ss

Thursday, June 28, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 8 )


காரண காரியம்

நான் ஒரு விஷயத்தில் அறிவியல் சிந்தனைமட்டுமே கொண்டவர்களிடமிருந்து மாறுபடுகிறேன். அது என்னவென்றால் ஆன்மிகம் என்ற வார்த்தையையே நான் மறுப்பதில்லை. காரணம் அதுவும் ஒரு உலகப்பார்வை என்பதை நான் அங்கீகரிக்கிறேன்.

நான் சொல்லும் பரம்பொருளின் அடிப்படை வேறு மற்றவர்கள் சொல்லும் பரம் பொருள் என்பது வேறு.

ஆதாவது மற்றவர்களின் பார்வையில் பரம்பொருள் என்பது பரமாத்மா அல்லது அனைத்தையும் படைத்த அனைத்துமாயிருக்கிற படைப்புக் கடவுள். அது தன்னுள் அடங்கியுள்ள அனைத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது அல்லது இயக்குகிறது. அதன் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு இருக்pன்ற பொருட்கள் மற்றும் வாழ்கின்ற உயிர்கள்(ஜீவாத்மாக்கள்)

என்னுடைய பார்வையில் பரம்பொருள் என்பது அனைத்துமாயிருப்பது என்ற ஒன்றே. மற்ற அனைத்துமே அதன் அங்கங்களே! மனித உடம்பும் அதன் மூலக்கூறுகளும் எப்படியோ அப்படி!

நமது உடம்பின் உட்கூறுகள் நலமாக இருக்குமளவு ஒட்டுமொத்தமான உடம்பும் அதைச்சார்ந்துள்ள நமது வாழ்வும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அதற்காக நமது உடம்பு என்கிற மாபெரும் வடிவம் அதன் உட்கூறுகள் ஒவ்வொன்றையும் நேரடியாகக் கட்டுப்படுத்துவது இல்லை. ஒன்றன் நலன் ஓன்றில் அடங்கியுள்ளது என்ற அடிப்படையில் ஒன்றையொன்று இணைபிரியாதது, ஒன்றை ஒன்று சர்ந்துள்ளது.

அதேபோல அனைத்துமாய் இருக்கிற பரம்பொருளும் அதன் உட்கட்டமைப்பில் ஒரு அங்கமாக விளங்கும் நாமும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும் இயக்க அம்சங்கள். பரம்பொருள் என்பது தொகுதி, நாம் அதனின் ஒரு பகுதி. அதற்காக அந்தத் தொகுதியாகிய பரம்பொருள் தன்னுள் அடங்கியுள்ள ஒவ்வொரு பகுதியையும் நேரடியாகக் கட்டுப்படுத்துவது இல்லை. 

பரம்பொருளின் ஒரு பகுதியாகிய நாம் நமது வாழ்வைச் சிறப்பான ஒன்றாக வைத்திருக்குமளவு பரம்பொருளின் ஒரு நிலையாகிய நாம் வாழும் உலகமும் நமது சமூக வாழ்வும் சிறப்பாக இருக்கும் இல்லாவிட்டால் எதிர்விளைவுகள் துயரமாக இருக்கும் என்பதால் உயர்ந்த நெறிமுறையின்படிவாழ்வது நமது கடமையாகிறது.

அதையே ஆழ்ந்து சிந்திக்க இயராதவர்கள் எல்லாவற்றுக்கும் மேலானது பரம்பொருள். அது தனது உள்ளுறுப்புக்களாகிய நம்மைக் கட்டுப்படுத்துகிறது. நாம் சிறப்பாக சமூகத்துக்கும் சுற்றுப்பறத்துக்கும் இயைந்த முறையில் நல்வாழ்க்கை வாழ்வதுதான் அதற்குக் கொடுக்கும் மரியாதை. இல்லாவிட்டால் நமது வாழ்வு சிறப்பாக இல்லாமல் துயரமாகிவிடும் என்ற அளவு தம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதுதான் சிறப்பானது. அறிவியலுக்கு நெருக்கமானது. அதை அறிவியல் ஆன்மிகம் என்றுகூடச் சொல்லலாம். 

ஆதாவது பஞ்சாமிர்தத்தை ஆண்டவனின் அருட்பிரசாதம் என்று சொல்லியும் உண்ணலாம். சிறந்த உன்னதமான நலம்பயக்கும் சுவைமிக்க உணவுப்பண்டம்  என்று சொல்லியும் உண்ணலாம்.இரண்டும் விளைவால் நன்மையே பயக்கும்.

ஆனால் பஞ்சாமிர்தம் என்பது என்னென்னவோ மகிமை நிறைந்தது, அதை உண்டால் அற்புதமான சித்திகள் கைகூடும். அதன்மகிமையை உணராதவர்களின் வாழ்வைக் கெடுத்துவிடும் என்றெல்லாம் சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்?


அதேபோல மனித உணர்வுகளையெல்லாம் பரம்பொருளுக்கு ஏற்றி அது சதாகாலமும் கண்காணித்துக்கொண்டிருக்கும் பகைவனைப் போலவும் அதனிடம் அதன் விருப்பப்படி நடந்து கொள்ளாவிட்டால் பழிவாங்கிவிடும் என்பதுபோலவும் நினைப்பதும் நம்புவதும் அறியாமையாகும். அதன் பெயர் ஆன்மிகமல்ல. அறியாமை!


காரணம் இன்றிக் காரியம் இல்லை என்று சொல்வார்கள். அதன் பொருள் நாம் காணும் அனைத்துவிதப் பொருட்களின் அல்லது செயல்பாடுகளின் ஒவ்வொரு அசைவுக்கும் அடிப்படையாக ஒரு காரணம் இருக்கிறது என்பதே!

அதன் ஒரு பகுதியாக ஒரு பொருளை அல்லது ஒரு செயலை ஒன்று அல்லது ஒருவர் அல்லது பலர் செய்வதாகக் கருதுகிறோம். அந்த அடிப்படையில் ஒவ்வொன்றையும் செய்ய பிரிதொன்று அல்லது பிரிதொருவர் இருக்கும்போது எல்லாமும் சேர்ந்த ஒட்டுமொத்தமான ஒன்றை செய்ய அல்லது படைக்க ஏதோ ஒன்று யாரோ ஒருவர் இருந்துதானே ஆகவேண்டும் என்ற கருத்து உருவாகிறது. அது ஒரு எண்ணம்தானே அல்லாமல் அப்படி தன்னை இன்னொன்று உருவாக்காமல் தான்மட்டும் அனைத்தையும் உருவாக்கும் ஒன்று இருக்கவே முடியாது.

காரணம் நம்மைச் சுற்றி நாம் அறிந்த அல்லது அறியாத அனைத்துமே தன்னுள் அடங்கியுள்ள பலவற்றின் தொகுதியும் தன்னைவிடப் பெரிய வேறொன்றின் ஒரு பகுதியுமாகத்தான் இருக்கமுடியும். இதுதான் இருப்பின் விதி! இந்த விதிக்கு மாறாக தான் படைக்கப்படாத எது ஒன்றும் பிறவற்றைப் படைத்தலை மட்டும் செய்துகொண்டு இருக்கமுடியாது.

3 comments:

 1. அய்யா தங்களுடைய ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை என்ற பதிவுகள் படித்தேன். மிகவும் அருமையாக உள்ளது.

  இன்று காலையில் ஒரு பதிவில் நான் இட்ட பதிலுக்கு இங்கு தொடர்பு இருப்பதால் இதை எழுதுகிறேன்.

  //// ஆதாவது மற்றவர்களின் பார்வையில் பரம்பொருள் என்பது பரமாத்மா அல்லது அனைத்தையும் படைத்த அனைத்துமாயிருக்கிற படைப்புக் கடவுள். அது தன்னுள் அடங்கியுள்ள அனைத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது அல்லது இயக்குகிறது. அதன் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு இருக்pன்ற பொருட்கள் மற்றும் வாழ்கின்ற உயிர்கள்(ஜீவாத்மாக்கள்)///

  இங்கு பரமாத்மா, ஜீவாத்மா இரண்டும் ஒன்றுதான். அவை இருக்கும் இடத்தை பொறுத்து அவற்றின் பெயர்கள்தான் மாறுபடுகிறது. இவை இரண்டும் ஒன்றாவதால் ஒன்று மற்றொன்றை ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஆனால் அது தெரியாமல் இந்த ஜீவாத்மாக்கள் தான் தனக்குள் பாகுபாடு காட்டி கொண்டு போட்டி போட்டு கொண்டு இருக்கிறது.

  ReplyDelete
 2. நன்றி நண்பர் தனபாலன் அவர்களே!
  நன்றி நண்பர் ஆர வி ஆர் அவர்களே!உங்களின் பதிலும் பாராட்டுக்கு உரியது! சரியான திசைவழி சிந்திக்கிறீர்கள்!

  ReplyDelete