ss

Tuesday, June 5, 2012

சிறுகதைகள் (9)


திலீபன்

திலீபன் அந்த மாவட்டத்திலேயே பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மாணவனாக தேறியிருந்தான் மாநிலத்திலும் முதல் பத்து இடங்களுக்குள் தேறியிருந்தான்.

அவனுடைய பெற்றோராகட்டும் படித்த பள்ளிக்கூட ஆசிரியர்களாகட்டும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவிருக்குமா?

எல்லோரும் அவனைப்பாராட்டிக் கொண்டாடித் திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.

அவனைப் பாராட்டி வந்த போன்களுக்கும் அளவில்லை. 

பெற்றோர் இருவரும் நல்ல வேலையில் இருந்தார்கள் அம்மா ஆசிரியை அப்பா எஞ்சினியர்.

அடுத்து அவனை என்ன படிக்கவைக்கலாம் என்பதை அவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. அவனுக்கு பெரிய பணக்காரனாகும் கனவுகளோ பெரிய டாக்டராகும கனவுகளோ இல்லை. 

வருங்காலத்தில் சமுதாயத்துக்கு என்ன படித்தால் பயனுடையதாக இருக்கும் என்பதுதான் அவனுடைய எண்ணம். எந்தக் கல்லூரிக்குப் போனாலும் சீட்டுக் கிடைப்பது அவனுக்குப் பிரச்சினையாக இருக்காது என்பது உறுதியானதால் அவன் இன்னும் உறுதியான முடிவெடுக்கவில்லை.

பள்ளிக்குச்சென்று எல்லா ஆசிரியர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டான்.

இயற்பியல் பாட ஆசிரியர் அவனுக்கு பாராட்டு எதுவும் தெரிவிக்கவில்லை. அவனை அப்படியே தழுவிக்கொண்டார். அந்தப் பாராட்டில் அவன் கரைந்துபோனான்.  அவனுக்கு அவனுடைய இயற்பியல் பாட ஆசிரியர்தான் உண்மையான குரு. அவர் வகுப்பில் நுழையும்போதே வகுப்பு நேரத்தில் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது ஏதாவது ஒரு சமூகப் பிரச்சினையைச் சொல்லி அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பார். சிலர் சொல்லும் பதில் திருப்தியாக இருந்தால் அதன்பின் அவரும் அதை எப்படிப் பார்க்கவேண்டும் என்று ஒரு அறிவு விளக்கம் கொடுப்பார்.

தன்னிடம் படிக்கும் மாணவர்களை தன்னிடம் டயூஷனுக்கு வரும்படி வற்புறுத்தாத, ஏன் அப்படி வகுப்புகளை நடத்தாத ஒரு ஆசிரியர். தான் வகுப்பில் நடத்தும் பாடத்திலேயே மாணவர்களை முழு அளவுக்குத் தயார்ப்படுத்தும் ஆசிரியரும் கூட.

அவசியப் பட்டால் விடுமுறைநாட்களில் தனி வகுப்புகள் நடத்தி மாணவர்களின் மரியாதையை அதிகமாகவே பெற்றவர். அவர் கூடுதல் வருமானத்துக்காக தனது கல்வியை விற்காமல் ஒரு தவமாகவே தன் பணியைச் செய்துவருபவர். நிறைய ஆசிரியர்களுக்கு பிடிக்காவிட்டாலும் அவருடன் மரியாதையாகவே நடந்துகொண்டனர்.

காரணம் அந்தத் தனியார் பள்ளியில் அவருக்கிருந்த நற்பெயர் பள்ளிக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது.

திலீபனும் ஒரு வித்தியாசமான மாணவன். அவன் படிப்பில் கெட்டிக்காரன் என்பது மட்டுமல்ல ஆசிரியர்களுக்குச் சிலநேரங்களில் தலைவலியாகக்கூட இருப்பான்.

அவனுக்குப் பிடிக்காதது ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஒப்பிப்பது. ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதை அப்படியே உள்வாங்கிக்கொண்டு தன்னுடைய சொந்தப் புரிதலில் இருந்துதான் பதில் சொல்வான். அது மறுக்க முடியாததாக இருக்கும்.

பரீட்சையில் கூட அறிவியல் சோதனைகளை பார்முலாக்களின் அடிப்படையில் தான் உருவாக்கிவைத்திருக்கும் சோதனைமுறைகளை எழுதுவான். அது ஆசிரியர்களுக்குப் பெரிய தலைவலியாக இருக்கும். எல்லோரும் ஒரேமாதிரி எழுதியிருந்தால் திருத்த வசதியாக இருக்கும் . இவனுடைய தனிமுறைகளை ஆராய்ந்து சரிபார்க்கவேண்டும். 

வரலாற்று ஆசிரியருக்கும் அவனுக்கும் ஒரு நாள் பெரிய வாக்குவாதமே நடந்துவிட்டது. பாடத்தில் குறிப்பிட்ட ஒரு ஆட்சிக் காலத்திய ஆட்சிமுறைகளைப் பொற்காலம் என்று சொல்லப்பட்டிருக்கும். இன்னின்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன என்று சொல்லப்பட்டிருக்கும். 

இவன் விடை எழுதும்போது பொற்காலம் என்றும் சீர்திருத்தங்கள் என்றும் பாடத்தில் சொல்லப்பட்டிருப்பதாகப் பதிலில் எழுதுவான். தனது பதிலாக எழுதமாட்டான். ஆசிரியர் கண்டித்தால் பாடத்தில் சொல்லப்பட்டிருப்பதைச் சரியாக எழுதியிருக்கிறேனா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதை என்னுடைய கருத்தாக நான் ஏற்றிருந்தால்தான் எனது கருத்தாக எழுதமுடியும் என்று சொல்வான். 

ஆசிரியரால் ஒன்றும் பேச முடியாது.

சிறு வயதிலேயே யதார்த்த வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள்தான் அவனுக்கு அதிகம்.

அதனால் எதிர்காலத்தில் உலகுக்கான தன்பங்கு மகத்தானதாக இருக்கவேண்டும் என்பதால் அவனின் ஒவ்வொரு நடவடிக்கையும் அர்த்தமுற்தாக இருந்தது.

அவனுடைய உயர்ந்த எண்ணங்களுக்கும் நடத்தைக்கும் இயற்பியல் ஆசிரியர்தான் தூண்டுகோல் ஆவார். அதனால் அவர்களிடையே அபாரமான அன்பும் மரியாதையும் இருந்தது.அவனை ஒரு மாமனிதன் ஆக்கவேண்டும் என்பதில் அவருக்கு சிறப்பான அக்கரை உண்டு. 

தன்னை ஏமாற்றிய துருபத மன்னனைத் தன் சீடனான அர்ஜுனனைக்கொண்டு தோற்கடித்து சபதத்தை துரோணர் நிறைவேற்றிக்கொண்டதாக மகாபாரதத்தில் வரும்.

அந்தமாதிரி தனது மாணவனான திலீபனை ஊக்குவிவப்பதன் மூலம் வருங்காலத்தில் அவனை ஒரு அறிவியல் மேதை ஆக்கவேண்டும் என்ற கனவு அந்த ஆசிரியருக்கு இருந்தது.

அதனால் மாநிலத்திலேயே முதல் சில இடங்களுக்குள் தேர்வாகியிருந்தாலும் அவன் மனதில் அது பற்றிய பெருமையோ பிறரிடம் காட்டி;க்கொள்வதோ இல்லை. யாராவது பாராட்டினால்கூட வெறும் புன்னகையோடு அவன் பதில் முடிந்துவிடும்.

அன்று பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. பெற்றோரும் மற்ற மாணவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

திலீபனும் அமைதியாக பெற்றோருடனும் நண்பர்களுடனும் அமர்ந்திருந்தான்.

விழா துவங்கியதும் அவன் மேடையில் உட்காரவைக்கப்பட்டான்.

பேசிய அனைவரும் அவனைப் புகழ்ந்து தள்ளிவிட்டனர். இருந்தாலும் அவன் முகத்தில் மட்டும் பெரிய மாற்றம் இல்லாமல் உணர்ச்சியற்றவன்போல் அமர்ந்திரு;நதான்.

கடைசியாக அவனுக்கு முன்னதாக வேறு சில மாணவர்களுப் பரிசும் நற்சான்றிதழும் கொடுத்தபின்னால் திலீபனை அழைத்தார்கள்.

அவனுடைய சிறப்புகளைப் பட்டடியல் போட்டுப் புகழ்ந்து விட்டு அவனைப் போன்று ஒரு சிறந்த மாணவனாக அனைவரும் விளங்கவேண்டும் என்று சொல்லி அவனுக்கு விலையுயர்ந்த பரிசையும் நற்சான்றிதழையும் வழங்கினார்க்ள்.

அதைப் பெற்றுக்கொண்ட திலீபன் தனது நன்றியுரையாக சில வார்த்தைகள் பேச அழைக்கப்பட்டான்.

அவன் பேசத் துவங்கி அனைவருக்கும் வணக்கம் சொன்ன கையோடு

"எனக்கு வழங்கப்பட்ட அத்தனை பாராட்டுக்களையும் பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும் எனது நண்பன் வெங்கட்ராமனுக்கு சமர்ப்பிக்கிறேன். அவன்தான் இத்தனை புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கு உரியவன்! " என்றான்.

"காரணம் என்னுடைய வாய்ப்புகள் அவனுக்குக் கிடைத்திருந்தால் என்னிலும் அதிக மதிப்பெண் பெரும் தகுதி உடையவன் அவன். என்னுடைய சாதனைகளை அவனால் செய்ய முடியும் ஆனால் அவனுடைய சாதனைகளை என்னால் செய்யமுடியாது " 

இவன் யாரைச் சொல்கிறான் என்று அனைவரும் ஆசிரியர்களில் இருந்து பெற்றோர்வரை அனைவரும் விழித்தார்கள். 

அவன் மீண்டும் தொடர்ந்தான்.

"என் பெற்றோர்கள் படித்தவர்கள் நல்ல ஊதியம் பெறும் பணி செய்கிறார்கள். எனக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்கிறார்கள். அதனால் நான் படித்ததோ உயர்ந்த மதிப்பெண் பெற்றதோ பெரிய விஷயம் அல்ல. அப்படிப்பட்ட உதவி எதுவும்  பெற்றோரிடம் இருந் கிடைக்காமலே மிகச்சிறந்த மதிப்பெண் வாங்கியிருக்கும் என் நண்பன்தான் என்னிலும் பலமடங்கு சிறந்தவன். அவனைப்போன்ற மாணவர்கள் தான் இந்த நாட்டின் வருங்காலத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களாக விளங்கமுடியும்."


"தனது தந்தை ஒரு நோயாளி என்பதால் தான் பள்ளிக்கு வந்து படித்துக்கொண்டே தினமும் குறைந்தது தன் குடும்பத்தைக் காக்க நான்கு மணிநேரத்துக்குக் குறையாமலும் விடுமுறைநாட்களில் நாள் முழுவதும் கைத்தறியில் அமர்ந்து நெசவு நெய்தானே அவன்தான் மிகச்சிறந்த மாணவன்.
அவன் படித்ததில் பாதியைத் தறியில் உட்கார்ந்துகொண்டே படித்தவன்.தானும் படித்துக்கொண்டே தனது பெற்றோரையும் காத்தவன்!"

"மதிப்பெண்களைமட்டும் வைத்து புகழப்படுவதும் பாராட்டப்படுவதும் மாணவர்களுக்குப் பயன்படாது. அவனைப் போன்ற மாணவர்களின் மதிப்பெண் குறைவாக இருந்தாலும் அவன் எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை நாங்கள்தான் அவனைப் பார்த்து உழைப்பையும் பொறுப்பையும் கற்றுக்கொள்ள வேண்டும். "

"இந்த மேடையில் அமர்ந்து பாராட்டப்படும் அளவு அவன் மதிப்பெண் பெறவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரை அவனுக்கு இணையாக யாரும் இல்லை!"

அவன் பேசிக்கொண்டிருந்தபோது அவனுக்கு நெருக்கமான சில நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவன் யாரைச் சொல்கிறான் என்று புரியவில்லை. 

அவன் விழாமேடைக்கு வருமாறு தன் நண்பனுக்கு அழைப்பு விடுக்கவும் அங்கே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னைத்தான் சொல்கிறான் என்று புரிந்துகொண்டு கண்கலங்கியபடி அமர்ந்திருந்த வெங்கட்ராமன் எழுந்து மேடையை நோக்கிச் சென்றபோது அனைவரது கண்களும் அவனையே மொய்த்தன. 

தனது நண்பனை மேடையிலேயே கட்டிப்பிடித்துத் தனக்குக் கிடைத்த சிறப்புகளையெல்லாம் அவனுக்குச் சமர்ப்பணம் செய்தான். 

தனக்கு வருங்காலத்தில் கிடைக்கும் சிறப்புச் சலுகைகளால் கிடைக்கும் அனைத்துப் பயன்களையும் தன் நண்பனின் கல்விக்காகப் பயன்படுத்தப்போவதாக உறுதியும் கூறினான். 

அத்தோடு சிறப்பான மதிப்பெண் பெற்றவர்களை மட்டும் பாராட்டி மற்ற நண்பர்களை வேதைனைப்படுத்தும் விழாக்களில் தனக்கு உடன்பாடில்லை என்றும் துணிந்து மேடையில் முழங்கினான். 

அப்போது விழாவுக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலோரின் கண்கள் கலங்கியிருந்தன….. 

No comments:

Post a Comment