ss

Monday, October 29, 2012

சிறு கதைகள் ( 12 )


இளைஞனும் கிழவனும்!
(எப்போதோ கேட்டது)

ஒரு பத்திரிகையாளருக்கு இரண்டுவிதமான தகவல் திரட்டவேண்டிய வேலை!

முதலாவது கண்டதைத் தின்று குடியும் புகைப்பழக்கமுமாக இருந்து கெட்டுப்போனவரைச் சந்தித்துப் பேட்டி எடுக்கவேண்டும். 

இரண்டாவது இயற்கை உணவை உண்டு இயற்கைச் சூழலில் வாழ்ந்து ஆரோக்கியமாக வாழும் ஒருவரைப் பேட்டி காண வேண்டும்.

முதலில் கண்டதைத் தின்றுகொண்டு குடிக்கும் புகைக்கும் அடிமையான இளைஞன் ஒருவனைச் சந்திக்க அவனுடைய வீட்டிற்குச் சென்றார்.

அவன் வீட்டு வாசலில் ஒரு தாத்தா லொக்கு லோக்கென்று இருமிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் போய், "தாத்தா! இங்கே முப்பது வயசுக்காரர் இருக்கிறதாக் கேள்விப் பட்டேன். அவரைப் பார்க்கணும். எப்போ வருவார் " என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தாத்தா, " அட நாந்தானப்பா அந்த ஆளு என்ன வேணும்?" அப்படின்னு கேட்க இவருக்குத் தூக்கி வாரிப் போட்டுதாம். 

அவரோட கதையைக் கேட்டுட்டு அதன்பின்னாலே இயற்கை உணவும் நல்ல பழக்கங்களுமா ஒரு மலை அடிவாரத்துல வாழ்ந்துகிட்டிருந்த ஒரு தாத்தாவைப் பார்க்கப் போனாராம்.

பத்திரிக்கையாளர் தேடிப் பிடிச்சுப் போனபோது ஆள் இல்லை! 

கொஞ்ச நேரம் காத்திருந்த பின்னாலே ஒரு வயசான தாத்தா காட்டுக்குள்ள இருந்து ஒரு சுமையைத் தூக்கிகிட்டு வந்தாராம். 

சுமையை இறக்கிப்போட்டுவிட்டு கட்டிலில் உட்காரவும் பத்திரிக்கையாளர் அதிர்ந்துபோய் விட்டாராம். 

இந்த வயசுலே இப்படி ஒரு மனிதரா என்று நம்பமுடியவில்லை!.....

அப்புறம் தான் வந்த விபரத்தைச் சொல்லிவிட்டு அவருடைய இளமையின் ரகசியம் என்ன என்று கேட்டாராம்.

அதற்கு அந்தத் தாத்தா,"தம்பி! இதுக்கு நான் பதில் சொல்லுறத விட மலைமேலபோன எங்க அப்பா இப்போ விறகு கொண்டு வந்துடுவாரு! அவரைக் கேட்டா நல்லாச் சொல்லுவாரு! " அப்படின்னு சொல்லவும் பத்திரிகையாளருக்கு மயக்கமே வந்துடுச்சாம்!.....

1 comment: