இவர்கள்.....
மக்கள் சரியான நபர்களைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லும் பெரிய வியாதி படித்தவர்களில் பெரும்பாலோரைப் பிடித்திருக்கிறது!
அவர்கள் எதற்கெடுத்தாலும் மக்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று குறை சொல்லுகிறார்கள்
காசுவாங்கிக் கொண்டும் இலவசத்துக்கு பல்லிளித்துக்கொண்டும் கெட்டவர்களுக்கு ஓட்டுப போட்டால் இப்படித்தான் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
அப்படிச் சொல்வதைத் தனது அறிவுடைமையாகவும் நினைக்கிறார்கள்!
ஆனால் அதுவெல்லாம் சரியான அறிவுடமைதானா?
அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் மிக நல்லவர் ஒருவருக்குத்தான் ஓட்டுப் போட்டிருப்பார்களா?
நிச்சயம் அப்படி இருக்காது!
யாரைக் குற்றவாளிகளாகப் பழி சுமத்துகிறார்களோ அவர்களைப்போலவேதான் இவர்களும் பலருக்கும் பலவிதமாக ஓட்டுப் போட்டிருப்பார்கள்!
காரணம் தேர்தலில் நிற்பவர்களில் இவர் நல்லவர் என்று யாருடைய நெற்றியிலும் கடவுளால் முத்திரை குத்தப்பட்டிருக்கவில்லை!
இப்படி இருக்கையில் தங்களின் எந்தச் சிறப்பான தகுதியை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற மக்களைப் பழிக்கிறார்கள்?
அதில் இன்னும் ஒரு வேடிக்கையும் இருக்கிறது.
ஆதாவது மக்கள் நல்லவர்களைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லும் இவர்கள் தோற்கடிக்கப்பட்டவர்களில் யார் அந்த யோக்கியர்கள் என்று சொல்வார்களா?
இவர்கள் எல்லோருமே அவர்களுக்கு மட்டும்தான் ஓட்டுப் போட்டார்களா?
இவர்கள் பாமர மக்களைக் குற்றம் சுமத்துவது சரி என்றால் தொகுதி வாரியாக மக்களால் தேர்ந்தெடுக்காமல் விடப்பட்ட அந்த யோக்கிய சிகாமணிகளைப் பட்டியல் இடுவார்களா?
இத்தனைக்கும் மேலாக அரசியல்வாதிகள்தான் அத்தனை அயோக்கியத்தனத்துக்கும் காரணம் என்று பொது வாழ்வில் உள்ள அத்தனை பேரையும் கைக்குக் கிடைத்ததை எடுத்து அடிப்பதுபோல் மொத்தத்தில் திட்டித் தீர்ப்பவர்களும் இந்த அதி மேதாவிகள்தான்!
அப்படியானால் அரசியல்வாதிகளாக இல்லாமல் நாட்டை நல்லாட்சி செய்யக்கூடிய தகுதி உடையவர்களாக இவர்கள் யாரை நினைக்கிறார்கள்?
நேர்மையான அரசியல் என்றால் என்ன? அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நாட்டிலேயே இல்லையா? அவர்களுக்கு நாம் என்ன மரியாதை கொடுத்தோம்?
அப்படி யாரும் இல்லாத நிலையில் நேர்மையான அரசியல்வாதிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன?
அப்படி நல்லவர்கள் அரசியல்வாதிகளாக உருவாக நாம் நமது பங்குக்கு என்ன செய்தோம்?
என்று இத்தகைய அறிவுஜீவிகள் எப்போதாவது சிந்தித்தார்களா?
அப்படியெல்லாம் நிச்சயம் கிடையாது!
உண்மை இப்படி இருக்க மக்களைக் கெட்டவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்றும் பழித்துத் தீர்க்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
சிந்திப்பார்களா?
சிந்திக்க வேண்டும்! இல்லாவிட்டால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கதி மோட்சம் கிடையாது!
No comments:
Post a Comment