ss

Saturday, September 22, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )


கடவுளை நம்புங்கள்!
ஆம் நண்பர்களே. எனது வேண்டுகோள் இது! கடவுள் மறுப்பாளர்களுக்கல்ல. இறைப் பற்றுள்ள நண்பர்களைத்தான் கேட்டுக்கொள்கிறேன்.


ஏனென்றால் கடவுள் மறுப்பாளர்கள் கடவுளை நம்பச் சொன்னால் கேட்கவா போகிறார்கள்? 


ஆனால் கடவுள் மறுப்பாளர்களுக்குத் தீனிபோட்டுக்கொண்டே இருக்கும் இறையன்பர்களைத்தான் இறைவனை நம்புங்கள் என்று கேட்கிறேன்!


கடவுள்மறுப்பாளர்கள் பெரும்பாலும் இறைநம்பிக்கையைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. காரணம் அது சிக்கலான விஷயம். அதனால் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் நடக்கும் மூடத்தனங்களை கன்னாபின்னாவென்று விமர்சிக்கிறார்கள். 

ஒன்று மூடத்தனங்கள்தான் இறைநம்பிக்கை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் மூடநம்பிக்கைகளை ஒழித்து உண்மையான ஆன்மிகத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும். 


அப்படி இல்லாவிட்டால் இறை மறுப்பாளர்கள் தங்கள் மறுப்பை வெளிப்படையாகச் சொல்கிறார்கள், இறைப்பற்றாளர்கள் உண்மையில் இறை மறுப்பாளர்களாக வாழ்ந்துகொண்டு பற்றாளர்களாக நடிக்கிறார்கள் என்பதுதான் பொருளாகிவிடும். ஆம்! மூட நம்பிக்கைகள் என்பது அடிப்படை ஆன்மிகத்துக்கு எதிரானதே! மூடநம்பிக்கைகளை நம்புபவர்கள் உண்மையில் இறை மறுப்பாளர்களே! 

அறியாமை, அச்சம், சுயநலம் இந்த மூன்றும்தான் மூடநம்பிக்கைகளின் அடிப்படைகள் என்று எண்ணுகிறேன்.இவற்றை ஒழித்துக்கட்டி உண்மையான ஆன்மிகத்தில் நிலைகொள்ள மக்களுக்கு வழிகாட்டுவதில் ஆன்மிகவாதத்தின் முன்னோடிகளுக்கு என்ன சிக்கல் இருக்கிறது? 


இறைமறுப்பாளர்கள்கூட இறைமறுப்பு என்ற பேரால் அவற்றை எதிர்த்துத் தானே போராடுகிறார்கள்? அவர்கள் எங்கே உண்மையான ஆன்மிகத்தை எதிர்த்தார்கள்?



மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதை ஆன்மிகத்தை எதிர்ப்பதாகக் கருதப் படுகிறது. அப்படியானால் மூடநம்பிக்கைகள்தான் ஆன்மிகமா?

அந்தத் தவறான மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடவேண்டியது சரியான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் ஆன்மிகவாதிகளின் கடமை அல்லவா?


இங்கு சொல்லப்ப்படுவது நாத்திகவாதிகளை ஏற்கச் சொல்லும் பிரச்சினை அல்ல. ஆன்மிகத்தின் அடிப்படையை மறைத்து அதனைத் தன்மையமாக்கி வைத்திருக்கும் மூடநம்பிக்கைகளை ஆன்மீகத்திலிருந்து பிரித்தெடுத்து ஒழிப்பது எப்படி என்பதுதான்.



மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டம் இறை மறுப்பாளர்களிடம் இருந்து இறைப் பற்றாளர் கைகளுக்கு மாறவேண்டும் என்பதுதான் இப்போது இங்கு அக்கரைக்குரிய பொருள்!

நாத்திகத்தை விடுங்கள் ! அது ஒரு பெரிய விஷயமில்லை. அதனால் விழைந்த கேடுகளைவிட ஆன்மிகத்தின்பேரால் நடக்கும் அபத்தங்கள்தான் ஆன்மிகத்துக்கே கேடு விளைவித்துக் கொண்டுள்ளன. அதை ஒழித்துக் கட்டிவிட்டால் ஆன்மிகத்தின் உண்மையான ஒளியில் உலகம் உயர்வு பெறுமே!


ஏன் நம்மைப் போன்று ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்தத் திசையில் சிந்திக்கக்கூடாது?

ஆன்மிகம் அல்லது கடவுள் நம்பிக்கை என்பதைக் குறிப்பிட்ட மதத்தவர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. அப்படி இருக்க ஒவ்வொரு மதத்தவரும் இதுதான் இறை நம்பிக்கை அல்லது கடவுள் என்று சொன்னால் உண்மையான இறை நம்பிக்கை அல்லது கடவுள் எது?


கடவுள் ஏதோ ஒரு மதத்தைச் சேர்ந்தவரா? அல்லது எல்லாமதத்தையும் சேர்ந்தவரா? 



அப்படி எல்லா மதத்தின் படியும் சொல்லப்படும் கடவுள் ஒருவரே என்றால் மதங்களிடையே பெயர் வேறுபாட்டைத் தவிர மற்ற வேறுபாடுகள் இருக்கக்கூடாதே? ஆனால் வேறுபாடுகள் மட்டும் அல்ல பகைமையுணர்வும் மனித ரத்தம் சிந்துதலும் நடக்கிறது!



ஆக உண்மையான இறை நம்பிக்கையை விட்டுவிட்டு மனித இனமே தவறான பாதையில் செல்வது போலல்லவா ஆகிறது?

உண்மையை நோக்கிய பயணமே ஆன்மீகம்.


அப்பயணத்தில் தடையாக இருப்பது மூட நம்பிக்கைகள்



அதை தகர்க்கும் போது பயணம் எளிதாகும்.



உண்மையை நோக்கிய பயணத்தில் உள்ள மிகப்பெரிய தடையான மூடநம்பிக்கைகளை தகர்ப்பதும் ஆன்மீக பணியே.

அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அத்தனையையும் படைத்தவன் அல்லது அத்தனையுமாக உள்ளவன் இறைவன் என்பதுதான் ஆன்மிகத்தின் அடிப்படை!


அத்தகைய இறைவன் எப்படி பலவாக இருக்கமுடியும்? 



அத்தகைய இறைவனின் பிரம்மாண்டமான அடிமுடி தெரியமுடியாத படைப்பில் மனிதனாகிய நமது பங்கு என்பது அதனுள் ஒரு கற்பனைசெய்து பார்க்கமுடியாத ஒரு சிறு அங்கமே!



அத்தகைய ஒரு சிறு அங்கமாக இருந்துகொண்டு நாம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆதி பரம்பொருளை இப்படிப்பட்டவன்தான் என்று மனிதனைப் போன்ற குணநலன்கள் கொண்டவனாக எப்படி வரையறுக்கமுடியும்?

இத்தனைக்கும் ஆதாரமாக இத்தனையுமாக விளங்கும் கடவுள் எப்படி மனிதனால் புரிந்துகொள்ளக்கூடிய குணங்களை மட்டும் கொண்டவனாக ஒரு சிறு வட்டத்துக்குள் இருந்து தனது அண்டசராசரப் படைப்பாக்கத்தைப் பேணிக்காக்க முடியும்?


மாபெரும் இறைவனை சின்னஞ்சிறு குடுக்கைக்குள் அடைக்க நினைப்பது நியாயமா?



பரந்து விரிந்திருக்கும் கடலில் இருந்து ஒரு ஊசிமுனையில் வருமளவு நீர் எடுத்து இதுதான் பெருங்கடல் என்று சொல்வது சரியா?



அதுபற்றிக்கூட ஒரு ஒன்றுபட்ட உலகக் கருத்தாக இல்லாமல் நம்முள் பிளவுபட்டு நமக்குநாமே போராடி மடிந்துகொண்டுள்ளோம். அப்படியானால் நாம் அந்த விஷ்வருபனாகிய இறைவனை உண்மையில் நம்புகிறோமா?





2 comments:

  1. சிந்திக்க வைக்கும் பல கருத்துக்கள் & கேள்விகள்...

    ReplyDelete