ss

Friday, May 24, 2013

தத்துவம் ( 12 )


அறிவியலின் புது எதிரிகள்!

அறிவியலை மூட நம்பிக்கை என்ற குடுக்கைக்குள் அடைத்தே தீருவது என்று உலகம் முழுக்கவும் பலவகையிலும் பலரும் கங்கணம் கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கியிருக்கிறார்கள் போல் உள்ளது.

இதில் தொலைகாட்சி முக்கியப் பங்கு ஆற்றுகிறது. மற்ற ஊடகங்களும் திட்டமிட்டே தீவிரமாக இறங்கி உள்ளன!

சமூக வலைத் தளங்களில் கண்மூடித்தனமாக இந்தப் பிரச்சாரங்கள் நடக்கின்றன! 

இவர்கள் அறிவியலை எதிர்ப்பது இல்லை! அறிவியலின் அற்புதங்களை விளக்கிக்கொண்டே அறிவியல் வேடம் தரித்துகொண்டு மூடநம்பிக்கைகளை அறிவியல் அடிப்படையானது என்று விளக்கி மக்களை முட்டாளடித்துக்கொண்டு உள்ளார்கள்.

பழங்கால மக்கள் நவீன அறிவியலை அறிந்திருந்தார்கள் என்பதும், காலப்பயணம்தான்தான் அறிவியல் பேரறிஞர்களுக்கு அறிவாற்றலை வழங்கி இருக்கலாம் என்பதும், மாயன்கள் வேற்றுக் கிரக வாசிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதும் சித்தர்கள் அணுத் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார்கள் என்பதும் , புராதன காலத்தில் விமானத் தொழில் நுட்பம் அறிந்திருந்தார்கள் என்பதும் அத்தகைய கட்டுக் கதைகளே! 

மூட நம்பிக்கைகளை நம்புபபவர்களைவிட அவற்றைப் பச்சையாகப் பிரச்சாரம் செய்பவர்களைவிட இந்த அறிவியல் வேடதாரிகள்தான்  அறிவியல் சிந்தனைகளுக்கு ஆபத்தானவர்கள்!...

மூடநம்பிக்கையாளர்கள் அறிவியல் சிந்தனைகளை  நேரடியாகக் கழுத்தை நெரிப்பவர்கள்.

ஆனால் இந்த அறிவியல் வேடதாரிகளோ அறிவியல் சிந்தனைகளுக்கு நண்பனாக நடித்துக் கொல்லுபவர்கள் !

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அறிவியலின் அத்தனை பயன்களையும் அனுபவித்துக்கொண்டே அறிவியல் எண்ணங்களைமட்டும் மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாகவே என்றென்றும் வைத்திருப்பார்கள்!...

இத்தகைய ஏமாற்று வேலைகளை முறியடித்து அறிவியல் சிந்தனைகளையும் அறிவியலுக்கு முரண்படாத ஆன்மிகத்தையும் வளர்க்கவேண்டியது அறிவாற்றல் மிக்க ஒவ்வொருவரின் கடமை ஆகும்!

--------------------------------------------------------------------

இது தொடர்பான விவாதத்தில் எனது பதில்கள்.....

கேள்வி: இந்தப் பதிவின் நோக்கம் இப்பொழுது இருப்பதை விட உயர்ந்தத் தொழில் நுட்பம் இருந்திருக்காது என்றப் பார்வை இந்தப் பதிவில் உள்ளது.

பதில்: வெறும் கை, கால்,பற்களால் போராடிக்கொண்டிருந்த ஆதிமனிதன் கரடு முரடான கற்களைப் பயன்படுத்தத் துவங்கியபோதே தொழில்நுட்பம் துவங்கி விட்டது!.

அதனால் தொழில்நுட்பம் இல்லாத காலம் என்று மனித பரிணாம வரலாற்றில் எதுவும் இல்லை!

ஆனால் ஒவ்வொரு காலகட்டத் தொழில் நுட்பமும் அதற்கு முந்தியதைவிட நவீனமாகவும் பின்தையதைவிடப் பழமையாகவும்தான் இருந்தன.

அதுதான் சாத்தியமும்கூட!

அதனால்தான் நவீன தொழில்நுட்பத்தைப் பண்டைய மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்கிறோம்.

கேள்வி: சில தொழில்நுட்பம் எதோ ஒருகாரணத்தால் மறையலாம்.. ப்ரம்மீடு போன்றவை தொழில் நுட்பம் இருந்தமைக்கு ஆதாரம். அவனுக்குப் ப்ரம்மீடுக்கான தேவை என்ன???

பதில்: தேவைகள் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை!

பிரமிடுக்கான தேவை இருந்தது.

அதைக் கட்டிமுடிப்பதர்க்கான மனித சக்தியும் அதைச் செய்விப்பதர்க்கான அதிகார அமைப்பும் இருந்ததால்தான் கட்டி முடிக்கப்பட்டது!

அதே சமயம் அது நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படவில்லை!

கேள்வி: எல்லாரையும் விட ஐன்ஸ்டீன் அறிவாளியாக இருந்திருக்கலாம்.. அவர் எதாவது ஒரு உபகரணம் உருவாக்கிப் பயன்படுத்தி அதை யாருக்கும் கற்பிக்காமல் சென்றிருந்தால் அவருடன் அந்தத் தொழில்நுட்பம் முடிந்து போயிருக்கும்..

பதில்: ஐன்ஸ்டீன் இல்லாமல் இருந்திருந்தாலும் இன்றைய உலகம் இன்றுள்ளதுபோல்தான் இருக்கும்!

ஒரு கொத்தனார் இல்லாவிட்டால் அவர்மூலம் கட்டப்பட்ட மாளிகை கட்டப்பட்டிருக்காது என்பது சரியல்ல!

கேள்வி: பிரமிடுக்கான தொழில்நுட்பம்  இன்று இல்லை. அப்போதைய பொருட்களைக்கொண்டு அவ்வளவு வலிமையாக இப்போது கட்ட முடியாது!

பதில்:இப்போதைய தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒரு பிரமிட்டை பழங்காலப் பிரமிட் போலவே வலிமையாகக் கட்ட நிச்சயம் முடியும்!

கேள்வி: இப்பொழுது எப்படி என்று எனக்குத் தெரியாது அனால் நிச்சயமாக 500 ஆண்டுகளுக்கு முன் முடியாது.

பதில்: ஏன் முடியாது? நிச்சயம் முடியும்! அந்த இடைக்காலத்தில் கண்டறிந்த கூடுதல் தொழில் நுட்பங்களின் துணையுடன் கொஞ்சம் குறைந்த பணிச் சுமையில் சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும்!

ஒவ்வொரு காலகட்டத் தொழில் நுட்பமும் அதற்கு முந்தியதைவிட நவீனமாகவும் பிந்தையதைவிடப் பழமையாகவும்தான் இருந்தன. என்று நான் சொன்னதை கணக்கில்கொண்டால் மட்டுமே அல்லது அது தவறு என்று மெய்ப்பித்தால் மட்டுமே சரியாகப் புரிந்துகொள்ள  முடியும்.

 பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுதான் வாழ்க்கை விதி! அதற்கு அறிவியல் தொழில் நுட்பம் விதிவிலக்கு அல்ல! அதனால் பழமை நவீனத்தைவிட மேம் பட்டதாக அல்லது இணையாக இருக்க முடியாது !

கேள்வி: தொழில்நுட்பம் படிப் படியாக வளரும் என்றால்.. ஒரு கேள்வி ப்ரம்மீடு காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி வளர்ந்தது என்பதை விளக்க முடியுமா?

பதில்: படிப்படியாக விளக்குவது முடியாத விஷயம் அல்ல!

ஆனால் வளர்ச்சியும் முன்னேற்றமும் படிப்படியாகத்தான் அனைத்துத் துறையிலும் நிகழ்கின்றன.

அது அதல பாதாளத்திலிருந்து ஒரே பாய்ச்சலாக துண்டித்துக்கொண்டு பாய்ந்து சென்று வேறொரு நிலையை அடைவதில்லை.

அடையவும் முடியாது!

ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படும் மாற்றத்துக்கு முன்னது காரணமாகவும் பின்னது விளைவாகவும் இருக்கும்! காரணம் பழமை! விளைவு புதுமை!

அப்படியொரு தொடர்பு இல்லாமல் இடைவெளி விட்டால் மனித நாகரிகம் பழைய காட்டுமிராண்டிக் காலத்திய நிலைக்குள் வீழ்ந்திருக்கவேண்டும்.

அப்படி விழவில்லை.

ஆகவே சீராக அல்லது வேகமாக முன்னேறித்தான் வருகிறோம்.




No comments:

Post a Comment