ss

Sunday, September 30, 2012

எனது மொழி ( 74 )


பண்டமும் பாத்திரமும் 


 நல்ல செய்திகளைச் சொல்லும்போதுகூட மற்றவர்க்கு மட்டும் சொல்வதுபோல் - ங்கள்! - என்று முடிக்கிறார்கள் . 

அதில் உள்ள கருத்தைவிட ஊட்டுகின்ற எரிச்சல்தான் அதிகம் என்பதை நிறையப்பேர் உணர்வதில்லை! 

அதே கருத்தை  வோம்  - என்ற எழுத்துக்களால் முடித்தால் சொல்பவர்மேல் மரியாதை கூடும்.

படிப்பவர் மனத்தில் ஆழமாக ஊடுருவிச் செல்லும்! 

காரணம் முன்னது சொல்பவரிடமிருந்து கேட்பவரை அன்னியப்படுத்துகிறது! பின்னது ஒன்றுபடுத்துகிறது! 

ஒரு கருத்தைவிட அதைச் சொல்லும் முறையின் சிறப்பு முக்கியமானது! 

நல்ல பண்டத்தை  வைக்கும் பாத்திரமும் நல்லதாக இருக்கவேண்டும்! 

பாத்திரம் சரியில்லாவிட்டால் அதில் வைக்கப்படும் பண்டமும் வீணாகிவிடும்! 

அதுபோல சொல்லப்படும் நல்ல செய்தியும் உரிய முறையில் சொல்லப்படாவிட்டால் அந்த நல்ல கருத்தும் மதிப்புப் பெறாமல் போய்விடும்! 

Friday, September 28, 2012

சிறுகதைகள் ( 11 )


கிடா போட்ட கண்ணுக்குட்டி!

(ஐம்பத்தி ஐந்துவருடங்களுக்குமுன் எங்கள் பாட்டி சொன்னதைத் தழுவியது)

ஒரு ஆள் நிறைமாச சினையுடன் ஒரு எருமையச் சந்தையில் இருந்து வாங்கி வந்தாராம்.

ஊரு வர்றதுக்குள்ள இருட்டு ஆயிருச்சு.

காலைல போலாம்னு அந்த ஊர்லயே தங்கிட்டானாம். 

அந்தக் காலத்துலே இப்போ மாதிரி வசதியெல்லாம் இல்லே. ஒரு இட்ட்லிக்கடையம்மா வீட்லே தங்கிட்டார்.

அந்த அம்மா கொஞ்சம் மோசமான ஆளு! வாயாடியும்கூட! அதனால யாரும் எதுத்துப் பேசமாட்டாக!

இந்த மனுஷன் காசுகொடுத்து கொஞ்சம் வயித்துக்கு வாங்கிச் சாப்பிட்டான். எருமையப் புறக்கடைப் பக்கம் அந்த அம்மா கட்டச் சொல்லக் கட்டிட்டுப் படுத்துத் தூங்கினான்.

காலையிலே எந்திரிச்சுப் பாக்கையிலே எருமை ஈனி இருந்தது.

பக்கத்தாலே கண்ணுக்குட்டியக்காணோம்.

அது அந்த அம்மாவோட எருமைக் கிடாப் பக்கம் கட்டியிருந்துச்சு.

அதை அவுக்கப்போக , "அந்த அம்மா அது அந்தக் கிடா போட்ட கன்னுக்குட்டி.வேணும்னா பணம் குடு" அப்படின்னு சொல்லிச்சாம். 

என்ன கேட்டும் அந்த அம்மா முடியாதுன்னுட்டா!

ஊருக்குள்ள நியாயம் கேக்க, எல்லோரும் அந்த அம்மாவுக்குப் பயந்துட்டு அவ சொன்னதுதான் சரின்னாங்களாம்.

கடைசியா ஒரு நரி வந்துச்சாம். அதுகிட்ட நாயம் சொல்ல, நான் தீத்து வைக்கிறேன் அப்படின்னு சொல்லிச்சாம்.

நரி எப்படி நாயம் தீர்க்கும் அப்படின்னு சொல்லி ஊரே கூடிட்டுதாம்.

உடனே நரி, எனக்கு அவசரவேலை  இருக்கு ஒரு மணிநேரத்துல வந்துடறேன் அதுக்குள்ளே ஊர்மக்க பூராம் வந்துடனும் அப்படின்னு சொல்லி போயிடுச்சாம்.

நரி சொல்லுற நாயம் கேட்க அந்த ஊர்சனங்க மட்டுமல்லாம அடுத்த ஊர் சனம்கூட வந்துட்டாங்களாம்.

எல்லோரும் நரிக்காகப் பாத்துட்டு இருக்க, நரி, ஒருமணிநேரத்துல வர்றேன்னு சொல்லிட்டுப்போயி காட்டுக்குள்ளே தூங்கி எழுந்திரிச்சு நாலு மணிநேரம் லேட்டா வந்துச்சாம்.

எல்லோருக்கும் ஒரே கோபம்!

உன்னையப் பாத்துகிட்டுப் பசியோட சோறுகூடத் திங்காம இருக்கோம்,நீ எப்படி லேட் பண்ணலாம்னு சண்டைக்கி வந்தாங்களாம்!  

அதுக்கு நரி, " அய்யய்யோ! நான் என்ன பண்ணட்டும்! நான் போன வுடனே வந்துட்டேன். ஆனா வர்ற வழிலே ஒரு சமுத்துரத்துல தீப்பிடிக்க, நான் வைக்கோலப்போட்டு அவிக்க, திரும்பவும் சமுத்திரத்துல தீப்பிடிக்க, நான் வைக்கோலப்போட்டு அவிக்க, ரொம்ப நேரம் ஆயிப்போச்சு!.... நான் என்ன பண்ணட்டும்!... "அப்படின்னு புலம்புச்சாம்.

எல்லோரும் ஒருமிக்க, "ஏப்பா நரி! எங்களையெல்லாம் கேனையங்க அப்படின்னு நெனைசிட்டியா? சமுத்திரத்துல தீப்பிடிக்குமா? வைக்கோலப்போட்டு அவிச்சா அவியுமா "அப்படின்னு எரிச்சலோட கேட்டாங்களாம்!

அதுக்கு நரி, உங்க ஊர்ல எருமைக்கிடா கண்ணுப்போட்டுச்சாமே , அப்புறம் ஏப்பா சமுத்திரத்துல தீப்பிடிக்காது? வைக்கோலைப்போட்டா அவியாது" அப்படின்னு கேட்டுச்சாம்!

அத்தனை சனமும் அப்படியே வாயடச்சுப்போக அப்பறமா அந்த மனுஷனோட எருமைக்கண்ணுக்குட்டிய அந்த ஆளுக்கே குடுத்து அனுப்புனாங்களாம்!....

அவனும் சுகமா ஊர்போய்ச் சேர்ந்தானாம்!
========================================================================

உணவே மருந்து (36 )

மூவகை  உணர்வுகள் 

நண்பர்களே!

நமது உடல் நலன் சம்பந்தப்பட்ட வரை ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய உணர்வுகள் மூன்று.

முதலாவது பசி உணர்வு.

இரண்டாவது தூக்க உணர்வு.

மூன்றாவது உழைப்பாலும் உடற்பயிற்சியாலும்  விளயாட்டுக்களாலும் ஏற்படும் உடல்சோர்வும் லேசான வலியும்.

இந்த மூன்று உணர்வுகளும் யாரிடம் மேலோங்கி இருக்கிறதோ அவர்தான் ஆரோக்கிய வாழ்வு வாழ்பவர் ஆவார்.

அவை தவிர உடலுக்குத் தேவையற்றவகையில் ஏற்படும் உணர்வுகள் எல்லாம் நோய்களாகவும் அதை உடையவர்கள்  தம்மை நோயாளிகளாகவும் கருதவேண்டும்.

அத்தகைய ஒரு உணர்வுதான் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய உணர்வு ஆகும்! 

அதுதான் அனைவரையும் நோயற்ற வாழ்வுக்கு இட்டுச் செல்லும் அற்புத வழியாகும்! 
எனது மொழி ( 73 )

முடிவு!

இடிந்த வீடுகளையும் கோட்டைகளையும்  மீண்டும் கட்டிவிடலாம்!

வெட்டி வீழ்த்திய மரங்களை மீண்டும் நட்டுவிடலாம்!

உருவாக்கிய பள்ளங்களை நிரப்பலாம். மேடுகளை சமப்படுத்தலாம்.

பழுதான இயந்திரங்களை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கலாம். 

மனிதனால் செய்யப்படும் அனைத்துத் தவறுகளில் இருந்தும் மீண்டுவிடலாம்.

ஆனால் அணுக்களின் கட்டமைப்பை மனிதனுக்கு ஏற்ற முறையில் சிதைப்பதால் நேரும் விளைவுகளை மட்டும் என்றென்றும் திருத்திக்கொள்ள முடியாது!

அழிவுதான் முடிவு என்பதை உணரவேண்டும்!

உணர்வார்களா?.....

Wednesday, September 26, 2012

அரசியல் ( 18 )லஞ்சத்திலிருந்து விடுதலை

லஞ்சம் என்பது யாரும் விரும்பிக்கொடுப்பது இல்லை! 

அந்த நாய்கள் கேட்பதும் இல்லை! 

கொடுக்கவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குகிறார்கள்! 

கொடுத்தால் காரியம்,இல்லாவிட்டால் இல்லை என்று! 

கொடுப்பதால்தான் வாங்குகிறார்கள் என நினைப்பது குற்றவாளிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரேமாதிரி மதிப்பிடுவது ஆகும்! 

இருக்கும்  வசதிகளை எல்லாம் தாண்டி ஏன் லஞ்சம் கொடுக்கிறார்கள்? 

ஒருவர் தனது அவசியத் தேவைக்காக ஆபத்துக்கு நிவாரணமாக தவிக்கும்போது அந்தத் தவிப்பை பயன்படுத்திக் காசு பார்க்கிறார்கள். 

அந்த நேரத்தில் கொடுக்க மாட்டேன் என்றோ அவர்களின்மேல் புகார் கொடுப்போம் என்றோ எத்தனைபேர் நினைப்பார்கள்? 

சாதாரணமான ஒரு குற்றவாளியை அடித்து உதைத்து வீதியில் இழுத்துச் செல்பவர்கள் இதுவரை எந்த லஞ்சம் வாங்கியவனையாவது நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச் சென்றிருக்கிரார்களா? 

புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்கமுடியுமா? 

எங்கு யார் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாத ரகசியம்? 

ஏன் புகாரை எதிர்பார்க்கவேண்டும்?

என்னமோ லஞ்சத்தை ஒழிப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.லஞ்சலாவன்யத்தை ஊக்குவிக்கிறார்கள் . புகார் அளித்தால் உடனே நடவடிக்கை என்பது போன்ற ஏமாற்றும் அறிவிப்புகளுக்குப் பஞ்சம் இல்லை! 

பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்குவது நமது நாட்டைப்பிடித்த நோய்! 

முதலில் அதைச் சரிசெயயவேண்டும்!


பிடித்த இடத்திலேயே அடித்து உதைக்கத் தயாரா? புகார் சொல்பவர் யாரென்று தெரிவிக்காமல் நடவடிக்கை எடுக்கத் தயாரா? ஆயிரம் புகார்கள் உடனே குவியும்! ஒரே நாளில் ஒரு லட்சம் குற்றவாளிகளைப் பிடிக்கமுடியும்!


 மக்கள் எப்பேர்ப்பட்ட விஷ வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்பது முக்கியமாக சிந்திக்கவேண்டிய விஷயம்! 

ஒரு லட்சம் வெள்ளைக்காரன் முப்பது கோடிமக்களை அடிமையாக ஆளவில்லையா? 

ஊழல் பேர்வழிகள் கோடிக்கணக்கானவர்கள் சேர்ந்து நாட்டுமக்களை அடிமைப்படுத்தியத்தில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை! 

ஆனால் அதை லஞ்சம் கொடுக்காமல் அனைவரும் விடுவதால் சரிப்படுத்த முடியும் என நம்புவது கடல் வற்றி மீன்பிடிப்பதுபோல் ஆகிவிடும்! 

அதனால் நடப்பது நடந்துகொண்டிருக்கும்போதே லஞ்சம் வாங்கினால் வாழமுடியாது என்ற குலை நடுக்கத்தை ஏற்படுத்தவேண்டும்! 

ஊழல் செய்பவன் உயிர்வாழ்வே அச்சப்ப்படும்படி செய்யவேண்டும்!அதுதான் நிரந்திரத் தீர்வுக்கு இட்டுச் செல்லும்!


பாதுகாப்பு ரகசியங்களை யாரும் எளிதில் தவறாகக் கையாண்டுவிடமுடியாது! 

கள்ள நோட்டுக்களை யாரும் அவ்வளவு எளிதில் அடித்துவிட முடியாது! ( இருந்தாலும் நடப்பது வேறு)  

அதைப் பிடிப்பதற்கு யாரும் புகார் கொடுக்கவேண்டியது இல்லை! 

அதற்கென உள்ள துறைகள் அதைப் பார்க்கின்றன. 

அதைப்போல் ஆயிரக்கணக்கான லட்சோப லட்சக்கணக்கான மடங்கு அதிகமாக நடக்கும் இந்த லஞ்சப் பிரச்சினை மட்டும் எப்படி யாருக்கும் தெரியாமல் நடக்கிறது? 

இளிச்சவாயர்கள் யாராவது புகார் கொடுக்கட்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? 

இதிலிருந்து ஒன்று தெரிவது என்னவென்றால் லஞ்சமில்லாமல் வாழமுடியாத நிலையை உருவாக்கிவிட்டால் அதைத் தாண்டி இந்த முட்டாள் மக்களின் அறிவு என்றும் விழிப்படையாது என்பதே! 

Tuesday, September 25, 2012

உணவே மருந்து ( 35 )


உணவு  - மூன்றும் இரண்டும் 

நண்பர்களே! நான் என்ன நினைக்கிறேன் என்றால் மற்ற உயிரினங்களெல்லாம் பசித்தபோதும் கிடைத்தபோதும் உண்கின்றன. மனிதனும் ஆதியில் அப்படித்தான் உண்டிருக்கவேண்டும். 

ஆனால் நாகரிகம் வளர்ந்தபின்னால், மனிதனின் வாழ்க்கை முறைகள் மாறிய பின்னால், குறிப்பிட்ட பணிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்வது என்ற பழக்கம் ஏற்ப்பட்டதால் உணவு உண்பதற்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டது. 

அதைக் காலை நண்பகல் இரவு என முக்கியமாக மூன்று வகையாகப் பிரித்து நடைமுறையில் உள்ளது.

அந்த நேரத்தில் பசி ஆனாலும் ஆகாவிட்டாலும் உண்ணவேண்டிய கட்டாயத்தால் உண்கிறோம்.

சிலருக்கு முன்பே பசிக்கிறது. சிலருக்கு குறிப்பிட்ட நேரம் ஆனாலும் பசி இருப்பதில்லை. 

இவை இரண்டுக்கும் காரணம் முந்தைய நேரம் உண்ட உணவும் இடையில் நமது உடம்பில் இருந்து செலவான சத்துக்களும் ஆகும்.

இது அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

முன்கூட்டியே பசிஎடுத்துக் குறிப்பிட்டநேரம்வரை காத்திருந்து உண்பதால் தீங்கு நேர்வது இல்லை.

ஆனால் குறிப்பிட்ட நேரம் ஆகிவிட்டதால் உண்ணவேண்டும் என்கிற பழக்கத்துக்காகவும் சுவைக்காகவும் உண்ணும்போது அது தீய விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

அதனால் பசியில்லாமல் உண்ணுவதைவிட உண்ணத் தாமதப் படுத்துவது தவறல்ல என்று ஆகிறது.

தவிர எந்த ஒரு விரதமும் உண்ணுவதைத் தாமதப்படுத்துவதையும் கட்டுப்படுத்துவதையும்தான் வலியுறுத்துகின்றன. 

காரணம் அதுதான் தேவையில்லாமல் உடம்பில் உள்ள கூடுதல் சத்துக்களையும் கரைத்து உடல்நலனை மேம்படுத்துகின்றன. 

அதனால்தான் பலநேர உணவை மூன்றுநேர உணவுப்பழக்கமாக மாற்றிக்கொண்டதுபோலவே அதுவே அதிகம் எனும்போது இருநேர உணவுப் பழக்கமும் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றும் கிராமங்களில் இருநேரம் மட்டுமே உண்பவர்கள் நிறைய  இருக்கிறார்கள்.

அவர்கள் மற்றவர்களைப் போலவே உழைத்தாலும் மற்றவர்களைவிட நலமாக இருப்பதையும் காணலாம்.

அதனால் துவக்கத்தில் சில நாட்களுக்கு பழக்கத்தால் அசவுகரியமாக இருந்தாலும் பழக்கத்தால் இருநேர உணவுப்பழக்கம் குறிப்பிட்ட வயதுக்குமேல் நல்லது என்று நினைத்ததால் பின்பற்றுகிறேன். 

பசியுணர்வைத் தவிர வேறு பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.

உண்ணாமல் விடும் ஒருநேரத்தில் ஏதேனும் திரவ உணவோ பானமோ எடுத்துக்கொண்டால் அதைக்கூட மற்ற இரு நேர உணவில் சரி செய்து நலம் பெறலாம் என நினைக்கிறேன். 

முன்னோர்கள் சொன்ன ஒரு முதுமொழி உண்டு!

ஒரு வேளை  உண்பவன் யோகி! 

இருவேளை உண்பவன் போகி!

மூன்றுவேளை உண்பவன் ரோகி! 

வேடிக்கையாக ஒரு நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது......நான்கு வேளை உண்பவன் (உடம்புக்கு) துரோகி என்று!

நாம் யோகி ஆகாவிட்டாலும் பரவாயில்லை ரோகியாக ஆகாமலாவது வாழ்வோம்!

Monday, September 24, 2012

விவசாயம் ( 36 )

கொடுமை! கொடுமை!


இந்தப் படத்தில் உள்ளது நேற்று எங்கள் தோட்டத்தில் எடுக்கப்பட்ட தக்காளிப் பழம்.

ஒரு பெட்டி பதினேழு கிலோ எடை கொண்டது. 

ஒரு கிலோ நேற்று மார்க்கெட்டில் விற்றவிலை தொண்ணூறு பைசா.

வாடகை கமிசன்போக கைக்குக் கிடைத்தது ஐம்பது பைசா!

பழம் பறித்த ஆட்கூலி அறுபத்தியைந்து பைசா!

ஆக நேற்று தோட்டத்தில் அறுவடை செய்த தக்காளிப்பழம் ஒரு கிலோவுக்கு அறுவடைக்கே பதினைந்து பைசா நஷ்டம்!

இன்று மீதத்தை அறுவடைசெயாமல் நிலத்திலேயே வீணாக விடச் சொல்லியாயிற்று!

மற்ற முட்டுவளிச் செலவுக்கெல்லாம் ஏக்கருக்குக் குறைந்தது இருபத்தி ஐந்தாயிரம் ஆகும். 

குடியானவன் சாப்பிடணும் மத்தசெலவும் செய்யணும்!

உருப்படுவானா?

Saturday, September 22, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )


கடவுளை நம்புங்கள்!
ஆம் நண்பர்களே. எனது வேண்டுகோள் இது! கடவுள் மறுப்பாளர்களுக்கல்ல. இறைப் பற்றுள்ள நண்பர்களைத்தான் கேட்டுக்கொள்கிறேன்.


ஏனென்றால் கடவுள் மறுப்பாளர்கள் கடவுளை நம்பச் சொன்னால் கேட்கவா போகிறார்கள்? 


ஆனால் கடவுள் மறுப்பாளர்களுக்குத் தீனிபோட்டுக்கொண்டே இருக்கும் இறையன்பர்களைத்தான் இறைவனை நம்புங்கள் என்று கேட்கிறேன்!


கடவுள்மறுப்பாளர்கள் பெரும்பாலும் இறைநம்பிக்கையைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. காரணம் அது சிக்கலான விஷயம். அதனால் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் நடக்கும் மூடத்தனங்களை கன்னாபின்னாவென்று விமர்சிக்கிறார்கள். 

ஒன்று மூடத்தனங்கள்தான் இறைநம்பிக்கை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் மூடநம்பிக்கைகளை ஒழித்து உண்மையான ஆன்மிகத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும். 


அப்படி இல்லாவிட்டால் இறை மறுப்பாளர்கள் தங்கள் மறுப்பை வெளிப்படையாகச் சொல்கிறார்கள், இறைப்பற்றாளர்கள் உண்மையில் இறை மறுப்பாளர்களாக வாழ்ந்துகொண்டு பற்றாளர்களாக நடிக்கிறார்கள் என்பதுதான் பொருளாகிவிடும். ஆம்! மூட நம்பிக்கைகள் என்பது அடிப்படை ஆன்மிகத்துக்கு எதிரானதே! மூடநம்பிக்கைகளை நம்புபவர்கள் உண்மையில் இறை மறுப்பாளர்களே! 

அறியாமை, அச்சம், சுயநலம் இந்த மூன்றும்தான் மூடநம்பிக்கைகளின் அடிப்படைகள் என்று எண்ணுகிறேன்.இவற்றை ஒழித்துக்கட்டி உண்மையான ஆன்மிகத்தில் நிலைகொள்ள மக்களுக்கு வழிகாட்டுவதில் ஆன்மிகவாதத்தின் முன்னோடிகளுக்கு என்ன சிக்கல் இருக்கிறது? 


இறைமறுப்பாளர்கள்கூட இறைமறுப்பு என்ற பேரால் அவற்றை எதிர்த்துத் தானே போராடுகிறார்கள்? அவர்கள் எங்கே உண்மையான ஆன்மிகத்தை எதிர்த்தார்கள்?மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதை ஆன்மிகத்தை எதிர்ப்பதாகக் கருதப் படுகிறது. அப்படியானால் மூடநம்பிக்கைகள்தான் ஆன்மிகமா?

அந்தத் தவறான மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடவேண்டியது சரியான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் ஆன்மிகவாதிகளின் கடமை அல்லவா?


இங்கு சொல்லப்ப்படுவது நாத்திகவாதிகளை ஏற்கச் சொல்லும் பிரச்சினை அல்ல. ஆன்மிகத்தின் அடிப்படையை மறைத்து அதனைத் தன்மையமாக்கி வைத்திருக்கும் மூடநம்பிக்கைகளை ஆன்மீகத்திலிருந்து பிரித்தெடுத்து ஒழிப்பது எப்படி என்பதுதான்.மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டம் இறை மறுப்பாளர்களிடம் இருந்து இறைப் பற்றாளர் கைகளுக்கு மாறவேண்டும் என்பதுதான் இப்போது இங்கு அக்கரைக்குரிய பொருள்!

நாத்திகத்தை விடுங்கள் ! அது ஒரு பெரிய விஷயமில்லை. அதனால் விழைந்த கேடுகளைவிட ஆன்மிகத்தின்பேரால் நடக்கும் அபத்தங்கள்தான் ஆன்மிகத்துக்கே கேடு விளைவித்துக் கொண்டுள்ளன. அதை ஒழித்துக் கட்டிவிட்டால் ஆன்மிகத்தின் உண்மையான ஒளியில் உலகம் உயர்வு பெறுமே!


ஏன் நம்மைப் போன்று ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்தத் திசையில் சிந்திக்கக்கூடாது?

ஆன்மிகம் அல்லது கடவுள் நம்பிக்கை என்பதைக் குறிப்பிட்ட மதத்தவர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. அப்படி இருக்க ஒவ்வொரு மதத்தவரும் இதுதான் இறை நம்பிக்கை அல்லது கடவுள் என்று சொன்னால் உண்மையான இறை நம்பிக்கை அல்லது கடவுள் எது?


கடவுள் ஏதோ ஒரு மதத்தைச் சேர்ந்தவரா? அல்லது எல்லாமதத்தையும் சேர்ந்தவரா? அப்படி எல்லா மதத்தின் படியும் சொல்லப்படும் கடவுள் ஒருவரே என்றால் மதங்களிடையே பெயர் வேறுபாட்டைத் தவிர மற்ற வேறுபாடுகள் இருக்கக்கூடாதே? ஆனால் வேறுபாடுகள் மட்டும் அல்ல பகைமையுணர்வும் மனித ரத்தம் சிந்துதலும் நடக்கிறது!ஆக உண்மையான இறை நம்பிக்கையை விட்டுவிட்டு மனித இனமே தவறான பாதையில் செல்வது போலல்லவா ஆகிறது?

உண்மையை நோக்கிய பயணமே ஆன்மீகம்.


அப்பயணத்தில் தடையாக இருப்பது மூட நம்பிக்கைகள்அதை தகர்க்கும் போது பயணம் எளிதாகும்.உண்மையை நோக்கிய பயணத்தில் உள்ள மிகப்பெரிய தடையான மூடநம்பிக்கைகளை தகர்ப்பதும் ஆன்மீக பணியே.

அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அத்தனையையும் படைத்தவன் அல்லது அத்தனையுமாக உள்ளவன் இறைவன் என்பதுதான் ஆன்மிகத்தின் அடிப்படை!


அத்தகைய இறைவன் எப்படி பலவாக இருக்கமுடியும்? அத்தகைய இறைவனின் பிரம்மாண்டமான அடிமுடி தெரியமுடியாத படைப்பில் மனிதனாகிய நமது பங்கு என்பது அதனுள் ஒரு கற்பனைசெய்து பார்க்கமுடியாத ஒரு சிறு அங்கமே!அத்தகைய ஒரு சிறு அங்கமாக இருந்துகொண்டு நாம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆதி பரம்பொருளை இப்படிப்பட்டவன்தான் என்று மனிதனைப் போன்ற குணநலன்கள் கொண்டவனாக எப்படி வரையறுக்கமுடியும்?

இத்தனைக்கும் ஆதாரமாக இத்தனையுமாக விளங்கும் கடவுள் எப்படி மனிதனால் புரிந்துகொள்ளக்கூடிய குணங்களை மட்டும் கொண்டவனாக ஒரு சிறு வட்டத்துக்குள் இருந்து தனது அண்டசராசரப் படைப்பாக்கத்தைப் பேணிக்காக்க முடியும்?


மாபெரும் இறைவனை சின்னஞ்சிறு குடுக்கைக்குள் அடைக்க நினைப்பது நியாயமா?பரந்து விரிந்திருக்கும் கடலில் இருந்து ஒரு ஊசிமுனையில் வருமளவு நீர் எடுத்து இதுதான் பெருங்கடல் என்று சொல்வது சரியா?அதுபற்றிக்கூட ஒரு ஒன்றுபட்ட உலகக் கருத்தாக இல்லாமல் நம்முள் பிளவுபட்டு நமக்குநாமே போராடி மடிந்துகொண்டுள்ளோம். அப்படியானால் நாம் அந்த விஷ்வருபனாகிய இறைவனை உண்மையில் நம்புகிறோமா?

Thursday, September 20, 2012

கூடங்குளமும் நானும் ( 6 )


இயற்கை உணவும் இனிய வாழ்வும் குழுமத்தில் இருந்து.....

அணுவியலும், ராணுவ பலமுமே இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் என்று உறுதியாக நம்பும் பெரும்பான்மையினர்.\\\\\\

அட்டைக்கத்தி வீரர்கள்! அனைத்தும் அறிந்ததுபோல் நினைக்கும் அப்பாவிகள்! பாதுகாப்பு என்கிறபெயரால் ஆளுக்கு ஒரு கத்திவைத்துக்கொண்டிருப்பதைவிட அவற்றை எறிந்துவிட்டு அன்புசெலுத்துவதே உண்மையான பாதுகாப்பு என்று அறியாத படித்த பாமரர்கள்!

இந்த group அணு உலைகளை எதிர்ப்பவர்களை கழுவிலேற்ற வேண்டும் எனச்சொல்லும் group. \\\\\\\

இந்தமாதிரி புத்தி படைத்தவர்கள்தான் இன்று உலக மக்களையும் இயற்கையையும் கழுவில் ஏற்றிக்கொண்டு உள்ளார்கள்! உயிர்போகாது என்கிற அளவு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது என்று சொல்லித் தங்கள் உடல்பாகங்களை அறுத்து பிரியாணி செய்து சாப்பிடலாம் என்று சொல்பவர்கள்! இவர்கள் உலக உயிரின வாழ்வின் உண்மையான எதிரிகள்!

இப்பாமரர்களின் கூட்டாளிகள்தான் வியப்பிற்குரியவர்கள், அணு இயலை அக்கு வேறு ஆணி வேறாக அறிந்தவர்கள். அணு உலைகளின் பாதிப்பு மற்றுமின்றி ஆக்கம் குறித்த பேரறிவும் உள்ளவர்கள்[\\\\\

நன்மை தீமை இரண்டையும் பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டவர்கள்! ஆனால் நன்மையைமட்டும் நோக்கமாகக் கொண்டவர்கள்! உண்மையான மனிதநேயத்தின்பால் பற்றுக்கொண்டவர்கள்! இயற்கையை நேசிப்பவர்கள்!

Subash அண்ணன், இது உலகளாவிய பிரட்சனை என்று மற்றொரு பதிவில் சொல்லியிருந்தார்.\\\\\\\

ஆம்! இதை உலகளாவிய பிரச்சினையாகத்தான் பார்க்கவேண்டும் உலகளாவிய எதிர்ப்பை உருவாக்கவேண்டும் . உலக அளவில் ஒழித்துக்கட்டவேண்டும். அணுத் தொழில்நுட்பப் பயன்பாடற்ற வாழ்வுமுறைதான் உலக அளவில் இருக்கவேண்டும். ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்தில் இல்லாவிட்டால் அதுதொடர்பான சாதக பாதக நிலைமைகளை முன்வைத்து பொதுவான முடிவுக்கு வரமுடியாது! கூடங்குளம் போராட்டம் பற்றிய முரண்பாடு இருந்தாலும் அது உலகளாவிய அணு எதிர்ப்புப் போராட்டத்துக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பதால் மனதாரப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்.

Wednesday, September 19, 2012

எனது மொழி ( 72 )

மூட நம்பிக்கையின் வெற்றி!

மூட நம்பிக்கைகளில் ஏதேனும் உண்மை இருந்துவிடுமோ என்று ஆயிரம் விதத்தில் ஆராயும் பெரும்பாலான மனித மனம் கடைசியில் ஆதாரம் இல்லாமலே நாளை ஒருநாள் ஆதாரம் கிடைக்கும் என்ற சால்ஜாப்பில் திருப்திப்பட்டுக்கொண்டு மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்கிறது.

ஆனால் நிரூபிக்கப்பட்ட ஆயிரம் உண்மைகள் கண்முன் தெரிந்தாலும்  அதை ஏற்றுக்கொள்ளும் துணிவு இல்லாமல்  சரியான அறிவியல் பார்வையைப் புறக்கணிக்கத் துணிகிறது!

தவிர அறிந்த அறிவியல் உண்மைகளின் கண்ணோட்டத்தில் சிந்திக்கத் துணிவதும் இல்லை! 

இது மூடநம்பிக்கைகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்!

அதனால்தான் தூய ஆன்மிகம்கூட  மூடநம்பிக்கைகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது! 

எனது மொழி ( 71 )


இது என்ன நியாயம்?

நெருப்பில் சமைத்த உணவை உண்ண நினைப்பது நியாயம் .

அந்த நெருப்பையே உண்ண நினைப்பது என்ன நியாயம்?

அணுக்களால் ஆனா பொருட்களைப் பயன்படுத்தி வாழ்வது நியாயம். அதுதான் இயற்கை நமக்கு வழங்கிய கொடை!

ஆனால் அந்த அணுக்களையே நேரடியாகப் பயன்படுத்தி அதன் கட்டமைப்பைத் தகர்ப்பதன்மூலம் நமது அழிவுக்கு நாமே வழிதேடுவது என்ன நியாயம்?

கூடங்குளமும் நானும் ( 5 )


அனைத்துக்கும் ஆபத்து!

இந்தியாவில் அதுவும் கூடங்குளத்தில் நடக்கும் போராட்டத்தையும் அரசின் தெளிவில்லாத அணுகுமுறையையும் வைத்து அணுசக்திப் பயன்பாட்டின் நன்மைதீமைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்படவில்லை நண்பர்களே! 

கிரீன்பீஸ் இயக்கம் எப்போதும் இதை எதிர்த்தே வந்துள்ளது. 

என்போன்றவர்கள் இந்தியாவில் நடக்கும் கூத்துக்களைமட்டும் வைத்து எண்ணங்களை உருவாக்கிக்கொள்பவர்கள் அல்ல! 

அதில் உலகளாவிய இயற்கை மற்றும் எதிர்கால நலன் அடங்கியிருக்கும்.

இன்றைக்கு இருக்கும் அணுசக்திப் பயன்பாடே உலகில் இந்த அளவு என்றால் இன்னும் வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்தால் 
எதிர்கால உலகம் எந்தத் திசையில் செல்கிறதென்று தெரியும்.

இப்போதுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படைகளே உலக இயற்கை வழங்களை ஒரு வழி செய்தாகிவிட்டது. இன்னும் அனைத்துத் துறைகளிலும் அணு சக்திப் பயன்பாடும் அணுக கழிவுகள் பிரச்சினையும் சேர்ந்துகொண்டால் இயற்கை என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்.

விபத்துமட்டும் பிரச்சினை அல்ல. அதன் பயன்பாடே எதிர்கால உலகுக்குப் பிரச்சினை! 

வளர்ந்த நாடுகள் செய்யும் அத்தனையும் சரியானதல்ல! உலக சுற்றுச் சூழல் கேட்டுக்கு அவர்களின் பங்கு அதிகமல்லவா?

இப்போதிருந்து அறிவியல்ரீதியான உலக நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் இயற்கையைப் பேணி வளர்க்கும் திசையில் செல்லுவதே நல்லது! 

இயற்கையை மேலும் மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் எதிர்கால உயிரின வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்குவது என்ற உண்மை உணரப்படவேண்டும்.

விவாதத்தில் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக பேசும் விஷயமல்ல இது! உண்மையான ஆபத்தை உணரவேண்டும். கூடங்குளம் மட்டும் முக்கியக் காரணம் அல்ல.

அணுசக்திப் பயன்பாடு தவிற்க முடியாததானால் அது உலகில் மனித சமுதாய ஒட்டுமொத்த அழிவை வரவேற்பதாகத்தான் கொள்ளவேண்டும்!

தவறுகள் தவிர்க்கமுடியாததாகும்போது  அழிவும் தவிர்க்கமுடியாது! 

சாதாரணமான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களின் இயக்கத்தை அடிப்படையாக வைத்தே உலகை உண்டு இல்லை என்று ஆக்கமுடிந்திருக்கிறது.

உண்ணும உணவையும் குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும் நஞ்சாக்க முடிந்திருக்கிறது! 

ஆறுகளைச் சாக்கடைகளாகவும் ஏறி குளங்களை விஷநீர்த் தொட்டிகளாகவும்  ஆக்க முடிந்திருக்கிறது.

புவிவெப்பமாதல்,  துருவப்பனி குறைந்துகொண்டு வருதல், ஓசோன் மண்டல ஓட்டை வரை உயிரின வாழ்வை ஆபத்தில் விட்டுள்ளது. 

அத்துடன் அணுசக்திப் பயன்பாடும் சேர்ந்துகொண்டால் அந்தப் பாதகங்களில் இருந்து மீளமுடியும் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். 

அதற்கு மாறாக அதிகரிக்கவும் முடிவான அழிவிற்கும்தான் அழைத்துச் செல்லப்போகிறது!

இந்தத் தலைமுறையில் எப்படியாவது வாழ்ந்தால்போதும் அடுத்த தலைமுறைகள் எக்கேடுகேட்டுப் போகட்டும் என்ற குடிகார, சூதாடிகளின் மனோபாவம் ஆள்வோருக்கும் அறிவாளிகளுக்கும் ஏற்பட்டுவிட்டால் உலக மக்களைக் காப்பது யார்? 

இதுதான் இன்று நல்லோர்முன் உள்ள கேள்வி!

எனது மொழி ( 70 )

நாடு உருப்படுமா?

மொழிப்பற்றாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களில் இரண்டு விதம்..

முதலாமவர்கள் நாட்டு ஒற்றுமையில் நம்பிக்கை இல்லாதவர்கள் .

இரண்டாமவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பவர்கள்!

மதப் பற்றாளர்களிலும் இரண்டு விதம்.

முதலாவது மொழிப்பற்று இல்லாதவர்கள்.

இரண்டாவது மாநில சுய ஆட்சி என்பதிலும் அக்கறை இல்லாதவர்கள். 

நாட்டு ஒற்றுமையில் அக்கரை உள்ளவர்களும் இரண்டு விதம்.

முதலாவது ஒன்றுபட்ட இந்தியாவையும் மக்களையும் பாரபட்சமில்லாமல் உயர்வடையச் செய்யவேண்டும் என்பதில் அக்கரை உடையவர்கள். அவர்கள் கையில் அதிகாரம் இல்லை!

இரண்டாவது நாடு எக்கேடுகேட்டாலும் அக்கரை இல்லை சொந்த நலன்தான் முக்கியம் என்று செயல்படுபவர்கள்! இவர்கள் கையில்தான் அதிகாரம் உள்ளது!

இவர்களின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களில் மிகப் பெரும்பாலோருக்கு அவர்கள் படித்தவர்களாகட்டும் படிக்காதவர்களாகட்டும் சொந்த அறிவோ உலக அறிவோ பிறர் நலனிலும் நாட்டு நலனிலும் அக்கரையோ இல்லாதவர்களே!

இதுதான் இந்தியா!

நாடு உருப்படுமா?

Tuesday, September 18, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )


உண்மையான ஆன்மிகம் இதுவா?

பரம்பொருளுக்கு ஆதாவது எல்லாமுமாக இருக்கிற இறை என்பதற்கு
மனித புத்தியைக் கற்பித்ததே சரியான ஆன்மிகத்துக்கு விழுந்த  முதல் அடி ஆகும்! 

உலகத்தை மனிதன் தனக்காக மட்டும் படைக்கப்பட்டதாக நினைத்ததுபோலவே இறைவனையும் தனக்காகமட்டும் படைத்து அத்தனை ஏமாற்று வேலைகளுக்கும் துணையாக யாக வைத்துக்கொண்டான் என்பதே உண்மை! 

அதனால்தான் பிற உயிரினங்களைக் கணக்கில் கொள்வதே இல்லை. 

அதுமட்டுமல்ல பிற உயிரினங்களைப் பலியிடுவதைக்கூட ஆண்டவனுக்குப் பிடித்தமான ஒன்றாகக் கருதுகிறார்கள்! 

அப்படியானால் மனிதனின் அத்தனை தவறுகளும் ஆண்டவனின் பண்புகளா? 

இந்த மூடர்கள் சொல்வதெல்லாம் ஆண்டவன் என்றால் அவனுக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு?

உண்மையான ஆன்மிகவாதிகள் சிந்திக்கவேண்டும்! 

Monday, September 17, 2012

எனது மொழி ( 69 )


ஊருக்கு உபதேசம்!

பற்றி எரிகிறது! ஓடிப்போய் அணையுங்கள் என்று சொல்வதைவிட ஓடிவாருங்கள் அணைப்போம் என்பதே உயர்ந்த முறை ஆகும்! 

ஐயகோ!... பாவிகளே ! ஓடிப்போய் அணையுங்கள் என்று பிறருக்குமட்டும் சொல்பவர்கள் அறிந்தே சொல்கிறார்களா? அறியாமல் சொல்கிறார்களா?

கையாலாகாதவர்கள் அப்படிச் சொல்வதில் அர்த்தமிருகிறது. எல்லோரும் அப்படியே சொன்னால்....

தாங்கள் முற்றும் அறிந்தவர்கள் என்ற அறியாமையில் இருந்துதான் பிறருக்கு மட்டும் உபதேசம் செய்யும் அந்தப் பண்பு வருகிறது! 

அதைக் கேட்பவர்களுக்கு கேட்க நன்றாக இருக்காது.

இந்த நோய் நிறையப்பேரிடம் உள்ளது! 

அது தவிர்க்கப்படுவதே உயர் பண்பாகும்! 

Saturday, September 15, 2012

வானியலும் சோதிடமும் ( 2 )


வானியலில் முன்னோர் பங்கு

அந்தந்தக்கால அறிவியல் முன்னேற்றத்துக்குத் தக்கதாகத்தான் அவர்களின் அறிவியல்றீதியான ஆய்வுகளும் இருக்கமுடியும். 

நமது நாட்டிலும் முற்காலத்திலேயே அறிஞர்கள் ஏராளமானவர் இருந்திருக்கிறார்கள். 

அவர்களில் வானியல் அறிஞர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

அவர்களின் சிந்தனைத் திறனும் அந்தக் காலத்துக்கு ஏற்ற முறையில் இருந்திருக்கிறது. 

வானியலும் அப்படியே! 

அக்கால நிலைமைகளில் வானில் தெரிந்த வான்காட்சிகளை எப்படி புரிந்துகொண்டார்களோ அதை அடிப்படையாக வைத்துத்தான் காலத்தைக் கணக்கிட்டார்கள்! 

காலத்தைக் கணக்கிடவும் திசையைக் கணக்கிடவும்தான் வான் காட்சிகளைப் பயன்படுத்திக்கொண்டார்களே அல்லாமல் வானில் உள்ள அத்தனையையும் அவை பற்றிய உண்மையான தகவல்களையோ தகுதிகளை வைத்தோ அல்ல!

அந்தக் கால அறிவைக்கொண்டு நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்தார்கள்.

அவை நகரும் கால அளவுகளைக் கண்டறிந்தார்கள்.

அதனால் திசைகளையும் காலத்தையும் பருவங்களையும் சரியாக மதிப்பிட முடிந்தது.

அப்போதைய தேவைக்கு அந்த அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் மகத்தான உதவி செய்திருக்கின்றன.

ஆனால் வான ஆராய்ச்சியுடன் எப்போதும் சக பயணம் செய்யும் சோதிடப் புரட்டுகள் அப்போதே இருந்திருக்கின்றன. 

இவ்வளவு அறிவியல் வளர்ந்துள்ள நவீன காலத்திலும் அறிவியலால் கண்டறியப்பட்ட வானியல் விபரங்களை எல்லாம் சோதிடத்தால் கண்டரியப்பட்டதாகச் சொல்லவும் அதை நம்பவும் மக்கள் தயாராக இருக்கும்போது அக்கால நிலைகளில் சொல்லவேண்டுமா?

அதனால் அப்போதும் வானியலையும் சோதிடத்தையும் கலந்துதான் மக்களை ஏமாற்றி வந்துள்ளார்கள்!

ஆதாவது வாலியல் என்ற அவலையும் சோதிடம் என்ற உமியையும் கலந்து  ஊதி ஊதி சோதிடர்கள் சாப்பிட்டு வந்துள்ளார்கள்!

அது இன்றுவரை நீடிக்கிறது!

இன்றும் சூரியனையும் சந்திரனையும் கிரகங்கள் என்று சொல்லும் கதைகளைப் படித்தவர்களே நம்புகிறார்கள் அல்லவா?

ஆனால் நவீன அறிவியல் வளர்ந்து வான் காட்சிகளின் உண்மையான விபரங்கள் என்ன அதில் உள்ள ஒவ்வொன்றின் தூரம், கால அளவு, பருமன், வடிவம் போன்ற பல விபரங்கள் என்ன என்பதெல்லாம்   துல்லியமாக அறிந்த பின்னரும் பழைய சோதிடம் என்னும் மூட நம்பிக்கையை மிகவும் சக்திமிக்க ஒன்றாகக் காட்டி மக்களை முட்டாளடித்துக்கொண்டுள்ளார்கள்! 

அவர்கள் விட்ட கதைகளில் ராகுவும் கேதுவும் அடங்கும்!

Friday, September 14, 2012

மரம் ( 15 )


உறைமுள் 


இதை எங்கள் பக்கம் கோயமுத்தூர் முள் என்றும் சுரைமுள் என்றும் சொல்வார்கள்.

இதன் உண்மையான தாவர இயல் பெயர் என்ன என்று தெரியவில்லை.

எது எங்கு தோன்றி எப்படிப் பரவியது என்றும் தெரியவில்லை.

இதன் வேர் முதல் நுனி வரை முட்களால் நிறைந்திருக்கும்.

இலைகள் இல்லை!

இதன் முட்கள் வினோதமான குணம் கொண்டவை.

அவை கத்தியை உரையில் போட்டமாதிரி இருக்கும்.

முள்ளின் அடிப்பகுதியை இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு அடுத்தகையின் இரு விரல்களால் முள்ளைப் பிடித்து இழுத்தால் அதன்மேல்பகுதி உறை போல்  தனியாகப் பிரிந்து வரும்.

அதனால் இந்த முள் காலில் பட்டுப் பிடுங்கும்போது உரைபோன்ற பகுதி காலுக்குள் தங்கி விடும் என்பதால் பயந்துகொண்டு இந்த முள் செடிப்பக்கம் யாரும் போகப் பயப்படுவார்கள்.

இது வேலியாக நடுவது தவிர வேறு எதற்கும் பயன்படாது.இதன் எந்தப்பகுதியையும் உண்ணக்கூடிய எந்தப் பிராணிகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

இது புதர்போல வளருமாதளால் இதன் அடியில் சிறு பிராணிகள்கூட தங்க முடியாது.

எந்தப் பயனும் இல்லாத இது துண்டுகளாக கொண்டுபோய் நட்டால்தான் வளருமாதலால் வேறுவகையில் பரவுவதற்கு வழியின்றி ஆங்காங்கே இருக்கும் இடங்களிலேயே இருக்கிறது. 

இதுவும் தேவையின்றி நிலத்தடி ஈரத்தை உறிஞ்சி மற்ற தாவரங்களுக்கு இடையூறாக வளரும் தாவரமாகும். 

இது மட்டும் பார்த்தீனியன் செடிபோல் பரவுவதாக இருந்தால் மனிதனுக்கு ஒரு பெரும் சவாலாக மாறி இருக்கும்.

ஆனாலும் எந்தப் பயனுமற்ற இதை ஒழிக்கவோ அல்லது பராமரிக்கவோ யாரும் இல்லாமல் விட்டுவைக்கப்பட்டு உள்ளது!Thursday, September 13, 2012

உணவே மருந்து ( 34 )


முருங்கைக்காய் இயற்கை ரசம்!

நண்பர்களே! இது ஒரு அருமையான இயற்கை உணவு!

முருங்கைக்காயின் பயன்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். 

ஆனால் அதைப் பச்சையாக உண்ணமுடியாது. காரணம் அது பச்சையாக உண்ணும உணவு அல்ல!

ஆனால் அதன் சத்துக்களோடு கண்டதைச் சேர்த்துக் கெடுக்காமல் இயற்கையாக அதே சமயம் சுவையாக உண்ணும ரசம் ஒன்றை நாங்கள் தயார் செய்து உண்டு வருகிறோம்.செய்முறை:

வேண்டிய அளவு நறுக்கப்பட்ட முருங்கைக்காய்த் துண்டுகள்.

அது தவிர தக்காளி, சின்ன வெங்காயம், கொஞ்சமாகப் புளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, தேங்காய்த் துருவல், சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு.

முதலில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைக் காய்த் துண்டுகளைப் போட்டு நன்றாக வேகவைக்கவேண்டும். 

அதன் பின் வெளியே எடுத்து ஆறியபின்பு நன்றாகப் பிழிந்து சக்கையை எடுத்துவிட வேண்டும்
,
அத்தோடு எவ்வளவு ரசம் வேண்டுமோ அந்த அளவு அத்தோடு பச்சைத் தண்ணீர் விட்டுக் கலக்கவேண்டும். கொஞ்சம் புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும்.

அதில் நறுக்கிவைத்திருக்கும் தக்காளி, சின்னவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, ஆகியவற்றையும் நசுக்கிவைத்துள்ள சீரகம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றையும் தேவையான அளவு உப்பையும் போட்டுக் கலக்கிவிடவும். 

தேங்காய்த் துருவலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அடுப்பில் வைக்காமல்,தாளிக்காமல், ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் அருமையான முருங்கைக்காய் இயற்கை ரசம் தயார்!

அப்படியே குடிக்கலாம்!

சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்! 

அதுமட்டுமல்ல. முருங்கைக் காய்க்குப் பதிலாக பச்சையாக உண்ண முடியாத எந்தக் காய்களையும் பயன்படுத்தி இதே முறையில் இயற்கை ரசம் செய்து உண்ணலாம்! 

செய்து பாருங்கள் உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்! 

Tuesday, September 11, 2012

ஐயம் தெளிதல் ( 1 )

ஐயம் தெளிதல் 

நண்பர்களே! 


ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒவ்வொரு அணு எண் உண்டு.அந்த எண்ணும் அந்தத்தனிமத்தின் அணுவில் அடங்கியுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையும் ஒன்றுதான் என்பது படிப்பாளிகள் நிறையப்பேருக்குத் தெரியும்.ஆனால் ஒரே அணு எண் உடைய ஒரு தனிமத்தின் அணுக்களில் அணு எடையில் மாறுபாடுகள் உண்டு என்பதும் பலருக்குத் தெரியும்.காரணம் ஒரே தனிமத்தின் பல்வேறு அணுக்களிலும் புரோட்டான்களின் எண்ணிக்கை ஒரேமாதிரி இருந்தாலும் அத்துடன் சேர்ந்து அணுக்கருவில் இருக்கும் நியூட்ரான் எண்ணிக்கை வேறுபாடு அணு எடையில் வேறுபாட்டை உண்டுபண்ணுகிறது என்பதும் தெரியும்.(புரோட்டான்களின் எண்ணிக்கையும் நியூட்ரான்களின் எண்ணிக்கையும் சேர்ந்ததுதான் அணு எடை. அணு எண் வேறு. அணு எடை வேறு.)இப்போது கேள்வி என்னவென்றால் ஒரு அணுக்கருவில் அடங்கியுள்ள ஒரே தனிமத்தின் நியூட்ரான்களின் எண்ணிக்கை அதன் எடையில் மாறுபாட்டை உண்டுபண்ணுகிறது என்றாலும் அத்தகைய அணுக்களின் அணு எடை வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் அந்தத் தனிமத்தால் ஆன பொருட்களின் எடையைக் கணக்கிடுகிறோம். அதேசமயம் குறிப்பிட்ட தனிமம் இன்ன எடை இருந்தால் இன்ன கன அளவு இருக்கவேண்டும் என்றும் அளவு இருக்கிறது. அப்படியானால் ஒரு பொருளின் எடை மற்றும் காண அளவைத் தீர்மானிப்பதில் நியூட்ரானின் பங்கு என்ன?


 உதாரணத்துக்கு ஒரு குறிப்பிட்ட தனிமம் தண்ணீரைவிட இருபது மடங்கு அடர்த்தியானதாகக் கருதுகிறோம்.

அப்படியானால் என்ன பொருள்?

ஒரு கிராம் தண்ணீரின் கன அளவு ஒரு கன செ மீஎன்றால் இருபது கிராம் எடை உள்ள அந்தத் தனிமத்தின் கன அளவு ஒரு கன செ. மீ இருக்கவேண்டும்.

ஆனால் ஒரு தனிமம் என்பது அதில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைதான் (அணு எண்) தீர்மானிக்கிறது.

அதன் நியூக்ளியசில் உள்ள நியூட்ரான்களோ அணு எண்ணில் மாற்றம் ஏற்படுத்தாமல் அணு எடையில் மட்டும் தன் பங்கைச் செலுத்துகிறது.

இந்த நிலையில் ஒரு கன செ. மீ அளவுள்ள புரோட்டான்களை மட்டும் கொண்டுள்ள அந்தத் தனிமமும் ஒரு கன செ. மீ அளவுள்ள பல்வேறு எண்ணிக்கையில் ஒவ்வொரு அணுக்கருவிலும் நியூட்ரான்களை உள்ளடக்கிய அந்தத் தனிமமும்(ஐசோடோப்புகள்) இரண்டுமே எடை ஒன்றாகத்தான் தான் இருக்குமா?


அணுவின் கன அளவைத் தீர்மானிப்பதில் அணுக்கருவில் இருக்கும் புரோட்டான்களோ நியூட்ரான்களோ முக்கியமான பங்கு வகிப்பதில்லை என நினைக்கிறேன்.

அதை எலெக்ட்ரான்கள் பார்த்துக்கொள்கின்றன.

ஆனால் அணு எடையை அவைதான் தீர்மானிக்கின்றன.(புரோட்டானும் நியூட்ரானும்)

காரணம் எலெக்ட்ரானின் எடை பொருட்படுத்தக்கூடியது அல்ல என்பதே!

ஆனால் தனிமத்தால் ஆனா பொருட்களை எடையைக் கணக்கிடும்போது ஆதாவது கன அளவுக்கும் எடைக்கும் இடையே ஆன உறவைக் கணக்கிடும்போது அணு எடையில் பங்காளியாக இருக்கும் நியூட்ரான்கள் வேறு பட்ட அளவுகளில் உள்ள ஐசோ டோப்புகளின் அணு எடைகள் ஏன் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை என்பதுதான் இந்த பதிவின் அடிப்படைக் கேள்வி!


ஒரு க செ மீ அளவுள்ள இரும்புத்துண்டுகள் இரண்டு எடுத்துக்கொள்வோம்.

அதில் ஒன்று சுத்தமான தனியான இரும்புத் தனிமத்தால் ஆனது.

மற்றதும் அப்படியே! ஆனால் ஒரு வேறுபாடு!

அதில் முதலாவதில் இரும்பின் அணு எண் என்னவோ அந்த எண்ணிக்கையிலான புரோட்டான்கள் மட்டும் அதன் அணுக்கருவில் இருக்கும்.

இரண்டாவதில் அதன் அணுக்கருக்களில் பல்வேறு அளவுகளில் நியூட்ரான்கள் நிறைத்திருக்கும். அதாவது ஐசோடோப்புகளாக.

அப்படியானால் இரண்டுக்கும் எடை வேறுபாடு இருக்கவேண்டுமல்லவா?

இருக்குமா? இருக்காதா? ஏன்?

அது இருக்கட்டும்.... ஒரு கன செ மீ உள்ள ஐசொடோப்புகள் இல்லாத இரும்பும் ஐசொடோப்புகள் நிறைந்துள்ள இரும்பும் கன அளவில் ஒன்றாக இருந்தாலும் அணு எடையில் வேறுபட்டவைதானே? அப்படியானால் ஒரே கன அளவுள்ள இரு வகையான இரும்பும் இரு வகையான எடைகள் காட்டவேண்டுமல்லவா? அப்படிக் காட்டாது என்றால் ஒரு தனிமத்தின் எடையைத் தீர்மானிப்பது எது?.....

ஒரு குறிப்பிட்ட எடை உள்ள ஐசொடோப்புகள் இல்லாத தனிமத்தின் கன அளவும் ஐசொடோப்புகள் நிறைந்த அதேதனிமத்தின் கன அளவும் மாறவேண்டும் அல்லவா?


ஆர்கிமிடிஸ் விதிப்படி ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள ஒரு குறிப்பிட்ட உலோகம் ஒரு குறிப்பிட்ட எடையைத்தான் கொண்டிருக்க முடியும்.

ஆனால் நமது விவாதப்படி ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள ஒரு குறிப்பிட்ட உலோகம் அதன் அணுக்களில் அடங்கியுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் எடையில் மாறுபாடு இருக்கும் என்று ஆகிறது!

இது எப்படி?

இது அறிவியலுக்கு முரண்படுவதுபோல் இருக்கிறது!

இதில் தவறு எங்கோ ஒளிந்திருக்கிறது!

கண்டுபிடிக்கவேண்டுமே!

அணு விஞ்ஞானம் வளர்ந்த பின்னால் ஆர்கிமிடிஸ் விதியை பயன்படுத்துவதற்கு சில நிபந்தனைகளை சேர்த்திருக்க வேண்டுமோ என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. காரணம் ஆர்கிமிடிஸ் காலத்தில் அணு விஞ்ஞானமோ தனிமங்களுக்கான அணு எண்ணோ அணு எண் மாறாமலே அணு எடையை மாற்றக்கூடிய தொழில் நுட்பமோ இல்லை. ஆனால் இன்று அத்தகைய தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதால் ஆர்கிமிடிஸ் விதியைக் கேள்விக்குரியதாக ஆக்க முடியும்போல் உள்ளது!


முன்பு ஒரு தனிமம் என்பது அதன் தனிப்பட்ட பண்புகளை மட்டும் வைத்துத் தீர்மானிக்கப்பட்டது.

ஒரே தனிமம் வேறுபட்ட ஐசொடோப்புக்களைக் கொண்டதாக இருந்தாலும் ஐசோடோப்புக்களைத் தனியாகப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இல்லாததால் அதன் கன அளவும் எடையும் குறிப்பிட்ட விகிதத்தில்தான் இருக்கும் என்று வரையறுக்கும் விதத்தில் ஐசொடோப்புகள் சராசரியாக ஒரு தனிமத்தில் கலந்து இருந்தன.

அதனால் பிரச்சினை எழவில்லை.

ஆர்கிமிடிஸ் விதி அதற்குப் பொருத்தமாகவே இருந்தது!

ஆனால் ஐசொடோப்புக்களைப் பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டதால் ஒரு தனிமத்தின் கன அளவுக்கும் எடைக்குமான விகிதாச்சார உறவு கேள்விக்குரியாக ஆக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்!

அதனால் ஆர்கிமிடிஸ் விதியிலும் மாறுதல் செய்யப்படவேண்டுமோ என்று ஐயப்படுகிறேன்!
கவிதை ( 3 )


எட்டப்பன் மொட்டை!
=====================

எட்டப்பன் தோட்டத்தில்

பட்டுப்போல் பருத்தி

பாங்குடனே வெடித்துப்

பட்டகடன் தீர்ந்துவிட்டால்

மொட்டை அடிப்பதென்று

மொட்டையை வேண்டினான்.

எட்டப்பன் மனைவி கெட்டிக்காரி!

தையிலோ மாசியிலோ

தன மகள் வள்ளிக்குக்

கல்யாணம் செய்யவென்று

முழுமூச்சாய்ப் பாடுபட்டாள்!

தையும் பிறந்தது.

வளமான மகசூலை

வழங்குதர்க்குப் பதிலாக

வாடல்நோய் விழுந்து

வாடி வதங்கியதால்

கொட்டைப் பருத்திதான்

குவிந்தது மலையாக!

பட்டகடன் கட்ட

முடியாமல் போனாலும்

வள்ளியின் கல்யாணம்

தள்ளிப் போனாலும்

எட்டப்பன் பழனி

மொட்டைக்கு விட்டமுடி

எட்டங்குல நீளம்

வளர்ந்ததில் தப்பில்லை.

ஆஹா!.....

அவனே புண்ணியவான்!......

Monday, September 10, 2012

உணவே மருந்து ( 33 )


கோரை உணவு 

இப்போதெல்லாம் கோரை என்றால் குடியானவனுக்குக் குளிரும் காய்ச்சலும் வருவதுபோல் உள்ளது. 

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் கோரை மக்களுக்கு உணவாகவும் பயன்பட்டுள்ளது. 

வறண்ட காலங்களில் விவசாயமும் விளைச்சலும் வேலையும் இல்லாதகாலங்களில் புஞ்சைக்காடுகளில் புழுதியில் மீண்டும் முழைப்பதர்க்கு மழையில்லாமல் இறைந்து கிடக்கும் கோரைக் கிழங்குகளைச் சேகரித்து கொண்டு வருவார்கள்.

அதை தரையில் பரப்பிப் பலகையால் தேய்ப்பார்கள். 

அதனால் கோரைக்கிழங்கின் மேல்பாகம் இருக்கும் தொட்டு நீக்கப்பட்டு வெண்மைநிறத்தில் சின்னவெங்காய வடிவிலும் தட்டைப்பயறு அளவுள்ளதாகவும் கிடைக்கும்.

அதை ஆட்டுக்கல்லில் போட்டு ஆட்டிக் கஞ்சியாகக் காய்ச்சிஉப்புப் போட்டுக் குடிப்பார்கள்.

தோசையாகச் சுட்டுத் தின்பவர்களும் உண்டு.

மழைக்காலங்களில் முழைக்கும் கோரைக்கிழங்கைக் குச்சியால் நோண்டி எடுத்து சிறுவர்கள் உண்பதும் அப்போது வழக்கத்தில் இருந்தது! 

ஆனால் இப்போதெல்லாம் அந்த நல்ல கோரை அநேகமாக முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது.

அடர்ந்த களைகளாக முழைத்து விவசாயிகளுக்குத் தலைவலியாக இருக்கும் அத்துவானக் கோரைகள் மட்டுமே இப்போது விவசாய நிலங்களிலும் தரிசுகளிலும் உள்ளன.

காலத்துக்குத் தகுந்தபடிக் கோரைக்களும்கூட தங்களை மாற்றிக்கொண்டு விட்டது. 

Saturday, September 8, 2012

எனது மொழி (68)


படைப்பாளிக்கு அழகு

சமுதாயத்தைப் பற்றி விமர்சிக்கும் அல்லது வருத்தப்படும் அல்லது அறிவுரை வழங்கும் எந்த ஒரு எழுத்திலும் கருத்திலும் அந்த எழுத்தாளன் அல்லது கருத்தாளன் தன்னையும் அதில் ஒரு அங்கமாக இணைத்துத்தான் கருத்தைச் சொல்ல வேண்டும்.

அதுதான் ஒரு எழுத்தாளனின் உயர் பண்பு!

பல மேதைகளிடம்கூட அந்தப் பண்பைப் பார்க்கலாம்!

ஆனால் இப்போதெல்லாம் கத்துக்குட்டிகள்கூட தங்களின் பிதற்றல்களில்கூடத் தங்களைச் சேர்த்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்கு உபதேசிக்கிறார்கள்.

இப்படிச் செய்யுங்கள்!,இதை உணருங்கள், இந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள் , என்பதுபோல அவர்களின் செய்திகளை வெளிப்படுத்துகிறார்கள்.

அது அழகல்ல!

தங்களையும் இணைத்துச் சொல்வதே அழகு!

இது உணரப்ப்படுமா!.....

அண்டவெளியும் நானும் ( 1 )அண்டவெளியில் முதல் அடி

நான் புரிந்துள்ள அல்லது அறிந்துள்ளது:

பூமியின் ஈர்ப்பு எல்லைக்கு வெளியே செல்லும் ஒவ்வொன்றும் பூமியைச் சுற்ற ஆரம்பிக்கும். 

ஆதாவது பூமியின் நிறைஈர்ப்புவிசையும் மைய விலக்கு விசையும் சேர்ந்து அப்படித் தன்னைச் சுற்றும் ஒரு விசையைப் பராமரிக்கிறது. அதனால்தான் நிலவுகூட பூமியைவிட்டு விலகாமல் அதேசமயம் அதனுடன் மோதாமல் சுற்றிவருகிறது.

அதைவிட்டு வெளியே தப்பிக்க ஒரு விசை இருந்தால் போதும் அது பூமியின் அந்த எல்லையைவிட்டும் தாண்டிச் செல்லும்.

அப்படி ஒன்று பூமியின் ஆதிக்க எல்லையைக் கடந்து சென்ற பின்னும் அது  சூரியனின் எல்லைக்குள்தான் பயணிக்கவேண்டும். ஆதாவது பூமியைச் சுற்றுவதற்குப் பதிலாகச் சூரியனைச் சுற்றத் துவங்கிவிடும். 

கோள்கள் , துணைக்கோள்கள், அஸ்ட்ராய்டுகள், வால்நட்சத்திரங்கள், விண்கற்கள் போன்றவை எல்லாம் அப்படித்தான் தமக்கென அனுமதிக்கப்பட்ட பாதையில் சூரியனைச் சுற்றுகின்றன.

அப்படி அந்த சூரியனின் தாக்கத்தை மீறி வேறுதிசையில் செல்லவேண்டுமானால் அதற்கென ஒரு கூடுதல் விசை தேவைப்படும்.

அந்த விசை இருக்குமளவு சூரியனால் அனுமதிக்கப்படும் பாதையைவிட்டு வேறு வழியில் பயணிக்கமுடியும்.

அப்படிச் செல்லும் கலங்கள் எதுவானாலும் அவற்றின் இருப்புச் சக்தி தீர்ந்துபோய்விட்டால் அந்த நிலையில் அந்தத் தூரத்தில் இருந்தபடி சூரியன் அனுமதிக்கும் சுற்றுப்பாதையில் சுற்றத் துவங்கிவிடும்!

சூரியனின் ஆதிக்க எல்லைக்கு வெளியே போக வேண்டுமானால் அந்த எல்லை வரையும் அதைத் தாண்டவும் நிச்சயம் ஒரு சக்தி வேண்டும். 

அப்படி ஒரு சக்தி தேவை இல்லையென்றால் ஒரு நட்சந்திரத்தின் ஆழுகைக்கு உட்பட்ட எதுவும் வெளியே தத்தம்போக்கில் தப்பிச் சென்று விட முடியும்!

உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமென்றால் ஹேலி வால்நட்சத்திரம் எழுபத்தியொரு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சூரியனை வந்து சுற்றிவிட்டுச் செல்லவேண்டிய அவசியம் இல்லை! 

ஆனாலும் வருகிறது. காரணம் சூரிய சக்தியில் இருந்து அதனால் விடுபடமுடியாது என்பதே!

(இதில் தவறும் இருக்கலாம். சொன்னால் ஏற்றுக்கொள்வேன்)

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )


இறைவன்

இறைவன் உண்டா இல்லையா எனும் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.

இறைவன் என்னும் வார்த்தை ஒரே பொருளைக் கொண்டதாக இருந்தால்தான் உண்டு இல்லை என்று ஒற்றை வரியில் சொல்லமுடியும். 

அது அறிவாளிகளின் அனைத்து மக்களுக்கான சிந்தனையாகவும் முட்டாள்களின் குறிப்பிட்டவர்கள் நம்பும் மூடநம்பிக்கையாகவும் இரு பொருளில் வழக்கில் உள்ளது! 

அதனால் ஒரே வார்த்தையில் எப்படிச் சொன்னாலும் ஒருபகுதியினருக்குத் தவறாகப் படும். 

அதனால் அதற்குப் பதிலும் இரண்டாகத்தான் இருக்கும். 

முன்னவர்களுக்கு ஆம் என்பதும் பின்னவர்களுக்கு இல்லை என்பதும் தான் பதில்! 

Friday, September 7, 2012

பல்சுவை ( 8 )


பனையரசம்மா!

இது ஒரு அதிசயப் பனைமரம்! 

எங்கள் தோட்டத்துக்குப் பக்கத்தில் வேறொரு பக்கம் எடுத்தது!

பனைமரம் அரசமரத்தைத் தாங்கிக்கொண்டு உள்ளது! 

அந்த பூமிக்குச் சொந்தக் காரருக்கு  இன்னும் ஐடியா வரவில்லை!

இல்லாவிட்டால் அங்கு எதோ ஒரு சாமி குடிகொண்டிருப்பதாகக் கனவில் வந்து சொன்னதாகச் சொல்லி பெரிய அளவு பக்தி வியாபாரத்தைத் துவங்கி இருக்கலாம்.

கீழ்மருவத்தூரைப்போல ஒரு புண்ணிய இடமாக்கியிருக்கலாம். ஏனோ அவருக்குத் தோணவில்லை! 

யாருக்காவது அப்படி ஒரு ஐடியா இருந்தால் அதை வெட்டும் முன்பே நல்ல விலைக்கு வாங்கித் தொழிலை ஆரம்பிக்கலாம்! அருள்மிகு சுயம்பு பனையரசம்மா என்று பெயர்வைத்துக்கொண்டு பட்டையக் கிளப்பலாம்! 

மக்களும் அம்மா அம்மா என்று உங்களை அம்மாவாக்கிக் காலில் விழுந்து காசையும் கொட்டுவார்கள்! 

என்னாலான யோசனையைச் சொல்லிவிட்டேன்.

என்னையும் கவனியுங்கள்! 

Tuesday, September 4, 2012

எனது மொழி ( 67 )

நீரும் நெருப்பும்

தண்ணீரும் நெருப்பும் நெருங்கும்போது ஒன்றையொன்று தன்மையமாக்க முயல்கின்றன.

அவற்றில் எதன் தாக்கம் அதிகமாக இருக்கிறதோ அது வெல்கிறது. 

மற்றது குறைகிறது அல்லது மறைகிறது .

அதுபோல் ஒவ்வொருவரிடமும் நற்பண்புகளும் தீய பண்புகளும் கலந்தே உள்ளன. அவை ஒன்றையொன்று வெல்ல முயல்கின்றன. 

அதில் எதன் தாக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பண்பு வெல்லும். மற்றது குறையும் அல்லது மறையும்.

======================================================================
-------------------------------------------------------------------------------------------------------
======================================================================

வெற்றியும் தோல்வியும்

வெற்றியோ தோல்வியோ அதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஒருவருக்கு வந்துவிட்டால் வெற்றியும் தோல்வியும் இரண்டுமே பயனுள்ளதாக ஆகிவிடும்!

பெரும்பாலான வெற்றிகள் மற்றவர்களுடைய தோல்விகளின்மேல்தான் அடையப்படுகின்றன.

ஆனால் பிறரைத் தோற்கடிக்காமல் ஆட்கொள்ளும் வெற்றிகளே உண்மையான வெற்றிகள் ஆகும்!

======================================================================
------------------------------------------------------------------------------------------------------
======================================================================


Monday, September 3, 2012

எனது மொழி ( 66 )


உயிர் வாழ்க்கை!

உயிரற்ற ஒரு நிலையில் இருந்த பூமி உயிர்கள் வாழத் தகுதியானபோது எண்ணற்ற உயிரினங்கள் தோன்றுவதும் மறைவதுமாக புது இயக்கமுறை தோன்றுகிறது.

அதுதான் உயிர்வாழ்க்கை!

உயிரற்ற நிலையில் இருந்து உயிர் நிலைக்கு மாறி மீண்டும் உயிரற்ற நிலைக்குத் திரும்புவதுதான் வாழ்க்கை.

ஒரே நேரத்தில் இரண்டும் நடந்துகொண்டே உள்ளது.

குறிப்பிட்ட வடிவம் மறைவதைத்தான் மரணம் என்று சொல்கிறோம். ஆனால் தோன்றுவதும் மறைவதும் இடையறாமல் நடக்கிறது!.

Sunday, September 2, 2012

எனது மொழி ( 65 )

அறிவியல்


அணுக்கள் என்பது நாமறிந்த அடிப்படை கூறு!

அது பல்வேறு விதமாகக் கூடியும் பிரிந்தும் பல்வேறு மட்டங்களில் பல்வேறுவிதமாக இயக்கங்களாக வெளிப்படுகிறது.

அத்தகைய ஒரு இயக்கக்கூறுதான் நாம்! மற்றும் நாம் காணும் அனைத்தும்!

இந்த அண்டத்தில் சில இயங்காமல் நிலைத்திருப்பதுபோல் சிலநிலைகளில் உணரப்பட்டாலும் அவற்றை வெகு அருகில் சென்று பார்த்தால் அவையும் இயங்கிக்கொண்டு இருப்பது தெரியும்.

அப்படிப்பட்ட பல்வேறு இயக்கங்களின் பல்வேறுவிதமான இயங்கு முறைகள்தான் விதிகள் எனப்படும். நம்மைச் சுற்றி நிகழும் எல்லாம் எண்ணற்ற விதிகளின் படிதான் நடக்கின்றன.

அந்த விதிகளைத்தான் நாம் நிறையக் கண்டுபிடித்திருக்கிறோம்.

கண்டுபிடிக்க இயலாததையும் கண்டுபிடிக்க முயன்று கொண்டு உள்ளோம்.

நாம் வாழும் பூமியிலும் அதற்கு வெளியிலும் நிலவும் அத்தகைய விதிகளின்படி  இயங்கும் இயக்க ஆற்றலை மனித இனமாகிய நாம் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் பயன்படுத்துகிறோம்.

அந்தக் கலைக்குப் பெயர்தான் அறிவியல்!


அறிவியல் எத்தனையோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளது. இன்னும் எத்தனையோ கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. 

ஆனால் அறிவியல் அனைத்தையும் கண்டுபிடித்து முடிக்கும்வரை அபத்தமான கற்பனைகளை முழு உண்மை என்று நம்பவைக்க முயலும் போக்கு எப்போதும் நடந்துகொண்டுதான் உள்ளது! 

நாம் இன்னும் அறியாமல் இருக்கும் எத்தனையோ அறிவியல் விதிகளைப் பற்றிக் கேள்வி எழுப்புவதால் அத்தகைய கண்டுபிடிக்கப்படாத விதிகள் எல்லாவற்றுக்கும் மூடநம்பிக்கைகளை உரிமையாளர் ஆக்குவது போலி ஆன்மிகவாதிகளின் ஏமாற்றுவேலை ஆகும்!

ஆன்மிகத்தை மூடநம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க முயல்வதே முதல் கடமையாக இருக்கவேண்டும்!