ss

Saturday, June 29, 2013

எனது மொழி ( 140 )

ஜாதகம்

செயற்கையான சமைத்த அல்லது வேறுவகையில் சீர்குலைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போதுதான் அதற்கு ஜாதகம் பார்க்க வேண்டும். 

காரணம் அவை நமது உடல் இயக்கத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன. எதிர்மறை விளைவுகள் பலவற்றை உருவாக்குகின்றன. 

ஆனால் இயற்கை உணவு எதுவானாலும் அதற்கு எந்த ஜாதகமும் பார்க்கத் தேவை இல்லை. 

காரணம் அது நமது உடல் இயக்கத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது இல்லை! உடன்பாடான விளைவுகளையே உண்டு பண்ணுகின்றன. 

ஆனால் நோயாளிகளுக்கும் மருந்துகளாகப் பயன்படும்  இயற்கைப் பண்டங்களுக்கும் ஜாதகம் பார்க்கவேண்டும். 

Thursday, June 20, 2013

விவசாயம் ( 55 )

இயற்கை விவசாயமும் களைகளும் 

இப்போது வேதிப்பொருட்களைச் சார்ந்த விசாயத்தின் தீமைகள் உணரப்பட்டு அவற்றைப் புறக்கணிக்கும் இயற்கை முறையிலான விவசாயத்தின் பால் ஈடுபாடும் மேலோங்கி வருகிறது. 

அது மிக நல்ல அம்சம் ஆகும். 

அதே சமயம் பெரும்பாலும் வேதிப் பொருட்களைப் பயன்படுத்தியே விவசாயம் செய்யும் முறை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பழக்கத்தில் இருந்ததால் விவசாயத் தொழில் முறைகள் அதற்கேற்ப மிகவும் மாறிவிட்டன. 

இயந்திரப் பயன்பாடு மிகுந்தும் கால் நடைப் பயன்பாடு குறைந்தும் போய் விட்டன.

மனித உழைப்பும் அதற்கு முன்னர் இருந்ததில் இருந்து வெகுவாக மாறிவிட்டது.

ஆதாவது மனித உழைப்பு விவசாயத்தில் முன்பிருந்ததைவிட மிகவும் இலகுவாகிவிட்டது.

விவசாயக் கூலிகள் உயர்ந்த அளவு மற்ற செலவுகள் உயர்ந்த அளவு விவசாய விளைபொருட்களின் விலைகள் விலை உயராதது விவசாயிக்குப் பாதகமாகவும் மற்ற பகுதி மக்களுக்குச் சாதகமாகவும் அமைந்து விட்டன. 

அதன் காரணமாக விவசாயத் தொழிலாளர்களின் உழைப்புத் திறனும் தொழில் நுட்பமும் மிகவும் குறைந்து விட்டது. வேலை நேரங்களும் மிகவும் குறைந்து விட்டன.

அதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது களை வெட்டுதல்.


இது பெண்கள் மட்டுமே பெரும்பாலும் செய்யும் வேலை ஆகும்.

வேலையாட்களுக்குத் தட்டுப்பாடு வந்ததாலும் வேலை நேரம் குறைந்ததாலும் வேலைத்திறன் குறைந்ததாலும் களை வெட்டுவதற்காக ஒரு ஏக்கருக்குப் பிடித்த ஆட்களின் எண்ணி;க்கையும் செலவும் அதிகரித்தவண்ணம் இருந்தது. 

இதனால் வேலையாட்களிடம் கண்டிப்பாக வேலை வாங்கும் நிலைமை மாறி அவர்கள் செய்வதுதான் வேலை என்று ஆகிவிட்டது.

அதன் காரணமாக களை என்பது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது போய் கட்டுக்கு அடங்காத அளவில் நிலங்களில் அதிகம் ஆகிவிட்டது. 

அதன்காரணமாக களைகளை வெட்டாமல் ஒழிக்கக்கூடிய களைக்கொல்லி தெளித்து ஒழிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. 

இன்று களைக்கொல்லி தெளிக்காத விவசாயம் இல்லை என்று சொல்லும் அளவு களைக்கொல்லிப் பயன்பாடு விவசாயிகளிடம் அதிகரித்து விட்டது. 

ஆனால் களைக்கொல்லிகளால் இன்னொரு விளைவும் ஏற்பட்டது. ஆதாவது கடைக்கொல்லி தெளிக்கப்படும் வயல்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு களைகள் முளைக்காமல் போவதால் ஆட்களை விட்டு வெட்டுவதோ கால்நடைகளுக்கு புல் பிடுங்கிப் போடுவதோ நின்று போனது. 

அதன் விளைவாக களைக்கொல்லியின் வீரியம் குறைந்தவுடன் முளைக்கும் களைகளின் விதைகள் செடிகளாக வளர்ந்து அளவில்லாத களை விதைகளை மீண்டும் உருவாக்குகின்றன. களைக்கொல்லிகள் முளைத்த பின்னர்தான் களைகளைக் கொல்லுமே தவிர முளைக்காமல் மண்ணுக்குள் இருக்கும் களை விதைகளைக் கொல்வது இல்லை! 

களைகள் எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் நாம் பயிர் செய்யும் பயிர்களின் விதைகள் போல ஒரேயடியாக முளைப்பது இல்லை! அதனால் களைக்கொல்லி தெளிக்கும் போது சில நாட்களில் முளைக்கும் விதைகளைத் தவிர மற்ற விதைகள் அழியாமல் தங்களை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருக்கிக் கொள்கின்றன.

இப்பொது பிரச்சினை என்வென்றால் இப்படி மலிவான களைக்கொல்லிகளால் அழிக்கமுடியாத ஏராளமான களைகளை இயற்கை முறையில் அழிப்பது எப்படி என்பதே! 

களைகளை இயற்கை முறைகளில் அழிப்பதற்குப் பாரம்பரியமான சில வழிகள் இருந்தன. 

பெண்களைக் கொண்டு கொத்துகளால் வெட்டிவிடுவது ஒரு முறை!

அது இன்று கட்டுபடி ஆகாத அளவு செலவு பிடிப்பதாகவும் அப்படியும் களைகளை சுத்தமாக அகற்ற முடியாததாகவும் இருக்கிறது.

அதிலும் தப்பிவிடுபவற்றைக் கால்நடைத் தீவனத்துக்காக வெட்டி அப்புறப்படுத்தப்படுவது இரண்டாம் முறை!

இப்போது கால் நடைகளுக்கும் கரவை மாடுகளுக்கும் புல் வெட்டிப்போடும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. காரணம் அந்த அளவு கடின உழைப்புக்கு பெரும்பாலோர் தயாராக இல்லை! நிறையப் பேரிடம் கரவை மாடுகளும் இல்லை! 

வயல்களில் வரப்புக் கட்டித் தண்ணீர் நிறைய நிறுத்தி சேற்று உழவு செய்வதன் மூலம் களைகளையும் களை விதைகளையும் மண்ணின் ஆழத்துக்கு அழுத்தி மக்கச்செய்து அழிப்பது மூன்றாவது முறை! 

முன்றாவது முறையில் களைகளை அழிக்க நன்செய் நிலங்களில் மட்டுமே முடியும்.

ஆகையால் முடிவாகக் களைக் கொல்லிகளிடம் தஞ்சம் அடைவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. 

இதுதான் இன்று இயற்கை வேளாண்மைக்கு முன் உள்ள சவால்களில் மிகப்பெரியது ஆகும். 

வேதிப்பொருட்களைப் பயன்படுத்தவும் கூடாது. வேலையாட்களைக்கொண்டு களைகளை ஒழிக்கும் முறை பல்வேறு பயிர்களில் முடியாது.

அதனால் ஆட்களைக் கொண்டே களைகளைச் சமாளிக்கக்கூடிய பயிர் வகைகளைத் தேர்வு செய்யும் சிக்கலான நிலை உள்ளது. 

அதற்கு பல்வேறு வகையான மரத் தோப்புகள் மட்டுமே ஏற்றதாக உள்ளது. 

மற்ற பாரம்பரிய சாகுபடிப் பயிர்கள் அதுவும் புஞ்சை சாகுபடிப் பயிர்கள் களைக்கொல்லிகளிடம் இருந்து எப்படி விடுபடும் என்பது மிகவும் பெரிய கேள்விக் குறியாக உள்ளது!

இயற்கை வேளாண்மை இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டாக வேண்டும்! 

Wednesday, June 19, 2013

எனது மொழி ( 139 )

எப்படிச் சொல்லல் முறை?

தன்னை உயர்வான இடத்தில் வைத்துக்கொண்டு , நீ இப்படி நட! நீங்கள் இதைச் செய்யுங்கள்! நீங்கள் இந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள் என்று எவர் அனைவருக்கும் சொல்கிறாறோ அவர் பிறருக்கு அறிவுரை வழங்கத் தகுதி அற்றவர்! 

அத்தகைய அறிவுரை பிள்ளைகளுக்கு வழங்கப் பெற்றோருக்கும் மாணவர்களுக்கு வழங்க அறிவுடைய ஆசான்களுக்கும் தங்களை மதித்துப் போற்றும் இளைய தலைமுறைக்கு வழங்க அறிவாற்றல் மிக்க பெரியோருக்கு மட்டுமே உண்டு! 

அந்த வரம்பை மீறி அனைவரையும் பார்த்து ஒருவர் இப்படிச் சொன்னால் அவருடைய உபதேசங்கள் குப்பைகளே! 

யாருக்காகச் சொல்கிறோமோ அவர்களில் ஒருவராகத் தன்னையும் வைத்துச் சொல்லப்படும் கருத்துக்களே  உலகிற்கான கருத்துக்களை கண்ணியமான முறையில் வெளிப்படுத்துவதும் பொதுவான முறை ஆகும்!  

அவைதான் மதிக்கப்படும் ! 


Tuesday, June 18, 2013

விவசாயம் ( 54 )

விதையும் விவசாயியும்!

நண்பர்களே!

நாங்கள் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றபோது அவருடைய புறக்கடையில் நட்டிருந்த புடலங்காய்க் கொடிப்படர்ந்து ஏராளமாகக் காய்பிடித்திருந்தது.

அதன்மேல் விருப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்தக் காய்களைப் பழுக்கவிட்டு நிறைய விதைகள் எடுக்கச் சொல்லி வாங்கிவந்து எங்கள் தோட்டத்தில் நட்டோம். 

ஆனால் அவர்கள் வீட்டில் அவ்வளவு காய்கள் காயத்த செடியில் இருந்து எடுக்கப்பட்ட விதைகள் நாங்கள் நட்டபோது வெறும் செடிதான் புதர்போல வந்திருக்கிறது. காய் பிடிக்கவில்லை.

கடையில் வாங்கிவந்து நட்ட விதைகள் மூலம் வந்திருக்கும் செடிகள் காய்க்கின்றன .

காரணம் விவசாயிகளின் பாரம்பரிய விதைகள் மறைந்து வருவதும் விதை நிறுவனங்களின் தயாரிப்புகள் நடைமுறைக்கு வருவதுமே! 

அவை நட்டால் ஒருமுறை மட்டுமே காய்க்கும். மீண்டும் நட்டால் காய்க்காது! 

ஒவ்வொரு முறை நடும்போதும் கடைகளுக்குச் சென்று கம்பெனிகள் வெளிவிடும் விதைகளைத்தான் வாங்கிவந்து நடவேண்டும்! 

இந்தப்போக்கு விவசாயிகளை அப்பட்டமாக பெரிய கம்பெனிகளுக்கும் அதைத் தொடர்ந்து அவை இருக்கின்ற பணக்கார நாடுகளுக்கும் நமது விவசாயிகளையும் கடைசியில் நாட்டையும் அடிமையாக்குவதில்தான் முடியும்! 

Saturday, June 15, 2013

அரசியல் ( 50 )

இவர்கள்.....

மக்கள் சரியான நபர்களைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லும் பெரிய வியாதி படித்தவர்களில் பெரும்பாலோரைப் பிடித்திருக்கிறது! 

அவர்கள் எதற்கெடுத்தாலும் மக்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று குறை சொல்லுகிறார்கள் 

 காசுவாங்கிக் கொண்டும் இலவசத்துக்கு பல்லிளித்துக்கொண்டும் கெட்டவர்களுக்கு ஓட்டுப போட்டால் இப்படித்தான் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

அப்படிச்  சொல்வதைத் தனது அறிவுடைமையாகவும் நினைக்கிறார்கள்! 

ஆனால் அதுவெல்லாம் சரியான அறிவுடமைதானா?

அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் மிக நல்லவர் ஒருவருக்குத்தான் ஓட்டுப் போட்டிருப்பார்களா?

நிச்சயம் அப்படி இருக்காது! 

யாரைக் குற்றவாளிகளாகப் பழி சுமத்துகிறார்களோ அவர்களைப்போலவேதான் இவர்களும் பலருக்கும் பலவிதமாக ஓட்டுப் போட்டிருப்பார்கள்! 

காரணம் தேர்தலில் நிற்பவர்களில்  இவர் நல்லவர் என்று யாருடைய நெற்றியிலும் கடவுளால் முத்திரை குத்தப்பட்டிருக்கவில்லை! 

இப்படி இருக்கையில் தங்களின் எந்தச் சிறப்பான தகுதியை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற மக்களைப் பழிக்கிறார்கள்?

அதில் இன்னும் ஒரு வேடிக்கையும் இருக்கிறது.

ஆதாவது மக்கள் நல்லவர்களைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லும் இவர்கள் தோற்கடிக்கப்பட்டவர்களில் யார் அந்த யோக்கியர்கள் என்று சொல்வார்களா?

இவர்கள் எல்லோருமே அவர்களுக்கு மட்டும்தான் ஓட்டுப் போட்டார்களா?

இவர்கள் பாமர மக்களைக் குற்றம் சுமத்துவது சரி என்றால் தொகுதி வாரியாக மக்களால் தேர்ந்தெடுக்காமல் விடப்பட்ட அந்த யோக்கிய சிகாமணிகளைப் பட்டியல் இடுவார்களா?

இத்தனைக்கும் மேலாக அரசியல்வாதிகள்தான் அத்தனை அயோக்கியத்தனத்துக்கும் காரணம் என்று பொது வாழ்வில் உள்ள அத்தனை பேரையும் கைக்குக் கிடைத்ததை எடுத்து அடிப்பதுபோல் மொத்தத்தில் திட்டித் தீர்ப்பவர்களும் இந்த அதி மேதாவிகள்தான்!  

அப்படியானால் அரசியல்வாதிகளாக இல்லாமல் நாட்டை நல்லாட்சி செய்யக்கூடிய தகுதி உடையவர்களாக இவர்கள் யாரை நினைக்கிறார்கள்? 

நேர்மையான அரசியல் என்றால் என்ன? அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நாட்டிலேயே இல்லையா? அவர்களுக்கு நாம் என்ன மரியாதை கொடுத்தோம்? 

அப்படி யாரும் இல்லாத நிலையில் நேர்மையான அரசியல்வாதிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன? 

அப்படி நல்லவர்கள் அரசியல்வாதிகளாக உருவாக நாம் நமது பங்குக்கு என்ன செய்தோம்?

என்று இத்தகைய அறிவுஜீவிகள் எப்போதாவது சிந்தித்தார்களா?

அப்படியெல்லாம் நிச்சயம் கிடையாது! 

உண்மை இப்படி இருக்க  மக்களைக் கெட்டவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்றும் பழித்துத் தீர்க்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

சிந்திப்பார்களா?

சிந்திக்க வேண்டும்! இல்லாவிட்டால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கதி மோட்சம் கிடையாது! 




எனது மொழி ( 138 )

இரக்கம் 

ஒரு உயிரினம் உயிரிழக்கும்போது அதைப் பார்த்து ஒருவர் எப்படி வருத்தப்படுகிறார் என்பதை வைத்து அவருக்கும் மற்ற உயிரினங்கள் மேல் உள்ள ஈடுபாட்டைக் கணக்கிட முடியாது! 

அதை அதனுடன் அவர் கொண்டிருக்கும் நெருக்கம்தான் முடிவு செய்கிறது! 

மாமிச உணவு உண்பவர்களுள்  இரக்க உணர்வு மிக்கவர்களும் மாமிச உணவு உண்ணாதவர்களுள்  இரக்கம் அற்றவர்களும் கலந்ததுதான் மனித இனம்! 

மாமிசத்தைப் பொருத்தவரை ஒரு உணவுப் பொருளாக மட்டும் பார்க்கிற பண்பாடு உலகம் முழுவதும் வளர்ந்துவிட்டது! 

அதனால் தாய்க் கோழியைக் குழம்பு வைத்துச் சாப்பிட்டுவிட்டு அதன் குஞ்சுக்குக் காலில் காயம்பட்டதற்க்காக பரிதாபப் படுவதை நடிப்பாக இல்லாமல் இயல்பாகவே பார்க்கிறோம்.

Thursday, June 6, 2013

எனது மொழி ( 137 )

நோயும் தீர்வும்...

அனைத்து நோய்களுக்கும் முக்கியமான காரணங்கள் மூன்று!


உழைப்பின்மை, சரியான உணவின்மை, கெட்ட பழக்கங்கள் ஆகியவையே அந்த மூன்று ஆகும்.


அந்த மூன்றையும் சரி செய்தால் எந்தக் குறையாக இருந்தாலும் நீங்கி விடும். அதுதான் நிரந்தரத் தீர்வும்கூட!

எனது மொழி ( 136 )

இது சரிதானா?

தினமும் ஆலயங்கள் திறந்தவண்ணம் இருக்கிறார்கள்!

இது அவசியமான ஒன்றுதானா? 

இருக்கும் ஆலயங்கள் போதாதா? 

இறைவன் கோயில்களில்தான் இருக்கிறாரா? 

அது உண்மையானால் ஏன் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் பாழடைந்து போக விட்டோம்?

ஆலயங்கள் வளர்ந்த அளவு ஆன்மிகம் வளர்ந்திருக்கிறதா? 

தூய்மையான நேர்மையான மனிதரின் உள்ளத்தைவிட இறைவனுக்குப் பிடித்த ஆலயம் எதுவாக இருக்க முடியும்?

இதை உணராதவர்களின் செயல்கள் எப்படி ஆன்மிகம் ஆகும்? 

ஆன்மிகத்தைக் கொச்சைப்படுத்துவதே ஆன்மிகம் ஆகிவிட்டது! 

Wednesday, June 5, 2013

எனது மொழி ( 135 )

மாற்று

ஒரு பொருளின்மேல் நின்றுகொண்டிருபவர் அதைத் தூக்க முடியாது! 

அதைத் தூக்கவேண்டும் என்றால் முதலில் அதன்மேல் இருந்து இறங்கவேண்டும்! 

அதுபோல ஒரு தவறான பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் அதைச் சார்ந்திருக்கும் நிலைமைகளை ஒழிக்க வேண்டும்.

ஆதாவது சரியான மாற்றுத் திட்டம் வேண்டும். 

பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு, மரம் வெட்டுதல் தடுப்பு போன்றவை உதாரணங்கள்!

குறைந்தபட்சம் இந்த அறிவாவது அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்னோடிகளுக்கும் இருக்கவேண்டும்.

இல்லாவிட்டால் நல்ல செய்திகள் பேச்சளவில் இருக்கும். 

கெட்டவை தொடர்ந்து நடக்கும்! 

Tuesday, June 4, 2013

தத்துவம் ( 15 )

பாசிஸ்டுகள்!

தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள்! 

அனைவரும் தங்களுக்கு அடிபணியவேண்டும் என்று நினைப்பவர்கள்!

தங்களுக்குப் பணியாதவர்களை அழித்தொழிக்க நினைப்பவர்கள்!

மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் மேலதிகாத்தைப் பற்றி மட்டும் நினைபவர்கள்!

ஈவிரக்கமற்றவர்கள்! 

தங்களைத் தட்டிக் கேட்பவர்களை விட்டு வைக்காதவர்கள்!

மனிதாபிமானம் இல்லாதவர்கள்!

உயர்தர்மங்களைக் காலடியில்போட்டு மிதிப்பவர்கள்! 

இவர்கள்தான் பாசிஸ்டுகள்! 

மனிதராக வாழும் அனைவரும் மற்ற உயிரினங்களைப் பொருத்தும் இயற்கையைப் பொருத்தும் பாசிஸ்டுகளாகவே நடந்துகொள்கிறோம்.

பெரும்பாலான மனிதரிடமும்கூடப் பாசிஸ்டுகளாகவே மனதளவில் வாழ்கிறோம்!...

அது சரியா?...

Monday, June 3, 2013

எனது மொழி ( 134 )

மனிதனும் மதிப்பெண்ணும்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்ந்தாகவேண்டும்.  

மாணவர்களும் வாழப்போகும் மனிதர்களே! 

அவர்கள் மிக அதிக மதிப்பெண் பெற்றவராக இருந்தாலும் தேர்வில் தவறியவராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் வாழ்ந்தாகவேண்டும். 

அதனால் அவரவர் எதில் சிறந்து விளங்குகிரார்களோ அந்தத் துறையில் அவர்களை ஊக்குவிப்பதன்மூலம் அனைவரின் எதிர்காலமும் ஒன்றுபோல் ஊக்குவிக்கப்படவும் வாய்ப்பளிக்கப்பாடவும் வேண்டும். 

அப்படிச் செய்தால் ஒருவர் வாங்கிய மதிப்பெண்கள் அவருடைய தகுதியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்காது!...

அனைவருக்கும் வாழும் உரிமை சமமாகக் கிடைக்கும்! 

அதுதான் உயர்தரமான சமூக அமைப்பை உருவாக்கும்!.