ss

Wednesday, February 27, 2013

உணவே மருந்து ( 50 )


பாலும் பாவமும்!

பால் மற்றும் பசு மாடுகள் சம்பந்தமான முரண்பாடான கருத்துக்களால் மக்கள் தங்களுக்குள் பலநேரங்களில் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். 

ஆனால் அது பற்றிய யதார்த்த நிலையைக் கணக்கில் கொண்டால் முரண்பாடுகளுக்கு அவசியம் இல்லை என்பது விளங்கும்! 

மூன்று வகையினர் உள்ளனர்.

பாலையும் பசுவையும் புனிதமாக மட்டும் கருதும் ஒரு பகுதியினர் உள்ளார்கள். 

அவர்கள் பசுக்கள் கொல்லப்படுவதற்கும் கன்றுகள் கொடுமைப்படுத்துவதற்கும் மாமிசம் உண்ணப்படுவதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என நினைக்கிறார்கள். 

இரண்டாவது பகுதியினர் அதற்கு நேர் மாறானவர்கள்! 

அவர்கள் பசுவையும் பாலையும் வெறும் உணவுப் பொருளாக மட்டும் பார்க்கிறார்கள்! 

அதன் உயிர்வாழும் பண்பையும் அவை வதைப்
படுதலையும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை! 

ஆனால் மூன்றாவது பகுதினரான இயற்கை நல்வாழ்வுப்  பற்றாளர்கள் வேறு வகையில் சிந்திக்கிறோம்!

 பால் மனிதனின் தவிர்க்கமுடியாத உணவு அல்ல! 

அது சமைக்கப்ப்படும்போது ஒரு விதமாகவும் பச்சைப்பால் ஒரு விதமாகவும் நமது உடம்பில் மற்ற உணவுப் பொருட்களைப் போலவே செயல்படும்.

 அதனால் அதற்கு சிறப்பு முக்கியத்துவம் இல்லை! 

அதனால் கன்றுகளை வதைத்து பாலைக் குடிப்பதைவிட பாலுக்குப் பதில் மற்ற தாவர உணவுகளைப் பயன்படுத்தலாம் என்கிறோம்.

அதனால் முதல் இரண்டு வகையினரைவிட மூன்றாவது வகையினர் யதார்த்த வாழ்க்கையை சரியாகக் கையாள்கிறார்கள்! 

அதைவிடச் சிறந்த உபாயம் வேறு இல்லை! 

Sunday, February 24, 2013

எனது மொழி ( 113 )


தண்ணீர் தண்ணீர்!

உலகம் முழுமையும் தண்ணீரின் அருமை உணரப்பட்டு வருகிறது. 

வருங்காலத்தில் தண்ணீருக்காக நாடுகளுக்கு இடையே போர்கள் கூட  வரலாம் என்று கூறுகிறார்கள்.

ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்கவேண்டாம் என்றும் சொல்கிறார்கள். 

ஆம்! அதிகமான தண்ணீரை வீணாக்கும் பேர்வழிகள் தண்ணீர் ஊற்றிவைக்க ஓட்டைப் பானைக்குக்கூட வழி இல்லாதவர்களைப் பார்த்து தண்ணீரை வீணாக்காதே என்று அறிவுரை வழங்குகிறார்கள்! 

தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருக்கவேண்டும் என்றால் தண்ணீர்த் தேவை அதிகம் உள்ள பண்டங்களை உண்ணக்கூடாது! 

அதுபோல தண்ணீர்ப் பயன்பாடு குறையவேண்டுமானால் தண்ணீர்த் தேவை அதிகமாக உள்ள அனைத்துத் துறைகளையும் தண்ணீர்த் தேவை குறைவாக இருக்கும்படி மாற்றி அமைக்கவேண்டும். 

தவிர மழை அதிகம் பெய்யக்கூடியதான சூழலை பூமியில் உருவாக்கவேண்டும். 

அதுவல்லாமல் ஒரு பொருளின்மேல் குதிரைக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டே அந்தப் அதைத் தலையில் தூக்கி வைக்க முயற்சி செய்யக்கூடாது! 

அதைத் தான் செய்கிறோம்! 

எப்போது புத்தி வரும்?.....

Saturday, February 23, 2013

விவசாயம் ( 48 )


விவசாய அளவுகோல்! 

நண்பர்களே!

இது என்ன?

விவசாய பூமியின் ஒரு பகுதி இது! 

அதற்கு என்ன?

பலத்த மழை பெய்து ஐந்து நாட்களாயிற்று! இன்னும் உழவுகூட செய்ய வில்லை! 

முன்னர் எப்போ மழை பெய்யும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்து சுமாரான மழை பெய்தாலும் சோளம், சாமை, தினை, உழுந்து, கொள்ளு, பாசிபயறு, தட்டைப்பயறு, துவரை மற்றும் பல வகையான புன்செய்ப் பயிர்கள் மானாவாரியாகச் சாகுபடி செய்த பூமி இது! 


இப்போதும் விதைப்பு செயவார்கள்தானே?

அதுதான் கிடையாது! 

அந்த பூமிக்குச் சொந்தமான விவசாயிக்குப் பயித்தியமா பிடித்திருக்கிறது?...

தரிசாகவே சும்மாவே கிடக்கும்!

போன மழைக்கு முழைத்த பண்ணைக் கீரைக் களைச் செடிகள்தான் காய்ந்த நிலையில் இன்னும் தெரிகிறது! 

இனியும் வேறு கலைகள் வரும் காயும். நிலம் தரிசாகத்தான் இருக்கும்! 

காரணம்?...

இப்போதெல்லாம் புஞ்சை விவசாயம் கட்டுபடியாகாது!

பண்ணும் செலவில் பாதிகூடத் தேறாது! 

இது மட்டுமல்ல! நாட்டில் கோடிக கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மானாவாரியில் மகசூல் கொடுக்கும் வைப்பு இருந்தும் தரிசாகி விட்டன! 

உழவு செய்ய மாடுகள் கிடையாது! ஏர் ஓட்ட ஆட்கள் கிடையாது!  இயந்திரக் கலப்பையால் உழவு செய்தாலும் வரும் விளைச்சலுக்கும் செலவுக்கும் நட்டம்தான் ஆகும்! 

அதனால் அழியாத சொத்து என்ற தகுதியுடன் விவசாயியைக் கடன்காரனாக்கிவிட்டு அல்லது பணம் படைத்தவனின் கறுப்புப் பணத்தை போட்டு வைக்கும் உண்டியலாக மாரி விலையாகிவிட்டு சும்மா கிடக்கின்றன! 

அதுதான் பசுமைப் புரட்சியும் இயந்திரமயமாக்கலும் வேதி உரம் பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் விவசாயிக்குக் கொடுத்த வாழ்வு! 

மானாவாரி விவசாயம் எப்போது குடியானவனை வாழவைக்குமோ அப்போதுதான் நமது நாட்டில் விவசாயி நிம்மதியாக வாழ முடியும்! 

அதுதான் நாட்டின் விவசாயத்தின் நிலைமையை அளக்கும் அளவுகோல்! 

எப்போது மழை பெய்தவுடன் விதைத்து மானாவாரியில் சிறு நிலப்பரப்புகூட விடுபடாமல் சாகுபடி நடக்கிறதோ காடுமேடெல்லாம் தானியங்களும் பயறுவகைகளும் பூத்துக் காய்த்து கண்களை நிறைக்கிறதோ அப்போதுதான் விவசாயமும் விளங்கும்! நாடும் விளங்கும்! 

இப்போதைக்கு அது நடக்குமா? 

Thursday, February 21, 2013

கருத்துச் சிதறல் ( 1 )


பொருளும் அருளும்!

மருந்தை உண்ணும்போது குரங்கை நினைக்க வேண்டாம் என்று சொன்னால் மருந்தை நினைக்கும்போதே குரங்கு நினைவுதான் முதலில் வரும்! 

அதுபோல பொருளே வாழ்க்கை என்ற பண்பாட்டையும் வாழ்நிலைமைகளையும் உருவாக்கிவிட்டுப் பொருளைவிட அருள்தான் முதன்மையானது என்று சொன்னால் யார் கேட்பார்கள்?...

பொருளின் அவசியம்தான் முதலில் மனதில் விழுகிறது! 

ஆகவே இதற்கான காரணங்கள் நீடிக்கும்வரை இந்த நிலையும் நீடிக்கும்!
--------------------------------------------------------------------------------------------------------


கேள்வி: அருளென்று எதைச் சொல்கிறீர்கள்..

எனது பதில்: உயர்ந்த பண்பு, இளகிய மனம், .கருணை உள்ளம் இப்படி 

கேள்வி:பொருள் மோகத்தை அது தவறென்று சொல்லாமல் வேறு எப்படிப் புரியவைப்பது.

அந்த விளக்கத்தைக் கேட்டால் அதைவிட பொருள்மோகத்தை விடச்  சொல்லும் மேதாவிகளின் பண்புகளைப் பார்த்தால் வெறுத்தே போய்விடும்!

ஆனால்  போகாத ஊருக்கு வழிகாட்டும் அந்தப் புண்ணிய(?)வான்கள்தான் அருளைப் பற்றி மக்களைத் தூங்க விடாமல் பேசுகிறார்கள்!

பொருள் மோகம் அனைவருக்கும் பொதுவாக இருக்கையில் அனைவருக்குமான தேவையான பண்புகளை வளர்த்து அனைவரும் நலம் பெறும் வழியைக் கர்ப்பிக்கவேண்டும்! அதைவிட்டு தாலூகா அலுவலகத்தில் லஞ்சம் கொடுப்பதுபோல் ஆண்டவனுக்கும் ஆண்டவனின் ஏஜெண்டுகளாகச் சொல்லிக்கொண்டு பிழைப்பவர்களுக்கும் படியளந்தால் இறைவன் அருள் கிட்டும் என்பதெல்லாம் கடைந்தெடுத்த ஏமாற்று வேலை!

தனித்தனியான முயற்சிகள் வேறு, ஒட்டுமொத்தமான முயற்சிகள் வேறு! தனிநபர்களின் நல்ல பண்புகள் சமூகத்தின் பொதுப் பண்பாக வேண்டும்! தனிநபர்களின் மனவலிமையும் மற்றவலிமையும் சமூகத்தின் பொது வலிமையாக வேண்டும்!

நண்பரின் கருத்து:ஆனால் இப்பொழுது தனிநபரின் தேவை இல்லாத பண்புகளே பொதுப்பண்பாகப் பாவிக்கப்பட்டு, ஆராதிக்கவும் படுகின்றன.

என் பதில்: ஆம் நண்பரே! காரணம் அறுப்பவனை நம்பும் ஆடுகளாக மக்களை வைத்திருப்பதையே சமூகத்தைக் கெடுக்கும் சுயநலவாதிகள் விரும்புகிறார்கள். அந்தச் சுயநலவாதிகள் தயவில் வாழும் மேதாவிகள் மக்களை விழிப்புணர்வு அடைய விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்!....அதற்கான உபாயம்தான் ஆண்டவனின் அருளைச் சொல்லி ஏமாற்றுவது! ஆதாவது ஆன்மிகம் என்ற பெயரால் அடிப்படை ஆன்மிகத்தைக் கொச்சைப் படுத்துபவர்கள்!

இவர்களின் ஆன்மிகம் கேவலம் வெறும் மூட நம்பிக்கைகளே!

நண்பர் கருத்து:இன்றைய அளவில், ஆன்மீகத்தை வைத்து அடிமைப் படுத்துவது குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன். அடிமைப் படுத்துபவர்களின் வேடம் மாறிவிட்டதாகவும் தோன்றுகிறது. Social Status என்ற பெயரில் நம்மை தொடர்து ஓடிக்கொண்டே இருக்க வைக்கும் முயற்ச்சிகளும் நடக்கின்றனவே..

நான் : ஆம்! அதுவும் வேகம் பிடித்துள்ளது! அதன்தாக்கம்தான் தனது குழந்தைகளை எந்தப் பள்ளியில் படிக்கவைப்பது என்பதைக்கூடப் பக்கத்துவீட்டுக்காரன் என்ன செய்கிறான் என்பதைப் பார்த்து முடிவெடுப்பது! ஆதாவது தனக்கு சட்டை தைக்க அடுத்தவனின் அளவைக் கொடுப்பது!

Monday, February 18, 2013

அரசியல் ( 41 )


சரியான பாதை! 

நாட்டில் நடக்கும் அநேகம் தவறுகளுக்கு ஆட்சியாளர்களே பொறுப்பு! 

ஆனால் அவர்கள் மட்டும் முழுக் குற்றவாளிகளா? 

நிச்சயம் கிடையாது! 

ஆட்சியில் உள்ளவர்கள் மக்களின் சராசரித் தகுதியைத்தான்  பிரதி பலிக்கிறார்கள்! 

காரணம் ஆட்சியாளர்கள் மக்களிடம் இருந்துதான் உருவாகிறார்கள். 

எனவே மக்களின் சராசரித் தகுதி மட்டம் உயருமளவே ஆட்சியாளர்களின் தரமும் உயரும்! 

ஆனால் மக்களின் தரம் உயர்வது எப்போது? அதைத் தொடர்ந்து ஆட்சியாளர்களின் தரம் உயர்வது எப்போது?

யார் எப்படி இதைச் செய்வது என்பதுதான் முக்கியமான கேள்வி!

அதைச் செய்ய வேண்டியவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறார்கள்! 

அத்தகையவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து வெளியில் வரவேண்டும்! 

அரசியல் விழிப்புணர்வற்ற மக்களோ, அவர்களின் அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி மோசடி அரசியல் நடத்தும் கட்சிகளோ அரசுகளோ நாட்டை எப்போதும் காப்பாற்றப் போவதில்லை! முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லப்போவதும் இல்லை! 

அப்படிக் காப்பாற்றத் தகுதியுள்ள தேசப் பற்றாளர்கள் நம்பிக்கை இல்லாமல் தானுண்டு தங்கள் வேலையுண்டு என்று அக்கிரமத்தைக் கண்டும் காணாதவார்களாய் சூடு சொரணை அற்றவர்களாய் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்! 

அவர்கள் தங்களின் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து நாட்டு மக்களைத் தட்டி எழுப்பவேண்டும்! 

தங்களையொத்த உணர்வுள்ளவர்களை ஒரு அமைப்பின் கீழ் திரட்டுவதை முதல் அடியாகக் கொண்டு கிளர்ந்தெழ வேண்டும்! 

நாட்டில் இன்றுள்ள அவலத்தைப் போக்கி நல்ல சமூக அமைப்பாக நாட்டை மாற்ற என்ன வழி என்பதை விரிவாக ஆராய வேண்டும்! 

தவறு செய்ய வாய்ப்பில்லாத ஒரு அமைப்பை உருவாக்கி அது மக்களைச் சரியாக வழிநடத்தவேண்டும்! 

அந்த அமைப்பின்கீழ் உருவாகும் மக்கள் இயக்கம் இன்றுள்ள அத்தனை மக்கள் விரோத நடைமுறைகளையும் துடைத்தெறிய வேண்டும்! 

அதுதான் சரியான பாதை! 

Friday, February 15, 2013

இயற்கை ( 12 )


இயற்கை மண்வளம்

மண் என்பது பூமியின் மேல்பாகத்தில் உள்ள நுண்துகள் வடிவில் உள்ள தாதுக்களே!

தனியாக அதை உண்டு எந்த உயிரினமும் வாழ்வது இல்லை!

தாவரங்களும் சுத்தமான மண்ணை ஆதாரமாகக் கொண்டு மட்டும் வாழ்ந்துவிட முடியாது! 

ஆனால் கூட்டாக அந்த மண்ணைக் கொண்டும் மண்ணில் இருக்கும் நீரைக் கொண்டும் காற்று> சூரிய ஒளி ஆகியவற்றைக்கொண்டும் அந்த மண்ணில் கணக்கற்ற உயிரினங்களும் தாவரங்களும் தோன்றி வாழ்கின்றன. 

அந்தத் தாவரங்களின் கழிவுகளை மக்கச்செய்து எண்ணற்ற நுண்ணுயிர்கள் வாழ்கின்றன!

அப்படிப்பட்ட நுண்ணுயிர்களையும் அதற்கு உணவாகப் பயன்படும் தாவரக் கழிவுகளையும் சார்ந்தே மண் மேலும் மேலும் தன்னை வளப்படுத்திக்கொள்ளும்!

அதன்காரணமாக மேலும் மேலும் புதுப்புதுத் தாவரங்களும் உயிரினங்களும் தோன்றிப் பல்கிப் பெருகி ஒன்றையொன்று சார்ந்து அளவற்றவை தோன்றிப் பூமியின் மேல் பகுதியை அற்புதமான பசுமையால் நிறைத்தன. 

அப்படி வளப்படுத்தப்பட்டுத்தான் பசுமையான அடர்ந்த காடுகளும்  மலைகளும் சமவெளிகளும் தோன்றின!

அந்தப் பசுமைச் சூழலில் வாழ்ந்த எண்ணற்ற உயிரினங்களில் மனித இனமும் ஒன்று!

மனித இனம் நாகரிக வளர்ச்சி என்றும் அறிவியல் வளர்ச்சி என்றும் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதெல்லாம் உலகின் மேல் போர்த்தியிருந்த அருமையான பசுமையைச் சூரையாடிப் பெற்ற சாதனைகளே!

மனிதன் சாதனைகளால் தான் தோன்றி வளர்ந்து வாழ்வதற்கு எது ஆதாரமாக இருந்ததோ அந்த இயற்கைச் சூழலை அறிவியல் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தித் துவம்சம் செய்தான்! 

அதனால் பூமியின் மேல் மண் தொடர்ந்து ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டப்பட்டும் பசுமை அழிக்கப்பட்டும் பூமியின் மேல் படிந்திருந்த உயிரின மற்றும் தாவர வளங்கள் தேவையைவிடக் குறைந்துகொண்டே வந்து இப்போது கதை வேறுவிதமாக ஆகிவிட்டது! 

தன்போக்கில் ஓடும் சிங்கத்தைத் தன்னைக் கண்டு பயந்துகொண்டு ஓடுவதாக நினைத்துத் துரத்தும் கழுதை அந்தச் சிங்கம் திரும்பிப் பார்த்தால் அடிபட்டு வீழ்வதுபோல் இயற்கை வளங்களைத் துரத்திய மனிதன் இயற்கை கோபமாகத் திரும்பிப்பார்க்கத் துவங்கியதும் மிரண்டுபோய் நிற்கிறான்! 

உலகில் பசுமை குன்றியதால் மண்வளம் குன்றியது.

பூமியின் மேல் அடுக்கு இலைமக்காலும் உயிரினக் கழிவுகளாலும் மேத்தைபோல் படிந்திருந்த நிலை மாறி வெறும் மண்ணாக வேதிப்பொருள் நிறைத்த மண்ணாக வேக வேகமாக மாற்றப்பட்டது! 

அதை மேலும் மேலும் தொடர்ந்து வேதி உரங்களைப் போட்டுக் கசக்கிப் பிழிந்தும் ஆயிற்று!

இப்போதுதான் ஆபத்தை ஒரு பகுதியினர் உணர்ந்துள்ளார்கள்!

ஆனாலும் என்ன செய்வது?

பல காலமும் அழித்துச் சேதப்படுத்தப்பட்ட பசுமையை உடனே உலகம் முழுமையும் உண்டு பண்ண முடியுமா?

முடியாது என்றும் சொல்லமுடியாது. எளிதில் முடியும் என்றும் சொல்லமுடியாது!

சரியான வழியில் முயன்றால் முடியும் என்பதே விடை!

அப்படி முடியாமல் மண்ணின் வளத்தைப் பெருக்க வழியும் இல்லை!

ஆனால் அதற்கு வெறும் சம்பிரதாயமான ஆராய்ச்சிகளும் சோதனைக்கூட முடிவுகளும் எல்லாம் பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படும்!

உண்மையில் செய்ய வேண்டியது என்னவென்றால் உலகம் முழுக்கவும் பசுமை இழந்த காடுகளையும்  மலைகளையும் சம வெளிகளையும் சாகுபடி நிலங்களையும் வாழும் பகுதிகளையும் பசுமையால் நிரப்புவதே!

எந்த உயிரினமும் தாவரமும் தோன்றி வாழத் தகுதி இல்லாத நிலப்பரப்பை பூமியில் அதிகப்படுத்திக் கான்கிரீட் குப்பைகளாக மாற்றும் போக்கைத் தடுத்து நிறுத்தவேண்டும்! 

விவசாய நிலங்களைக்கூட பெறும் பகுதியைக் காடுகளாகவும் காய்களும் கனிகளும் தரும் சோலைகளாகவும்  மாற்ற வேண்டும்.

அதிக நீரைப் பயன்படுத்திக் குறைந்த பசுமையைக் காணும் இப்போதுள்ள விவசாயமுறைகளை மாற்றி குறைந்த நீரைப் பயன்படுத்தியும் நீரே இல்லாமலும் பசுமை மாறாமல் விவசாயம் செய்யும் யுக்திகளைக் கண்டறியவேண்டும்!  

பூமியின் ஒவ்வொரு அடி மண்ணையும் பசுமையால் நிரப்புவது எப்படி என்ற ஒரே சிந்தனைதான் உலக மக்களின் மனதில் நிறைந்திருக்கவேண்டும்! 

மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் பசுமை மயமாக்கலுக்குத் தடங்கலாக இல்லாமல் நடைபெற வேண்டும்! 

ஒவ்வொரு வினாடியும் உயிரினங்கள் தோன்றி வாழத் தகுதியுள்ள நிலப் பகுதி குறைவதற்குப் பதிலாக நம்பமுடியாத வேகத்தில் அதிகரிக்க வேண்டும்! 

அத்தகைய பசுமை மட்டுமே இழந்த மண்வளத்தை மீட்டுக் கொடுக்கும்!

வேறு எந்த உபாயமும் கவைக்கு உதவாது! அவையெல்லாம் ஒரு இடத்தை நாசம் செய்து இன்னொன்றைக் காக்க நினைக்கும் பயனற்ற முயற்சிகளே! 

ஆங்காங்கே செய்யப்படும் சிறு முயற்சிகள் எல்லாம் ஒட்டுமொத்த உலகையோ ஒரு நாட்டையோ பறந்து விரிந்த ஒரு பிரதேசத்தையோ காப்பாற்றாது!

உலகம் முழுக்கவும் ஒரே குரலில் ஒரே மூச்சில் முழங்க வேண்டியதும் முயலவேண்டியதும் இதுதான்!....

மண்வளத்தை மீட்போம்! அதற்கு உலகைப் பசுமையால் போர்த்துவோம் என்பதே!

நடக்குமா?....

Wednesday, February 13, 2013

எனது மொழி ( 112 )


ஆயுள்

ஆயுள் என்பதை நாம் மட்டும் தீர்மானிப்பது இல்லை! 

சூழ்நிலைகளும் தீர்மானிக்கின்றன! 

அதுவும் நமது வாழ்க்கையைப் பற்றி நாம் முடிவெடுக்கும் வயதும் அறிவும் வரும்வரை ஆயுளைச் சூழ்நிலைகள் மட்டுமே தீர்மானிக்கின்றன! 

அதன்பின்னும் ஆயுளை அதிகப் படுத்துவதன்மூலம் வாழ்க்கைப் பயனை நீட்டிக்க விரும்பி அதற்குத் தக்கபடி வாழமட்டுமே நமக்குச் சக்தியும் உரிமையும் உண்டு! 

அந்த முயற்சி ஆயுளை நீட்டிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனாலும் சூழலின் பிடித்தான் வலிமையானது! 

அதனால் நமது ஆயுளை அதிகப் படுத்தும் திசையில் கடமைகளைச் செய்யும் அதே நேரம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நமக்கும் நாம் வாழும் சமூகத்துக்கும் பயன்மிக்கதாக வாழ்வதே முக்கியம்! 

காரணம் நாம் வாழும் காலம் முக்கியம் அல்ல! 

நாம் வாழும் முறையே முக்கியம்! 

எனது மொழி ( 112 )


ஆயுள்

ஆயுள் என்பதை நாம் மட்டும் தீர்மானிப்பது இல்லை! 

சூழ்நிலைகளும் தீர்மானிக்கின்றன! 

அதுவும் நமது வாழ்க்கையைப் பற்றி நாம் முடிவெடுக்கும் வயதும் அறிவும் வரும்வரை ஆயுளைச் சூழ்நிலைகள் மட்டுமே தீர்மானிக்கின்றன! 

அதன்பின்னும் ஆயுளை அதிகப் படுத்துவதன்மூலம் வாழ்க்கைப் பயனை நீட்டிக்க விரும்பி அதற்குத் தக்கபடி வாழமட்டுமே நமக்குச் சக்தியும் உரிமையும் உண்டு! 

அந்த முயற்சி ஆயுளை நீட்டிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனாலும் சூழலின் பிடித்தான் வலிமையானது! 

அதனால் நமது ஆயுளை அதிகப் படுத்தும் திசையில் கடமைகளைச் செய்யும் அதே நேரம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நமக்கும் நாம் வாழும் சமூகத்துக்கும் பயன்மிக்கதாக வாழ்வதே முக்கியம்! 

காரணம் நாம் வாழும் காலம் முக்கியம் அல்ல! 

நாம் வாழும் முறையே முக்கியம்! 

எனது மொழி ( 111 )


பயம்!

இருக்கும் உணர்வுக்கும் எதிர்பார்ப்புக்கும் எதிரான சூழலைச் சந்திக்கும்போது அதை எதிர்கொள்ளும் வலிமையோ, விருப்பமோ, அறிவாற்றல் மற்றும் அனுபவமோ இல்லாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வே பயம் எனப்படும்! 

அதை ஒழிக்க வேண்டுமானால் எதிர்மறைச் சூழல் எத்தகையதாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு அறிவாற்றலையும் உணர்வு மட்டத்தையும் சக்தியுள்ளதாக உயர்த்தவேண்டும்!

வாழ்வின் எந்த நிமிடத்திலும் மன நிலையைச் சீராக வைத்துக்கொள்ளும் மன வலிமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்! 

Tuesday, February 12, 2013

எனது மொழி ( 110 )

நான்!

எரியும் தீபம் ஒவ்வொரு வினாடியும் தன்னுடன் சிலவற்றைச் சேர்த்துக்கொண்டும் சிலவற்றை இழந்துகொண்டும் தொடர்ந்து ஒளி விடுகிறது. அதில் நிலையானது என்று எதுவும் இல்லை.

அதுபோலவே நமது உடல் வாழ்வும் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான வெளிப்பொருட்களின் அணுக்களை ஏற்றுக்கொண்டும் இழந்துகொண்டும்தான் இயங்குகிறது. இதிலும் நிலையானது என்று சொல்லக்கூடியது எதுவும் இல்லை! நான் என்று சொல்லக்கூடியது நாம் சாகும் வரையிலான சிக்கலான, ஒழுங்கமைந்த ஒருவகையான இயக்கமே! அதைச் சரியாக வாழ்ந்துவிட்டுப் போனால் என்ன!......உணவே மருந்து ( 49 )


சில வகை உணவைத் தவிர்க்க முடியாதா? 

நல்லதும் கெட்டதுமான பலவகை உணவுகளைப் பழக்கமாககொண்டு உலக மக்கள் வாழ்கிறார்கள்! 

அதில் உடல்நலனுக்குத் தீங்கு பயக்கும் உணவுகளைத் தவிர்த்து நல்ல உணவுப் பழக்கங்களைக் கற்றுக்கொள்வதன்மூலம் உடல்நலனையும் தொடர்ந்து உள்ளப்பாங்கையும் மேம்படுத்துவதுதான் சிறந்த வாழ்க்கை முறை! 

அதைத்தான் - இயற்கை உணவும் இனிய வாழ்வும் - முகநூல் குழுமம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது! 

இன்ன உணவு உண்ணாவிட்டால் மனிதன் வாழமுடியாது என்ற விதிப்படி இயற்கை எந்தத் தாவரத்தையோ அல்லது மாமிச வகைளையோ பால் , முட்டை போன்றவற்றையோ உருவாக்கவில்லை! 

இயற்கையில் கிடைக்கும் மனிதன் உண்ணும்படியான அனைத்து உணவுகளிலும் பல்வேறு வகையான சத்துக்கள் பொதிந்திருக்கின்றன. 

அத்தனை உணவு வகைகளையும் ஒருவர் சாப்பிட்டிருக்கமுடியாது! 

அதுபோல சில உணவுகள் கட்டாயம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று லட்சக்கணக்கான வகை உணவுகளில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லவும் முடியாது! 

காரணம் அப்படிச் சில உணவுகளை மட்டும் சார்ந்து மனிதன் தோன்றி வளர்ந்திருக்க முடியாது! 

நமக்குத் தண்ணீர் தேவை என்றால் அது எந்தப் பாத்திரத்தின்மூலம் கிடைக்கிறது என்பது முக்கியம் அல்ல! 

தண்ணீர்தான் முக்கியம்! 

அதுபோல எந்த உணவை நாம் உண்கிறோம் என்பது முக்கியம் அல்ல! அது சரியான உண்ணக்கூடிய உணவா என்பதே முக்கியம்.

உண்ணக்கூடிய உணவு எதுவாக இருந்தாலும் அதில் இருந்து உடம்பு தனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளும். தேவையற்றதை ஒதுக்கி விடும்! 

அப்படித் தேவையற்றது எதுவும் கலக்காத குறிப்பிட்ட மனிதனுக்கித் தேவையான சத்துக்கள் மட்டும் அடங்கிய எந்த உணவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன், 

ஆகையால் எந்த வகை உணவு விருப்பமோ அல்லது சரி என்று நினைக்கிறோமோ அந்த வகை உணவை உண்பது சரியே! (அதில் இயற்கை உணவே சிறந்தது என்ற கோட்பாட்டுக்கு இசைவாகத்தான் இயற்கை உணவும் இனிய வாழ்வும்குழுமம்)

அதில் குறைபாடுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் இன்னவகை இல்லாமல் மனிதவாழ்க்கை இல்லை என்று எதையும் சொல்ல முடியாது! 


Saturday, February 9, 2013

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 23 )

குதிரையும் ஈக்களும்.


வண்டிக்காரர் வண்டியில் அமர்ந்து வண்டியைச் செலுத்துகிறார்! 

வண்டியைக் குதிரை இழுத்துச் செல்கிறது.

அந்தக் குதிரையின் முதுகில் ஈ ஒன்று ஒட்டிக்கொண்டு உள்ளது! 

அது என்னநினைக்கிறது தெரியுமா?....

"இந்தக் குதிரை சரியில்லை , தேவையும் இல்லை! அதையும் சேர்த்து நான் இழுக்கவேண்டியுள்ளது!...."ஆதாவது வண்டியையும், வண்டிக்காரனையும், குதிரையையும் சேர்த்து அந்த ஈ  தான் இழுத்துப் போகிறதாம்!....

இது எப்படி இருக்கு?...

இப்படியாகத்தான் சமுதாயத்திலும் நிறையப்பேர் பேசித் திரிகிறார்கள்! 

வண்டி என்பது மனித சமுதாயம்.

வண்டியோட்டிதான் அறிவாற்றல். ஆதாவது ஞானம்!

அல்லது மெஞ்ஞானம் என்றும் வைத்துக்கொள்ளலாம்! 

குதிரை என்பது அறிவியல்!ஆதாவது விஞ்ஞானம்! 

மதங்களும் மூடநம்பிக்கைக்களும்தான் குதிரையின் முதுகில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈக்கள்! 

அந்த ஈக்களைப்போல் அறிவியலால் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டே அறிவியல் தங்களை விட உயர்ந்தது அல்ல , மாறாகத் தாமே  அறிவியலைவிட மேலானவை என்று பிதற்றுகின்றன!

அந்தமாதிரிப் பிதற்றலையும் தத்துவங்களாக  பிரச்சாரம் செய்பவர்களையும் அதை நம்புபவர்களையும் என்ன செய்வது!....

தங்களையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதே நாம் அறிய வேண்டிய உண்மை! 
Monday, February 4, 2013

பல்சுவை ( 12 )

அரவானிகள்

அரவானிகள் பற்றிய எனது கருத்துக்கள் இதில் இடம் பெறுகிறது நண்பர்களே! 

http://www.facebook.com/photo.php?fbid=466423660091985&set=o.139649789477115&type=1&theater


http://www.facebook.com/photo.php?fbid=466423660091985&set=o.139649789477115&type=1&theater


http://www.facebook.com/photo.php?fbid=435417113192640&set=pb.100001730669125.-2207520000.1359989913&type=3&theater

பல்சுவை ( 11 )


மண்பானை
===========

இதுதான் இன்று வீடுகளில் புழக்கத்தில் இல்லாத மண்பானை.

இதைக் கிராமங்களில் தாளி, மொடா என்றும் சொல்வார்கள்.

மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம். 

முற்காலத்தில் இந்தப் பானை பலவழிகளில் வாழ்வில் பயன்பட்டு வந்தது.

தண்ணீர் ஊற்றிவைக்க, தானியங்கள் போட்டுவைக்க, வருட செலவுக்காக நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவை ஊற்றிவைக்க, மிளகாய், புளி, உப்பு போன்றவைபோட்டுவைக்க இது பயன்பட்டது.

விசே சகாலங்களில் அதிகம்பேருக்கு ஒரே நேரத்தில் சமைக்க, குடும்பத்தில் உள்ள அனைவரும் குளிப்பதற்கு வெந்நீர் வைக்க இன்னும் எத்தனையோ வேலைகளுக்குப் பயன்படும்.

ஏன், எனது அனுபவத்தில் கூட பொங்கல் சமயத்தில் சுட்டுப் பானையில் அடுக்கிவைத்த முருக்கையும் எள்ளுருண்டையையும் எடுக்கமுயன்று தள்ளிவிட்டு உடைத்த காலங்கள் பசுமையானவை. 

வீட்டுக்குள் எட்டாதவற்றை எடுக்க ஸ்டூலாகவும் இது பயன்பட்டது.

அந்தக்காலத்தில் பணக்காரர்கள் பொன்னையும் பொருளையும் பானைகளில்போட்டு நிலத்தில் புதைத்துவைத்ததும் உண்டு. இன்றும் புதையல்களாக பலஇடங்களில் கிடைக்கிறது.

இறந்தவர்களைப் புதைக்க சவப்பெட்டிகளாகவும் பயன்படுத்தினார்கள். அதைத்தான் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் முதுமக்கள் தாளிகள் என்று சொல்கிறார்கள்

பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூட தண்ணீர்ப் பந்தல்கள் வைத்துப் மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. 

திருவிழாக் காலங்களில் நீர்மோரும் பானகமும் மண்பானைகளில் வைத்து வழங்கப்பட்டன.

ஆதியிலிருந்து இன்று வரை கள்ளு ஊற்றிவைக்க மன்பானைகள்தான் புழக்கத்தில் உள்ளன.(அதுதான் இன்றுவரைநீடிக்கிறது)

மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இது இன்று புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது. 

ஆனால் இன்றும் நகரங்களில்கூட குடிதண்ணீர் மண்பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்பட்டாலும் அதற்கேற்ற சுத்தமான குடிநீர் அறிதாகிவருவதால் நவீன சாதனங்களின்மூலம் சுத்திகரிக்கப்படும் தண்ணீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

அதன் காரணமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டினால் சுற்றுச் சூழல் பிரச்சினை அதிகரித்து வருவதோடு குடிதண்ணீர்கூட வர்த்தகப் பொருளாகி விற்பனைக்கு வந்துவிட்டதுதான் சோகமான விஷயம்!

நவீன வாழ்க்கை என்ற பெயரால் நாம் இழந்து வரும் எண்ணற்றவைகளில் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்த மண்பானைகளும் அடங்கும்!....

Saturday, February 2, 2013

எனதுமொழி ( 109 )

அடிப்படை!

அறியாமை , அச்சம், சுயநலம் இவைதான் சாதிமதங்களின் மற்றும் மூடநம்பிக்கைகளின் அடிப்படை! 

இந்த மூன்றையும் கழித்துவிட்டுப் பார்த்தால் சாதி மதங்களில் ஒன்றும் இல்லை! 

சாதி மதங்களே இருக்காது! 

மறுக்கமுடியுமா?....

சிறுகதைகள் ( 15 )

அட நாராயணா!....


ஒரு கிராமத்தில் ஒரு அப்பாவி ஏழை இருந்தானாம்.

அவனுடைய சாப்பாட்டில் ராகிக் களியும் கீரையும் பழைய சோறும்தான் தினமும் இருக்கும்.

ஆசைப்படுவதை உண்ணுமளவு வசதி இல்லை! 

அவனுக்கு ஒரு ஆசை இருந்தது.


ஆதாவது பக்கத்து ஊரில் உள்ள மாமா வீட்டுக்கு ஒரு நாளைக்குப் போய் வாய்க்கு ருசியா ஒரு நேரம் சாப்பிட்டு வரணும் அப்படிங்கிறதுதான் அந்த ஆசை!

நினைச்ச மாதிரியே ஒருநாள் புறப்பட்டு மாமா ஊருக்குப் போனானாம்.

நல்ல வரவேற்ப்பு! 

கொஞ்ச 

 நேரம் பேசிட்டு இருந்தாங்களாம்.

சாப்பாட்டு நேரம் ஆனதும் இலைபோட்டு பரிமாறினாங்ளாம்! இலையைப் பார்த்ததும் பகீர்னுதாம்!

கண்ணுல தண்ணி கதகதன்னு வந்திருச்சாம்.

அட நாராயணா! எனக்கு முன்னால நீ இங்கே வந்துட்டியா? அப்படின்னு நொந்து நூலாப் போனானாம்!

விவரம் வேறொண்ணும் இல்லே!

அவங்க வசதியானவங்க. வகை வகையா வாய்க்கு வக்கணையா தினமும் சாப்பிடறவங்க!

அதனால ஆசைக்கு ஒருநாள் சாப்பிட்டுப் பார்ப்போமே அப்படின்னு சொல்லி அன்னைக்கு  செய்தது ......

ராகிக் களியும் கீரையும்!

Friday, February 1, 2013

கடவுளும் மதமும் ( 3 )

போகாத ஊருக்கு.....

உலகில் வாழு பெரும்பகுதி மக்கள் மதங்களின் வழிகாட்டுதளில்தான் வாழ்கிறார்கள். அல்லது அப்படி நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!

ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் மதம்தான் சிறந்தது என்றும் மற்றவை தாழ்ந்தவை என்றும் மனநிலையை வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.

அதுமட்டுமல்ல அதன் அடிப்படையில் தங்கள் உணர்வுகளையும் வளர்த்துக்கொண்டு தங்கள் மதத்தைப் பாராட்டியும் பிற மதங்களை இழிவு படுத்தியும் பிரச்சாரமும் செய்கிறார்கள்! 

அதன்மூலம் பிற மதத்தவரைத் தங்கள் மதத்துக்கு மாற்றவும் முயல்கிறார்கள்! 

வாழும் மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என அனைத்து வகையிவரும் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்! 

நல்லவர்களை மட்டும் அல்லது கெட்டவர்களை மட்டும் கொண்ட ஒரு மதம் உலகில் கிடையாது! 

பிறமதத்தவர்களைப் பற்றிக் குறைசொல்லும் ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தில் அனைவரும் நல்லவர்களா என்று யோசிப்பதே இல்லை! 

நான் எல்லா மதத்தவர்களையும் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி.......

உங்கள் மத கோட்பாட்டின்படி முழுக்க முழுக்க நடக்கின்ற ஒரே நபரைக் காட்ட முடியுமா ? 

அப்படிக் காட்ட முடியாது என்றால் போகாத ஊருக்கு வழிகாட்டும் இந்த ஏமாற்று வேலையை எப்போது கைவிடப்போகிறீர்கள் ?

பதில் சொல்வீர்களா?.... 
கடவுளும் மதமும் ( 2 )

மதங்களா? கடவுளா?

எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே மருத்துவ மனையில் பிறக்கிறார்கள்!

ஒரே மருத்துவரிடம் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள்.

ஒரே கருவியையும் மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

ஒரே மளிகைக்கடையில் பொருள் வாங்கி உண்ணவும் செய்கிறார்கள்! 

ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கவும் ஒரே மொழியைப் பேசவும் செய்கிறார்கள்! 

நான் கேட்கிறேன் ........

வாழும்போது ஒரே தேவைகளுடன் வாழும் இவர்களை செத்தபின்பு ஏன் ஒரே இடத்தில் புதைக்க மதங்கள்  விடுவதில்லை?

அனைத்து மனிதரும் ஓரிடத்தில் புதைக்கப்படக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவன் சொன்னானா?

இறைவனே சொல்லாத ஒன்றை இந்த மதங்கள் செய்கின்றன என்றால் அவை இறைவனுக்கு எதிரானவை அல்லவா?

அப்படியானால் நாம் நிற்கவேண்டியது இறைவனின் பக்கமா? மதங்களின் பக்கமா? 

நிச்சயமாக ஒன்றை ஏற்றுக்கொள்வதென்றால் மற்றதைத் தூக்கிக் குப்பையில் எறிந்தாக வேண்டும்! 

நாம் எதை ஏற்றுக் கொள்ளப் போகிறோம்?

எதைத் தூக்கிக் குப்பையில் எறியப் போகிறோம்! 

எனது மொழி ( 108 )

பயன்

ஒரு மூலிகை எவ்வளவு அழகாக இருந்தாலும் அதைக் கசக்கிப்  பிழியும்போதுதான் பயனுள்ள மருந்தாகிறது!

அதுபோல நல்ல பண்புள்ள மனிதரையும் துன்பங்கள் தொடர்ந்து தாக்கும்போதுதான் சிறந்த கருத்துக்கள் சமுதாயத்துக்குக் கிடைக்கின்றன!