இயற்கை மண்வளம்
மண் என்பது பூமியின் மேல்பாகத்தில் உள்ள நுண்துகள் வடிவில் உள்ள
தாதுக்களே!
தனியாக அதை உண்டு எந்த உயிரினமும் வாழ்வது இல்லை!
தாவரங்களும் சுத்தமான மண்ணை ஆதாரமாகக் கொண்டு மட்டும் வாழ்ந்துவிட முடியாது!
ஆனால் கூட்டாக அந்த மண்ணைக் கொண்டும் மண்ணில் இருக்கும் நீரைக் கொண்டும் காற்று> சூரிய ஒளி ஆகியவற்றைக்கொண்டும் அந்த மண்ணில் கணக்கற்ற உயிரினங்களும் தாவரங்களும் தோன்றி வாழ்கின்றன.
அந்தத் தாவரங்களின்
கழிவுகளை மக்கச்செய்து எண்ணற்ற நுண்ணுயிர்கள் வாழ்கின்றன!
அப்படிப்பட்ட நுண்ணுயிர்களையும் அதற்கு உணவாகப் பயன்படும் தாவரக்
கழிவுகளையும் சார்ந்தே மண் மேலும் மேலும் தன்னை வளப்படுத்திக்கொள்ளும்!
அதன்காரணமாக மேலும் மேலும் புதுப்புதுத் தாவரங்களும் உயிரினங்களும் தோன்றிப் பல்கிப் பெருகி ஒன்றையொன்று சார்ந்து அளவற்றவை தோன்றிப் பூமியின் மேல் பகுதியை அற்புதமான பசுமையால் நிறைத்தன.
அப்படி வளப்படுத்தப்பட்டுத்தான் பசுமையான அடர்ந்த காடுகளும் மலைகளும் சமவெளிகளும் தோன்றின!
அந்தப் பசுமைச் சூழலில் வாழ்ந்த எண்ணற்ற உயிரினங்களில் மனித
இனமும் ஒன்று!
மனித இனம் நாகரிக வளர்ச்சி என்றும் அறிவியல் வளர்ச்சி என்றும்
சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதெல்லாம் உலகின் மேல் போர்த்தியிருந்த அருமையான பசுமையைச் சூரையாடிப் பெற்ற சாதனைகளே!
மனிதன் சாதனைகளால் தான் தோன்றி வளர்ந்து வாழ்வதற்கு எது ஆதாரமாக இருந்ததோ அந்த இயற்கைச் சூழலை அறிவியல் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தித் துவம்சம் செய்தான்!
அதனால் பூமியின் மேல் மண் தொடர்ந்து ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டப்பட்டும் பசுமை அழிக்கப்பட்டும் பூமியின் மேல் படிந்திருந்த உயிரின மற்றும் தாவர வளங்கள் தேவையைவிடக் குறைந்துகொண்டே வந்து இப்போது கதை வேறுவிதமாக ஆகிவிட்டது!
தன்போக்கில் ஓடும் சிங்கத்தைத் தன்னைக் கண்டு பயந்துகொண்டு ஓடுவதாக நினைத்துத் துரத்தும் கழுதை அந்தச் சிங்கம் திரும்பிப் பார்த்தால் அடிபட்டு வீழ்வதுபோல் இயற்கை வளங்களைத் துரத்திய மனிதன் இயற்கை கோபமாகத் திரும்பிப்பார்க்கத் துவங்கியதும் மிரண்டுபோய் நிற்கிறான்!
உலகில் பசுமை குன்றியதால் மண்வளம் குன்றியது.
பூமியின் மேல் அடுக்கு இலைமக்காலும் உயிரினக் கழிவுகளாலும் மேத்தைபோல் படிந்திருந்த நிலை மாறி வெறும் மண்ணாக வேதிப்பொருள் நிறைத்த மண்ணாக வேக வேகமாக மாற்றப்பட்டது!
அதை மேலும் மேலும் தொடர்ந்து வேதி உரங்களைப் போட்டுக் கசக்கிப் பிழிந்தும்
ஆயிற்று!
இப்போதுதான் ஆபத்தை ஒரு பகுதியினர் உணர்ந்துள்ளார்கள்!
ஆனாலும் என்ன செய்வது?
பல காலமும் அழித்துச் சேதப்படுத்தப்பட்ட பசுமையை உடனே உலகம்
முழுமையும் உண்டு பண்ண முடியுமா?
முடியாது என்றும் சொல்லமுடியாது. எளிதில் முடியும் என்றும் சொல்லமுடியாது!
சரியான வழியில் முயன்றால் முடியும் என்பதே விடை!
அப்படி முடியாமல் மண்ணின் வளத்தைப் பெருக்க வழியும் இல்லை!
ஆனால் அதற்கு வெறும் சம்பிரதாயமான ஆராய்ச்சிகளும் சோதனைக்கூட
முடிவுகளும் எல்லாம் பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படும்!
உண்மையில் செய்ய வேண்டியது என்னவென்றால் உலகம் முழுக்கவும் பசுமை
இழந்த காடுகளையும் மலைகளையும் சம வெளிகளையும் சாகுபடி நிலங்களையும் வாழும் பகுதிகளையும்
பசுமையால் நிரப்புவதே!
எந்த உயிரினமும் தாவரமும் தோன்றி வாழத் தகுதி இல்லாத நிலப்பரப்பை பூமியில் அதிகப்படுத்திக் கான்கிரீட் குப்பைகளாக மாற்றும் போக்கைத் தடுத்து நிறுத்தவேண்டும்!
விவசாய நிலங்களைக்கூட பெறும் பகுதியைக் காடுகளாகவும் காய்களும் கனிகளும் தரும் சோலைகளாகவும் மாற்ற வேண்டும்.
அதிக நீரைப் பயன்படுத்திக் குறைந்த பசுமையைக் காணும் இப்போதுள்ள விவசாயமுறைகளை மாற்றி குறைந்த நீரைப் பயன்படுத்தியும் நீரே இல்லாமலும் பசுமை மாறாமல் விவசாயம் செய்யும் யுக்திகளைக் கண்டறியவேண்டும்!
பூமியின் ஒவ்வொரு அடி மண்ணையும் பசுமையால் நிரப்புவது எப்படி என்ற ஒரே சிந்தனைதான் உலக மக்களின் மனதில் நிறைந்திருக்கவேண்டும்!
மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் பசுமை மயமாக்கலுக்குத் தடங்கலாக இல்லாமல் நடைபெற வேண்டும்!
ஒவ்வொரு வினாடியும் உயிரினங்கள் தோன்றி வாழத் தகுதியுள்ள நிலப் பகுதி குறைவதற்குப் பதிலாக நம்பமுடியாத வேகத்தில் அதிகரிக்க வேண்டும்!
அத்தகைய பசுமை மட்டுமே இழந்த மண்வளத்தை மீட்டுக் கொடுக்கும்!
வேறு எந்த உபாயமும் கவைக்கு உதவாது! அவையெல்லாம் ஒரு இடத்தை
நாசம் செய்து இன்னொன்றைக் காக்க நினைக்கும் பயனற்ற முயற்சிகளே!
ஆங்காங்கே செய்யப்படும் சிறு முயற்சிகள் எல்லாம் ஒட்டுமொத்த உலகையோ ஒரு நாட்டையோ பறந்து விரிந்த ஒரு பிரதேசத்தையோ காப்பாற்றாது!
உலகம் முழுக்கவும் ஒரே குரலில் ஒரே மூச்சில் முழங்க வேண்டியதும்
முயலவேண்டியதும் இதுதான்!....
மண்வளத்தை மீட்போம்! அதற்கு உலகைப் பசுமையால் போர்த்துவோம் என்பதே!
நடக்குமா?....
No comments:
Post a Comment