ss

Wednesday, April 24, 2013

பல்சுவை ( 15 )
எரியும் தீபம் ஒவ்வொரு வினாடியும் தன்னுடன் சிலவற்றைச் சேர்த்துக்கொண்டும் சிலவற்றை இழந்துகொண்டும் தொடர்ந்து ஒளி விடுகிறது. அதில் நிலையானது என்று எதுவும் இல்லை.

அதுபோலவே நமது உடல் வாழ்வும் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான வெளிப்பொருட்களின் அணுக்களை ஏற்றுக்கொண்டும் இழந்துகொண்டும்தான் இயங்குகிறது. இதிலும் நிலையானது என்று சொல்லக்கூடியது எதுவும் இல்லை! நான் என்று சொல்லக்கூடியது நாம் சாகும் வரையிலான சிக்கலான, ஒழுங்கமைந்த ஒருவகையான இயக்கமே! அதைச் சரியாக வாழ்ந்துவிட்டுப் போனால் என்ன!......


==================================================================

Subash Krishnasamyஇயற்கை உணவும் இனிய வாழ்வும்
March 12, 2012 

மிதக்கக்கூடிய ஒருபொருள் தண்ணீருக்கு மேலே அதைத் தொடாமல் இருப்பதும் தண்ணீரின் ஆழத்தில் மூழ்கிய நிலையில் மேலே வர இயலாமல் மூச்சுத் திணரிக் கொண்டு இருப்பதும் உறுதியான நிலைகள் அல்ல. 

தண்ணீர் மட்டத்தில் மிதந்துகொண்டிருப்பதே உறுதியானதும் அமைதியானதுமான நிலையாகும். 

அதுபோல இன்பத்தில் திளைப்பதும் துன்பத்தில் வருந்துவதும் உறுதியான நிலைகள் அல்ல. 

அமைதியில் நிலைபெற்று வாழ்வின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப சீராக சிந்திப்பதும் இயங்குவதுமே நாம் செயல்படவேண்டிய உறுதியான செயல்முறையாகும்.


================================================================

Subash Krishnasamyஇயற்கை உணவும் இனிய வாழ்வும்
March 15, 2012 

பழைய சோறு 
============

வெய்யில் காலம் துவங்கிவிட்டது. இனி ஆளுக்கு ஆள் பேச்சுத் துவங்குவதே வெய்pலைப்பற்றித்தான் இருக்கும்.

மின்சாரமும் பழிவாங்குவதால் இந்தக் கோடை ஒரு சோதனையான காலமாகத்தான் இருக்கப்போகிறது.

இந்த நேரத்தில் வழக்கொழிந்து வருகிற பழையசோற்றின் சிறப்புப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

அரிசி, கம்பு, சோளம், தினை, சாமை, ராகி போன்ற தானியங்களால் சமைக்கப்படும் சோற்றைக் கொண்டோ களியைக் கொண்டோ பழைய சோறு தயாரிக்கலாம்.

குறிப்பாக அரிசியும் கம்பும் சோளமும் எளிதில் கிடைக்கக்கூடியவை.

பழைய சோறு என்பது அதற்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கபடுவது அல்ல. சூடாக உண்பதற்காகத் தயாரிக்கப்படும் சாதம் அல்லது களியை உண்டுவிட்டு மீதம் இருப்பது ஆறியபின்பு அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டால் சுமார் ஆறுமணிநேரத்துக்குப் பின்னால் பழைய சோறு தயார். அதை மேலும் ஒரு நாள் வரை வைத்திருந்து போதுமான அளவு சோறும் அதிலுள்ள நீரும் சிறிது உப்பும் சேர்த்து பழைய சோற்றுக்கலவையை உண்பதற்குத் தயார் செய்துவிடலாம்.

பொதுவாகப் பழைய சோற்றைக் கையால் பிசைந்து கரைத்தால்தான் நன்கு கூழ்பாகத்தில் உண்பதற்கு நன்கு இருக்கும். கரண்டியால் கலக்கினால் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் பருக்கை பருக்கையாக இருக்கும். 

சமைப்பது மண் சட்டியாக இல்லாமல் வேறு பாத்திரமாக இருந்தாலும் அதைப் பழைய சோற்றுக்காக எடுத்துவைக்கும்போது மண் சட்டியில் வைத்துத் தண்ணீர் ஊற்றிவைப்பதுதான் சிறந்தது. காரணம் அது கூடுதல் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மண் சட்டி இல்லாவிட்டால் மற்ற பாத்திரங்களிலும் வைக்கலாம்.

பழைய சோற்றில் மோரோ தயிரோ கலந்துகொள்வது மேலும் சுவையை அதிகப்படுத்தும். அதனுடன் சின்னவெங்காயத்தை சின்னதாக நறுக்கிப் போட்டோ அல்லது நேரடியாய்க் கடித்துக்கொண்டோ பழைய சோறு சாப்பட்டால் இன்னும் சுவை கூடுதல் ஆகும். முன்பெல்லாம் பச்சைமிளகாயைக் கடித்துக் கொண்டும் பழைய சோறு உண்பார்கள்.

பழைய சோறு தண்ணீர் ஊற்றிவைத்த ஆறில் இருந்து பன்னிரண்டு மணிநேரத்துக்குப் பின்னால் அதை முறைப்படி உப்பும் இருந்தால் மோரோ தயிரோ கலந்து கலக்கிக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்துப் போதுமான நேரத்துக்குப்பின்னால் சாப்பிட்டால் அதன்சுவையை வர்ணிக்கவே முடியாது.

இது அந்தக்காலத்தில் ஏழை மக்களின் மலிவான உணவாகும். 

சமைத்த உணவைவிட இது கூடுதல் சத்துக்களைக் கொண்டது. எளிதில் செரிக்கக்கூடியது. இயற்கை உணவுக்கு நிகரானது. 

அந்தக் காலத்தில் கடுமையாக உழைக்கும் ஏழைகளும் உழைப்பாளிகளும் விவசாயிகளும் பழைய சோறுதான் சாப்பிட்டு வாழ்ந்தார்கள் என்றால் அதன் சிறப்பை நன்கு உணரலாம்!

அந்தக் காலத்தில் காலை உணவு உண்ணும் நேரத்தைப் பழைய சோத்து நேரம் என்றுதான் கிராமங்களில் சொல்வார்கள்.

பழைய சோற்று வகைகளிலேயே கம்புதான் மிகுந்த மணத்துடனும் சுவையுடனும் முதலிடம் வகிக்கிறது. அதனால்தான் கம்மங்கூழ் பானைகளில் வைத்து தெருவோரங்களில் கூட விற்றபனை செய்யப்படுகிறது.

பழைய சோற்றில் உள்ள சிறப்புகளைத் தனிக் கட்டுரையில் விளக்குவதுதூன் சிறப்பாக இருக்கும். அது ஒருவகையில் மருத்துவகுணமும் இயற்கைத் தன்மையும் கொண்டதாக இருப்பதால் சமைக்கப்படும் எந்த ஒரு உயர்ந்த வகை உணவை விடவும் ஒப்பு நோக்கில் உடல் நலனுக்கு ஏற்றதும் மிகவும் செலவு குறைந்ததும் ஆகும்.

மற்ற உணவை உண்டால் தாகம் எடுக்கும். ஆனால் பழைய சோறு உண்டால் தாகத்தைப் போக்கும்.

பழைய சோற்றை மறக்கவேண்டாமே!


======================================================================
Subash Krishnasamyஇயற்கை உணவும் இனிய வாழ்வும்
March 23, 2012 

உழவும் விதைப்பும்
================== 

கிராமப் புறங்களில் உள்ள முப்பது வயதுக்குக் குறைவான வயதுடைய இளைஞர்களில் பெரும்பாலோருக்கு ஏர் பிடிக்கத் தெரியாது என்பதும் விதை விதைக்கத் தெரியாது என்பதும் கசப்பான உண்மையாகும்!

ஏர் பிடிக்கத் தெரியாமல் போனதற்கு காரணம் கால் நடைகளின் பயன்பாடு குறைந்துபோனதும் அவற்றிடம் வேலை பழக்கவும் வேலை வாங்கவும் ஆட்கள் இல்லை என்பதும் ஆகும்.

விதை விதைக்கத் தெரியாமல்போனதற்குக் காரணம் மானாவாரி விவசாயமும் விவசாயி விதை சேமித்து வைக்கும் பழக்கமும் ஒழிந்துபோனதே ஆகும்!

இதன் விளைவாக அளவுக்கு மிஞ்சிய இயந்திரங்கள், ரசாயன உரம், பூசிக் கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாட்டால் நிலங்கள் களர்த் தன்மைக்கு மாறிவருகின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்! 

இது எங்குபோய் முடியுமோ என்று நினைத்தால் அச்சமாக உள்ளது!

http://www.facebook.com/photo.php?fbid=318998568167829&set=o.139649789477115&type=1&theater

=================================================================No comments:

Post a Comment