்டும்ணுதான் சொல்லவந்தோம்" என்று மிகவும் ஜாக்கிரதையாகவும் அதே சமயம் சொல்லவந்ததைச் சுருக்கமாகவும் சொன்னார்கள்.

"நடந்தது நடந்துட்டுது. இது யாரும் தப்புப் பண்ணி வந்தது அல்ல. என்னோட ரெண்டு கண்ணுல ஒண்ணு போச்சு. அதுக்காக யார் வேதைனையை வாங்கிக்கப்போறாங்க? மருமகளை வேண்ணா நீங்க கூட்டிட்டுப்போறோம்ணு சொல்றீங்க. எங்களை யார் எங்கெ கூட்டிட்டுப்போறது? சொல்லுங்க" என்று பானம்மாவும் பதிலுக்குச் சொன்னார் 

அதன்பின்னும் அவரவர் மனசில் இருக்கிறதை துயரத்தோடு சொல்லி முடித்தபின் கடைசியாக பானம்மா சரி எங்க சம்பந்தி முடிவாச் சொல்லட்டும் என்றார்.

தீபாவின் அப்பாவும் தங்களோடு தீபாவை அழைத்துப்போகும் முடிவை நயமாகவும் அதேசமயம் திட்டவட்டமாகவும் சொல்லிவிட்டார்.

"அப்புறம் வேறொண்ணும் இல்iயா?" என்று பானம்மா கேட்க "சம்பந்தியம்மா எம் பொண்ணுக்கு நாங்க போட்ட முதலோட உங்க மருமகளுக்காகவும் பேரனுக்காகவும் நீங்களாப்பாத்து ஏதாலும் நல்லது செய்யுங்க" என்று சொல்லும்போதே வார்த்தைகள் உடைந்து கதறத் தொடங்கிவிட்டார். எல்லோருமே துக்கம் தாங்காமல் கண்களில் நீருடன் சில நிமிடங்கள் மவுனமாக இருந்தார்கள். யாரும் எதுவும் பேசவில்லை.

கொஞ்சம் ஆசுவாசப் படுத்தி;க் கொண்ட பானம்மா "நான் ஒண்ணு சொன்னால் கேட்பீங்களா" என்று கேட்டார்.

எல்லோரும் அந்த அம்மாவையே பார்த்துக்கொண்டிருக்க, "தீபாவை வேண்டுமானால் நீங்க விருப்பப்படற மாதிரியே கூட்டிப் போங்க! என்னோட பேரனை இங்கேயே திரும்பவும் கொண்டுவந்து விட்டுருங்க. பேரன் இங்கேயே இருக்கட்டும்" என்றார். 

எல்லோரும் ஆடித்தான் போய்விட்டார்கள். "புருஷனை இழந்த அவள் குழந்தையையும் எதற்காக இழக்கணும்? இது என்ன நியாயம்? இந்த அம்மா எதாவது மனசு இளகுறதுக்காக பெத்த குழந்தையை விட்டுடணுமா? இது என்ன நியாயம்?"

தீபாவின் அப்பா கேட்டே விட்டார்.

"அதுதான் அந்தக் குழந்தைக்கும் நல்லது மருமகளுக்கும் நல்லது" பானம்மாவின் குரலில் உறுதி இருந்தது.

ஆனால் அதற்கெல்லாம் தீபாவின் அப்பா பயப்படுவதாக இல்லை. அந்தக் குடும்பத்துக்கு வேண்டுமானால் அந்த அம்மா அதிகாரியாக இருக்கலாம். அதுக்காக எல்லாரையும் அப்படி நினைக்கக் கூடாதல்லவா?

அவர் கறாராகச் சொல்லிவிட்டார் முடியாது என்று! அதற்கு மேல் அந்த அம்மா என்ன செய்தாலும் சரியென்றும் சொல்லிவிட்டார்.

"அப்படியா? சரி! இதுக்குமேலே நான் உங்களெ வற்புறுத்தலே!" என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் சென்றவர் வெளியில் வந்து தீபாவின் அப்பாவின் கையில் ஒரு கவரைக் கொடுத்து 

"இதுலே தீபாவின் மேல் முழுச் சுதந்திரமா பத்து ஏக்கர் தோப்பு எழுதிவைக்கப்பட்ட பத்திரம் இருக்கு. இது எதுக்குன்னா அவ நாளைக்கு இப்படியே இருக்கக்கூடாது. அதுக்காக. இது எந்தக் கணக்குலேயும் வராது. இதுதவிர என் பேரனுக்காக என்ன வருமோ அது அவனுக்கு எப்போகேட்டாலும் கிடைக்கும். மருமக இனியும் இன்னது வேணும்ணு கேட்கவேண்டியது இல்லே எடுத்திட்டுப்போகலாம்!

ஒன்னே ஒண்ணு என் பேரனை அப்பப்போ கொண்டுவந்து விட்டுட்டுப்போங்க. நாங்களும் அப்பப்பொ வருவோம். தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? 

என் பேரனை நான் இங்கெ விடச்சொன்னதுக்குக் காரணம் அவனைத் தாய்கிட்டெ இருந்து பிரிக்கிறதுக்கு அல்ல. அவ இன்னொரு கல்யாணம் பண்ணி நிம்மதியா இருக்கட்டும் அப்படின்னுதான். சரி வேறே என்ன? "

கேட்டுவிட்டு அமைதியாகிவிட்டார்.

கேட்ட அத்தனைபேரும் உறைந்து போய்விட்டனர். யாரும் எதுவும் பேசவில்லை! அதற்கு அவசியமும் இருக்கவில்லை!

சிறிது நேரத்திலேயே வந்த அத்தனைபேரும் புறப்பட்டு விட்டனர்.

ஆம் தீபாவும் பையனும் பானம்மாவின் மடியில்!.....

No comments:

Post a Comment