மாடு வளர்ப்பு
நண்பர்களே!
மாடு வளர்ப்பதில் இரண்டு வகை உண்டு!
முதலாவது பாலுக்காக வளர்ப்பது. ஆதாவது நல்ல மாடுகளை வைத்து நிறையப் பால் கறந்து செலவு போக லாபம் பார்ப்பது.
இதுதான் இப்போது நடப்பில் உள்ளது.
அதன்படி பாலுக்காக வாங்கப்படும் மாடுகள் நிறையப் பால் கரக்கவேண்டும்.
கொடுக்கும் தீனியைத் தின்றுவிட்டுப் பால் கரப்பதைத் தவிர வேறு வேலைகள் அவற்றுக்குக் கிடையாது.
அது ஈனக்கூடிய பசுங்கன்றுகள் மட்டுமே விலைபோகுமாதளால் பாதுகாக்கப்படும்.
காளைக்கன்றுகள் பயனற்றவையாகக் கருதப்பட்டுப் பெரும்பாலானவை பாலும் கவனிப்பும் இன்றி சாக விடப்படும் அல்லது பால் கரக்கும்போதே போன விலைக்கு அடி மாட்டுக்காரனுக்கு விற்கப்படும்.
அவை பால் நிறையக் கறப்பதற்கு ஏற்ப மாட்டின் விலையும் அதிகம். நிறையத் தீவன செலவுகளும் ஆகும்.
லாபம் என்று பார்த்தால் வியாபாரிக்கு விற்றால் குறைந்த அளவும் சொந்தமாக விற்றால் கூடுதலாகவும் கிடைக்கும்.
இரண்டாவதாக வேலைக்காகவும் பாலுக்காகவும் வளர்ப்பது.
அதன்படி மாடுகள் பால் கறப்பது மட்டுமல்ல வேலை செய்ய நல்ல காளைக் கன்றுகளையும் கொடுக்க வேண்டும்.
அதற்கு ஏற்றவை காங்கேய இனம் போன்ற நாட்டு மாடுகள்.
அவை பால் குறைவாகத்தான் கறக்கும். ஆனால் காளைமாடுகள் மட்டுமல்ல பசுமாடுகளும் உழவு, வண்டியோட்டுதல் போன்ற விவசாய வேலைகளுக்குப் பயன்படும்.
அதனால் முன்னெல்லாம் நாட்டு மாடு களின் காளைக் கன்றுகளுக்குத்தான் கூடுதல் மதிப்பும் விலையும் கிடைக்கும். பால்கூட நிறையக் கிடைக்கும்.
இந்த வகை மாடுகளுக்கு வைக்கோல்,சோளத்தட்டை, தவிடு, பிண்ணாக்கு போன்ற சாதாரணத் தீவனமும் மேய்ச்சல் நிலங்களும் இருந்தால் போதுமானது! கலப்புத் தீவனம் தேவை இல்லை!
இவற்றுக்கு நோய்த் தாக்குதலும் மிகவும் குறைவே. மருத்துவருக்கோ மருந்துக்கோ தேவை இல்லை!
முன்னர் வழக்கத்தில் இருந்த இவை இயந்திரமயமாக்கலின் விளைவாக கைவிடப்பட்ட ஒன்றாகிப் புழக்கத்தில் இருந்தும் வெகுவாகக் குறைந்து விட்டது!
ஆனால் இப்போது விவசாயத்தில் ஏற்ப்பட்ட மறு சிந்தனை காரணமாக நாட்டு மாடுகளின்மேல் மீண்டும் ஈடுபாடு தலைதூக்கியுள்ளது.
சீமை மாடுகளை விடப் பால் குறைவாகக் கறந்தாலும் மற்ற அனைத்து வகையிலும் நாட்டுமாடுகள் சிறந்தவையாக இருப்பதால் பாலுக்காக சீமை மாடுகளை வளர்ப்பதைவிட குறைந்த அளவு பாலுக்காகவும் கன்றுகளுக்காகவும் வேளாண வேலைகளுக்காகவும் சேர்த்து நாட்டு மாடுகள் வளர்ப்பது பயன்மிக்கதாகத் தெரிகிறது!
சீமை மாட்டுப் பாலில் கிடைக்கும் ஆதாயத்தைவிட நாட்டுமாடுகளின் கன்றுகளில் அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது!
நாட்டு மாடுகளின் நல்ல காளைக் கன்றுகள் இரண்டே வருடங்களில் இருபத்தியைந்தாயிரம் ரூபாய் வரை விலைபோக வாய்ப்புள்ளது.
தவிர இயற்கை வேளாண்மையில் நாட்டு மாடுகளின் பங்கு சிறப்பானது.
பஞ்ச காவ்யம் மண்புழு உரம் போன்றவற்றுக்கு நாட்டு மாடுகளே சிறந்தவையாகக் கருதப்படுவதால் அவற்றுக்கு ஒரு கிராக்கி ஏற்ப்பட்டுள்ளது!
ஆகவே சீமைமாடுகளை விட நாட்டுமாடு வளர்ப்பே சிறந்ததாகத் தெரிகிறது!
ஆனால் எந்த வகையைத் தேர்வு செய்தாலும் அவற்றுக்குண்டான பராமரிப்பு முறைகளைச் சரியாகக் கையாண்டால்தான் நல்ல பயனை அடைய முடியும்!
No comments:
Post a Comment