ss

Thursday, January 31, 2013

அரசியல் ( 40 )


மத்திய மாநில அரசுகள் 

 மாநிலங்கள் தங்களுடைய தேவைகளைத் தீர்க்கத் தங்களின் வளங்களையும் மனித சக்தியையும் வைத்துத் திட்டமிடவேண்டும். 

மத்திய அரசை வெளியுறவுக்கும் பாதுகாப்புக்கும் தவிர வேறு எதற்கும் எதிர்பார்க்கக்கூடாது! 


காரணம் அவர்கள் வேறு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்! 

தங்கள் சொந்த முயற்சிகளுக்கும் தடையாக மத்திய அரசு இருக்கும் என்றால் அது பிரிவினைவாதத்தை ஆதரிப்பதற்குச் சமம் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தவேண்டும்! 

ஒரு காலனி நாட்டுக்கும் அந்நிய அரசுக்கும் உள்ள உறவுதான் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் என்றால் ஒன்று தனது சொந்தக்காலில் இருக்கும் அதிகாரத்தைவைத்து முன்னேறவேண்டும். 

அல்லது கூடுதல் அதிகாரத்துக்காகப் போராடவேண்டும். 

இரண்டும் முடியாதென்றால் பிரிவினைக் கோரிக்கை தவிர்க்க முடியாதது ஆகிவிடும்! 

மதமும் கடவுளும் ( 2 )

மதங்களா? கடவுளா?

எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே மருத்துவ மனையில் பிறக்கிறார்கள்!

ஒரே மருத்துவரிடம் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள்.

ஒரே கருவியையும் மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

ஒரே மளிகைக்கடையில் பொருள் வாங்கி உண்ணவும் செய்கிறார்கள்! 

ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கவும் ஒரே மொழியைப் பேசவும் செய்கிறார்கள்! 

நான் கேட்கிறேன் ........

வாழும்போது ஒரே தேவைகளுடன் வாழும் இவர்களை செத்தபின்பு ஏன் ஒரே இடத்தில் புதைக்க மதங்கள்  விடுவதில்லை?

அனைத்து மனிதரும் ஓரிடத்தில் புதைக்கப்படக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவன் சொன்னானா?

இறைவனே சொல்லாத ஒன்றை இந்த மதங்கள் செய்கின்றன என்றால் அவை இறைவனுக்கு எதிரானவை அல்லவா?

அப்படியானால் நாம் நிற்கவேண்டியது இறைவனின் பக்கமா? மதங்களின் பக்கமா? 

நிச்சயமாக ஒன்றை ஏற்றுக்கொள்வதென்றால் மற்றதைத் தூக்கிக் குப்பையில் எறிந்தாக வேண்டும்! 

நாம் எதை ஏற்றுக் கொள்ளப் போகிறோம்?

எதைத் தூக்கிக் குப்பையில் எறியப் போகிறோம்! 
Wednesday, January 30, 2013

எனது மொழி ( 107 )


நாகரிகம்

ஒரு உயர்ந்த கருத்தாக இருந்தாலும் அதைச் சொல்லும்போது தன்னை உயர்ந்த இடத்தில் நிறுத்திக்கொண்டு கேட்பவர்களைத் தாழ்ந்த இடத்தில் நிறுத்தி நீ இப்படிச் செல், அப்படி நட, அதை உணர்! இதைப் பின்பற்று என்று சொன்னால் அதைப்  படிப்பவர்கள் மனதில் எரிச்சல்தான் வரும் என்பதை உணரவேண்டும்!

முகநூலில் இப்படிச் சொல்கின்ற மேதாவிகள் மிக அதிகம்! 

அவர்கள் பெரும்பாலும் காப்பி பேஸ்ட் செய்பவர்களாக இருப்பதால் அதன் பாதிப்பை உணர்வதில்லை 

ஒரு கருத்தையோ அல்லது சமூகத்தின்மீதான குறைபாட்டையோ சொல்லும்போது, சொல்பவர் மேதையாக இருந்தாலும் தன்னை மக்களுள் ஒருவராகப் பாவித்து நாம் ,நமது, என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதே உயர் பண்பாடு! 

ஏன் இந்த நாகரிகம் நிறையப்பேரிடம் இல்லை?

அரசியல் ( 39 )

யாரை நம்பலாம்?

அரசியலில் யாரையும் நம்பக்கூடாது! 

நம்பாமல் இருக்கவும் கூடாது! 

நல்லவர்க்கும் கெட்டவர்க்கும் வேறுபாட்டை அறியக் கற்றுக்கொள்ளவேண்டும்! 

ஒருவர் அல்லது ஒரு இயக்கம் நம்பத் தகுந்ததுதானா என்பதை அவர்களின் கொள்கை, கோட்பாடுகள், நடைமுறை, திட்டம் யாருக்கு ஆதரவாக அல்லது எதிராகப் போராடுகிறார்கள், ஒரு கட்சிக்குள் நிலவும் ஜனநாயகம், தவறுகளுக்கு எதிரான உட்கட்சி நடவடிக்கை என்பன போன்ற அம்சங்களை எல்லாம் வைத்துத்தான் நல்லது கெட்டதை முடிவு செய்ய வேண்டும்! 

அப்படியில்லாவிட்டால் அரசியல் ஒரு சாக்கடை என்று தங்களைத் தாங்களே செ,,,,பால் அடித்துக்கொள்ளவேண்டியதுதான்!....வேறு வழி கிடையாது!

எனது மொழி ( 106 )

மதமும் கலையும்

எழுத்தாளர்களே! கலைஞர்களே! 

இனிமேல் உங்கள் கதாபாத்திரங்களின் பெயர்களை A ,B , C, D என்று வைத்துக் கொள்ளுங்கள்! 

காரணம் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் பெயருடனும் ஏதாவது ஒரு மதம் ஒட்டிக்கொண்டிருக்கிறது!

மதங்களே தேவையில்லை! மனிதன்மை மட்டும் போதும் என்ற திசையை நோக்கி உலகம் நகரவேண்டும்!

மதங்கள் இல்லாவிட்டால் ஆன்மிகம் செத்துவிடாது! 

Monday, January 28, 2013

எனது மொழி ( 105 )


அறிவியல் கண்ணோட்டம்  

அணுவில் இருந்து அண்டம்வரை எதுவும் காரணம் இல்லாமல் இயங்குவது இல்லை!

அந்தக் காரணங்களைச் சரியாக அறிவதே அறிவியல்!

அந்த அறிவியல் அறிந்தது கொஞ்சம் இன்னும் அறியாதது அளவற்றதாக இருக்கிறது!

அந்த வகையில் அறிந்ததைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வதும் இன்னும் அறியாததை அறிய முயல்வதும்தான்  அறிவியல் கண்ணோட்டம்!

விவசாயம் ( 47 )


பொற்காலம்! 

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விவசாயிகளின் ஒற்றுமை இன்மையே முதன்மைக் காரணம் என்பது அறிந்தவர்க்குத் தெரியும்! 

அந்த ஒற்றுமை இன்மைக்குப் பல காரணங்கள் உள்ளன! 

அவர்களுக்கு இடையே தண்ணீர்ப் பிரச்சினை, வரப்புப் பிரச்சினை, வாய்க்கால் பிரச்சினை, கிணற்றுப் பங்கு நீர்ப் பிரச்சினை, சர்வே கற்கள் பிரச்சினை, சாதிப் பிரச்சினை, கவுரவப்பிரச்சினை, மாடுகள் மேய்வதில் பிரச்சினை, அரசுக கடன்கள் மற்றும் மானியங்கள் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை , விவசாயப் பயிர்கள் மற்றும் விளைச்சலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மனதளவில் செரிக்கமுடியாத ஈகோ பிரச்சினை, இன்னும் எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளன.

இந்தப் பிரச்சினைகளால் பலகோணங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயி அவற்றைத் தீர்க்கவும் தனக்குச் சாதகமான நிலைகளை உருவாக்கவுமே தனது உபரி சக்தி அனைத்தையும் செலவிடுகிறான்.

அதனால் அனைவரையும் பாதிக்கும் அனைத்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அக்கறை இல்லாதவனாக இருக்கிறான். 

அல்லது அனைவருக்கும் தீர்ந்தது நமக்கும் தீர்கிறது என்று பாராமுகமாக இருக்கிறான்.

நாடு முழுக்க உள்ள விவசாயிகளின் குறைகளுக்கு விமோசனம் காண்பதற்குத் தான் ஆற்றவேண்டிய பங்கை உணரத் தவறுகிறான்.

இந்த நிலைமை விவசாயிகளைக் கொள்ளை அடித்து வாழ்பவர்களுக்கும் அவர்களின் தயவைப் பெரிதும் சார்ந்திருக்கும் அரசுகளுக்கும் சாதகமாகப் போய்விட்டது!

அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் ஆலையில் சிக்கிய கரும்புபோல் நசுக்கிப் பிழியப்படுகிரார்கள்!

அதுமட்டுமல்ல, விவசாயிகளின் ஒற்றுமை இன்மையால் பயனடையும் சக்திகளும் அவர்களின் அரசுகளும் என்றென்றும் விவசாயிகளைத் தங்கள் தாழ்ந்த நிலையைவிட்டு மீளமுடியாவண்ணம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்கிறார்கள்!

அதற்காக விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த முயற்சிகளும் செய்யாமல் அவர்களைப் பிளவு படுத்துகின்ற பிரச்சனைகளை வளர்க்கவே செய்கிறார்கள்! 

அரசுகளின் பிரித்தாளும் தந்திரத்துக்கு விவசாயிகளும் பலியாகி விட்டார்கள்! 

ஆகையால் விவசாயிகள் தங்களின் தொழிலும் வாழ்வும் மீள வேண்டுமானால் அனைத்துப் பிரச்சினைகளையும் சந்திக்கும் அதே நேரத்தில் அனைத்து விவசாயிகளையும் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்! 

ஒரு ஊருக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் ஒரு வீட்டில் தீப்பிடித்துக்கொண்டால் அனைத்துப் பிரச்சினைகளையும் மறந்துவிட்டு தீயை முதலில் அணைக்க ஒற்றுமையாக செயல்படுகிறோமல்லவா?...

அத்தகைய ஒற்றுமை உணர்வு ஒட்டுமொத்த விவசாயத் தொழிலின் பாதக நிலைமைகளுக்கு எதிராக உருவாக வேண்டும்! 

அப்போதுதான் விவசாயம் மறுமலர்ச்சி அடையும் . இல்லாவிட்டால் சொந்த நாட்டிலேயே அடிமைகளைப்போல் என்றும் வாழ்வேண்டியதுதான்!.... 

ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்ப்ப்படும்போது அதன் விளைவுகளான நடைமுறைப் பிரச்சினைகள் தானாகத் தீர்க்கப்படும்! 

இதை உணரும் காலம் வந்தால் அதுதான் விவசாயிகளுக்குப்  பொற்காலத்தின் துவக்கமாக இருக்கும்! 

Saturday, January 26, 2013

எனது மொழி ( 104 )


காலம்
======

சிலர் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பெரியதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பார்கள்.

ஆனால் கடந்த காலமும் எதிர்காலமும்தான் மிகப்பெரியது. எல்லையற்றது.

நிகழ்காலமோ நாமாக ஏதாவது ஒரு நேரத்தையோ நிகழ்வையோ குறிப்பிட்டு அதைத்தான் நிகழ்காலம் என்று சொல்லிக்கொள்ள வேண்டும். அதற்கென ஒரு காலம் இல்லை!

காரணம் எதிர்காலம் நேரடியாக இறந்த காலமாக மாறுகிறதே அல்லாமல் நிகழ்காலம் என்ற ஒன்றுக்குள் பிரவேசிப்பதே இல்லை!

எதிர்காலமும் இறந்தகாலமும் சேர்ந்த ஒரு சிறுபகுதியை, நமது வாழ்க்கைப்பயணத்தின் அவ்வப்போதைய நிலையை நிகழ்காலமாக வைத்துக்கொள்கிறோம்.அவ்வளவே!

ஆதாவது ஒவ்வொரு விநாடியும் நாம் இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்துக்குள் நுழைந்துகொண்டு இருக்கிறோம். அல்லது எதிர்காலத்தை இறந்தகாலமாக்குகிறோம்.

இந்தப் பதிவைத் துவங்கும்போது எதிர்காலமாக இருந்தது அதை முடிக்கும்போது இறந்தகாலம் ஆகிவிட்டது! இதில் நிகழ்காலம் எங்கே?

அரசியல் ( 38 )

சுதந்திர அடிமைகள்! 

அவசியம் அல்லாதவற்றுக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டும் அவசியமானவற்றுக்குச் சுதந்திரம் மறுக்கப்பட்டும் வாழும் வினோதப் பிறவிகள் நாம்!

கட்டி வைத்திருக்கும் நாயை அவிழ்த்துவிட்ட பின்பும் தான் கட்டிவைக்கப்பட்டுள்ளதாக நினைத்து அங்கேயே படுத்துக் கிடப்பதுபோல சுதந்திர நாட்டிலும் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் அடிமைகளாய் வாழ்ந்துகொண்டுள்ளோம்!......

எனது மொழி (103)


நண்பர்களே!

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஐயம்! 

அதனாலேயே அதுபற்றி நான் வாய் திறப்பதில்லை. 

யாராவது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்வதில்லை! 

ஆதாவது நிறையப்பேர் அடிக்கடி உடல் உபாதை சம்பந்தமாகப் பேசும்போது அதற்குக் காரணமாக உஷ்ணம் அல்லது குளிர்ச்சி என்று சொல்வார்கள்! 

அப்படி என்றால் என்ன?

மனித உடல் வெப்பம் 98.4 என்ற நிலையில் இருந்து அதிகமானால் காய்ச்சல் , குறைந்தால் ஜன்னி போன்ற பாதிப்புகள் வரும் என்று அனைவருக்கும் தெரியும்! 

ஆனால் இந்தக் குளிர்ச்சி அல்லது உஷ்ணம் என்று சொல்லப்படும் பாதிப்புகளின்போது உடல்வெப்பம் மாறுபாடு இருப்பதில்லை! 

அப்படியானால் இவற்றின் உண்மையான பொருள் என்ன?

Wednesday, January 23, 2013

அரசியல் ( 37 )


மாவீரர்கள் யார்?

தனது உரிமைக்காகவும் தனது மக்களின் உரிமைக்காகவும் தனது நாட்டின் உரிமைக்காகவும் அனைத்துலக மக்களின் நலனுக்காகவும் போராடி வெல்பவரும் அல்லது அந்தப் போராட்டத்தில் உயிர் நீப்பவரும்தான் மாவீரர் என்று சொல்லத் தகுதி உடையவர்கள்! 

அனால் உண்மை நடைமுறை வேறுவிதமாக இருக்கிறது! 

எண்ணற்ற மக்கள்  கொல்லப்படுவதற்குக் காரணமான போர் வெறியர்களும் , பல நாடுகளை தனது காலடியில் விழவைக்க ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தியவர்களும், ஈவிரக்கமற்ற கொடுங்கோலர்களும்  எல்லாம் மாவீரர்களாகச் சித்தரிக்கப் படுகிறார்கள்! 

உண்மையில் அவர்கள் எல்லாம் வரலாற்றின் குப்பைக்கூடையில் எறியப்பட வேண்டியவர்கள்! 

ஒரு நாட்டை வல்லரசு ஆக்கவேண்டும் என்று கனவு காண்பவர்கள் எல்லாம் அத்தகைய குப்பைகளைத் தலையில் சுமப்பவர்களே! 

Monday, January 21, 2013

எனது மொழி ( 102 )

ஆன்மிகமும் மேதைகளும் 

உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஆன்மிக ஞானிகளோ அல்லது ஞானமோ உலகில் இல்லை என்பதுதான் கண்கூடான உண்மை! 

நல்ல மேதையாக இருந்தால்கூட அனைத்து மக்களும் ஏக மனதாக ஏற்றுக்கொள்வது இல்லை! 

காரணம் அவர்கள் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் இரண்டுமே அறிவுபூர்வமானது அல்ல! கண்மூடித் தனமானது! 

உணவே மருந்து ( 48 )


தாற்காலிகச் சுவையும் நிரந்தரச் சுவையும் 

நண்பர்களே!

எப்போதும் இயற்கை உணவின் சுவையை சமைத்த மற்றும் நவீன தயாரிப்புகளுடன் ஒப்பிடவேண்டாம்! 

தாற்காலிகச் சுவை மட்டும் பெரிதென நினைத்தால் செயற்கை உணவுகளின் பின்னால் போகட்டும்! 

சில நிமிடங்களில் நாக்கைத் தாண்டியபின்னால் இதையா தின்றோம் என்ற துன்பமான நினைவுகளுடன் வாழட்டும்! 

ஆனால் இயற்கை உணவுகள் போதுமான அளவு சுவை மட்டும் அல்ல, உண்டபின்னாலும் சிறந்த உணவை உண்டோம்! சிறப்பாக வாழ்வோம், மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்கிறோம் என்று நினைக்கும் பொது ஏற்படும் சுவையின்பத்துக்கு செயற்கைப் பண்டங்கள்  எந்த வகையிலும் ஈடாகாது! 

சில நிமிட மிகையான சுவையும் அதன்பின் துன்பமும் வேண்டுமா அல்லது அளவான சுவை மற்றும் காலமெலாம் இன்பம் என்னும் நிரந்தர இன்பம் வேண்டுமா என்பதை அனுபவத்தால் முடிவு செய்யட்டும்! 

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 22 )


அறிவியல் - ஆன்மிகம் - மூடநம்பிக்கை  

வாழ்க்கையில் அறிவியல் பயன்பாடுகள் அனைத்தையும் அனுபவிக்கிறோம். 

அறிவியல் மனிதனின் அறிவுக்கு எட்டிய எல்லைவரை அறிந்ததை விளக்குகிறது! 

அதைச் சரியாகவோ தவறாகவோ பயன்படுத்தி ஒரு விதமான குழப்பமான வாழ்வை வாழ்ந்துகொண்டுள்ளோம்! 

அறிவியல் சாதனங்களும் பயன்பாடுக்களும்தான் மனிதனால் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன. 

அறிவியல் கோட்பாடுகள் தவறு செய்வதில்லை! 

அதுதான் நம்மை அனைத்தையும் அறிய வைக்கிறது! 

ஆனால் அறிவியலால் கற்றுக்கொண்ட அறிவை வைத்து ஏதேதோ கற்பனைகளை வளர்த்துக்கொண்டு அவையெல்லாம் அறிவியலைவிட மேலானது என்று சொல்வதன்மூலம் என்ன நன்மை கிடைக்கப் போகிறது?....

நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதைத் தவிர! 

அறிவியலுக்கும் மேலான ஒன்றை நாம் அறிந்துகொள்ள ஏதாவது உபாயம் இருக்கிறதா?.

அறிவியலும் ஆன்மிகமும் வேறு வேறு அல்ல! அறிவியல் இல்லாமல் ஆன்மிகம் இல்லை! ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து ஐயங்களும் தெளிவுகளும் அறிவியலில் இருந்தே பிறக்கின்றன. 

அப்படிப் பிறக்காத கற்பனையான நம்பிக்கைகளைத்தான் மூட நம்பிக்கைகள் என்கிறோம்! 

ஆன்மிகம் என்பது மூட நம்பிக்கை அல்ல! அபத்தமான கற்பனைகள்தான் மூட நம்பிக்கைகள்! 

இல்லாத எதைஎதையோ கற்பனை செய்துகொண்டு அதையும் தத்துவங்கள்போல் நினைத்து இன்னதென்று அறியாமல் ஒருவரையொருவர் பாசாங்கு செய்வதில் என்ன இருக்கிறது?... 

அவற்றை மூடநம்பிக்கை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்?...

எல்லையற்ற இயக்க ஆற்றலை இறை என்று வைத்து மற்ற அனைத்தும் அதன் அங்கமாக நினைத்து இணக்கமாக வாழ வழிகாட்டும்  தத்துவங்கள்மட்டுமே உண்மையான ஆன்மிகம்! 

மற்ற அனைத்தும் மக்களைக் கண்ணிருந்தும் குருடர்களாக வைத்திருப்பதும் வைத்திருக்க முயல்வதும் ஆன ஏமாற்றுப் புரட்டுக்களே!  

Saturday, January 19, 2013

தமிழும் தமிழ்நாடும் ( 4 )


பழந்தமிழர் அறிவியல் 

பழந்தமிழர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்

உலகின் வேறு எந்த நாகரிகத்துக்கும் நிகரானது பழந்தமிழர் நாகரிகம் என்பதில் ஐயமில்லை!

ஆனால் அவர்களின் பெயரால் தவறான செய்திகளை உண்மை என்று சாதித்தால் அது மற்ற உண்மையான செய்திகளின் நம்பகத் தன்மையையும் பாதிக்கும்!

அத்தகைய சிலதான் அவர்கள் அணுசக்தியை அறிந்திருந்தார்கள், விமானத் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார்கள் என்பது போன்றவை!

அது சரியான பார்வை அல்ல!

அது சரியான கருத்துக்கள் என்றால் அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி விளக்கவேண்டும்! மெய்ப்பிக்கவேண்டும்!

அப்படி இல்லாவிட்டால் அது முன்னோரை அவமதித்ததற்கு நிகராகும்!
விவசாயம் ( 46 )


சாண எரிவாயு..

இன்று காலையில் இரண்டு காட்சிகளைப் பார்த்தேன்.

முதலாவது சாண எரிவாயுக் கலம் அமைத்துக் கைவிடப்பட்ட ஒரு அமைப்பு!

இரண்டாவது பத்து மாடுகளுக்கும் அதிகமாக வைத்திருக்கும் ஒரு விவசாயி சாண எரிவாயுக் கலன் அமைக்கவில்லை...

படங்களும் எடுத்து வந்துளேன்.

இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்!

அதைவிட இயற்கை எரிவாயு சிலிண்டர் பயன்பாடு  எளிதானது என்பதே!

சாண எரிவாயுக் கலன்கள் தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை அமைக்கப்பட்டன? அவற்றில் இப்போது எத்தனை பயன்பாட்டில் உள்ளன ?


இதைக் கணக்கெடுத்தால் அதற்காகச் செலவு செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வீணானது தெரிய வரும்!

Friday, January 18, 2013

தத்துவம் ( 4 )


தத்தம் நிலையில் தாம் பெரியவரே! 

மனித இனத்தைப் பற்றி மனிதராகிய நாம்தான் சிறப்பித்து 
சொல்லிக்கொள்ள முடியும். 

இயற்கையின் நோக்கில் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை! 

மண்ணில் தோன்றிய எண்ணற்ற உயிரினங்களில் மனித இனமும் ஒன்று! 

மற்றபடி அனைத்து உயிரினங்களும் தத்தம் நிலையில் தாம் பெரியவரே!

மனித இனம் தனக்கும் இயற்கைக்கும் தனக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள உறவைச் சரியாகப் புரிந்து சிறப்பாக வாழ்வதே தான் பரிணாம வளர்ச்சியால் பெற்ற கூடுதல் சக்திக்கும் தகுதிக்கும் பெருமை ஆகும்!

மனிதனின் புரிதல் என்பது மனிதத் தேவைகளை மட்டும் பிரதானமாகக் கொண்டது! 

அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது! 

ஆனால் இயற்கையோ மற்ற உயிரினங்களோ மனித மதிப்பீட்டுக்கு மரியாதை அளித்துத் தங்கள் போக்கை மாற்றிக்கொள்வதில்லை. 

அதனால் மனிதன் இயற்கையையும் பிற உயிரினங்களையும் அடக்கியாள்வதே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு அலைவது வாழ்வின் விதி ஆகி விட்டது! 

அதன் தொடர்ச்சியாக அதே புத்தியைச் சக மனிதர்களின் மேலும் பிரயோகித்து ஒருவரையொருவர் நேசிப்பதற்குப் பதிலாகக் கொடூரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளார்கள்! 

அதனால் அன்பு என்பது போலி முகமாகவும் கொடுமை என்பது உண்மைக் குணமும் ஆகிவிட்டது! 

போலிக் குணம் உண்மைக குணமாக மாறும்போதுதான் மனித நாகரிகம் மரியாதைக்கு உரியது ஆகும்! 

Thursday, January 17, 2013

`விவசாயம் ( 45 )


புதுக் கருவி

தோட்ட வேலைக்காகப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நானே உருவாக்கிய (Two in one ) கடப்பாரை!

ஒரு பக்கத்தைக் குழி தோண்டவும் மறுபக்கத்தை மரம் செடி வெட்டவும் பயன்படுத்தலாம்! 

இனியும் ஒரு சிறப்பு என்னவென்றால் கோடரி நுழைய முடியாத முள் செடிப் புதர்களில் உள்ள தேவையற்ற மரங்களையும் புதர்களையும்கூட முள் படாமல் எளிதில் வெட்டலாம்! 

கள்ளிப் புதர்களை வெட்ட ஆள் கூப்பிட்டபோது என்ன கூலி கொடுத்தாலும் வரமாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். 

அவர்களுக்குக் கொடுப்பதாக நான் சொன்ன பணத்தில் பாதித் துகையைக் கொண்டு இதை நான் தயாரித்தேன். 


நான்கு மணி நேரத்தில் அந்தக் கள்ளி மரங்களை நான் ஒருவனே தூள் தூளாக்கினேன்!

அதன் பின் இன்றும் பன்னிரண்டு வருடங்களாக எனக்குப் பயனுள்ள துணைவனாக இருந்து வருகிறது!

வேலைக்கு வர மறுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

அதன் தயாரிப்பு விபரம்:.......

நான்கு அல்லது ஐந்து அடி நீளக் கடப்பாரை ஒன்றை ஒரு பக்கம் கடப்பாரை முனையாக அடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

மறு பக்கத்தைப் பட்டையாக செய்து சுமார் மூன்று அங்குல இடை வெளியில் அரை அங்குலம் விட்டமுள்ள இரண்டு துளைகள் போட வேண்டும்.

முக்கால் அடி நீளம் உள்ள -  லாரியில் பயன்பட்ட ஒரு பழைய வில் தப்பையைப் பட்டறையில் காய்ச்சி ஒரு பக்கத்தைக் கோடரி போன்று செய்ய வேண்டும்.


மறு பக்கத்தைப் படத்தில் உள்ளதுபோல் ஒடுக்கிக் கொண்டே வந்து சுமார் ஒரு அங்குல அளவுக்குச் சிறிதாக்கவேண்டும்.

அதிலும் மூன்று அங்குலம் இடை வெளியில் அரை அங்குலம் விட்டமுள்ள இரண்டு துளைகள் இடவேண்டும். 

இப்போது அரை அங்குல போல்ட் நட் இரண்டைக் கொண்டு கடப்பாரையுடன் இணைத்து விட்டால் கருவி தயார்!  

நமது விருப்பம்போல் வெட்டலாம் . குத்தலாம். தேவைப்படாத நேரத்தில் தனியாகக் கழட்டியும்  வைத்துக் கொள்ளலாம்!....
Wednesday, January 16, 2013

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 22 )


ஆன்மீகத்தின் அடிப்படை முரண்பாடு


முரண்பாடான வியாக்கியானங்களால் உலக மக்கள் மத்தியில் நமது இருப்பைப் பற்றிய பொதுவான கோட்பாடு என்பதே இல்லை என்பதுதான் உண்மை! 

அடிப்படையான ஒன்றைப் பற்றி அடிப்படையே இல்லாத விளக்கங்கள்தான் நடப்பில் உள்ளன! 

அவற்றில் எதுவும் நியாயமான ஐயங்களைப் போக்கி உண்மை ஒளியைப் பாய்ச்சுவது இல்லை! 

மக்கள் தொடர்ந்து குழப்பமான தெளிவற்ற தத்துவங்களின்கீழ்தான் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்! 

அதனால்தான் பிளவு பட்டும் பகைமை உணர்வுடனும் வாழ்கின்றனர்!


அண்டத்தில் உள்ள அத்தனையும் அதற்கு அப்பால் உள்ள நம்மால் உணரமுடியாத எதோ ஒரு பெரும்சக்தியால் உருவாக்கப் படுகிறது என்பதுதான் இன்றளவும் நடப்பு ஆன்மிகத்தின் அடிப்படைக் கோட்பாடாக உள்ளது! 

அடிப்படை முரண்பாடே இதில் இருந்துதான் துவங்குகிறது!

ஒரு ஜடப்பொருளை ஆதாரமாகக் கொள்ளாமல் எந்த ஒன்றும் நிலவ முடியாது என்பதுதான் விதி!

ஆனால் அத்தகைய ஜடப்பொருட்களை ஆதாரமாகக் கொள்ளாத அதற்கு அப்பால் நிலவும் ஒன்றுதான் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் என்பது  காலங் காலமாக நம்பப்பட்டு வருகிறது!

அதுதான் இன்றுவரை பலவேறு முரண்பட்ட நம்பிக்கைகளாகவும் தத்துவங்களாகவும்  நிலவுகிறது.

  ஆனால் அந்த முரண்பட்ட அனைத்துத் தத்துவங்களின் பொதுவான பண்பு என்னவென்றால் அது  ஒரு ஜடப்பொருளை ஆதாரமாகக் கொள்ளாமல் எந்த ஒன்றும் நிலவ முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதே! 

ஆதாவது சார்பியல் தத்துவத்தை அவை அனைத்தும் நிராகரிக்கின்றன!

சார்பியல் தத்துவத்துக்கு முரண்படாததுதான் உண்மையான ஆன்மிகமாக இருக்கும்!

ஆனால் அப்படிப்பட்ட ஆன்மிக சிந்தனைகள் இன்னும் உருவாக வில்லை!

காரணம் ஆன்மிகம் என்பது இன்று சுயநலவாதிகளின் மற்றும் அறிவியல் சிந்தனை அற்றவர்களின் கைகளில் இருப்பதுதான்!

Saturday, January 12, 2013

தத்துவம் ( 3 )


மூவகை வாழ்க்கை!

நமது வாழ்வை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது உடலால் வாழ்வது! 

இரண்டாவது உணவால் வாழ்வது!

மூன்றாவது உணர்வால் வாழ்வது!

இதற்கு அப்பால் ஒரு வாழ்க்கை இல்லை! 

உடலால் வாழ்வது: 

நாம் வாழ்க்கையை உடலிலிருந்துதான் துவங்குகிறோம்.

உடல் வளர்ச்சியைத்தான் வயது என்கிறோம். உடல் இல்லாமல் ஒரு வாழ்க்கை கிடையாது.

அந்த உடலின் வயது என்பது அதன் ஆரோக்கியத்தைப் பொருத்தும் சூழலைப் பொறுத்துமே அமைகிறது.

சூழல் என்பது நாம் மட்டும் முடிவு செய்யக்கூடியது அல்லை. ஆனால் உடல் ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் நமது பழக்கங்களுக்கு ஏற்ப அமைகிறது.

அதனால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் எப்படி வைத்திருக்கவேண்டுமோ அப்படி இருக்க வேண்டும்.

அதேபோல நமது தேவைகளுக்குத் தக்கவாறு அனைத்து விதமாகவும் உடல் இயங்கத் தயாராகவும் இருக்கவேண்டும். ஆதாவது நமது வாழ்க்கைத் தேவைகளுக்காக குனிதல் நிமிர்தல், ஓடுதல், நடத்தல், சுமத்தல், வெட்டுதல் குதித்தல், நீந்துதல், ஏறுதல், இறங்குதல் போன்ற இன்னும் பலவிதமாக உடலை இயக்கியாக வேண்டும்.

அது தவிர நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் தூங்கினாலும் விழித்திருந்தாலும் இயங்க வேண்டிய உள்ளுறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கவேண்டும். அப்போதுதான் சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம், உணவு செரிமானம் மூளையின் செயல்பாடு போன்றவை சிறப்பாக இருக்கும். 

அதற்குத்  தக்கபடி உடலைத் தயார் நிலையில் வைத்திருப்பதுதான் உடலால் வாழ்வது ஆகும்.
இரண்டாவது உணவால் வாழ்வது:  

 நமது உடல்வாழ்க்கைக்குத் தேவையான உணவை உண்பதும்  உண்ட உணவில் இருந்து உடல் தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டதுபோக மீந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுமான ஒரு பணி இடையறாது நடக்கிறது. 

அப்போதுதான் நாம் வாழ்வதற்குத் தேவையான சக்தி நமக்குக் கிடைக்கும்! இழந்த சக்தியை மீட்டுக்கொள்ளவும் முடியும். 

அது சரியாக நடக்க என்னமாதிரி உணவு நமது உடல் நலனுக்கு ஏற்றது, எது நமது உடல் நலனுக்கு எதிரானது என்பதை சிந்தித்து சரியான உணவு வகைகளையே சரியான அளவில்  வேண்டும். 

நாம் உண்ட உணவின் செரிமானத்துக்குப் பின்னால் வெளியேறவேண்டிய கழிவுகள் சுத்தமாக உரிய காலத்தில் வெளியேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கழிவுகளே பல நோய்களுக்குக் காரணங்கள் ஆகிவிடும்.

இந்த முறையில் சரியான முறையில் உணவுப் பழக்கத்தையும் கழிவுகள் வெளியேற்றத்தையும் நல்ல முறையில் பராமரிப்பது உணவால் வாழ்வது ஆகும்.

மூன்றாவது உணர்வால் வாழ்வது: 

உணவை உண்டு உடலை வளர்ப்பதுமட்டும் வாழ்க்கையாக யாரும் எண்ணுவது இல்லை! உணவுக்கும் அதை உண்பதால் வளரும் உடம்புக்கும் மேலாக அவற்றை அடிப்டையாகக்கொண்டு வாழும் வாழ்க்கை ஒன்று உள்ளது. 

அது அவரவர் கண்களுக்கும் புலப்படாது. அடுத்தவர் கண்களுக்கும் புலப்படாது.

அதுதூன் உணர்வால் வாழும் வாழ்க்கை! 

ஆதாவது இயற்கையில் தோன்றி வாழும் நாம் நமது புலன்களால் உணர்வனவற்றை சாதக பாதகமான இரு வகைகளிலும் எடுத்துக்கொள்கிறோம். சாதகமானதை இன்பமாகவும் எதிரானதைத் துன்பமாகவும் உணர்கிறோம். 

அதனால் வாழ்நாள் முழுவதும் நமது உணர்வுகளுக்கு சாதகமாகவே எதிர்ப்படும் அனைத்தும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். விரும்புவது மட்டுமல்ல அதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்கிறோம்.

அதற்காக சகமனிதர்களுடனும் மற்ற உயிரினங்களுடனும் இயற்கையுடனும் போராடி வாழ்கிறோம். 

அப்படிப்பட்ட முயற்சிகளை யாரோ சிலர் மட்டும் அல்ல. அனைவரும் செய்கிறோம். 

அப்படிப்பட்ட முயற்சிகள் வெற்றிபெற்றால் மகிழ்ச்சியும் தோல்வியடைந்தால் வருத்தமும் அடைகிறோம். 

இந்த வெற்றியும் தோல்வியும் மகிழ்ச்சியும் வருத்தமும்தான் வாழ்வின் அனைத்து சுக துக்கங்களையும் தீர்மானிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

அவைதான் மக்களின் உணர்வுகள் பல்வேறு படித்தரங்ககளாக இருக்கவும் வேறுபட்ட புரிதல்களுக்குக் கரணங்களாகவும் விளங்குகின்றன.

உண்மையில் அந்த உணர்வுகள்தான் அனுபவங்களின் அடிப்படையில் மனமாகவும் அறிவாகவும் மெய்ஞானமாகவும் விஞ்ஞானமாகவும் தத்துவங்களாகவும் விரிவடைகின்றன.

அத்தகைய அனுபவங்களில் லயித்து வாழ்வதுதான் உணர்வால் வாழ்வது!

அத்தகைய உணர்வால் வாழும் வாழ்க்கைதான் உண்மையில் வாழ்க்கை என்பதாக உணரப்படுகிறது. 

முதல் இரண்டு விதமான வாழ்க்கையின் நோக்கமே மூன்றாவது வாழ்வின் சிறப்பில்தான் அடங்கியுள்ளது. 

இந்த மூவகை வாழ்க்கை முறை சூடவோ குறையவோ ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத அம்சங்களாகும்.


Thursday, January 10, 2013

அரசியல் ( 36 )


அஹிம்சை!

இந்தியாவில் அஹிம்சை என்பது பாவப்பட்ட மக்களை நிராயுதபாணிகள் ஆக்குவதும் அவர்களின் துன்பங்களுக்குக் காரணமானவர்களை ஆயுதபாணிகளாக நீடிக்கச் செய்வதுமான ஏமாற்றுத் தத்துவம் ஆகும்!

அது இந்திய மக்களின் வாழ்வைச் சூரையாடிக்கொண்டிருப்பதைவிட கொள்ளையர்களை வளர்த்துவிட்டதைத் தவிர வேறொன்றையும் சாதிக்கவில்லை!

உடனடியாக ஏதேனும் செய்ய விரும்பினால் இந்த அகிம்சை என்ற பெயரால் வழக்கத்தில் உள்ள அக்கிரமத்தைத் தூக்கிக் குப்பையில் எறிய வேண்டும்!

தவறுகளை எதிர்த்து ஈவிரக்கமற்ற போராட்டங்கள் நடக்கவேண்டும்!

அகிம்சை என்பது மக்கள் ஒருவருக்கொருவர் கடைப்பிடிக்கவேண்டிய உயர்ந்த உண்மையான பண்பாக மலரவேண்டும்!

சைத்தான்கள் ஓதும் வேதமாக இருக்கக்கூடாது!

Wednesday, January 9, 2013

தத்துவம் ( 2 )

வளர்ச்சியும் வீக்கமும்  

மனிதன் பிற உயிரினங்களில் இருந்து வேறுபட்டவனாக அவனது தனிப் பாதையில் முதலடி எடுத்து வைத்ததில் இருந்து இன்றுவரை அவனுடைய வளர்ச்சி என்பதே உடலுழைப்பைக் குறைப்பது ஒன்றைத்தான் நோக்கமாகக் கொண்டிருந்தது. 

இன்று ஆளே இல்லாமல் காரியங்கள் நடக்குமளவுக்கு நவீன விஞ்ஞானமாக வளர்ந்து விட்டது. 

ஆனால் ஒன்றே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். 

நவீன விஞ்ஞானம் வரை அனைத்துக் காலகட்டங்களிலான மனித அறிவியல் வளர்ச்சியெல்லாம் உடலுழைப்பைக் குறைத்த அளவு மன உழைச்சலை அதிகப் படுத்தின என்பதே அது. 

உடன்பாடான விஷயமான உடலுழைப்பைக் குறைத்தது உணரப்பட்டது. வளர்க்கப் பட்டது.

எதிர்மறை அம்சமான மன உழச்சல், கவலை, துன்பம் போன்றவை உணரப்படவில்லை.

அறிவியல் வளர்ந்த அளவு அதற்கு ஈடாகத் தார்மிக நெறிகள் வளர்க்கப்பட வில்லை!

அதனால்தான் தார்மீக நெறிகளின் சிதைவைக் கணக்கில் கொள்ளாமல் அறிவியல் வளர்ச்சியை மட்டும் உண்மையான வளர்ச்சியாகக் கருதிக்கொண்டுள்ளோம். 

ஆதாவது வீக்கத்தை வளர்ச்சி என்கிறோம்.

உணவே மருந்து (47)


தோசையும் ஊத்தப்பமும் 

நண்பர்களே! 

இயற்கை உணவைத் தனியாக உண்டு வாழ கொஞ்ச காலம் ஆகலாம். தவறில்லை! 

அதனால்தான் அதற்கு முன்னுரிமையும் வேக வைத்து எண்ணெய் சேர்க்காமல் சமைக்கும் உணவுக்கு இரண்டாமிடமும் கொடுக்கிறோம். 

மற்றவை படிப்படியாகத் தீங்கை நோக்கி வேகமாக நம்மை அழைத்துச் செல்பவை! 

அதில் அதிகமான புழக்கத்தில் இருப்பது தோசை! ஸ்பெசல் தோசை! 

அவை வீடுகளிலும் கடைகளிலும் அதிக மக்களால் உண்ணப்படுகிறது! 

அவை எண்ணெயைப் பயன்படுத்தி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கப்படுகிறது! 

அவை சுடப்படுவதால் இயற்கைப் பண்புகளுக்கு எதிரான பண்புகளை வெளிப்படுத்தினாலும் உடலுக்கு ஊறு விளைவித்தாலும் சுவையாலும் பழக்கத்தாலும் ஈர்க்கப்படும் மக்கள் முழுமையாக விடுபடுவது கடினமாக உள்ளது.

அத்தகைய நண்பர்களுக்கு ஒரு யோசனை! 

தோசையோ, ஸ்பெசல் தோசையோ மெல்லியதாக முருகலாகச் சுட்டுச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.

அதற்குப் பதிலாக கனமான ஊத்தாப்பமாக சுட்டுச் சாப்பிடலாம். ஊத்தப்பம் முருகலாகச் சுடப்படுவதைவிடத் தீங்கு குறைவானதாகும்.

காரணம் கனமாக மாவு ஊற்றிச் சுடப்ப்படும்போது கல்லில் சுடப்படும் பாகத்தைவிட சுடப்படாமல் அதில் இருக்கும் நீர்ப்பதத்தைக் கொண்டு வெந்து சமைக்கப்படும் பகுதி அதிகம் ஆகும்! 

அதனால் வெளிப்பகுதி முருகலாகவும் உள்பகுதி பஞ்சு போன்றும் இருக்கும். 

அதன்மூலம் அதனால் விளையும் எதிர்மறையான பண்பு வெகுவாகக் குறைக்கப்படுகிறது! 

எனவே தோசையையும் முறுகலான தோசையையும் தவிர்த்து ஊத்தப்பத்தை உண்பதே பயன்மிக்க முறை ஆகும்! 

சப்பாத்தியும் கனமாகச் சுடுவதே நல்லது. 

Tuesday, January 8, 2013

எனது மொழி ( 101 )


தற்கொலைப்பாதை

நமது நாட்டு மக்கள் அரசியல்வாதிகள் என்றால் அயோக்கியர்கள் என்று நினைப்பது தங்களின் சவப்பெட்டிக்குத் தாங்களே அடிக்கும் ஆணி ஆகும்! 

காரணம் அது அவர்களின் வசவுக்கு உள்ளாகும் அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த வெற்றியும் நேர்மையான அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த அவமானமும் ஆகும்! 

அரசியலைத் தூய்மைப்படுத்தப் போராடுவதை விட்டுவிட்டு அனைத்துத் தேசபக்தர்களையும் சேர்த்து நிந்திப்பது தற்கொலைக்குச் சமம் ஆகும்!

நாட்டு நடப்பில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் அரசியல்வாதிகள்தான்!

அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்றால் நாட்டுநடப்பில் அக்கறை உள்ளவர்கள், விமர்சனம் செய்பவர்கள், தங்களுடைய சரியான உணர்வுகளை பிறருடன் பகிந்துகொள்பவர்கள், அரசுகளும் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் செய்யும் தவறுகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஊட்டுபவர்கள் இவர்கள் எல்லாம் அயோக்கியர்களா?

இப்படிப்பட்ட வசவுகளால் நல்ல அரசியல் தோன்றுமா?....

உணவே மருந்து ( 46 )


முன்னோரும் இயற்கை உணவும் 

நமது முன்னோர்கள் இயற்கை உணவை இயல்பாகவே உண்ணும் வாய்ப்புகள் இருந்தன. உண்டு வந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

அதைத் தெரிந்துகொண்டால்தான் நமது காலத்தில் நோய்கள் ஏன் இவ்வளவு தீவிரம் அடைந்தன, புதுப்புது நோய்கள் ஏன் தோன்றிக்கொண்டே உள்ளன என்பதும் தெரியும்!  

நாம் இயற்கையில் இருந்து எவ்வளவு தூரம் விளக்கியுள்ளோம் என்பதும் தெரியும்! 

இயற்கை உணவு என்பது இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு சிபாரிசு செய்யப்படும் ஒன்று அல்ல என்பதை உணர முடியும்! 

மீண்டும் இயற்கை உணவுடன் நெருக்கமான உறவைப் பேணவேண்டிய அவசியமும் புரியும்! 

Sunday, January 6, 2013

அரசியல் ( 35 )


அரசியல் நோய்கள்!

நமது நாட்டில் இரண்டு விதமான அரசியல் நோய்கள் உள்ளன!

ஒன்று வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத மூடநம்பிக்கைகள் நிறைந்த, பொய்கள் நிறைந்த, ஊழல் நிறைந்த, ஒழுக்கக் கேடுகள் நிறைந்த , வேறுபாட்டை வளர்க்கின்ற ,சாதிமத பேதங்களை ஒழிக்க விரும்பாத, சர்வாதிகார குணம் படைத்த பிற்போக்கு அரசியல்! 

இரண்டாவது இவற்றுக்கு மாறான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் முற்போக்கு என்ற பெயரால் நடைமுறைக்கு ஏற்ப வளர்த்துக்கொள்ளாத வரட்டுத்தனமான சித்தாந்த அரசியல்! 

இதில் முதலாவதைப் பெரும்பாலான மக்கள் பின்பற்றினாலும் அவை தொடர்ந்து துரோகத்தை மட்டுமே செய்கின்றன! 

இரண்டாவது என்னதான் தத்துவங்கள், கொள்கைகள், போராட்டங்கள், மாற்றங்கள் என்று விடாப்பிடியாகப் போராடினாலும் மக்களின் உணர்வுகளைக் கவர இயலாமல் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கிறார்கள்! 

அது மட்டுமல்ல, அனுபவங்களில் இருந்து அவர்களின் நோக்கங்களுக்கு ஏற்ப சரியான பாடம் கற்றுக்கொள்ளத் தவறுகிறார்கள்! 

இந்த வியாதிகள் நீங்கப்பெற்று எப்போது சரியான அரசியல் வளருமோ அன்றுதான் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்!

எனது மொழி ( )100 )


ஒழுக்கத் தூண்கள்! 

மாதா ,பிதா, குரு  தெய்வம் என்பார்கள். 

இந்த மூன்று வகையினர் மூலமும் வருங்கால சந்ததிகள் அவர்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் சிறந்த ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். 

ஆனால் இந்த மூன்று வகையினரின் சராசரிப் பண்புகள் போற்றப்ப்படும்படி இல்லை! 

அதனால் இளந்தலைமுறையினர் சரியான வழிகாட்டுதலையும் முன்னுதாரணத்தையும் பெறுவதில்லை! 

அதைத் தொடர்ந்து தவறுகள் நடப்பது சமூக இயல்பாகிவிடுகிறது! 

அதனால் குறிப்பிட்ட ஒரு பகுதியினரைக் குறை சொல்வதைவிட இந்த இற்றுப்போன சமுதாய ஒழுக்கத் தூண்களை வலுப்படுத்த வேண்டும்! 

நோய் ஒரு பக்கம் இருக்க மருத்துவம் ஒரு பக்கம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை! 

பயன் கிடைக்காது! 

Friday, January 4, 2013

விவசாயம் ( 44 )


மாடு வளர்ப்பு 

நண்பர்களே! 

மாடு வளர்ப்பதில் இரண்டு வகை உண்டு!

முதலாவது பாலுக்காக வளர்ப்பது. ஆதாவது நல்ல மாடுகளை வைத்து நிறையப் பால் கறந்து செலவு போக லாபம் பார்ப்பது. 

இதுதான் இப்போது நடப்பில் உள்ளது. 

அதன்படி பாலுக்காக வாங்கப்படும் மாடுகள் நிறையப் பால் கரக்கவேண்டும்.

கொடுக்கும் தீனியைத் தின்றுவிட்டுப் பால் கரப்பதைத் தவிர வேறு வேலைகள் அவற்றுக்குக் கிடையாது. 

அது ஈனக்கூடிய பசுங்கன்றுகள் மட்டுமே விலைபோகுமாதளால் பாதுகாக்கப்படும். 
காளைக்கன்றுகள் பயனற்றவையாகக் கருதப்பட்டுப் பெரும்பாலானவை பாலும் கவனிப்பும் இன்றி சாக விடப்படும் அல்லது பால் கரக்கும்போதே போன விலைக்கு அடி மாட்டுக்காரனுக்கு விற்கப்படும்.

அவை பால் நிறையக் கறப்பதற்கு ஏற்ப மாட்டின் விலையும் அதிகம். நிறையத் தீவன செலவுகளும் ஆகும். 

லாபம் என்று பார்த்தால் வியாபாரிக்கு விற்றால் குறைந்த அளவும் சொந்தமாக விற்றால் கூடுதலாகவும் கிடைக்கும். 

இரண்டாவதாக வேலைக்காகவும் பாலுக்காகவும் வளர்ப்பது.

அதன்படி மாடுகள் பால் கறப்பது மட்டுமல்ல  வேலை செய்ய நல்ல காளைக் கன்றுகளையும் கொடுக்க வேண்டும்.

அதற்கு ஏற்றவை காங்கேய இனம் போன்ற நாட்டு மாடுகள். 

அவை பால் குறைவாகத்தான் கறக்கும். ஆனால் காளைமாடுகள் மட்டுமல்ல பசுமாடுகளும் உழவு, வண்டியோட்டுதல் போன்ற விவசாய வேலைகளுக்குப் பயன்படும்.

அதனால் முன்னெல்லாம் நாட்டு மாடு களின் காளைக் கன்றுகளுக்குத்தான் கூடுதல் மதிப்பும் விலையும் கிடைக்கும். பால்கூட நிறையக் கிடைக்கும். 

இந்த வகை மாடுகளுக்கு வைக்கோல்,சோளத்தட்டை, தவிடு, பிண்ணாக்கு போன்ற சாதாரணத் தீவனமும் மேய்ச்சல் நிலங்களும் இருந்தால் போதுமானது! கலப்புத் தீவனம் தேவை இல்லை! 

இவற்றுக்கு நோய்த் தாக்குதலும் மிகவும் குறைவே. மருத்துவருக்கோ மருந்துக்கோ தேவை இல்லை! 

முன்னர் வழக்கத்தில் இருந்த இவை இயந்திரமயமாக்கலின் விளைவாக கைவிடப்பட்ட ஒன்றாகிப் புழக்கத்தில் இருந்தும் வெகுவாகக் குறைந்து விட்டது! 

ஆனால் இப்போது விவசாயத்தில் ஏற்ப்பட்ட மறு சிந்தனை காரணமாக நாட்டு மாடுகளின்மேல் மீண்டும் ஈடுபாடு தலைதூக்கியுள்ளது. 

சீமை மாடுகளை விடப் பால் குறைவாகக் கறந்தாலும் மற்ற அனைத்து வகையிலும் நாட்டுமாடுகள் சிறந்தவையாக இருப்பதால் பாலுக்காக சீமை மாடுகளை வளர்ப்பதைவிட குறைந்த அளவு பாலுக்காகவும் கன்றுகளுக்காகவும் வேளாண வேலைகளுக்காகவும் சேர்த்து நாட்டு மாடுகள் வளர்ப்பது பயன்மிக்கதாகத் தெரிகிறது! 

சீமை மாட்டுப் பாலில் கிடைக்கும் ஆதாயத்தைவிட நாட்டுமாடுகளின் கன்றுகளில் அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது!

நாட்டு மாடுகளின் நல்ல காளைக் கன்றுகள் இரண்டே வருடங்களில் இருபத்தியைந்தாயிரம் ரூபாய் வரை விலைபோக வாய்ப்புள்ளது.  

தவிர இயற்கை வேளாண்மையில் நாட்டு மாடுகளின் பங்கு சிறப்பானது. 

பஞ்ச காவ்யம் மண்புழு உரம் போன்றவற்றுக்கு நாட்டு மாடுகளே சிறந்தவையாகக் கருதப்படுவதால் அவற்றுக்கு ஒரு கிராக்கி ஏற்ப்பட்டுள்ளது! 

ஆகவே சீமைமாடுகளை விட நாட்டுமாடு வளர்ப்பே சிறந்ததாகத் தெரிகிறது!  

ஆனால் எந்த வகையைத் தேர்வு செய்தாலும் அவற்றுக்குண்டான பராமரிப்பு முறைகளைச் சரியாகக் கையாண்டால்தான் நல்ல பயனை அடைய முடியும்! 

தத்துவம் ( 1 )


மூவகை வாழ்க்கை!

நமது வாழ்வை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது உடலால் வாழ்வது! 

இரண்டாவது உணவால் வாழ்வது!

மூன்றாவது உணர்வால் வாழ்வது!

இதற்கு அப்பால் ஒரு வாழ்க்கை இல்லை! 

உடலால் வாழ்வது: 

நாம் வாழ்க்கையை உடலிலிருந்துதான் துவங்குகிறோம்.

உடல் வளர்ச்சியைத்தான் வயது என்கிறோம். உடல் இல்லாமல் ஒரு வாழ்க்கை கிடையாது.

அந்த உடலின் வயது என்பது அதன் ஆரோக்கியத்தைப் பொருத்தும் சூழலைப் பொறுத்துமே அமைகிறது.

சூழல் என்பது நாம் மட்டும் முடிவு செய்யக்கூடியது அல்லை. ஆனால் உடல் ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் நமது பழக்கங்களுக்கு ஏற்ப அமைகிறது.

அதனால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் எப்படி வைத்திருக்கவேண்டுமொ அப்படி இருக்க வேண்டும்.

அதேபோல நமது தேவைகளுக்குத் தக்கவாறு அனைத்து விதமாகவும் உடல் இயங்கத் தயாராகவும் இருக்கவேண்டும். ஆதாவது நமது வாழ்க்கைத் தேவைகளுக்காக குனிதல் நிமிர்தல், ஓடுதல், நடத்தல், சுமத்தல், வெட்டுதல் குதித்தல், நீந்துதல், ஏறுதல், இறங்குதல் போன்ற இன்னும் பலவிதமாக உடலை இயக்கியாக வேண்டும்.

அது தவிர நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் தூங்கினாலும் விழித்திருந்தாலும் இயங்கவேண்டிய உள்ளுறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கவேண்டும். அப்போதுதான் சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம், உணவு செரிமானம் மூளையின் செயல்பாடு போன்றவை சிறப்பாக இருக்கும். 

அதற்குத்  தக்கபடி உடலைத் தயார் நிலையில் வைத்திருப்பதுதான் உடலால் வாழ்வது ஆகும்.


இரண்டாவது உணவால் வாழ்வது:  

அதுபோலவே நமது உடல்வாழ்க்கைக்குத் தேவையான உணவை உண்பதும்  உண்ட உணவில் இருந்து உடல் தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டதுபோக மீந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுமான ஒரு பணி இடையறாது நடக்கிறது. 


நாம் பிறந்ததில் இருந்து சாகும் வரை ஒவ்வொரு வினாடியும் நமது உடம்பில் இருந்து கோடிக்கணக்கான அணுக்கள் வெளியேறுகின்றன. 

அவற்றை ஈடு செய்யவும் வளரவும் கோடிக்கணக்கான அணுக்கள் உணவு மூலமும் காற்றுமூலமும் உள்ளேயும் செல்கின்றன! 


அது சரியாக நடக்க என்னமாதிரி உணவு நமது உடல் நலனுக்கு ஏற்றது, எது நமது உடல் நலனுக்கு எதிரானது என்பதை சிந்தித்து சரியான உணவுவகைகளையே சரியான அளவில்  வேண்டும். 

நாம் உண்ட உணவின் செரிமானத்துக்குப் பின்னால் வெளியேறவேண்டிய கழிவுகள் சுத்தமாக உரிய காலத்தில் வெளியேற்றப்படவேண்டும். இல்லாவிட்டால்அந்தக் கழிவுகளே பல நோய்களுக்குக் காரணங்கள் ஆகிவிடும்.

இந்த முறையில் சரியான முறையில் உணவுப்பழக்கத்தையும் கழிவுகள் வெளியேற்றத்தையும் நல்ல முறையில் பராமரிப்பது உணவால் வாழ்வது ஆகும்.


மூன்றாவது உணர்வால் வாழ்வது: 

உணவை உண்டு உடலை வளர்ப்பதுமட்டும் வாழ்க்கையாக யாரும் எண்ணுவது இல்லை! உணவுக்கும் அதை உண்பதால் வளரும் உடம்புக்கும் மேலாக அவற்றை அடிப்டையாகக்கொண்டு வாழும் வாழ்க்கை ஒன்று உள்ளது. 

அது அவரவர் கண்களுக்கும் புலப்படாது. அடுத்தவர் கண்களுக்கும் புலப்படாது.

அதுதூன் உணர்வால் வாழும் வாழ்க்கை! 

ஆதாவது இயற்கையில் தோன்றி வாழும் நாம் நமது புலன்களால் உணர்பவற்றை சாதக பாதகமான இரு வகைகளிலும் எடுத்துக்கொள்கிறோம். சாதகமானதை இன்பமாகவும் எதிரானதைத் துன்பமாகவும் உணர்கிறோம். 

அதனால் வாழ்நாள் முழுவதும் நமது உணர்வுகளுக்கு சாதகமாகவே எதிர்ப்படும் அனைத்தும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். விரும்புவது மட்டுமல்ல அதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்கிறோம்.

அதற்காக சகமனிதர்களுடனும் மற்ற உயிரினங்களுடனும் இயற்கையுடனும் போராடி வாழ்கிறோம். 

அப்படிப்பட்ட முயற்சிகளை யாரோ சிலர் மட்டும் அல்ல. அனைவரும் செய்கிறோம். 

அப்படிப்பட்ட முயற்சிகள் வெற்றிபெற்றால் மகிழ்ச்சியும் தோல்வியடைந்தால் வருத்தமும் அடைகிறோம். 

இந்த வெற்றியும் தோல்வியும் மகிழ்ச்சியும் வருத்தமும்தான் வாழ்வின் அனைத்து சுகதுக்கங்களையும் தீர்மானிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

அவைதான் மக்களின் உணர்வுகள் பல்வேறு படித்தரங்ககளாக இருக்கவும் வேறுபட்ட புரிதல்களுக்குக் கரணங்களாகவும் விளங்குகின்றன.

உண்மையில் அந்த உணர்வுகள்தான் அனுபவங்களின் அடிப்படையில் மனமாகவும் அறிவாகவும் மெய்ஞானமாகவும் விஞ்ஞானமாகவும் தத்துவங்களாகவும் விரிவடைகின்றன.

அத்தகைய அனுபவங்களில் லயித்து வாழ்வதுதான் உணர்வால் வாழ்வது!

அத்தகைய உணர்வால் வாழும் வாழ்க்கைதான் உண்மையில் வாழ்க்கை என்பதாக உணரப்படுகிறது. 

முதல் இரண்டு விதமான வாழ்க்கையின் நோக்கமே மூன்றாவது வாழ்வின் சிறப்பில்தான் அடங்கியுள்ளது. 

இந்த மூவகை வாழ்க்கை முறை கூடவோ குறையவோ ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத அம்சங்களாகும்.

கேள்வி பதில் ( 3 )


கேள்வி:

எதிர்ப்பு சக்தி போதுமான அளவு இருக்கும்வரை மருத்துவம் தேவையில்லை என்கிறீர்கள்! அப்படியானால் நோயெதிர்ப்பு சக்தியின் அளவை எவ்வாறு அறிந்து கொள்வது? அதன் அளவுகோல் என்ன?

எனது பதில்:

அதற்கு அலோபதி மருத்துவத்தில் பல அளவுகோல்கள் இருக்கலாம் நண்பா! 

நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை! 

ஒரு குழந்தை பசித்தால் ஒருவிதமாக அழும். 

வலித்தால் ஒருவிதமாக அழும். 

அதைத் தாய் உணர்வாள்! 

அதுபோல ஒரு நோய் வரும்போது அதற்கான அறிகுறிகள் முன்னமே தென்படும். 

உதாரணம் காய்ச்சல், மலச் சிக்கல், தூக்கமின்மை, பசியின்மை, இருமல், தும்மல் போன்றவை! 

அப்படிப்பட்ட அறிகுறிகள் வரும்போது அதற்கான காரணங்களை ஆராய்ந்து உணவின்மூலமோ மருந்தின்மூலமோ சரிப்படுத்திக்கொள்ளலாம்! 

தவறு நடந்தால் பதில் நடவடிக்கை எடுக்கலாம்! 

தவறு செய்துவிட்டால் என்ன செய்வது என்று முன்கூட்டி வடவடிக்கை எடுக்கவேண்டியது இல்லை! 

அதுபோல் இயற்கை நல்வாழ்வுப் படி சரியான முறையில் உண்டு,உழைத்து வாழ வேண்டும்.  

நோய் அறிகுறி தென்பட்டால் மட்டுமே பதில் நடவடிக்கை இருக்க வேண்டும்! 

அறிகுறி இல்லையேல் அச்சப்படத் தேவை இல்லை!

அதனால் நோயெதிர்ப்பு சக்தி பற்றி அறிந்துகொள்ளவேண்டிய அவசியமும் அதற்கான அளவுகோலும் தேவை இல்லை! 

கொள்ளைநோய் எதிர்ப்பு சக்திக்கு அலோபதியில் தடுப்பு மருந்துகள் உள்ளன.....

உணவே மருந்து ( 45 )


நோயும் மருந்தும் 

நாம் பிறந்ததில் இருந்து சாகும் வரை ஒவ்வொரு வினாடியும் நமது உடம்பில் இருந்து கோடிக்கணக்கான அணுக்கள் வெளியேறுகின்றன. 

அவற்றை ஈடு செய்யவும் வளரவும் கோடிக்கணக்கான அணுக்கள் உணவு மூலமும் காற்றுமூலமும் உள்ளேயும் செல்கின்றன! 

இது குறிப்பிட்ட ஒழுங்கமைவுடன் ஓயாமல் நடக்கிறது! 

அதுதான் வாழ்க்கை! 

இந்த இயக்கத்தில் தடங்கல் ஏற்படும்போது அது நோயாக உணரப்படுகிறது! 

தன்மையமாக்கல், வெளியேறுதல் இவை இரண்டில் எது தேவைக்கு அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் அது நோய் ஆகும்! 

அதைச் சரிசெயவதே மருத்துவம் ஆகும்! 

இந்த இயக்க முறையைச் சீர்குலைக்கும் விதத்தில் வெளியில் இருந்து கிருமிகளாலோ மற்ற சூழல்கலாலோ நேரும் தாக்குதல் வேறு விதமான நோய்கள் ஆகும். 

அத்தகைய நோய்களை ஏற்கனவே இருக்கும் முறையான இயக்க அமைப்பு எதிர்த்துப் போராடும் பண்பையே எதிர்ப்பு சக்தி என்கிறோம். 

அது போதுமான அளவு இருக்கும் வரை மருத்துவம் தேவைப்படுவதில்லை! 

இயலாதபோது மருத்துவம் செய்ய வேண்டி வருகிறது! 

சுருக்கமாகச் சொன்னால் உடலுக்குத் தேவையற்ற குப்பைகள் தங்குவதும் தேவையான சத்துக்கள் பற்றாக்குறை ஆவதும் நோய்கள் எனலாம்! 

அவற்றை நிவர்த்தி செய்வதை மருத்துவம் எனலாம்! 

நோய்களை எதிர்ப்பு சக்தியின் மூலமும் மருத்துவத்தின்மூலமும் சரி செய்ய முடியாமல் போகும்போது ஒட்டு மொத்த இயக்கமும் பலவீனம் அடைந்து கடைசியில் நின்று விடுகிறது! 

அதுதான் மரணம்! 

அல்லது உயிர் நீத்தல்! 

உணவே மருந்து ( 44 )


நன்மையையும் தீமையும் 

நண்பர்களே!

ஒரு குறிப்பிட்ட பழத்தின் அல்லது காயின் பயன்களை சிறப்புக்களை அறிந்து கொள்வது நல்லதே! 

ஆனால் ஒவ்வொன்றைப் பற்றியும் இன்னின்ன நன்மை இன்னின்ன தீமை என்று சொல்லப்படுகிறது! 

அதற்கு முக்கனிகளும்கூட விதிவிலக்கல்ல!

ஆனால் நடைமுறையில் ஒவ்வொன்றையும் உண்பதால் என்னென்ன தீங்கு வரும் என்றெல்லாம் நினைத்து அச்சப்படவேண்டியது இல்லை! 

காரணம் நாம் எப்போதும் தனியாக ஒன்றையே உண்பதில்லை! 

வேறு வகைகளை உண்ணும்போது அவற்றில் கூடக்குறைய இருக்கும் சத்துக்கள் ஒன்றை ஒன்று சரி செய்துகொள்ளும்! 

விளைவு நல்லதாகவே இருக்கும் !

இயற்கையின் போக்கு அத்தகையதே! 

அதனால் நாம் எந்த ஒரு பழத்தையும் கண்டு அச்சப்படவேண்டியது இல்லை! 

நோய் இல்லாத நிலையில் நாம் விரும்பும் காய் கனிகளை விரும்பும் அளவு உண்ணலாம்! 

எதிர்மறையான எண்ணங்களை மனதில் வைத்திருந்தால் நமது விருப்பத்தின் சம நிலை பாதிக்கப்படும்! 

இது அனைத்து வகையான உணவு வகைகளுக்கும் பொருந்தும்! 

அதனால் மட்டுமே  பாதிப்பு வரலாம்! 

Thursday, January 3, 2013

விவசாயம் ( 43 )


பால் பண்ணை 

பால் பண்ணைத் தொழில் செய்பவர்கள் பல விதமானவர்கள் இருக்கிறார்கள்!

முதலாமவர்கள் தங்களின் வீட்டுக்குப் பக்கம் உள்ள காலியிடத்தில் பால்பண்ணை அமைப்பவர்கள்.

 இரண்டாமவர்கள் பால்பண்ணை அமைப்பதற்காகவே நிலம் வாங்கி அனைத்து வசதிகளும் செய்து பால்பண்ணை நடத்துபவர்கள்.

மூன்றாமவர்கள்சொந்த பூமியும் தண்ணீர் வசதியும் ஆள் வசதியும் தீவன வசதியும் வைத்துக்கொண்டு பால்பண்ணைத் தொழிலில் இறங்குபவர்கள்!


நான்காமவர்கள் பால்பண்ணைகளில் பால் வாங்கி விற்று வியாபாரம் செய்பவர்கள்! 

ஐந்தாமவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் பால் பண்ணை அமைத்து பாலையும் தாங்களே விற்பனை செய்பவர்கள்! 

ஆறாமவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் சொந்தப் பண்ணையில் உற்பத்தியாகும் பாலுடன் அக்கம் பக்கம் கிடைக்கும் பாலையும் வாங்கி தாங்களே விற்பவர்கள்!

ஏழாம் வகையினர் பாலைப் பாலாகவும் பல்வேறு வகைத் துணைப்பொருட்களாகவும் தயாரித்து வியாபாரம் செய்பவர்கள்.

இவர்களில் முதல் இரு வகையினரும் தோல்வியைத் தழுவுதல் நிச்சயம்! 

மூன்றாமவர்கள் தேறுவது அவர்கள் வியாபாரிக்கு விற்பவர்களா அல்லது சொந்தமாக விற்பவர்களா என்பதைப்பொறுத்துத் தேறுவார்கள்.

மற்ற நான்கு வகையினரும் தாங்கள் அந்தத் தொழிலை எந்த அளவு சிறப்பாகச் செய்கிறார்கள் என்பதைப்பொருத்து நிச்சயம் மாபெரும் வெற்றி அடைவார்கள்! 

Wednesday, January 2, 2013

சிறு கதைகள் ( 14 )
அந்தக் காலத்தில் எங்கள் பாட்டி ஒரு கதை சொல்வார்கள். கேளுங்கள்! 

மூதேவி
------------

ஒரு வீட்டின் முன் வாசலின் ஒரு மூதேவி உள்ளே நுழைவதற்காக நீண்ட நாள் காத்திருந்ததாம்.

ஆதாவது மூதேவி ஒரு வீட்டுக்குள் நுழைய வேண்டுமானால் அங்கு வேண்டாத குணங்கள் இருக்கவேண்டும்! சண்டை சச்சரவு இருக்க வேண்டும்!

ஆனால் அந்த வீட்டில் அப்படியெல்லாம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்கள்!

அதனால் மூதேவிக்கு வழி கிடைக்கவில்லை.


ஒரு நாள் அந்த வீட்டு மருமகள் வெண்ணையை நெய்யாக உருக்கி மண்பாத்திரத்தில் எடுத்துச் சென்றாள். 

அப்போது தவறுதலாகக் கைநழுவி கீழே விழுந்து உடைந்து வீட்டின் தரையெல்லாம் நெய்யாக ஓடியது! 

அதைப்பார்த்து மூதேவிக்கு ஒரே குஷி! அப்பாட! இன்னைக்குத்தான் வீட்டுக்குள் நுழைய நேரம் வந்தது என்பதுதான் காரணம்! மாமியார் எப்படி திட்டாமல் இருக்க முடியும்? அப்போது நுழையலாம் அல்லவா?

மாமியார் உள்ளே வந்தவுடன் நெய் கொட்டிப் போய் இருந்ததையும் மருமகள் கையைப் பிசைந்துகொண்டிருந்ததைப் பார்த்ததும் முகம் ரொம்ப மாறி விட்டது! 

மருமகளை அருகில் அழைத்தார்.

ஏம்மா, இதுக்கா இவ்வளவு விசனத்தோட நின்னுட்டிருந்தே! போனாப் போகுது. விடு! நான் ரொம்பநாளா நெய்யால வீடு மெழுகலாம்னு இருந்தேன். இன்னைக்கு தானாகவே அப்படி ஆயிட்டுது நல்லது வீடுபூராவும் துடைச்சு விட்டுடு! அப்படின்னாராம்! 

மூதேவி ஆடிப்போய் விட்டாளாம். 

சே! இவங்க வீட்டுலையா இத்தனைநாள் காத்துட்டு இருந்தோம்னு சொல்லி எடுத்ததாம் ஓட்டம்!......
===================================================

மாமியா மருமக உறவு இப்படி இருக்கணும் என்பதுதான் கதையின் கருத்து!