ss

Wednesday, April 10, 2013

விவசாயம் ( 52 )


ஒரு கூட்டுப் பண்ணைக்கு மாதிரித் திட்டம்! 


==============================

அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே! 

நகர்ப்புறங்களில் வேலையில் இருப்பவர்கள், வர்த்தகம் முதலான சொந்தத் தொழிலில் இருப்பவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இன்னும் பல்வேறு தரப்பிலும் உள்ள வருவாய் நிறைந்த அல்லது குறைந்த பணியில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு குணம் உண்டு. ஆதாவது தாங்கள் இயற்கையைவிட்டு விலகிப் பண வருவாய் ஒன்றே குறிக்கோளாக வாழ்கிறோம். வாழ்நாளில் ஒரு காலத்திலாவது அழகான ஒரு சிறு தோட்டம் வாங்கி இயற்கைச் சூழலில் வாழவேண்டும் என்பதே அது!

ஆனால் எத்தனை பேருக்கு இது சாத்தியம்? எதனால் சாத்தியமில்லை? முதலில் யோசிப்போமே!

ஒரு அழகான கிராமம். அருகில் ஆறும் மலையும் இருக்கும். நகரவாடையோ தொழில்நிறுவனங்கள் வெளியிடும் நச்சுப்பொருட்களோ இல்லாத சுத்தமான சுற்றுச்சூழல். அங்கு ஒரு பண்ணை. அதன் நடுவே ஒரு அழகான பண்ணைவீடு. அங்கு அனைத்துவகையான காய் கனிதரும் மரங்களும் செடி கொடிவகைகளும் பூத்துக் காய்த்துக் குலுங்கி நிற்கின்றன.

அங்கே பண்ணை வீட்டில் அனைத்துவசதிகளும் உள்ளன. விருந்தினர் தங்குவதற்கான அழகான குடில்கள் இருக்கின்றன. விளையாட்டுத் திடல்களும் நீச்சல்குளமும்கூட உள்ளன. அந்தப் பண்ணையைப் பராமரிக்கும் தொழிலாளர்கள் வசிப்பிடங்கள் தனியாக உள்ளன.

பண்ணையின் சொந்தக்காரர்களில் யார் எப்போது வந்தாலும் நிம்மதியாக ஓய்வெடுக்கவும் பொழுதுபோக்கு விளையாட்டுக்களில் ஈடுபடவுமான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து வெளியிடங்கள் எங்கு செல்லவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள வாகனவசதி தயார் நிலையில் எபபோதும் இருக்கும்.

இத்தனை ஏற்பாடுகளுடன் அங்கு முன்னோடி விவசாயமும் சிறப்பாக ஒருபகுதியில் நடந்துகொண்டிருக்கும்.

நவீன விவசாயத்துக்குத் தேவையான இயந்திர சாதனங்களும் அதை இயக்குவதற்கான ஆட்களும் இருப்பார்கள்.

பெரிய பால் பண்ணை ஒன்று இருக்கும்.

பண்ணையின் சொந்தக்காரர்களில் யார் அங்கு இருந்தாலும் இல்லாவிடடாலும் அனைத்து வேலைகளும் சிறப்பாக நடக்க எல்லா ஏற்பாடுகளும் நிரந்தரமாகச் செய்யப்பட்டு சொந்தக்காரர்களில் விவசாயத்தில் நிபுணத்துவம் உள்ள ஒருவர் கண்காணிப்பில் இயங்கிக்கொண்டிருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு சூழலை தனிப்பட்ட ஒருவரால் உருவாக்கி அதை அனுபவிக்க முடியுமா? முடியாது. ஆனால் பலர் சேர்ந்தால் ஒரு பண்ணையை உருவாக்கி லாபகரமாக நடத்துவதோடு வாழ்க்கையை அனுபவித்து வாழலாம் என்பதே இந்தத் திட்டத்தின் உயரியநோக்கமாகும்.

குறைந்தது நூறு ஏக்கராவது இருந்தால்தான் எல்லாவசதிகளையும் கொண்ட நவீனப் பண்ணையாக இருக்கும் என்பது எனது கருத்து.

தவிர இத்தகைய பண்ணைகளை சோதனைமுறையில் அமைக்கும்போதே அந்தப் பண்ணை கொடுக்கும் வரவை வைத்துத்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களைக் கொண்டு செய்வது சரியாக இருக்காது என்று எண்ணுகிறேன்.

ஆதாவது தங்களிடம் உபரியாக உள்ள துகையை வங்கியில் போடுவதற்குப் பதிலாக இதில் முதலீடு செய்தால் அதன் மதிப்பைக் கூட்டும்போது வங்கியைவிட கூடுதல் ஆதாயம் கிடைக்கும் அதே சமயம் தங்களின் பண்ணைமூலம் இயற்கைச் சூழலில் வாழும் வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்கிற நோக்கத்தில் முதலீடு செய்பவர்களாக இருக்கவேண்டும்.

அதுதவிர ஒரு கூட்டமைப்பின் பெயரால் நிலம் வாங்குவது உட்பட அனைத்தையும் செய்யவேண்டும் . அந்தச் சொத்துக்கள் பொதுவில் இருக்கவேண்டும். யார் எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ அதற்கு ஏற்ற விகிதத்தில் அவரின் சொத்துரிமைப்பங்கு இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் பண்ணை மதிப்பிடப்பட்டு அடுத்த ஒரு வருடத்துக்கு யார் விலகவிரும்பினாலும் அந்தப்பண்ணையில் ஏற்கனவே சேர்ந்துள்ளவர்கள் யார் வாங்க விரும்பினாலும் அவர்களோ அல்லது போதுவாகவோ நிர்ணயித்துள்ள விலைக்கு விற்பவரிடம் இருந்து வாங்கிக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஏல முறையில் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பிரித்தோ மொத்தமாகவோ வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெளியாருக்கு அனுமதி இல்லை. அப்படி அனுமதிப்பது என்றாலோ புதிதாக யாரையாவது சேர்ப்பதேன்றாலோ பண்ணையின் அங்கீகரிக்கப்பட்ட குழுவில்தான் பொதுவாகத்தான் முடிவு செய்யவேண்டும்!

ஒவ்வொருவருக்கும் உரிமைமட்டுமே இருக்கும். சொத்து தனித் தனியாக இருக்காது!

குடியிருப்புகள்கூட பொதுவில்தான் இருக்கவேண்டும். அங்கேயே வசிப்பவர்கள் அதைப்  பயன்படுத்திக் கொள்ளலாம்.

தாற்காலிகமாகத் தங்கிச் செல்லும் உறுப்பினர்களுக்கு அனைத்து வசதிகளுடன் விடுமுறைக்கால ஓயவில்லங்கள் தனியாக இருக்கும்.

அனைத்து உரிமைகளும் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருக்கும். ஆதாயம் மட்டும் அவரவர் பங்குக்கு ஏற்ப இருக்கும்.

இன்னும் விரிவான திட்டங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நண்பர்களே!

வருங்காலத்தில் தனி நபர்கள் வெற்றிகரமாக விவசாயம் செய்வது அவரவர்களின் பிரத்தியேகத் திறமை, அனுபவம், வாய்ப்புகளைப் பொறுத்தது. வெற்றி அடைபவர்கள் மிகவும் குறைவாகவும் தோல்வி அடைபவர்கள் அதிகமாகவும் இருக்கும்.!

ஆனால் கூட்டுப்பண்ணை என்பது அளவில் சிறிதாக இருந்தால் முதலீடு செய்பவர்களுக்குக் கட்டுபடி ஆகாது. அளவில் பெரியதாக இருந்தால் சந்தைப்படுத்தல் உட்பட லாபகரமாகச் செய்யமுடியும்.

என்னுடைய எண்ணப்படி தலா ஐம்பதுலட்சம் என்கிற அளவு பத்துப்பேராவது சேர்ந்தால்தான் சுமார் நூறு ஏக்கரில் பண்ணை உருவாக்கமுடியும் என்று துவக்கத்தில் நினைத்தேன்.. ஆனால் சாதாரண வசதியுள்ள இயற்கை வேளாண்மையில் நாட்டமுள்ள நண்பர்களின் பங்களிப்பை முன்னிட்டு பத்து லட்சமாகவும் இறுதியில் அது ஐந்து லட்சமாக மாற்றப்பட்டது!

பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பண்ணைகள் உருவாகப் போகின்றன. அதனால் இப்போது நல்ல பண்ணையாகத் துவங்கினால் பிற்காலத்தில் முன்னோடிப்பண்ணையாகத் திகழ முடியும்.

ஆனால்  அத்தகைய முதலீடு செய்யக்கூடிய நண்பர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே  உறுதி செய்ய முடியும்! 

என்னைப்போன்ற வசதியற்றவர்கள் ஒத்துழைப்பும் ஆலோசனையும் வழங்கமுடியுமே தவிர முதலீடு செய்ய முடியாது!

இதுவே ஒரு பெரும் பணக்காரர் முன்முயற்சி எடுத்தால் தன்னைப்போல் சிலரைச் சேர்த்துக்கொண்டு ஆயிரம் ஏக்கர் பண்ணையை உருவாக்கமுடியும். ஆனால் நாம் சிறு பண்ணைக்கே சரியான நிலைபாட்டுக்கு வரமுடியவில்லை.

இதன்காரணமாகவே வருங்காலத்தில் தவிர்க்கமுடியாதபடி பெரும்பணக்காரர்கள் கையில் விவசாயம் விழப்போகிறது.


நிலம் வாங்கும் முன் கவனிக்க வேண்டுவன....
=================================

களர் மற்றும் நிலத்தடி உப்பு நீர் இவையிரண்டும இல்லாத பகுதியாகவும் நிலத்தடி நீர்வளம் மிக்கபகுதியாகவும் விலை மலிவாகவும் இருக்குமானால் கூட்டுமுறையில் பெரும் பண்ணை உருவாக்க தகுந்த பகுதியாகக் கொள்ளலாம்.

நாம் திட்டமிடும் பகுதி மழையளவு கூடுதலாகவும் மண்வளம் மிக்கதாகவும் விலை மலிவாகவும் இருக்கவேண்டும் !

இந்த மாதிரிப் பண்ணைகள் உருவாக்கும்போது வாங்கும் நிலத்தின் மதிப்பைபோல் இரண்டுமடங்கு மற்ற செலவுகளுக்காக செய்யவேண்டிவரும்.

ஆதாவது நிலத்தடி நீராதாரங்களை மேலே கொண்டுவருதல், நிலமேம்பாடு, பண்ணை இல்லங்கள், வாகனங்கள், வேளாண் பயன்பாட்டு இயந்திரங்கள், வேலி அமைத்தல் முதல்கட்ட விவசாயப்பணிகள், நிரந்தர வருவாய் வரும் வரைக்குமான செலவுகள், முதலானவற்றுக்குக் கணிசமான நிதியாதாரங்கள் இருப்பில் இருக்கவேண்டும்.

செலவுகள் திட்டவட்டமானது. ஆனால் வரவு என்பது நீக்குப்போக்கானது. நில வருவாயை சார்ந்து குறிப்பிட்டகாலம்வரை (சுமார் ஐந்து வருடங்கள்) இருக்கக்கூடாது.

தானியப் பயிர்களை விட மரவகைகளுக்கும் காய்கறி விவசாயத்துக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

எந்த வரட்சிக்காலமும் பாதிப்பை உண்டுபண்ணாதபடிக்குத் திட்டமிடல் இருக்கவேண்டும்!

பண்ணையை உருவாக்கும்போதே மழைநீர் சேகரிப்புக்கு ஏதுவான இடமா என்பது கணக்கில் கொள்ளப்படவேண்டும்.

மொத்தப் பரப்பில் குறைந்தது ஐந்து சதவிகிதமாவது பண்ணைக் குட்டைக்காக ஒதுக்கவேண்டும்.

பண்ணிக் குட்டைகளுக்கு நீராதாரம் வெளியில் இருந்தும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும்படியான பகுதிகளில் பண்ணை அமைந்தால் சிறப்பாக இருக்கும். 

எல்லாவற்றுக்கும் மேலாக வாங்கும்போதே தேவையான அளவு வாங்காமல் விட்டுவிட்டால் அடுத்து வாங்க எண்ணும்போது அக்கம் பக்கம் வாங்காமல் விட்ட நிலங்களுக்குப் பலமடங்கு விலை கொடுக்கவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்

மேலும் கவனிக்கவேண்டிய கூடுதலான அம்சங்கள்:
===============================================

பண்ணையின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் யார் எந்த முறையில் பயன்பட முடியுமோ அந்த முறையில் பயன்படலாம்! நேரடியாகத் தங்கி உழைப்பவர்கள் உழைக்கலாம். நிர்வாகத்தை நடத்தும் திறன் உள்ளவர்கள் நடத்தலாம். போடும் கொள்முதலுக்குத் தக்க அளவு பண்ணைச் சொத்துக்களில் பங்கு இருக்கும்.

இயற்கை வேளாண்மையும் மரம் வளர்ப்பும் உயர்ரக கால்நடை வளர்ப்பும் பால் பண்ணையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்! மற்ற பாசனப் பயிர்களும் வாய்ப்புகளை அனுசரித்துச் செய்யப்படும்!

பண்ணையின் பங்குதாரர்கள் எங்கிருந்தாலும் பண்ணையின் நடவடிக்கைகளில் பங்குகொல்ளலாம்.

பண்ணையின் நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கப்படும் ஒரு குழு கவனிக்கும். அவர்கள் பங்குதாரர்களாக மட்டும் அல்லாமல் ஊழியர்யர்களாகவும் செயல்பட்டு ஊதியம் பெறலாம்!

ஒவ்வொரு வருடமும் பண்ணைக்கு ஒரு மதிப்பு நிர்ணயிக்கப்படும்! யாராவது பண்ணையில் இருந்து விலக அவசியம் ஏற்பட்டால் அந்த நிர்ணய மதிப்பைப் பெற்றுக்கொண்டு விலகலாம்! அந்தப் பங்கை யாருக்காவது கொடுக்கலாமா அல்லது இருக்கும் மற்ற பங்குதாரர்களே வைத்துக் கொள்ளலாமா என்பதை அனைவரும் சேர்ந்தே முடிவெடுக்கப்படும்!

நிர்ணய மதிப்பைவிடக் கூடுதலாகக் கொடுக்க ஒரு உறுப்பினர் விரும்பினால் முன்னர் சொன்னது போல உறுப்பினர்கள் இடையே ஏல முறையில் பிரித்து மொத்தமாகவோ விதிப்படி வாங்கிக்கொள்ளலாம். 

 ஒருவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பினபடி தங்களின் பங்கை வெளியாருக்கு விற்க முடியாது! பண்ணை நடவடிக்கைகளைத் தடுக்கவும் முடியாது! ஆனால் பண்ணை சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களும் வரவு செலவும் பற்றி எந்த நிமிடமும் யார் வேண்டுமானாலும் சோதனை செய்யலாம்!

பண்ணைக்கென விதிகள் வகுக்கப்பட்டு அது பாரபட்சமின்றி கடைப்பிடிக்கப்படும்

நிச்சயமாக இந்த உத்தேசப் பண்ணை யாரொருவருடைய தனிப்பட்ட யோக்கியதாம்சங்களையோ தயவையோ சார்ந்து இருக்கக்கூடாது! அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் இருக்கும்! 

தவறான நபர்கள் நிர்ணய மதிப்பைப் பெற்றுக்கொண்டு விலகமட்டுமே முடியும். சீர்குலைக்க முடியாது!

முதலீடு அதிகம் செய்யக்கூடியவர்கள் இருந்தால் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தாலே போதுமானது. ஆனால் முதலீடு குறைவாகச் செய்யும் உறுப்பினர்களாக இருந்தால் கூடுதலான உறுப்பினர்கள் வேண்டும்.

பல விவசாயிகள் ஒன்று சேர்ந்து கூட்டாக விவசாயம் செய்ய நினைத்தாலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உரிமையாக நிலம் இருப்பதால் எல்லைகளும் இருப்பதால் பூமியின் தரமும் நீர்வளமும் வேறுபடுவதால் மனமாச்சர்யமின்றி விவசாயம் செய்ய முடியாது! பண்ணைக்குட்டைகள் தனித் தனியாக அமைக்க முடியாது.

ஆனால் நமது கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் ஒவ்வொரு அங்குலமும் அனைவருக்கும் சொந்தமானதாகும்! அதில் ஈடுபாடு காட்டுமளவு சிறந்த பயன் அனைவருக்கும் கிடைக்கும்!

பெறும் பண்ணையாக உருவெடுக்கும்போது அதில் விளையும் அனைத்துப் பொருட்களையும் மதிப்புக் கூட்டி விற்பதற்கான ஏற்பாடுகளையும் அங்கேயே செய்ய முடியும்!

எல்லாவசதிகளும் பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட இடம்பெறும் ஒரு பண்ணையைத் தனிநபர்கள் உருவாக்க முடியாது! ஆனால் கூட்டுப் பண்ணையாக இருப்பதால் குறைந்த வசதி உடையவர்களும் தாங்கள் கனவு காணும் ஒரு அற்ப்புத உலகில் வாழ்ந்து பார்க்கமுடியும்! உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தனது தாய்வீடாகத் தங்கள் பண்ணையை நினைத்து மகிழ முடியும்!

குறைந்த பட்ச முதலீடு ஐந்த லட்சமாக இருக்க வேண்டும்.! அதிகம் முதலீடு செய்பவர்கள் அதற்கு ஈடான பங்கைப் பெறலாம்!

அத்தனைபேரும் ஒரே மாதிரி முதலீடு செய்ய அவசியம் இல்லை! முதலீட்டுக்கு இணையாகப் பங்குகள் இருக்கும்! ஆனால் பண்ணையில் அனைவருக்கும் பாகுபாடற்ற மரியாதை இருக்கும். வரவினம் மட்டும் முதலீட்டுக்குத் தக்கபடி மாறுபடும்!

நிலத்தின் மதிப்பும் பரப்பும் அதற்குமேல் செய்யப்படும் அபிவிருத்தி வேலைகளும் என்ன என்பதும் எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதும் தெரியாமல் முன்கூட்டி ஏக்கர் கணக்கைச் சொல்ல முடியாதல்லவா? ஒரு ஏக்கர் இரண்டு லட்ச ரூபாய்க்கு உள்ளாக நிலம் வாங்குவதென்பதும் அதற்குமேல் இரண்டுலட்ச ரூபாய்க்கு அபிவிருத்திப் பணிகள் செய்வதென்பதும் திட்டம்! பண்ணைக்கான மொத்த செலவுகளில் யார் எவ்வளவு பங்கேற்கிரார்களோ அதற்குத்தக்கவாறு பண்ணையின் நிலம் மற்றும் சொத்துக்களிலும் பங்கு வந்து விடுகிறது! வரவு செலவும் பண இருப்பும் அதில் அடங்கும்!

மற்ற தொழில்களைப்போல் விவசாய வருவாயை முன்கூட்டியே திட்டமிட முடியாது! விவசாய வருமானம் என்பது நில வளம், நீர்வளம், மழையளவு, பராமரிப்புப் பணிகள், நோய்கள், சந்தை , எல்லாவற்றுக்கும் மேலாக உழைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது!

விவசாய நிலத்துக்காக நாம் எவ்வளவு துகை செலவு செய்கிறோமோ அதிலிருந்து கூடும் நிலமதிப்புதான் உத்திரவாதமான குறைந்தபட்ச வருவாய் ஆகும் .அதற்குமேல் கூடுதல் வருவாய் என்பது நிலையானது அல்ல! குறையவோ கூடவோ மிக அதிகமாகவோகூட இருக்கலாம். சில நேரங்களில் இழப்பும்கூட ஏற்படலாம்!

வங்கியில் பணம் நிறைய சேமிப்பு வைத்திருப்பவர்களும் உடனடியாக அதைச் சார்ந்த வரவினத்தை எதிர்பார்க்காமல் நீண்ட கால சேமிப்பாக நினைப்பவர்களும் சொந்தமாக நினைத்தபோது சென்று தங்கும்படியான ஒரு சொந்தப் பண்ணை வேண்டும் என்று நினைப்பவர்களும் மட்டுமே இதில் ஈடுபட முடியும்! உடனடி ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்கள் இப்படி ஒரு கனவு காண முடியாது!

பெரும்பாலோர் விவசாய அனுபவம் இல்லாதவர்களாகவும் நல்லெண்ணம் மட்டுமே உடையவர்களாகவும் இருப்பதால் இதில் கொஞ்சம் பேராவது விவசாய அனுபவம் மிக்கவர்களாக இருப்பது நல்லது!

காரணம் அங்கு நிரந்தரமாகத் தங்கிப் பணிகளைக் கவனிக்க பங்குதாரர்களில் சிலர் தயாராக வேண்டும். பயிற்சி பெறவும் வேண்டும். 

 புதிதாக ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்றால் முந்தைய பல மரபுகளை மீறித்தான் ஆக வேண்டும்! அப்படி முயற்சிக்கும்போது வழக்கமான நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு ஆதாயநோக்கில் போட்டிபோட முடியாது! ஆனால் தூரப் பார்வையில் சிந்தித்தால் அதன் அருமை தெரியும்! அப்படித் தூரப் பார்வை உடையவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்!

பங்கு மார்கெட் அடிப்படையிலான நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டு பல வருடங்களுக்குப் பின்னால் மார்கெட் சரிவு என்ற பெயரால் போட்ட முதல்கூட கைக்கு வராமல் போகின்ற நிலையை எண்ணற்றவர்கள் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்! 

ஆனால் இதில் போடும் முதலீடு அழிவற்றது! மதிப்பு உயரக்கூடியது! அதற்கு மேல் வரும் வரவினம் கூடக் குறைய இருந்தாலும் தவறு கிடையாதே?....இயற்கைச் சூழலில் தனிப்பட்ட ஒருவரால் உருவாக்க முடியாத வசதிகளை அனுபவிப்பதுதான் இதன் சிறப்பாகக் கருத வேண்டும்!

வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிகளே கட்டுபடியாகாமல் தவிக்கும் நிலையில் அனுபவம் இல்லாதவர்கள் வருவாயில் எப்படிப் போட்டிபோட்டுச் சாதனை நிகழ்த்த முடியும்?.முடியும்! அதற்குக் காலம் பிடிக்கும். பண்ணையை எந்த அளவு எந்த முறையில் சிறப்பாகக் கொண்டு செல்கிறோம் என்பதைப் பொறுத்ததே அது!

பணம் மீதமுள்ளவர்களின் முதலீடும் அறிவாளிகளின் அறிவாற்றலும் உழைப்பாளிகளின் உழைப்பும் எல்லாம் ஒன்றுப்படும்போதுதான் முயற்சி வெற்றி பெறும்!

விவசாயம் செய்பவர்களில் மற்றும் கால்நடைப் பண்ணை நடத்துபவர்களில் மிகப் பெரும்பாலோரின் வரவினம் என்பது அவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியம் மட்டுமே என்பதையும் அதையும் தாண்டி அபாரமான வெற்றி பெற்ற விவசாயிகளும் இருக்கிறார்கள் என்பதையும் புதிதாக விவசாயத்தில் இறங்க நினைப்பவர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்!

அந்தச் சாதனையாளர்களின் பட்டியலில் தாங்களும் இடம்பிடிக்கவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!

அதற்கும் மேல் உழைக்கும் விவசாயியாக இல்லாமல் முதலீடுமட்டும் செய்து ஆதாயம் அடைய நினைப்பவர்கள் என்ன மாதிரி முறையில் விவசாய நிலங்களைக் கையாள வேண்டும் என்பதையும் உணரவேண்டும்.!

அத்தகையவர்களைக் கொண்ட ஒரு கூட்டுப் பண்ணை அமைக்கும்போது அது எப்படிப் பட்டதாக இருக்க முடியும் என்பதையும் விரிவாக ஆராய வேண்டும்!

நாம் திட்ட மிடுவது சற்று வித்தியாசமானது நண்பர்களே! சில விஷயங்களை ஒவ்வொருவரும்  கருத்தில் கொள்ளவேண்டும் 

ஆதாவது பண்ணையை வாங்கும் நாளில் இருந்து எந்த ஒரு நாளில் வேண்டாம் என்று நினைத்தாலும் லாபத்துக்கு விற்கவேண்டும்!

அப்படிப்பட்ட பாதுகாப்பான நிலை நாம் போடும் முதலீட்டுக்கு இருக்கவேண்டும் என்றால் வாங்குவது மிக மலிவாக இருக்க வேண்டும்.

அதை சமப்படுத்திச் சுத்தம் செய்து கம்பி வேலிபோட்டாலே மதிப்புக் கூடி விடும்!

அதனைத் தொடர்ந்து ஆங்காங்கே ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டி வர்த்தக நோக்கு மின் இணைப்பு வாங்கி பண்ணை முழுக்கவும் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் பயன்தரும் மரக் கன்றுகள் நடவேண்டும்!

அப்போது மேலும் பண்ணையின் மதிப்பு கூடும்!

அதுவரை விவசாயம் என்று எதுவும் இருக்காது! ஆனால் மதிப்பு மட்டும் உயர்ந்திருக்கும்!

இந்த நிலையை அடைந்து விட்டால் அதன் பின்னால் மரக் கன்றுகளுக்கு இடையே என்ன மாதிரி விவசாயம் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ந்து அதை நடைமுறைப் படுத்தவேண்டும்!

இங்கு ஒரு கேள்வி எழலாம்!

ஆதாவது மரக் கன்றுகள் நட்டபின்னால் அதில் விவசாயம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழும்!

முடியும்!

காரணம் நாம் மரக்கன்றுகள் நடும்போது அடர்ந்த சோலையாக இல்லாமல் மிகுந்த இடைவெளி கொண்டதாக இருக்கும்!

அந்த இடைவெளிகள்தான் மேய்ச்சல் நிலங்களாகவும் விவசாய நிலங்களாகவும் இருக்கும்!

இந்த முறையைப் பின்பற்றினால் விவசாயமே செய்யாவிட்டாலும் பண்ணை லாபகரமாக இயங்கும்!....

மழையளவு ஏறக் குறைய இருந்தாலும் தாக்குப்பிடித்து பண்ணை பயனுள்ளதாக நடக்கும் விதத்தில்தான் திட்டமிடவேண்டும் நண்பர்களே!

சாதாரண விவசாயிகளைப்போல் ஒவ்வொரு போகமும் வாழ்வா சாவா என்ற போராட்டத்தால் தவிப்பதுபோல் ஒரு பெரிய கூட்டுப் பண்ணை தவிக்க முடியாது!

அங்கு தங்கி உழைப்பவர்களுக்கு நிச்சயம் ஊதியம் கிடைக்கும். அங்கு செய்யப்படும் வசதிகளை அனுபவிக்கலாம்.

மற்ற முதலீட்டாளர்கள்(உரிமையாளர்கள்) தங்களின் முதலீடு எந்த நிலையிலும் லாபகரமாக வெளிவரும் நிலையில் உள்ளது என்பதைக் குறைந்த பட்ச ஆதாயமாகக் கொள்ளவேண்டும்.

அவ்வப்போது அங்கு வந்து தங்கி அனுபவிப்பதையும் சொந்த விவசாய பணிகளில் பங்கெடுத்து அனுபவம் பெறுவதையும் இரண்டாவது ஆதாயமாகக் கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பண்ணை மதிப்பு கணிசமாக உயரும்போது அதை மூன்றாவது ஆதாயமாகக் கருதவேண்டும்.

பண்ணைமூலம் கிடைக்கும் விவசாய வருமானத்தை நான்காவது மற்றும் கடைசி ஆதாயமாகவும் கருதவேண்டும்!

காரணம் துவக்கத்தில் சில ஆண்டுகள் பண்ணை மதிப்புதான் உயருமே தவிர மரப் பயிர்களால் உடனடி வருவாய் கிடைக்காது!

தவிர மின் இணைப்பு பெறுவதற்கே சில வருடங்கள் ஆகும் என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும்! (அதனால்தான் மரக் கன்றுகள் போடவே வர்த்தக மின் இணைப்புப் பெறலாம் என்று சொன்னேன்) ஆனால் வர்த்தக மின் இணைப்பைப் பயன்படுத்தி பாசன விவசாயம் செய்தால் கட்டுபடி ஆகாது!

இந்தத் திட்டத்தில் சேரக்கூடிய நண்பர்களின் பட்டியலும் அவர்கள் பங்குகொள்ள சாத்தியப்படும் பங்குகளின் எண்ணிக்கையும் பட்டியல் இடப்பட வேண்டும். 

ஒவ்வொரு பங்கும் ஐந்து லட்சரூபாய் மதிப்பிலான யூனிட்டுகலாகக் கணக்கிடப்படவேண்டும்! 

நூறு யூனிட்டுகள் என்பதை இலக்காகக் கொள்ள வேண்டும்! 

அதிக யூனிட்டுகளை வாங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தால் உறுப்பினர் எண்ணிக்கையும் நிர்வாக வேலைகளும் குறைவாக இருக்கும். 

இத்தனை விஷயங்களையும் இன்னும் விடுபட்டுப்போயுள்ள ஏதாவது இருந்தாலும் அதுபற்றியும் அனைவரும் நன்கு ஆராய வேண்டும்.

பண்ணை அமையும் இடம், மண்ணின் தரம், மழை அளவு,  இயற்கைச் சூழல், மக்கள் நடமாட்டம், நிலம் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை, நிதி மேலாண்மை போன்ற பல விஷயங்கள் சார்பாக அனைவரும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்! 

வாழ்த்துக்கள் நண்பர்களே!


இணைப்பு 1: இப்போது நான் முன்வைத்துள்ள திட்டம் ஒரு கூட்டுப்பண்ணையை உருவாக்கவேண்டும் என்றால் அதற்காகக் கருத்தில்கொள்ளவேண்டிய அம்சங்கள் மட்டுமே நண்பர்களே!

அதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகத் திட்டமிடவேண்டும்!

முதலில் இப்போது சொல்லப்பட்டுள்ள விபரங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதன்பின்......

இந்தத் திட்டத்தைச் செயலாக்கப் போதுமான அளவு உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்களா என்பது முக்கியம்.

ஒரு கூட்டுப்பண்ணையை உருவாக்குமளவு பரஸ்பரம் அறிமுகம், நட்பு, ஒருமைப்பாடு வளர்ந்துள்ளதா என்பது முக்கியம்.

எடுக்கப்படும் முடிவின்படி பண்ணையை வாங்கவும் செயல்படுத்தவும் ஒரு நம்பகமான குழு தயாராக உள்ளதா என்பது முக்கியம்.

அவரவர் செய்ய நினைக்கும் முதலீடுகளை எப்படி யார் கையாளுவது என்பதற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஏற்பாடுகளும் சட்ட நிபுணர் ஆலோசனையும் வழிகாட்டுதலும் முக்கியம்....

நிரந்தரமாக உத்தேசக் கூட்டுப் பண்ணையில் தங்கி பண்ணை நடவடிக்கைகளைச் செயல் படுத்த யார்யார் தயாராக இருக்கிறார்கள் என்பதும் முக்கியம்!

பல நபர்களிடம் இருந்து பல விலைகளில் வாங்கி பண்ணையை ஒருங்கிணைக்க எது சிறந்த சட்டபூர்வ நடைமுறை என்பதையும் அறியவேண்டும்.\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இணைப்பு எண்: 2

நண்பர்களே!

நமது உதேசப் பண்ணையை வாய்ப்புள்ள சிலர்தான் இருந்து கவனிக்கப்போகிறார்கள்.

ஆனால் மற்றவர்களின் பணி முதலீடு செய்வதும் வருவாயைப் பகிர்ந்துகொள்வதும் மட்டும் அல்ல!

அன்றாடம் பண்ணை நடவடிக்கைகளை உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் கண்காணிக்கவும் அறிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் வழிநடத்தவும் உதவியாக கணினிப் பயன்பாட்டையும் இணையதள வசதியையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன்மூலம் தினசரிப் பண்ணை நடவடிக்கைகள் படங்கள்மூலமாகவும் வீடியோ மூலமாகவும் அனைவரும் காணலாம்!

அவ்வப்போது வீடியோ கான்பரன்சிங் மூலமாக பண்ணை நடவடிக்கைகள்பற்றி விவாதிக்கவும் செய்யலாம்.....

........இணைப்பு 3 :

நண்பர்களே!

உத்தேசக் கூட்டுப் பண்ணை தொடர்பான கருத்துக்களும் கேள்விகளும் உரையாடல்களும் தான் அந்தத் திசையில் பயணிக்க எந்த அளவு ஒருவர் தகுதியானவர் என்பதைத் தீர்மானிக்கும் அம்சமாகும்.

ஆனால் அந்த துவக்க அம்சத்திலேயே அதற்குத் தேவையான அளவில் பத்தில் ஒரு பங்குகூட நடக்கவில்லை!

இத்தனைக்கும் சிலர்தான் இதில் முனைப்பாக உள்ளனர்.

அப்படியானால் இன்னும் போதுமான நண்பர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டுத் தெளிவடைவது எப்போது?...

நாம் கூடுவதற்கு முன்னால் சில விஷயங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆதாவது.....

யார் யார் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்கள்?

அவர்கள் விரும்பும் யூனிட்டுகள் எவ்வளவு?

மொத்தம் சேருபவர்கள் எண்ணிக்கை போதுமானதாக உள்ளதா?

துவக்ககாலப் பணிகளைச் செய்ய யார் யார் தயாராக இருக்கிறார்கள்?

நிரந்தரமாக தாங்களோ தங்கள் பிரதிநிதிகளோ பண்ணையில் தங்க யார்யார் தயாராக உள்ளார்கள்?

நாம் விரும்பும் பட்ஜெட்டில் நாம் விரும்பும் தரத்தில் விற்பனை நிலங்கள் எங்கு உள்ளன?

நாம் நினைக்கின்ற விதிமுறைகளுடன் ஒரு கூட்டுப் பண்ணை உருவாக்க சட்டம் எந்த அளவு பொருத்தமாக உள்ளது?

வழக்கறிஞர்களின் கருத்து என்ன?

துவக்க நிலையில் யாருக்கும் எந்த ஐயத்துக்கும் இடம் இல்லாமல் நம்பகமான பணப் பரிவர்த்தனைக்கான வழிமுறைகள் என்ன?

முழு அளவில் பணம் திரட்டப்படாமல் நிலம் அக்ரிமென்ட் போன்ற நடவடிக்கைகளைச் செய்ய முடியுமா?

பண்ணையின் பெயரால் ஒவ்வொன்றும் செய்யப்படவேண்டும். அதற்கான பூர்வாங்க (சட்டபூர்வ பண்ணை உருவாக்கம்) நடவடிக்கைகளை யார் செய்வது?

துவக்க காலச் செலவுகளுக்கு திட்டம் என்ன?

இவற்றுக்கான பதில்கள் எல்லாம் கையில் இருந்தால் மட்டுமே அது பற்றிப் பேச முடியும்!

அதுவல்லாமல் பேசும் உரையாடல்கள் கருத்துக்களாக மட்டுமே இருக்கும். திட்டத்தை நோக்கிய பயணமாக இருக்காது!...

இணைப்பு - 4 - நண்பர்களே!

நான் சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு வங்கியின் Field officer ஐக் கலந்தாலோசித்தேன்.

கூட்டுப்பண்ணைக்கு வங்கிகள் உதவி செய்யுமா என்று கேட்டேன்.

அவர் அதற்கு விளக்கமாகப் பதில் அளித்தார். தேவைப்பட்டால் மீண்டும் விளக்குவதாகச் சொன்னார்! அவர் சொன்னது:

பண்ணைக்கு வங்கிகள் உதவி கிடைக்கும்.

பண்ணை நிலங்கள் தனித்தனியாக கிரையம் செய்யப்பட்டால் வழக்கமான வங்கி முறைப்படி தனி நபர் கடனாகத்தான் வழங்கப்படும். அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். எதற்க்காகக் கடன் என்பது குறிப்பிடப்பட்டு அதன்படி செலவுகள் செய்யப்பட வேண்டும்.

அதன்படி ஒருவர் பெயரால் பெறப்படும் கடன் அவர் நிலத்தில்தான் செலவு செய்யப்பட வேண்டும். பொதுவான ஒரு பகுதியில் செய்ய முடியாது.

அப்படிச் செய்யும்போது பொதுவான வாகனங்கள், பொதுக் கட்டிடங்கள், பொதுவான நீர் ஆதாரங்கள் இதையெல்லாம் உருவாக்க சாத்தியம் இல்லை.

தவிர ஒவ்வொரு செலவுக்கும் அல்லது திட்ட வேலைகளுக்கும் அனைவரும் வந்து கையெழுத்துச் செய்ய வேண்டும்.

ஆனால் ஒரு கம்பெனியாகப் பதிவு செய்து கம்பெனி பெயரில் பண்ணையையும் பதிவு செய்துகொண்டால் அதன் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பொருப்பாளர்கள் அனைத்து வேலைகளும் செய்ய முடியும்!

எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் பண்ணைக்கான நிலங்கள் கம்பெனி பெயரால் வாங்கியபின்பு அபிவிருத்திப் பணிகளுக்குத் தான் வங்கி உதவி செய்யும் .

இந்தத் தகவலோடு, ஆடிட்டர், வழக்கறிஞர் ஆகியோரையும் சந்தித்து சட்ட நடைமுறைகள்பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

நண்பர்கள் தங்களோடு தொடர்புடைய அத்தகைய நண்பர்கள் இருந்தால் கலந்தாலோசனை செய்து இங்கு சொல்லவும் நானும் அதுசம்பந்தமாக ஆலோசனை செய்கிறேன்.........................................................................

பண்ணையில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பண்ணை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் தங்களை இணைத்துக்கொள்வதே சிறந்ததாகும். அப்படி இல்லாத பட்சம் அது சம்பந்தமான அனுபவங்கள் கிடைக்காமல் அனுபவம் உள்ளவர்களையே சார்ந்திருக்க வேண்டி வரும். அதனால் விவசாயம் செய்தாலும் அதுபற்றிய நமது அனுபவங்களை மற்றவர்க்குச் சொல்லும் வாய்ப்பும் இல்லாமல் போகும்...

நாம் ஈடுபடும் துறை சம்பந்தப்பட்ட அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளாவிட்டால் நாளை வருங்காலத்தில் அதில் நமது சார்பாக பணியாற்றும் நண்பர்களின் செயல்பாடுகள்மேல் கண்காணிப்பைச் செலுத்த முடியாது! அது உண்மையில் பலவீனம் ஆகும்! அந்தப் பலவீனம் சந்தேகப் பேயை வளர்த்து எதிர்மறையாக நினைக்கவைக்கும்!...


நிலம் வாங்கிப் பயனடைவதில் இரண்டு முறைகள் உள்ளன!

முதல்முறை நிலையற்ற நீராதாரங்களை நம்பி ஏராளமான விலைகொடுத்து நிலம் வாங்கி அதில் எக்கச்சக்க செலவு செய்து அதிக வருவாய் காண்பது!

அதற்குச் செலவு அதிகம். வருவாய் நிலையற்றது.

காரணம் நீராதாரம் நிலையற்றது!

இரண்டாவது முறை மிகக் குறைந்த நீராதாரத்தை மட்டும் நம்பித் திட்டமிடுவது.

அப்போது குறைந்த விலைக்கு நிலம் வாங்கலாம். ஏராளமான செலவுகளை அநாவசியமாகச் செய்யாமல் அவசியமானத்தை மட்டும் செய்வதால் வருவாய் குறைவாய் இருந்தாலும் குறைந்த முதலீட்டில் கிடைக்கும்போது அதுதான் சிறந்த வருவாய் நிலையான வருவாய் ஆகிறது!

தவிர நிலம் பண்படுத்தி குறைந்த பட்ச வேலைகளைச் செய்தாலே அதன் மதிப்பு இரட்டிப்பாகிவிடும்.

நாம் வறட்சியைத் தாங்கி நிற்கும் மரவகைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.

அதன் பின்பு கிடைக்கும் நீரதாரத்துக்குத் தக்கபடிதான் விவசாய விரிவாக்கம் இருக்கும்.

பண்ணைக் குட்டைக்கு முக்கியத்துவம் தருவதால் ஓரளவு மழை பெய்தாலே நீர் வளம் அபிவிருத்தி ஆகும்.....

6 comments:

 1. பல பயனுள்ள தகவல்கள்...

  உங்களின் அனுபவங்கள் எங்களுக்கு பாடம்...

  நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! முகநூல் நண்பர்கள் இயற்கை வேளாண்மையில் நாட்டமுள்ள சிலர் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டுதலாக ஒரு திட்டம் தயாரிக்கும் முன் அது சம்பந்தமான எனது பதிவுகளைக் கோர்வையாக இங்கு பதிந்து வைத்தேன் நண்பரே! அதை மேலும் சீர்திருத்தி ஒரு முழுமையான திட்டமாக மாற்ற வேண்டும்.

   Delete
 2. வணக்கம் அய்யா.

  கூட்டுப்பண்ணை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் மீண்டும் வேறு ஒரு அழகிய வடிவில் உங்கள் மூலமாக உறுவாகி இருப்பதை கண்டு மகிழ்கின்றேன்.

  மிக அருமையாக திட்டமிட்டு இருகின்றிர்கள். இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன் அய்யா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி நண்பர் ஆர வி ஆர்!

   எந்த அளவு இதற்குப் பயன் இருக்கிறது என்று பார்ப்போம் நண்பரே! எப்படியோ வருங்காலத்துக்கு ஏற்ற சிந்தனைகளை விதைப்போம்!.....

   Delete
 3. முதலில் குறைந்த பட்ச எண்ணிக்கையான 5 நபர்களுடன் ஒரு ட்ரஸ்டாக பதிவு செய்யவேண்டும்.பின்னர் ஆட்களை சேர்த்துக் கொள்ளலாம். ட்ரஸ்ட்டின் விதிமுறைகளுடன் அரசாங்க சட்டதிட்டங்களை ஒட்டி நமது குறிக்கோளுடன் ஒரு ஆடிட்டர் மூலமாக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இடம் வாங்குவதைப் பற்றி யோசிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நல்லது! நன்றி நண்பரே!

   Delete