ss

Tuesday, July 3, 2012

இயற்கை ( 7 )

வாழ்விடம் எங்கே?    

கட்டிடங்கள், தொழிற்சாலைகள், காங்க்ரீட் தளங்கள், காங்க்ரீட் சாலைகள், பாலங்கள் பெரும் தொகுப்பு வீடுகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

பெரும் சுரங்கங்கள், சுரங்கங்கள் தோண்டும்போது வரக்கூடிய பயனற்ற கழிவுகள், நிலக்கரியை எரிக்கும்போது கிடைக்கும் எரிந்த கரியின் கழிவுக்குவியல் இவற்றுக்கும் அளவில்லை.

பாசனத்துக்காகவும் இன்னும் வேறுபல பயன்களுக்காகவும் தோண்டப்படும் கிணறுகள், மற்றும் பாதாளக் குழிகள், அணைக்கட்டுக்கள், இவைபோன்ற இன்னும் பல அனுதினமும் பூமியின் மேற்பறப்பில் பிரம்மாண்டமான அளவு அதிகரித்தவண்ணம் உள்ளன. 

ராணுவப் பயன்பாட்டுக்கான கட்டுமானங்களுக்கும் உலகில் பஞ்சமில்லை!


சமீபகாலங்களில் ரசாயனக் கழிவுகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அணுஉலைக் கழிவுகளும் பூமிப்பரப்பை நிறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. 

ஆதாவது பூமியின் மேற்பரப்பில் தாவரங்களும் உயிரினங்களும் தோன்றுவதற்கோ வளர்வதற்கோ தகுதியுடைய நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. 

அப்படிக் குறையும் வேகம் நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகின்றது. 

இன்றைய நவீன அறிவியலின் வெற்றி எனப்படுவது பூமிப் பரப்பை தாவரங்களின் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கைக்குப் பயனற்றதாக்குவது என்ற திசைவழியில்தான் பெறப்படுகிறது. 

பயிரினங்களோ உயிரினங்களோ வாழத் தகுதியுடைய நிலப்பரப்பு குறைந்துகொண்டே வந்து ஒரு கட்டத்தில் நெருக்கடி தவிர்க்கமுடியாததாகி பேரழிவைச் சந்திக்கவிருக்கிறோம். 

உண்மை உணரப்படும்போது அழிவு என்பது தவிர்க்கமுடியாததாகிவிடும். 

பூமிப்பரப்பிலே புதுப்புதுப் பகுதிகளைப் பண்படுத்த முயல்வதெல்லாம் மூழ்கும் கப்பலின் கீழ் தளத்திலிருந்து மேல்தளத்தில் ஏறித் தப்ப முயல்வதைப் போன்றதுதான். 

பூமிக்கடியில் இருந்து ஏராளமான நிலக்கரியையும் எண்ணெயையும் எரிப்பதன் மூலமும் ரசாயனத் தொழில்களின்மூலமும் கழிவுகள் மூலமும் நிலப்பகுதியை மட்டுமல்ல காற்றையும் நீரையும்கூடக் கெடுத்துவிட்டதால் ஒட்டுமொத்த பூமியே உயிர்களும் பயிர்களும் வாழத் தகுதியற்றதாகப் படுவேகமாக மாறிக்கொண்டு வருகிறது. 

ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஆண்டுகள் பனிமூடி இருந்த பகுதிகள் எல்லாம் உருகி நிலம் தெரியத் துவங்கிவிட்டன.

அதனால் கடல்மட்டம் உயர்ந்து பெரும் நிலப்பகுதிகள் மூழ்கடிக்கப்படப் போவதும் உறுதியாகிவிட்டது. 

அதைத் தடுத்து நிறுத்த முயன்றாலும் முடியாது என்ற நிலையை அடைந்தாகிவிட்டது.

ஆதாவது நூறு வருடங்களுக்கு முன்பு இருந்த எந்த வீடோ , தொழில்சாலையோ , பாலங்களோ  பெரும் கட்டுமானங்களோ எதுவும் இன்று பயன்பாட்டில் இல்லை.

இந்த நூறு வருடங்களுக்குள் உருவான கட்டுமானங்களாலும் இயந்திரங்களாலும் வாகனங்களாலுமே உலகில் இயற்கையை  இந்த அளவு கெடுத்திருக்கிறோம்.

அதன்படி பார்த்தால் இப்போதுள்ள எந்தக் கட்டுமானமும் சின்னஞ்சிறு காங்க்ரீட் வீடுகளில் இருந்து பிரம்மாண்டமான கட்டுமானங்கள் வரை மற்றும் இயந்திரங்களும் வாகனங்களும் பயன்பாட்டுப் பொருட்களும் இன்னும் நூறு வருடம் கழித்து எதுவும் இருக்காது.

ஆனால் காணாமல் போகும் அவற்றுக்காக இந்த நூறு ஆண்டுகளில் இழந்ததைவிடப் பல மடங்கு இயற்கையை அடுத்த  நூறாண்டுகளில் நாசம் செய்திருப்போம்.

அந்த நிலையில் அந்த நிலையில் வாழச் சக்தி பெற்ற உயிரினங்களும் சூழல் மாறுபாட்டால் உருவாகும் புதுப்புது உயிரினங்களும் மட்டுமே தாக்குப் பிடித்து வாழ முடியும்.

ஒருக்கால் மனிதனால் உருவாக்கப்பட்டு அவனின் அழிவுக்குப்பின் ஆனாதரவாக விடப்படும் கட்டுமானங்கள் அவற்றுக்கு வாழ்விடங்களாகக்கூட ஆகலாம்.

ஆனால் இன்னமும் மனிதஇனத்துக்கு நேரப்போகும் பேரழிவு போதுமான அளவு உணரப்படக்கூட இல்லை. 

எனவே மனித இனம் அழிவுப்பாதையில் சென்று அழிந்துபோவதை யார்தான் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?

யாரால் அது முடியும்? 

No comments:

Post a Comment