ss

Wednesday, June 27, 2012

இயற்கை ( 6 )பட்டாம் பூச்சி

வண்ண வண்ணக் கனவுகளுடன் கவலையில்லாமல் வலம் வரும் இளைஞர் பட்டாளத்தைப் பட்டாம்பூச்சிகள் என்றும் சொல்வார்கள்.

காரணம் பட்டாம்பூச்சிகள் பலவகை நிறங்களில் பலவகை அளவுகளில் மறந்து பறந்து காண்பவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதுதான்.

அவற்றுக்குத் தேவை தேன் சிந்தும் மலர்கள். அந்த மலர்களைப் பூக்கும் செடிகள் கொடிகள் மரங்கள்.

அவையெல்லாம் வளரவேண்டுமானால் காலாகாலத்தில் மழைபெய்யவேண்டும். பலவகைத் தாவரங்களும் பூத்துக் குலுங்கவேண்டும்.

முன்னெல்லாம் அப்படித்தான் இருந்தது.


மழைக்காலங்களில் கிராமங்களில் வீடுகளைச் சுற்றிலும் காலி இடங்களிலும் புறம்போக்குகளிலும் குளம் குட்டையோரங்களிலும் பல்வகைச் செடிகளும் பச்சைக்கம்பளம் விரித்ததுபோல் இருக்கும். 

தும்பை, துளசி, எருக்கு, ஆவாரை, குப்பைமேனி, ஊமத்தை, காட்டாமணக்கு, நாயுருவி, துத்தி, சுள்ளி போன்ற செடிவகைகள் நெருக்கமாக முளைத்துக் கிடக்கும். அத்தோடு சப்பாத்தக் கள்ளி, தீருகு கள்ளி, கிழுவன் போன்றவற்றின்மேல் கோவை, வேலிப்பருத்தி ஊணாங்கொடி போன்ற கொடிவகைகள் படர்ந்திருக்கும்.

இவற்றில் பூத்திருக்கும் பூக்களில் இருக்கும் தேனை உறுஞ்ச வண்ணவண்ணப் பட்டாம்பூச்சிகள் காலை நேரங்களில் பறக்கும் 

விடுமுறை நாட்களில் காலையில் இந்தப் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது பசியுணர்வைக்கூட மறக்கடிக்கும் விளையாட்டு ஆகும். 

தும்பைச் செடிகளைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டே பட்டாம்பூச்சிகளை விரட்டிச் செல்வதும் அதை அதற்கு வலிக்காமலும் கசங்காமலும் தும்பைச் செடிகளால் அலுங்காமல் அமுக்கிப்படிப்பதற்குள் அவை தப்பித்து ஓடுவதும் மீண்டும் மீண்டும் விரட்டுவதும் மறக்கமுடியாத அனுபவங்களாகும்.

ஆனால் சிலநேரங்களில் அவை வேலிகளைத் தாண்டித் தாண்டிச்செல்லும்போது சுற்றிச் சென்று பிடிப்பற்குள் வெகு தூரம் போய்விடும் நல்ல பட்டாம் பூச்சியாக இருந்தால் விட மாட்டார்கள்.

ஆனால் அத்தகைய ஒரு காலத்தை அநேகமாக இழந்துவிட்டோம். காரணம் அந்தமாதிரி உயிரினங்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்தது அல்லாமல் கண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி அழித்தும் விட்டோம். 

தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் முக்கியமாக உதவிசெய்யும். ஆனால் அத்தகைய உயிரினங்களை அழிப்பதால் அதன் தொடர்ச்சியாக பல அரிய தாவரங்கள்கூடப் பல்கிப் பெருகுவதற்குப் பதிலாக அழியக்கூடிய நிலை ஏற்படுகிறது. 

மூலிகைப் பயன் உள்ள நிறையத் தாவரங்கள் அழிந்துபோனதாற்கு அவற்றைச் சார்ந்து வாழ்ந்த பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்கள் அழிந்ததும் ஒரு காரணாக இருக்கலாம்.

எனவே பட்டாம்ப+ச்சிகள் பறந்து திரிந்த அவற்றைச் சிறுவர்கள் விரட்டி விளையாடிய ஒரு காலம் திரும்பவேண்டுமானால் காணுமிடங்களில் எல்லாம் மரங்கள் வளர்ந்திருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்ய வேண்டும். 

குளம் குட்டைகள் எல்லாம் நிரம்பி வழியவேண்டும். அவற்றின் ஓரங்களெல்லாம் பச்சைப் பசேலென்று செடிகளும் கொடிகளும புதர்களும் மண்டிக் கிடக்க வேண்டும். அவற்றில் வண்ண வண்ணப் பூச்சிகள் பறந்து திரியவேண்டும். 

நீர்க்குட்டைகளின் ஓரங்களில் நண்டுகள் வளை தோண்டி வசிக்க நீருக்குள் நீர்க்காக்கைகள் விளையாட  எந்த இரையை நாம் பிடிக்கலாம் என்ற அங்குள்ள மரங்களின் மேல் உட்கார்ந்திருக்கும் கொக்குகள் நோட்டமிட அங்கே இயற்கைத் தாய் நடனம் புரிய வேண்டும் 

அப்போது அந்த அழகுக்கு அழகு சேர்க்கப் பட்டாம்பூச்சிகள் வண்ண வண்ணமாகப் பறந்து திரியும் கண்கொள்ளாக் காட்சிகளைப் பார்க்கலாம்.

அப்படியொரு காலம் வருமா?

5 comments:

 1. dear sir, i liked your blog. will fallow it for sure...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள் விமர்சனமும் செய்யுங்கள். நல்ல செய்திகள் பரவட்டும்.

   Delete
 2. அருமையான பகிர்வு. நல்ல வலைத்தளம். நேரமிருக்கும்போது மற்ற பதிவுகளையும் வாசிக்கிறேன்.


  பொன்.வாசுதேவன்
  www.aganazhigai.com

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! வேறுபாடு இருப்பின் விமர்சனமும் செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!

   Delete