ss

Tuesday, July 17, 2012

மரம் ( 9 )


பாவம் பனை!

(நண்பர்களே! நான் தினமும் போகும் பாதையில் இரண்டு பனைமரங்கள் இருக்கும். அதன் அடியில் நூற்றுக்கணக்கான பனங்காய்களும் கொட்டைகளும் சிதறிக்கிடக்கும். அப்போது என் மனதில் ஒரு சராசரி மனிதனுடன் அது பேசுவது போன்ற கற்பனை எழும். அதுதான் இந்த உரையாடல்! படம் நேற்று (16.7.12)  காலையில் எடுத்தேன்!)

அந்தப் பனைமரத்தின் அடியில் அந்த மனிதன் நின்று கொண்டிருக்கிறான். 

மரத்தையும் அதன் அடியில் சிந்திச் சிதறிக்கிடக்கும் பனங் காய்களையும்  மாறி மாறிப் பார்க்கிறான்.

அவனைப் பார்த்த அந்த பனை மரத்துக்கு மிகவும் மகிழ்ச்சி! தன்னை மதித்து நின்ற அவனுடன் பேசத் துவங்கியது. 

ஐயா! ஏன் வெய்யிலில் நிற்கிறீர்கள்? 

சும்மா!

என்னிடம் நிறைய நிழல் இல்லை! ஆனாலும் உங்கள் ஒருவருக்குப் போதும். நிழலில் நில்லுங்களே!


வேண்டாம் வேண்டாம்!

ஏன் ஐயா? என்ன யோசனை? 

உனக்கு அடியில் பார்! இத்தனை காய்களை இறைத்து வைத்திருக்கிறாய்! போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக!

ஐயா அது உங்களுக்கு இடைஞ்சல் அல்ல! அவை எனது பிள்ளைகள்! பொறுக்கிக் கொண்டுபோய் ஒரு இடத்தில் புதைத்துத் தண்ணீர் விடுங்கள்! சிலமாதங்களில் அருமையான கிழங்குகளாக மாறி உங்களுக்கு உணவாகப் பயன்படுவார்கள்!

எனக்கு வேறு வேலை நிறைய இருக்கு!

என்னவேலை ஐயா? 

இப்போ உன்னை வெட்டிச் சாய்க்கப் போகிறேன்!

ஐயையோ! ஏன் ஐயா இப்படித் தகாத வார்த்தையைச் சொல்கிறீர்கள்?

நான் என்ன தவறு செய்தேன்?

உன்னாலெ என்ன பிரயோஜனம்?

தலைமுறை தலைமுறையாக எங்கள் வம்சம் உங்களுக்குப் பயன்பட்டுத்தான் வந்திருக்கிறது.

அதேபோல் எனது வயது குறைவா இருந்தாலும் நானும் எனது முன்னோர்களைப் போலவே உங்களுக்குப் பயன்படுவதற்காகவே வாழ்கிறேன்!

ஒரு சுக்கும் கிடையாது! உன்னலெ எங்களுக்கு உபத்திரவம்தான் தாங்க முடியலே!

என்ன ஐயா? எனது தலையில் பாளை விட்டபோது நீங்கள் பதனீர் குடித்திருக்கலாம்! அல்லது கொஞ்சநாள் கழித்து நுங்குக் காய்கள் வெட்டிச் சீவிச் சாப்பிட்டுருக்கலாம்! அதன்பி;ன்னாவது பழுத்த பின்னால் பழமாவது சாப்பிட்டுருக்கலாம்! நான் எல்லாம் கொடுத்தேன்... நீங்கள்தான் சாப்பிடவில்லை!

இப்படிக் குத்தீட்டி மாதிரி கால் முதல் தலைவரை உன்னோட உடம்பு இருந்தா நாங்க எப்படி நுங்கு பறிச்சு சாப்பிடறது?

ஐயா உங்க முன்னோர் அவ்வப்போது எங்கள் காய்ந்த ஓலைகளையும் அதன் அடிமட்டைகளையும் வெட்டிச் சுத்தமாக வைத்திருந்தார்கள். அந்தப் பொருட்களையும் வீட்டுக் கூரை வேய்வதற்கும்  கூடை முடைவதற்கும் இன்னும் நிறைய வேலைகளுக்கும் பயன்படுத்துனாங்க. நாங்க எப்பவும் சுத்தமா இருப்போம். அதனால் நினைச்சா எங்க மேலே ஏறி பதனி இறக்கவும் நுங்கு பறிக்கவும் முடிஞ்சது. இப்பவும் என்னைச் சுத்தமா வச்சிருந்தா உங்களுக்கு நல்லதுதானே!

அடச் சீ! சும்மா இரு! காங்க்ரீட் போட்டு வீடுகட்டாம இன்னும் உன்னோட ஓலையைப் பாத்துட்டா நாங்க இருப்போம்? பிளாஸ்டிக் கூடைகள் வந்தாச்சு. உனக்கு என்ன வேலை? உன்னோட பதனியும் நுங்கும் உன்னச் சுத்தம் பண்ணுற கூலிக்கு பத்தாது! உன்னோட நுங்கையும் பதனியையும் நம்பிப் பொழச்சது அந்தக்காலம். இப்போ அப்படி இல்லே. காசுபோட்டா கொகோ கோலாவே சாப்பிடுவோம்! உம்மேலெ ஏறுறதுக்கு ஆளில்லே! அதனாலெ.....

அதனாலெ? 

உன்ன வெட்டி விலைக்குத் தர்றோம்னு சொல்லி விலைபேசியாச்சு! செங்கல் சூளைக்கு போகப் போறே!

அடப்பாவிகளா! காலங்காலமா நாங்க உங்களுக்குச் செஞ்ச நன்மைக்கு நீங்க காட்டுற விசுவாசம் இதுதானா?

நீ யாருக்குப் பயன்பட்டியோ அவங்களப் போயி கேளு! இப்போ சும்மா கிட!......

கோடாரி எடுத்துவரப் போனான்!...... நல்ல மனிதன்!
===============================================================
நுங்கும்,பதநீரும், பழமும், கிழங்கும், கள்ளும், கற்கண்டும், கருப்பட்டியும் , வெயிலுக்கு விசிறியும், கூடை முறம் பின்ன நாரும், எண்ணற்ற மக்களுக்கு வேலையும் கொடுத்த பனைமரமே!

உனக்கு நன்றிக் கடனாக ஓய்வு கொடுத்திருக்கிறோம்....

செங்கல் சூளைகளில் செங்கற்களைச் சுட்டுவிட்டுச் சாம்பலாக ஓய்வு கொள்!....


https://www.facebook.com/photo.php?fbid=620176191383397&set=a.244609168940103.64557.100001730669125&type=1&theater

No comments:

Post a Comment