ss

Monday, April 8, 2013

விவசாயம் ( 51 )


பயிரும் பட்டமும்

நண்பர்களே!

விவசாயத்தில் முன்பெல்லாம் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அதேபோல ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.

ஆதாவது வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.

ஆதாவது ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவைற்றைச் சாகுபடி செய்வார்கள். 

அதுதவிர மார்கழிப்பட்டம் மாசிப்பட்டம் சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்கள் தேதிகளைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்
                           

நான்கூட சிறு வயதில் எங்களுடைய நிலத்தில் ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை மார்கழி மாதங்களில் அறுவடை செய்ததையும் மீதிப் பாதி நிலத்தில் மாசி பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்ததையும் அறிவேன்!

அதேபோல மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும் சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வார்கள். ஒரே பயிரைத் தொடர்ந்து இரண்டாம் முறை யாராவது சாகுபடி செய்தால் நிந்தனைக்கு ஆளாவார்கள்!

ஆனால் தற்காலத்தில் பட்டத்துக்கும் ஒரே பயிரை மீண்டும் அதே நிலத்தில் சாகுபடி செய்யக்கூடாது என்பதற்கும் முக்கியத்தும் குறைந்து வருகிறது.

முன்னர் ஒரு பட்டத்தில் என்ன பயிர்கள் எல்லாம் நன்கு வருமோ அந்தப்பயிர்களைப் பயிர் செய்வதும் அப்படிச் செய்வதற்கு முந்தைய வருடத்தின் அனுபவத்தை வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்வதுமான பழக்கம் இருந்தது. 

அதனால் பயிர்கள் பட்டத்துக்கேற்ற முறையிலும். அதேசமயம் ஒரே பயிரைத் திரும்பச் செய்வதும் தவிச்கப்பட்டது.

ஆனால் தற்காலத்தில் அதிகமாகப் பாசன விவசாயம் செய்யப்படுவதால் எந்தப்பட்டம் என்ன பயிர் என்பதற்குப் பதிலாக எந்த சீசனில் என்ன பயிர் செய்தால் என்ன விலை கிடைக்கும் என்ற வர்த்தக மனப்பான்மை மேலோங்கி வருகிறது.

அதன் காரணமாக பட்டம் பார்த்து பயிர் செய்வதற்குப் பதிலாக எல்லாப் பட்டத்திலும் எல்லாப் பயிர்களும் பயிர் செய்ய முயற்சிக்கிறார்கள். 

அதன்காரமாக ஒரு பயிரைத் திரும்பவும் அதே நிலத்தில் ஏன் பயிர் செய்யக்கூhது என்று முன்னோர்கள் சொன்னார்களோ ஏன் பட்டம் மாறிப் பயிர் செய்யக்கூடாது என்று சொன்னார்களோ அந்தக் காரணங்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது.

ஒரு நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும் அடுத்து அதேபயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது. 

எந்த ஒரு உயிரினமும் தனது கழிவுகளைத் தானே விரும்புவது இல்லை! மனிதரும் கால்நடைகளும்கூட அப்படியே! 

ஆனால் மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை! 

நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை! மாறாக கிருமிகளை அழிகின்றன. 

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை! காரணம் இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன. 

பயிர்கள் மாற்றிச் சாகுபடி செய்வதால் மட்டும் அல்ல பட்டத்துக்குத் தகுந்த பயிர் சாகுபடி செய்வதாலும் இந்த நன்மைகள் கிடைக்கின்றன. 

ஆனால் இந்தப் பாரம்பரியப் பாதுகாப்பு முறைகள் உதாசீனப்படுத்தப்படுவதால் பயிர்களைத் தாக்கும் நோய்களும் நோய்க்கிருமிகளும் எல்லாக் காலங்களிலும் நிலத்தில் தங்கிப் பயிர்களைப் பாதிப்பதைத் தடுக்க முடிவது இல்லை!

அதன் காரணமாகத் தேவையில்லாமல் வேதி உரங்ளையும் பூச்சிக்கொல்லிகiளையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

அதன் காரணமாக விவசாயத்திற்கான செலவினங்கள் மட்டுமீறிப் போவதும் மகசூல் குறைபாடு ஏற்படுவதும் பேரிழப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியாமல் போகிறது.

அதுமட்டுமல்ல வேதிப்பயன்பாட்டாலும் வருடம் முழுக்க நோய்க்கிருமிகளின் பாதிப்பு இருப்பதாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் கேடு விளைகிறது.

ஆகவே சரியான பட்டத்தில் சரியான பயிர்களைச் செய்வதும் ஒரே பயிரைத் தீரும்பத் திரும்ப ஒரே நிலத்தில் பயிர் செய்வதைத் தவிர்த்துப் பயிர் சழற்சியைப் பயன்படுத்துவதும் சரியான விவசாய முறைகள் ஆகும்! 

1 comment:

  1. விவசாயிகள் அறிய வேண்டிய விளக்கமான விவசாய முறைகள் ஐயா... நன்றி...

    ReplyDelete