ss

Wednesday, August 1, 2012

சிறுகதைகள் ( 10 )


ருசி!


பாபுவின் மாமாக்கள் இருவர் கிராமத்தில் விவசாயம் செய்கிறார்கள்.

தோட்டத்துப் பண்ணைவீட்டிலேயே வசித்துக்கொண்டு தனித்தனியாக விவசாயம் பார்க்கிறார்கள்.

விடுமுறையில் அங்கு போவதும் மாமா பையன்களுடன் விளையாடுவதும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

விடுமுறையில் வந்தால் திரும்பி ஊருக்குப் போகவே மனம் வராது அந்த அளவு அந்த இயற்கைச் சூழலில் அவனுக்கு ஈடுபாடு.

விடுமுறையில் வந்தவன் அன்றும் காலையில் எழுந்து மாமா பையன்களுடன் சேர்ந்து வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருந்தான். 

அப்போது சின்னமாமாவின் மனைவி சாப்பிட அழைக்கவே சாப்பிடப் போனார்கள்.

சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பாரும் ரசமும் தயிரும். 

பாபுவுக்குத் தொண்டையில் சாப்பாடே இறங்கவில்லை! 

கொஞ்சமாகக் கஷ்டப்பட்டுச் சாப்பிட்டுவிட்டு வேண்டாமென்று எழுந்துவிட்டான். 

அவன் சாப்பிட்ட அளவைப் பார்த்தால் சாப்பிடவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பெரிய மாமாவின் பண்ணைவீட்டுக்குப் போனர்கள். அங்கும் டி வி பார்க்கவும் கேரம் விளையாடவும் என மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்போது பெரிய மாமா பையன் அவன் அம்மாவிடம் பாபு சாப்பிடாததைச் சொன்னான். 

ஏன் என்று கேட்க, சின்ன அத்தை சமையல் ருசியே இல்லை. நல்லாவே இல்லை என்றான். 

அப்டியா, மத்தியானம் நான் அதே முருங்கைக்காய் சாம்பாரும் ரசமும் செய்கிறேன்பார் சூப்பரா இருக்கும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். 

பத்து நிமிடம் கழித்து வந்து, சரி அத்தகை;கு ஒரு உதவி பண்ணுவீங்களா என்று கேட்கஈ ஓ செய்வோமே! என்ற கோரஸாகச் சொன்னார்கள்.

தோப்பில் போய்ப் பாருங்கள் தென்னமரத்தடியில் காய்ஞ்ச தென்னை மட்டைகள் ஏகமாக் கிடக்கு. மாமா என்னைய அதெல்லாம் எடுத்து ஒழுங்கா ஒரு பக்கம் அடுக்கச்சொல்லி தினமும் திட்டிகிட்டே இருக்காரு, எனக்கு வேலையே முடியலே. எனக்காக அந்த வேலைய நீங்க ரெண்டு பேரும் செய்வீங்களா என்று கேட்டார்.

இருவரும் ஒரே குரலில் எங்கே அடுக்குறதுன்னு சொல்லுங்க! நாங்க அடுக்கடறோம்னு சொல்லி எழுந்திருக்க,

இருங்க கண்ணுகளா நானும் வர்ரேன். நீங்க இழுத்துகிட்டு வந்து கிட்டக்கப் போடுங்க நான் அடுக்கிடறேன் அப்படின்னு சொல்ல எல்லோரும் போனார்கள்.

அப்போது சின்னமாமா பையனும் வரவே பாபுவும் மாமாமார் பையன்கள் இருவரும் ஆக மூன்று பேரும் சேர்ந்து தோப்பில் இருந்து மட்டைகள் பூராவையும் வேகவேகமா இழுத்துவந்து போடப்போட பெரிய அத்தை அதை ஒழுங்காக அடுக்க அடுக்க இரண்டு மணிநேரத்தில் தோப்பின் ஒரு பகுதி சுத்தமாகி விட்டது.

சரிம்மா, இன்னைக்கு இதுபோதும். மிச்சம் இருக்கிறதை நாளைக்கி செய்யலாம். கொஞ்சநேரம் அங்கே கிடக்குற மண்ணெல்லாம் வழிச்சு சாணிக்குழிலெ கிடக்குற சாணிமேலேயும் குப்பைங்க மேலேயும் கொட்டி மூடுங்க அதுக்குள்ள நான் சமையல முடிச்சுட்டுச் சாப்பிடக் கூப்பிடறேன் அப்படின்னு சொல்லிட்டு வீட்டுப்பக்கம் போய்விட்டார்!

இவர்களுக்கு ஒரே குஷி! ஓடிப்போய் மண்வெட்டியும் கூடைகளும் கொண்டு வந்து ஒரு பக்கம் குவியலாய் இருந்த செம்மண்ணை அள்ளி அள்ளி எருக்குழியில் வெய்யிலில் காய்ந்துகொண்டிருந்த சாணத்தின் மேலும் குப்பைமேலும் வெளியே தெரியாமல் மூடினார்கள்.

அரை மணி நேரம் கழித்து டேய்! தங்கம்!... பசியானா எல்லாரும் வாங்க! சாப்பாடு தயார்! என்று அத்தையின் குரல் கேட்டது.

அவ்வளவுதான் எப்படா கூப்பிடுவாங்க அப்படின்னு பாhத்துட்டே இருந்த மாதிரி சாப்பிட ஓட்டம் பிடித்தார்கள்.

அப்படியே தொட்டிப்பக்கம் போய் நல்லாத் தேச்சுக் கழுவிக் குளிச்சுட்டு வாங்க. ஒடம்பு பூராவும் மண்ணு! என்று சொல்ல மீண்டும் ஆளுக்கு ஒரு துண்டை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டம்! தணிணீர்த் தொட்டியைநோக்கி!

ஒரு வழியா சாப்பிட வந்தாச்சு!

அத்தை! சாப்பிட நீங்க என்ன செஞ்சீங்க? என்று பாபு கேட்க,

காலைலியே சொன்னேனல்ல நானும் முருங்கைக்காய் சாம்பாரும் ரசமும் செய்யுறேன் பாருங்கன்னு? என்று சொல்லிக்கொண்டே முன்று பேருக்கும் மூன்று தட்டுக்களில் சாதமும் முருங்கைக்காய் சாம்பாரும் போட்டுக்கொடுக்க பயங்கர ருசியாக இருந்தது.

சாம்பார் ஊற்றியே முக்கால் வயிறு சாப்பிட்டாயிற்று. மீதத்துக்கு ரசமும் அதைவிட ருசியாக இருந்ததால் தயிருக்கே வேலை இல்லாமல் போச்சு!

அத்தை! காலைல சின்ன அத்தை செஞ்சது நல்லாவே இல்லை! உங்க சமையல்தான் சூப்பர்! பாபு சொல்லவும் அத்தை விழுந்து விழுந்து சிரித்தார்.

ஏன் அத்தை சிரிக்கிறீங்க?

ஆமா, நான் சிசிக்காம என்ன பண்ணட்டும்?

ஏன் அத்தை?

காலைல சூடா இருந்தப்பவே நல்லா இல்லாம இருந்தது இப்பமட்டும் அதுவும் ஆறுனபின்னால எப்படி நல்லா இருந்துச்சு? 

என்ன அத்தை சொல்றீங்க? ஆச்சர்யத்துடன் கேட்க

சின்ன அத்தை கிட்ட இருந்துதான் எதுக்கு வீணாப் போகுதுன்னு நான் வாங்கிவந்து வச்சிருந்தேன். இப்போ சமச்சது அல்ல!

இவ்வளவு ருசி!......

பசி ருசி அறியாதும்பாங்கல்ல? அதுதான் இது! சும்மா வீடியோ கேம் விளையாடிட்டு இருந்தப்போ பசியும் இல்ல ருசியும் இல்லெ!

இப்போ நல்லா வேலை செஞ்சீங்கல்ல? அதுதான் பசி! அப்புறம் ருசி! தெரிஞ்சுதா? ஓடுங்க! கொஞ்சநேரம் படுத்து எழுந்திரிச்சு அப்புறமா விளையாடுங்க!....

இரண்டு அத்தைமாருக்கும் ஒரு மகிழ்ச்சி!3 comments: