ss

Wednesday, May 29, 2013

தத்துவம் ( 14 )


தவறான நம்பிக்கையும் சரியான நம்பிக்கையும்

வாழ்க்கை என்பதே பல்வேறு விதமான நம்பிக்கைகளைகளால்தான் முன்னோக்கி செலுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நம்பிக்கைகள் எதுவும் அற்ற ஒரு மனிதர் உலகில் இருக்கமுடியாது. வாழவும் முடியாது. 

ஆனால் அனைவரின் நம்பிக்கையும் ஒரேமாதிரி இருப்பதில்லை. காரணம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை அனுபவங்களும் கற்ற கல்வியும் ஒவ்வொருவிதமான புரிதலைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.

அதில் சரியானதும் உண்டு தவறானதும் உண்டு.

நாம் செய்யவேண்டியதெல்லாம் எது சரியானது எது தவறானது என்று இனங்கண்டு பிரித்து அறிவதே!

இயற்கை விதிகளுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் வேதியியல் விதிகளுக்கும் உயிரியல் வாழ்க்கை விதிகளுக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் நடைமுறை அனுபவங்களுக்கும் எதுவெல்லாம் பொருந்துகிறதோ அவையெல்லாம் சரியான நம்பிக்கைகள்.

எந்த நம்பிக்கைகள் எல்லாம் அவற்றுக்குப் பொருந்தவில்லையோ அவையெல்லாம் தவறான நம்பிக்கைகள்.

உதாரணத்துக்குச் சிலவற்றை எடுத்துக்கொள்வோம்.

உயிரினங்களில் ஒன்றான பறவை வானத்தில் பறப்பதைப் பார்த்து இன்னொரு உயிரினமான மனிதன் தன்னால் பறக்க முடியவில்லையே என்று நினைக்கிறான்.

எதனால் பறவையால் பறக்க முடிகிறது, எதனால் தன்னால் பறக்க முடியவில்லை என்று ஆராய்கிறான்.

அப்போது அறிவியலி;ல் வளர்ந்துகொண்டிருந்த மனிதன் பறவையினால் தனது இறக்கைகளைக் கொண்டு தனது எடைக்கும் அதிகமான விசையைக் காற்றை நோக்கிக் கீழ்நோக்கிச் செலுத்துவதன் மூலம் புவியீர்ப்புக்கு எதிராக மேலெழும்பிப் பறக்க முடிகிறது. ஆனால் தனது உடலில் அத்தகைய அமைப்பு இல்லாததால் பறக்க முடியவில்லை என்பதை உணர்கிறான்.

அப்படி உணர்வதோடு ஒரு நம்பிக்கையும் கொள்கிறான்.

ஆதாவது தனது அறிவியல் தொழில் நுட்பத்தால் புவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்படும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தால் தானும் பறவையைப்போல் வானில் பறக்க முடியும் என்று நம்பிக்கை கொள்கிறான். 

அதுதான் நம்பிக்கை! அதுதான் சரியான நம்பிக்கை! 

காரணம் அந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக அறிவியல் கண்டுபிடிப்புகளின் பல்வேறு அம்சங்கள் துணைக்கு வருகின்றன. 

அதன் காரணமாக அந்தச் சிந்தனையின் வளர்ச்சிப்போக்கு நாளடைவில் அறிவியல் தொடர்பான ஆய்வுகளால் வெற்றிகரமாக நிறைவேறுகிறது.

அதே  சமயம் ஏதோ ஒரு தேவதையின் அருளால் பறவையால் விண்ணில் பறக்க முடிகிறது. தனக்கும் அத்தகைய ஒரு தேவைதையின் அருள் கிடைத்தால் விண்ணில் பறக்க முடியும் என்று நம்பினால் அது தவறான நம்பிக்கை! 

அப்படிபட்ட தேவதையின் அருளால் முற்காலத்தில் மக்கள் வானில் பறந்துகொண்டு இருந்தார்கள் என்று நம்பினால் அது தவறான நம்பிக்கை!

அதேபோல மனித உடலின் எந்தஒரு பகுதியில் நோய் வந்தாலும் அதைக் குணப்படுத்த சிகிச்சை முறைகளும் மருந்துகளும் இருப்பதால் இன்னும் கண்டறியப்படாத எந்த நோய்க்கும் எதிர்காலத்தில் நிச்சயம் மருத்துவம் வந்துவிடும் என்று நினைத்தால் அது சரியான நம்பிக்கை! 

ஆனால் செத்து கெட்டுப்போன உடலைக்கூட எதிர்காலத்தில் உயிர்ப்பித்து விடலாம் என்று ஒருவர் நினைத்தால் அது தவறான நம்பிக்கை. படைப்புக் கடவுளின் மற்றும் காக்கும் கடவுளின் அருள் இருந்தால் போதும் என்று நினைத்தாலும் அதுவும் தவறான நம்பிக்கைதான்! ! 

ஒரு விதையை அல்லது தாவரத்தின் ஒரு பாகத்தை வேறொரு இணக்கமான தாவரத்துடன் குறிப்பட்ட முறையில் இணைப்பதன் மூலம் பதுவகையான தாவரத்தை உருவாக்கலாம் என்று நம்பினால் அது சரியான நம்பிக்கை.

காரணம் அத்தகைய செயல்பாடுகள் இயற்கையில் உள்ளன. அதில் பலவற்றை ஏற்கனவே அறிந்திருக்கிறோம் என்பது ஆதாரம். அதனால்  இன்னும் அறியப்டாத இலக்குகளை அடைவோம் என்ற நம்பிக்கையில் பொருள் இருக்கிறது. உயிரினமும் அப்படியே! 

ஆனால் உலகில் உள்ள அத்தனையும் அணுக்களால் ஆனது. அவற்றின் குறிப்பிட்ட வகையான சேர்மானம்தான் அனைத்துப் பொருட்களாகவும் உயிர்களாகவும் காட்சி தருகிறது. ஆகையால் பூமியில் கிடைக்கிற கனிமங்களைக் கொண்டு அவறிறில் அடங்கியுள்ள அணுக்களைக் கொண்டு குறிப்பிட்ட முறையில் ஒன்று சேர்ப்பதன் மூலமாக ஒரு தாவரத்தையோ உயிரினத்தையோ அறிவியல் ஆய்வுக் கூடத்திலேயே உருவாக்கி விடலாம் என்று நினைத்தால் அது தவறான நம்பிக்கை! 

காரணம் உலக உயிரின வாழ்க்கை இயற்கைப் போக்கிலான உருவாக்கமும் அதன் தொடர்ச்சியுமே தவிர திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. 

மனிதனின் அறிவாற்றலால் இன்று எதையெல்லாம் முடியாது என்று நினைக்கப் படுகிறதோ அதையெல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் உருவாக்கப்படும் என்று நினைக்கிறார்கள். 

அது தவறான நம்பிக்கை! 

இன்றைய அல்லது கடந்த கால அனுபவங்களில் இருந்து பெற்ற அறிவைக்கொண்டு சரியான திசையில் இயற்கைப் போக்குக்கு முரண்படாமல் சிந்தித்தால் செயல்பட்டால் இன்னும் அறியப்படாத எத்தனையோ இலக்குகளை அடைய முடியும். 

காரணம் அது இயற்கையுடன் முரண்படுவதில்லை! சரியான பாதையில் தான் அறிவு செலுத்தப்படுகிறது. 

அப்படியல்லாமல் கடந்த காலத்தில் கற்பனையாக இருந்தவையெல்லாம் பின்னாளில் சாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்போது நமது மனதில் தோன்றும் கற்பனைகள் எதுவென்றாலும் அது பின்னளில் நிறைவேற்றப்படும் என்று நினைத்தால் அது நடக்காது. 

காரணம் அந்த எண்ணம் கடந்தகால அனுபவய்களுடனும் இயற்கையின் போக்குகளுடனும் முரண்படுகிறது! 

சரியான நம்பிக்கைகள் எல்லாம் அறிவியலுக்கும் இயற்கைக்கும் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இணக்கமாக இருப்பதால் தொடர்ந்து முன்னோக்கி அனைத்தையும் இட்டுச் செல்லும். அவை அறிவியல் அடிப்படையான நம்பிக்கைகள்!

தவறான நம்பிக்கைகள் வரலாறு உட்பட அனைத்தையும் பின்னோக்கி இழுத்துச்செல்ல முயல்பவை! அறிவியலுக்கு எதிரானவை. 

அவையே மூட நம்பிக்கைகள் எனப்படும்!

ஒருவர் அறிவியல்சீதியாகச் சிந்திக்கத் தவறினால் அவர் மூட நம்பிக்கையில் வீழ்ந்தே தீருவார்! 

ஆனால் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் நிறைய அறிவியலாளர்கள் அறிவியல் கற்ற அளவு அறிவியல் ரீதியாக அனைத்தைப்பற்றியும் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவில்லை! 

உண்மையில் அது மூடநம்பிக்கைக்கும் மூட நம்பிக்கையாளர்களுக்கும் கிடைத்துக்கொண்டிருக்கும் வெற்றிமேல் வெற்றி ஆகும்.

2 comments:

  1. வித்தியாசமான சிந்தனை... உண்மையான சிந்தனை...

    ஞாபகம் வந்த ஒரு பாடல்....

    ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ...

    வந்த நாள் முதல் இந்த நாள் வரை...
    வந்த நாள் முதல் இந்த நாள் வரை...
    வானம் மாறவில்லை...
    வான் மதியும் மீனும் கடல் காற்றும்
    மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
    நதியும் மாறவில்லை...
    மனிதன் மாறிவிட்டான்...

    ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ...

    நிலைமாறினால்... குணம் மாறுவான் பொய்
    நீதியும் நேர்மையும் பேசுவான்...
    தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்... அது
    வேதன் விதியென்றோதுவான்...

    மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...

    ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ...

    பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்...
    பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்...
    பாயும் மீன்களில் படகினைக் கண்டான்...
    எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்...
    எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்...
    எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்...

    மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...

    ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ...

    இன்பமும் காதலும் இயற்கையின் நீதி...
    ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி...
    பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
    பாவி மனிதன் பிரித்து வைத்தானே...

    மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ...

    ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே!

    இது எனக்குப் பிடித்த பாடல்களில் முதன்மையானது!.

    பாவமன்னிப்பு என்ற படத்தில் டி எம் எஸ் பாடியது!.

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது!

    ReplyDelete