ss

Tuesday, January 1, 2013

இயற்கை ( 11 )

மூட நம்பிக்கையின் நன்மை! 

வளி மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு இப்போது உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது! 

அதனால் புவி வெப்பமாதலின் வேகமும் அதிகரித்துள்ளது!

அதனால் துருவப் பனி உருகுவதால் அதைத் தொடர்ந்து கடல்மட்டம் அதிகரித்து இந்த நூற்றாண்டு இறுதிக்குள் உலகின் பல நகரங்களுக்குள் புகுந்து விடுமாம்!

உலகில் இப்போது உள்ள அனைத்துத் துறைமுகங்களும் பயனற்றுப் போய்விடுமாம்! காரணம் அவை தண்ணீருக்குள் மூழ்கும்! 

அடுத்த நூற்றாண்டு இறுதிக்குள் மிகப்பெரும் தலைநகரங்கள் தண்ணீருக்குள் போய் உலகின் நெல் விளையும் விளைநிலங்கள் பெரும்பாலும் கடல் நீரால் மூழ்கடிக்கப்ப்படுமாம்! 


இதை அறிந்த ஆராய்ச்சியாளர்களும் உலகச் சுற்றுச் சூழல் விரும்பிகளும் என்னதான் சொன்னாலும் அறிக்கைகள் விட்டாலும் அவை ஒரு வினோதமான செய்திகளாக உள்ளனவே அல்லாமல் அதன் பயங்கரம் போதுமான அளவு உணரப்படவில்லை! 

ஏற்கனவே உண்ணும் உணவையும் குடிக்கும் தண்ணீரையும் சுவாசிக்கும் காற்றையும் போதுமான அளவில் கெடுத்தாயிற்று!

போதாக்குறைக்கு அணுசக்திப் பயன்பாடு என்னும் புலி வாலையும் பிடித்துக்கொண்டு உள்ளோம்! 

இந்த நிலையில் நாடுநகரங்களையும் விளை நிலங்களையும் கடலுக்கு இரையாகக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த  தலைமுறைகள் என்ன செய்யப் போகிறார்கள்?

பணக்கார நாடுகள் குடியேறி மேலும் கொஞ்ச காலம் வாழ அலாஸ்காவும், கிரீன்லாந்தும் சைபீரியாவும் அண்டார்ட்டிகாவும் வடக்குக் கனடாவும் உள்ளன! 

காரணம் அங்கெல்லாம் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் படிந்திருந்த பனிப் படிவுகள்  புவி வெப்பமாதலால் உருகித் தரைப்பகுதிகள் வெளியே வந்துகொண்டு உள்ளன! அதைக்கொண்டு அவர்கள் தாக்குப் பிடிக்கலாம்! 

ஆனால் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் வாழும் மக்கள் கடலுக்குப் பயந்து தப்பி ஓட இடம் கிடையாது! 

புழுப் பூச்சிகளைப்போல் முதலில் மடிய வேண்டிய காலம் நெருங்கி வருகிறது! 

இந்த நிலையை போதுமான அளவில் உணரப்பட்டு அதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் திட்டங்கள் எதுவும் உலகில் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை! 

யாராவது அவதார புருஷரோ தேவ தூதரோ வந்து காப்பாற்றப்போகிறார் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் கவலைப்படாமல் இருக்கலாம்! 

அதுவே மூடநம்பிக்கையால் விளைந்த ஒரே பயன் என்று சொல்லலாம். 

அவ்வளவே!


2 comments: