ss

Tuesday, July 3, 2012

எனது மொழி ( 49 )

நம்பிக்கையும் மறுப்பும்    

நாம் வாழும் இவ்வுலகை உள்ளடக்கியுளள பிரபஞ்சம் அல்லது அதைவிடப் பிரம்மாண்டமான வேறொன்று நமது கற்பனைக்கு எட்டாத ஒன்று என்பதையும் அதன் ஒரு பகுதியாகவும ஒரு அம்சமாகவும்தான் நாம் வாழ்ந்துகொண்டுள்ளோம் என்பதையும் கடவுள் நம்பிக்கையானர், மறுப்பாளர் இருவருமே ஒப்புக் கொள்கின்றனர். 

ஆனால் அத்தகைய பிரம்மாண்ட நிலைக்கும் நமக்கும் உள்ள உறவுகுறித்த நிர்ணயிப்பில்தான் முரண்படுகிறார்கள். 

நம்மை உள்ளடக்கியுள்ள அந்த மாபெரும்  சக்திதான் சகலத்தையம் தீர்மானிக்கிறது என்றும் அது மனித உணர்வுகளின் சாயலுள்ள தெய்வம் அல்லது பரம்பொருள் என்றும் அதுதன் விருப்பம்போல் செயல்படவல்லது என்றும் ஆனாலும் விருப்பு வெறுப்பு அற்றது என்றும் கடவுள் நம்பிக்கையாளர் நம்புகின்றனர் 

அதுமட்டுமல்ல அந்த பரம்பொருளுக்கு முரண்படாமல் இருப்பதோடு அதை வழிபடவும் செய்யவேண்டுமென்றும் அதனால் நம் வாழ்வு வளம்பெறும் அல்லது பிறப்பு இறப்பு அற்ற உயர்நிலை எய்த இயலும் என்றும் கடவுள் நம்பிக்கையாளர் கருதுகின்றனர். 

ஆனால் கடவுள்; மறுப்பாளரோ நாம் உள்ளடக்கிய மாபெரும் பிரபஞ்சம் அல்லது அதற்கு மேற்பட்ட சக்தியை மனித அறிவின் சாயலுடைய அறிவுபூர்வமான ஒன்றாக ஒப்புக்கொள்வது இல்லை. 

மாறாக எல்லையற்ற இயக்கத்தின் ஒருபகுதியாக நாம் வாழ்ந்துகொண்டுள்ளோம்; அந்த வாழ்க்கையை சகமக்களுக்கு இயைந்த வகையில், சமுதாயத்துக்கு இயைந்த வகையில், நாம் உட்பட உள்ளடங்கியுள்ள ஒட்டுமொத்தமான பேரியக்கத்துக்கு இயைந்த வகையில் முரண்பாடுகளைத் தவிர்த்து காலவெள்ளத்தில் நாம் வாழும்நாள்வரை மகிழ்வுடன் வாழ முயல்வதுதான் வாழ்க்கை; அந்த வாழ்க்கையின் சுகதுக்கங்களை வேறெதுவும் ஆட்டுவிக்கவில்லை; தீர்மானிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

பிறவிக்கூறு, சமுகத்துடன் கொண்டுள்ள உறவு, இயற்கையின் சாதக பாதகமான நிலைமை, இயற்கையைப் பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் நாம் கற்றுணர்ந்த அறிவு இவையே தீர்மானிக்கின்றன என்றும் கருதுகிறார்கள். 

முன்னது சிந்தனாசக்தியை ஒரு கட்டுக்குள் நிறுதிவிடுகிறது. 

பின்னது சிநதனாசக்தியை எல்லையற்று விரிவாக்குகிறது. 

முன்னது மூடநம்பிக்கைகளுக்கு இடம் தருகிறது. 

பின்னதில் மூடநம்பிக்கைக்கு இடமில்லை.

No comments:

Post a Comment