ss

Tuesday, March 26, 2013

பல்சுவை ( 13 )


பேய்!

பேய் என்பது அனைத்து நாடுகளிலும் அனைத்து மக்கள் மத்தியிலும் நிலவும் ஒரு அமானுஷ்யக் கருத்தாகும்.

அதை உண்மை என்று வாதிப்போர் நிறைய உள்ளார்கள் .

தவறான கருத்து என்று மறுப்பது மட்டும் அல்ல அத்தகைய நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

ஆனாலும் பேய்களைப் பற்றி ஏராளமான கதைகளும் திரைப்படங்களும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் மக்களிடையே பெரும் செல்வாக்குடன் இருந்துகொண்டுதான் உள்ளன! 

பொதுவாகப் பேய்கள் என்றால் அது அகால மரணமடைந்தவர்களின் ஆவியாகத்தான் நம்பப் படுகிறது! 

அப்படி நம்ப வைத்துக் கொஞ்சம் பேரும் அந்தப் பேயை விரட்டுவதாகக் கொஞ்சம் பேரும் மக்களை நம்பவைத்துக் காசு சம்பாதித்துக்கொண்டு உள்ளார்கள்! 

எதனால் பேய் நம்பிக்கை ஏற்படுகிறது?

ஏன் சாதரணமாக இறப்பவர்கள் பேயாக மாறுவது இல்லை?


தூக்குப் போட்டுச் சாகிறவர்கள் கண்கள் பிதுங்கி நாக்கு வெளியே தொங்கிக் கோரமான உருவமாகத் தெரிகிறார்கள்!

கிணற்றில் விழுந்து தண்ணீரில் ஊறி உப்பிப்போய் மேலே மிதக்கும்போது அதைக் கண்களால் பார்க்கத் துணிவு வேண்டும்! 

காரணம் அலங்கோலமாக மீன்கள் அரித்த நிலையில் உருக்குலைந்து போய் மிதக்கும்! 

ரயிலில் அடிபட்டுச் சாகின்றவர்களின் தோற்றம் வர்ணிக்க முடியாதது! 

துண்டு துண்டுகளாக சிதைக்கப்பட்டு மூளை சிதறிப்போய் ஆங்காங்கே காக்கைகள் பொறுக்கித் தின்னும் காட்சியைக் காணலாம்! 

அதேபோல கொலை செய்யப்படுபவர்களும் ரத்தவெள்ளத்தில் கிடப்பது, மூட்டையாகக் கட்டி வீசப்பட்டு நாறிப்போய்க் கிடப்பது, நாய்களால் சிதைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகளை உள்ளடக்கியது! 

தீயில் எரிந்து சாகின்றவர்களின் காட்சி எல்லாவற்றையும் விட பயமுறுத்தக் கூடியது! 

இவற்றில் ஆண்களை விடப் பெண்களின் கோரம் அதிகமாக இருக்கும்! 

இப்படிப்பட்ட அகால மரணங்களும் குரூரமான காட்சிகளும் காணும் ஒவ்வொருவர் மனதையும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கின்றன. 

காரணம் அத்தகைய காட்சிகள் அன்றாடம் பார்க்கும் காட்சிகள் அல்ல! 

அத்தகைய உணர்வுகள் அன்றாடம் ஏற்படும் உணர்வுகள் அல்ல! 

அவை மற்ற காட்சிகளைப்போல அவ்வவு சீக்கிரம் மனதை விட்டு அகல்வது இல்லை! 

அது சம்பந்தமான பேச்சுக்கள் அதன் திகிலை அதிகப்படுத்துகின்றன. 

அதுநாள்வரை சாதாரணமாகவும் அழகாகவும் காட்சி அளித்தவர்கள், அதற்கு நேர்மாறான தோற்றத்தில் நினைக்கப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகிறது! 

கூட்டமாக இருக்கும்போது ஒருவருடைய உணர்வுக்கு ஒருவர் வடிகாலாகவும் ஆறுதலாகவும் துணையாகவும் இருப்பதால் ஓரளவுக்குக் கட்டுப்படும் உணர்வுகள் தனிமையிலும் இருளிலும் பெரும் சக்தியுடன் மீண்டும் மனதில் மோதுகிறது! 

அது பயமாக மாற்றம் பெறுகிறது! 

ஒரு சிறு சலசலப்பும் ஒரு சிறு அசைவும்கூட அச்சமூட்டுவதாக உள்ளது!

ஒரு நிழல்கூட அத்தகைய காட்சிகளைக்காட்டி மிரட்டுகிறது! 

இருளிலோ சொல்லவேண்டியதே இல்லை! இல்லாத வெளிச்சங்கள் எல்லாம் தெரிவதுபோலவும் கேட்காத ஓசைகள் எல்லாம் மணியோசைபோல் கலீர் கலீர் என்று கேட்பது போலவும் மிரளச் செய்கிறது.

யாரேனும் ஒரு மனிதர் இருளில் அசைந்தால்கூட அல்லது ஒரு செடியின் கிளை அசைந்தால்கூட பயங்கரமான திகிலை ஊட்டுகிறது! 

அந்த நேரம் பார்த்து யார்யாரோ எப்போதோ சொன்ன பேய்க்கதைகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது! 

தூங்க நினைத்தால் கண்களை மூடவே அச்சமாக இருக்கும்.

தவறி மூடித் தூங்க நினைத்தாலோ பயம் தூக்கத்தை விரட்டி அடிக்கிறது! 

எப்படியோ நாட்கள் செல்லச் செல்ல ஒரு வழியாகச் சமாளித்தாலும் சிலர்மட்டும் அந்தப் பய உணர்வை வெளிக் காட்டாமலே அடக்கி அடக்கி ஒரு வகையான மன நோயாளிகளாக ஆகிவிடுகிறார்கள்!

அதைத் தொடர்ந்து யாருடைய சாவு அதிகமான அச்சத்தை ஏற்ப்படுத்தியதோ அவர்களின் நினைவிலேயே மூழ்கிப்போய்க் கடைசியில் தானே உளறவும் ஆரம்பித்து விடுகிறார்கள். அல்லது பேசும் ஆற்றலை இழக்கிறார்கள்! 

இந்த இரண்டு குணத்தையும் பேய் பிடித்ததற்கான குணங்களாகச் சித்தரித்து அதை விரட்ட ஆள்தேடத் துவங்கி விடுகிறார்கள்.

இத்தகைய கதைகளைக் கேட்டுக் கேட்டு அத்தகைய காட்சிகளைக் காணாதவர்ககூட கண்டவர்கள்போல் அச்ச உணர்வால் பாதிக்கப்படுகிறார்கள்.

பேய்க் கதைகளை நம்பாதவர்கள்கூட பேய்கள் நடமாடுவதாகச் சொல்லப்படும் சுடுகாடு அல்லது அகால மரணம் நிகழ்ந்த இடங்களுக்குத் தனிமையில் செல்லத் துணிவது இல்லை! 

நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட அந்த கோரக் காட்சிகள் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் மனதை பாதிக்கக்கூடியவையாக உள்ளன! அதனால் தவிர்க்கவே செய்கிறார்கள்! 

இதுதான் பேயின் கதை!

இது பற்றிச் சுருக்கமாக வரையறுத்துக் கூறுவதாக இருந்தால் இப்படிக் கூறலாம்.....

பலவீனமான உணர்வுகளைத் தாக்கி அச்சுறுத்தும் ஒருவகையான எதிர்மறை மனப் பதிவுகளே பேய்கள்.... 

ஒவ்வொரு மனிதனிடமும் வெளியே சொல்லாத தான் பயப்படும் சில சங்கதிகள் இருக்கும்.

அந்தச் சங்கதிகள்தான் தகுந்த நேரத்தில் மனத்திரையில் தோன்றிப் பேய்களாக  அச்சுறுத்தும். 

பெரும்பாலோருடைய மனதில் அகால அல்லது விகாரமாக மரணமடையும் சவங்கள் பற்றிய அச்ச உணர்வுகள் மனப் பதிவுகளாக இருக்கும். 

காரணம் அது நிறையப்பேருக்குப் பொதுவான பண்பாக இருகிறது. 

அதனால் அவை தொடர்பானவை பேய்கள் என்ற பொதுவான அச்ச உணர்வு வழக்கத்துக்கு வந்து விட்டது!

அது சமுதாயத்தின் அனைத்துப் பகுதியினரிடமும் தொடர்புள்ள விஷயம் ஆதலால் இன்றளவும் சக்தியுடன் விளங்குகிறது! 

அதைக் குறைப்பதற்கு ஒரே வழி அறிவியல் மற்றும் மூட நம்பிக்கைகள் அற்ற ஆன்மிக சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதே! 

3 comments:

 1. இதை வைத்து சம்பாத்தியம் செய்கிறவர்கள்களும் உள்ளனர்... இதை நம்பி ஏமாந்து போகிறவர்களை தான் பேய் என்று சொல்ல வேண்டும்... மற்றபடி பணப் பேய், மதப் பேய், இப்படி பல உண்டு...

  ReplyDelete
 2. ஆம் நண்பரே! பேய் என்பது மனிதனின் விகாரமான எண்ணங்களே!

  ReplyDelete
 3. இயற்கை எனும் ஒன்றை கடவுள் என உணர்கையில் சகலமும் புரிகிறது

  எண்ணம் யாவும் ஆகி நம்மை இயக்குகிறது .........................

  ReplyDelete