ss

Tuesday, December 4, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 19 )


துறவி

நண்பர்களே! 

புத்தரையும் விவேகானந்தரையும் இன்னும் நாம் படித்த செய்திகள்மூலம் மரியாதை வைத்திருக்கிற பல மதங்களைச் சேர்ந்த துறவிகளை விடுங்கள்! 

அவர்கள் நமது மனங்களில் மதிப்புடன் வாழட்டும்! 

காரணம் அவர்களைப் பற்றிய நல்ல செய்திகளையே கேட்டிருக்கிறோம்! 

ஆனால் அவர்களின் பெயரைப் பிரச்சாரம் செய்கின்ற, அல்லது துறவிகள் என்று சொல்லிக்கொண்டு உலகில் வலம் வருகின்ற நபர்களில் எத்தனைபேர் மதிப்புக்குரியவர்கள்? 

குப்பைகளைப் பற்றிப் பேசவேண்டாம்! 

அது நாறும்! 

நல்லவர்களாக மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும் துறவிகள் எத்தனைபேர் நல்ல பண்புடன் வாழ்கிறார்கள்? 

அவர்கள் மக்களுக்கு என்ன உபதேசிக்கிறார்களோ அதை அவர்கள் பின்பற்றுகிறார்களா? 

உண்மையில் துறவிகள் என்று யாரை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? 

துறவிகள் என்ற ஒரு கற்பனைதான் துறவிக்குண்டான இலக்கணமா? துறவு என்றால் என்ன? 

அதையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் துறவிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் மாய மான்களுக்குப் பின்னால் ஓடும் புத்தியை என்ன செய்யலாம்?


இவர்களைக் கண்டு வியப்பதற்கு ஒன்றுமில்லை ! 

இந்த உலக வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளைச் சந்திக்கும் முறைகளில் நம்பிக்கை இல்லாமல் புதுப் புது உத்திகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிந்திக்கிறோம். 

அந்தச் சிந்தனைகளில் மிகப் பெரும்பாலும் தன்னைச் சுற்றியே சிந்திக்கப்படுபவைதான் அதிகம். 

அவர்களுக்கு கிருஷ்ணதேவராயன் கதையில் வரும் முடிதிருத்துவோன் சொன்னதுபோல அவன் வீட்டில் தங்கம் இருக்கும்போது எல்லோர் வீட்டிலும் இருப்பதாகவும் அது திருடு போகும்போது நாடே திருட்டுக் கூட்டம் ஆகிவிட்டது போலவும்தான் சமூகத்தைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்! 

ஆனால் உண்மையாலுமே துன்பங்களுக்கு அடிப்படையாக இருக்கும் சமூகக் காரணிகளைப் பற்றி எக்காலத்திலும் சிலர்தான் சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். 

அவர்கள் முற்காலத்தில் காடுவனங்களில் அமைதியான சூழலில் தவமிருந்து நல்ல முடிவுகளைக் கண்டறிந்து உலகமக்களுக்கு உபதேசித்ததாக அறிகிறோம். 

ஆனால் நவீன காலத்தில் அத்தகைய மாறுபட்ட சிந்தனைகளை மக்கள் மனதில் உருவாக்க பல்வேறு உபாயங்கள் இருக்கின்றன. 

ஆனால் பழைய முறைகளின்மேல் மக்களுக்கு இருக்கும் குருட்டு நம்பிக்கையின் காரணமாக துறவி வேஷம்பூண்டு ஏமாற்றிப் பிழைப்பவர்களாகவும் நல்லவர்களைப்போல் நடிப்பவர்களாகவும் தற்போது நிறையப்பேர் வலம் வந்துகொண்டுள்ளார்கள்! 

காரணம் அவர்களுக்கு அது எளிமையான வழி! மற்றபடி சமூக சிந்தனை எதுவும் கிடையாது!

ஆனால் அத்தனையும் தவிர்க்கப்படவேண்டிய குப்பைகளே!


யாரொருருவருடைய எண்ணமும் சொல்லும் செயலும் தூய்மையானதாகவும் அனைவருடைய நலன்களையும் விரும்புவதாகவும் உள்ளதோ,அவருடைய உள்ளத்தை விடச் சிறந்த கோவில் உலகில் வெறு எதுவும் இருக்கமுடியாது! 

ஆனால் அத்தகைய கோவிலாகத் தனது உள்ளத்தையும் நல்லொழுக்கத்தையும் மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் வேஷதாரிகளாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்! 

அத்தகைய வேஷதாரித்தனம்தான் ஆன்மிகத்தின் பெயரால் பெரிய வேஷதாரிகளை உருவாக்கி அவர்களை சுகபோக வாழ்வில் வாழவும் வைக்கிறது! 

அவர்களின் பெயர் துறவி என்றாலும் கழுதை என்றாலும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிடப் போகிறது! 



No comments:

Post a Comment