ss

Friday, August 30, 2013

எனது மொழி ( 146 )

பிச்சை...

பெரிய ஞானிகள்கூடப் பிச்சை ஏற்று வாழ்ந்தது அக்கால தர்மம்!

மகான் புத்தர் தனது வீட்டுக்கே பிச்சைப் பாத்திரம் ஏந்திச் சென்றிருக்கிறார்!

அப்படிப் பிச்சை ஏற்பதும் அவர்களுக்குப் பிச்சை இடுவதும் உயர்ந்த தர்மமாகக் கருதப் பட்டது!

காரணம் அக்காலத் துறவிகள் வாழ்வதற்காகப் பிச்சை எடுக்கவில்லை!

உயர்ந்த தர்மங்களை மக்களுக்குச் சொல்லி நெறிப்படுத்தும் சேவையைச் செய்து வந்தார்கள். அந்தச் சேவையைத் தொடரத் தாங்கள் வாழவேண்டும் என்பதற்காக எந்த மக்களுக்கு அமுதத்தைவிட உயர்ந்த தர்மத்தை வழங்கினார்களோ அந்த மக்கள் பயபக்தியுடன் வழங்கிய உணவைப் பெற்றுத் தாங்களும் உண்டு இயலாத பிறர்க்கும் அளித்தார்கள்.

அவர்கள் ஏற்றுக்கொண்ட உணவாகிய அமுதை விட அவர்கள் வழங்கிய ஞானாமுது மதிப்புமிக்கதாக இருந்தது!


அப்படி இடுவதும் ஏற்பதும்தான் உண்மையான பிச்சை ஆகும்!

 ஆனால் இந்தக் காலத்தில் பிச்சை என்பது துறவிகளின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இல்லை!

துறவிகள் பெரும் செல்வந்தர்களாகவும் மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருப்பவர்களாகவும் ஆகி விட்டார்கள்...

அப்படியல்லாதவர்கள் வெறும் பிச்சைக்காரர்களாகவே மதிக்கப் படுவார்கள். 

மக்களும் பிச்சை இடுவதை மதிப்புக்குறிய கடமையாக நினைப்பது இல்லை! 

அது உடம்பை வளர்க்கவும் இயலாதவர்களும் சோம்பேரிகளும் எப்படியாவது வாழ்வதற்காகப் பிறரிடம் கைநீட்டி வாங்கிப் பிழைக்கவும் ஆன உபாயம் என்று ஆகிவிட்டது.

அது தவிர பல்வேறு வகைகளில் மக்களே பிச்சைக்காரர்களும் ஆக்கப்பட்டு விட்டார்கள்....

Thursday, August 29, 2013

உணவே மருந்து ( 66 )

இயற்கை உணவை நோக்கிய எளிய வழி!...

நண்பர்களே!

இயற்கை உணவின் அருமை உலக மக்களால் வேகமாக உணரப்பட்டு வருகிறது.

காரணம் சமையல் என்கின்ற பெயரால் உணவு சின்னாபின்னமாக்கப்பட்டு  இன்றைய பல நோய்களுக்கும் உண்ணும் உணவு வகைகளே காணரங்கள் ஆகின்றன! 

ஆனால் பல காலமாக உணவைப் பல்வேறு முறைகளில் சமைத்து நாவுக்கு ருசியாக உண்டு பழகியாயிற்று! 

அது உடல்நலத்துக்கு எதிரானதாக இருந்தாலும் அதன் சுவை நம்மால் கைவிட முடியாத அளவு சுண்டி இழுக்கிறது. 

இதுதான் இன்று நம் முன் உள்ள முக்கியமான பிரச்சினை! அனைவராலும் ஒரே மூச்சில் தோசையைத் திருப்பிப் போடுவதைப்போல சமைத்த உணவுகளில் இருந்து முழுக்கவும் இயற்கை உணவுக்கு மாறிச் செல்ல முடியாது! 

ஆனால் சமையல் உணவின் தீங்கில் இருந்து விடுபட்டு இயற்கை உணவில் கிடைக்கும் நற்பயன்களை அடைந்தாக வேண்டும்!  

அதற்கு என்ன செய்வது?....

அதற்கு முதலில் சில விஷயங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆதாவது இதுகாலமும் நாம் உண்டு வந்த சமைத்த உணவுகளின் தரத்தையும் வகைகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். 

அதன்மூலம் சமைத்து உண்கின்ற உணவு மற்றும் மற்ற பண்டங்களில் எவை எல்லாம் உடல்நலத்துக்குத் தீங்கானவை, எவையெல்லாம் அதிக அளவு சத்துக்கள் சின்னாபின்னமாகச் சிதைக்கப்படுகின்றன, எவையெல்லாம் சமைத்தபின் அதிக அளவு வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளன, என்றெல்லாம் ஆராயவேண்டும். 

அதே சமயம் சமைத்த உணவுகளில் மிகக் குறைந்த அளவே மேற்ச்சொன்ன விளைவுகளைக் கொண்டிருக்கும் உணவு வகைகள் என்னென்ன என்பதையும் ஆராய வேண்டும்! 

அந்த இரண்டாம் வகைச் சமையல் உணவு வகைகளில் மிகச் சுவையாகவும் உள்ள சில வகைகளைத் தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தேர்வு செய்யப்படும் உணவு வகைகளைக் கொஞ்சமாகவும் இயற்கையான சமைக்காத உணவு வகைகளை அதிகமாகவும் இருக்கும்படி உண்ண வேண்டும்.

அப்படி உண்ணும்போது அந்த சமைத்த நல்லுணவு வகைகளில் உள்ள கொஞ்ச நஞ்ச குறைகளும் நாம் அதிகமாக உண்ணும் இயற்கை உணவுகளின் நற்பண்புகளாலும் மருத்துவக் குணத்தாலும் போக்கப்பட்டு மிக உயர்ந்த பயனை அடையலாம்! 

நாளடைவில் சமைத்த நல்லுணவுகளின் அளவை மெல்ல மெல்லக் குறைக்கவும் சமைக்காத இயற்கை உணவுகளின் அளவை அதிகப்படுத்தவும் முயற்சி செய்யலாம். 

அந்த முயற்சியில் எந்த அளவு முன்னேற்றம் காண்கிறோமோ அந்த அளவு நாம் சமையல் உணவை வென்று இயற்கை உணவின் அரவணைப்புக்கு மாறிச் செல்கிறோம் எண்பது பொருள்! 

இன்றுள்ள நிலையில் நம்மால் இயற்கையுணவின் பயன்களை அடைய முடியவில்லையே! சமைத்த உணவுகளை விட முடியவில்லையே என்று எண்ணும் அனைவர்க்கும் இது மிகச் சிறந்த வழி ஆகும்!....

Thursday, August 22, 2013

அரசியல் ( 51 )

தீமைகளை நினைந்து பெருமைப்படுவோம்! 

தமது மொழி உயர்ந்தது! மற்ற மாநில மொழிகள் தாழ்ந்தவை!

தனது இனம் உயர்ந்தது! மற்ற இனங்கள் தாழ்ந்தவை!

தங்களுக்கு மற்ற மாநிலங்கள் துரோகம் செய்கின்றன! ஆனால் தாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை!

தம் மாநில மக்கள் அனைவரும் நல்லவர்கள்! மற்ற மாநில மக்கள் அனைவரும் கெட்டவர்கள்!

இப்படிப்பட்ட எண்ணங்கள் ஒவ்வொரு மாநில மக்கள் மனதிலும் வளர்க்கப்படுகிறது!

ஆனால் அனைத்து மாநிலங்களிலும் லஞ்சம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது!

கிரிமினல்கள்தான் மக்களின் சுகதுக்கங்களைத் தீர்மானிக்கிறார்கள்!

கிரிமினல்களிடம் இருந்து எந்தத் துறையும் மக்களைக் காப்பாற்றவில்லை!

ஜனநாயகம் என்ற பெயரால் அவ்வப்போது கூத்துகள் நடத்தி மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்!

எண்ணற்ற விதங்களில் மக்களுக்குள் பிளவுகளை அரசுகளே வளர்க்கின்றன!

பிரித்தாளும் சூழ்ச்சி வெள்ளையனைவிடத்  திறமையாகக் கையாளப் படுகிறது!

மத்திய அரசுடன் போராடும் அல்லது அண்டிப் பிழைக்கும் காலனிகளாகத்தான் மாநில அரசுகள் இயங்கவேண்டும்!

உயர்ந்த பண்பாடுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுச் சீரழிவுக் கலாச்சாரம் வளர்க்கப்படுகிறது!

ஊடகங்கள் தங்களின் லாபத்துக்காக மக்களின் நலனைக் காவுகொடுப்பதில் ஒன்றையொன்று விஞ்சுகின்றன!

இயற்கையையும் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் எண்ணம் அறவே இல்லாத விவசாயத்தையும் தொழில்களையும் கொண்டிருக்கிறோம்!

பக்தி என்ற பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்த்து மக்களை அதிலிருந்து விடுபடாமல் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்!

உயர்ந்த பண்பாடும் உயர்ந்த ஆன்மிகமும் கொச்சைப் படுத்தப்பட்டு சுயநலவாதிகளின் கூடாரங்களாக விளங்கும் மதங்கள் சொல்வதுதான் ஆன்மிகம் என்ற  அவலநிலையில் மக்கள் வாழ்கிறார்கள்!

தீய சக்திகள் அதிகாரங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு மக்களை ஆட்டிப் படைக்க , நல்லவர்களும் தேச பக்தர்களும் கையாலாகாதவர்களாக கோழைகளாக மறைந்து வாழ்கிறார்கள்!

இத்தகைய ஒரு நாட்டில் குடிமக்களாக வாழ்வதற்குப் பெருமைப் படுவோம்!....

Monday, August 19, 2013

விவசாயம் ( 58 )

விவசாய உழைப்பின் அவல நிலை!....

இந்த எருக்குழி குவியலை அள்ளி நிலத்தில் கொண்டுபோய்க் கொட்ட ஒரு ட்ராக்டர் நிற்கிறது.

அள்ளிப்போட  ஒரு JCB !

 ஒரு மாட்டு வண்டியும் மண்வெட்டி தட்டுக் கூடையும் கொடுத்தால் நான் ஒருவனே இப்போதும் இந்த வேலையை ஒரே நாளில் செய்ய முடியும்! 

விவசாய வேலைத் திறன் இந்த நிலையில் இப்போது இருக்கிறது!

இந்த இயந்திரங்கள் வேலை மட்டுமே செய்யும்!

எந்தக் காலத்திலும் வைக்கோலும் உண்ணாது! சாணமும் போடாது! நிலத்தையும் வளப்படுத்தாது!

சூழலை மாசுபடுத்தவும் நுண்ணுயிர்களைக் கொல்லவும் மட்டும் பயன்படும்....குரளலங்காரம்.

உழைப்பு 

உடல்நீர் வடிய உழைத்திடில் நேராதே

கடல் நீர் உண்டவன் கதி!   -  1
-----------------------------------------------------------------------------------------


Sunday, August 18, 2013

உணவே மருந்து ( 65 )

சிறுநீர் ஒரு அடையாளம்.....

நாம் உண்ணும் உணவு வகைகளை முக்கியமான இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆதாவது சாப்பிட்டவுடன் தண்ணீர்த் தாகத்தை அதிகமாகத் தூண்டுபவை முதல் வகை!

சாப்பிட்டபின்னால் தண்ணீர் தாகத்தைத் தூண்டாதவை இரண்டாவது வகை.

முதல் வகை உடல்நலத்துக்கு அதிக முரணானவை .

இரண்டாம் வகை உடல் நலனுக்கு இணக்கமானவை!

காரணம் முதல்வகையைச் செரிப்பத்தற்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படுகிறது.

இரண்டாவதற்கு செரிமானம் கடினமாக இல்லாததால் தண்ணீரும் அதிகம் தேவைப்படுவதில்லை!

இங்கு பிரச்சினை என்னவென்றால் முதல்வகை உணவு உண்பவர்களும் இரண்டாம் வகை உணவு உண்பவர்களும் இரவில் ஒரே அளவு தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தாலும் முதல் வகையினருக்கு குறைந்த சிறுநீர் வெளியேற்றமும் இரண்டாம் வகையினருக்கு அதிகச் சிறுநீர் வெளியேற்றமும் இருக்கும்.

இந்தப்  பாதிப்புக்குக் காரணம் முதல்வகை உணவில் எதிர்மறையான உணவை உண்பதே ஆகும்.

அதனால் சிறுநீர் குறைந்த அளவு வெளியேறும்.

ஆனால் நமது மனதுக்குச் சிறுநீர் கழித்த முழுமையான திருப்தி ஏற்படாது!...

இதுவே தொடர்ந்தால் அது தொடர்பான நோய்களுக்கும் அது காரணமாக அமையும்!

அதனால் தாகத்தை அதிகம் தூண்டாத இரண்டாம் வகை உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதே உன்னதமான உடல்நலம் பேணும் வழியாகும்.

சமைத்தும் வறுத்தும் எண்ணையில்  பொரித்தும் நெருப்பில் சுட்டும் உண்ணும் உணவுகள் அனைத்தும் முதல் வகை!

சமைக்காத காய், கனி , கிழங்கு, சாறு, தானியம், கொட்டை வகைகளே இரண்டாம் வகை உணவுகள் ஆகும்.

அவை இயற்கையாக உருவாகி, இயற்கையாக உண்ணப்படுபவை!

இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து! 

Monday, August 12, 2013

எனது மொழி ( 145 )

விடுதலை! 

ஒவ்வொரு ஆகஸ்ட் 15 அன்றும் வருடம் தோறும் நமது மக்களுக்கு லஞ்சத்திலிருந்து ஒரு நாள் விடுதலை கிடைக்கிறது!

ஆதாவது லஞ்சம் ஒருநாள் தள்ளி வைக்கப்படுகிறது! 

காரணம் அன்று அரசு விடுமுறை!சுதந்திரம்!

பிறருடைய நியாயமான சுதந்திரத்தை மதித்துப் போற்றுபவனும் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காதவனுமே சுதந்திரம் என்பதை உணர்ந்தவன்! 

அவனே சுதந்திரமான வாழ்வு வாழத் தகுதி பெற்றவன்!

உலக மக்கள் அனைவரும் அனைத்து வகையிலும் சுதந்திரம் பெற விரும்பும் எனது அன்பு வணக்கங்களும் வாழ்த்துக்களும்!நேரடியாகவோ மறைமுகமாகவோ தவறு செய்யாமல் , சட்டத்தை மீறாமல் ஒருவரால் வாழவே முடியாது என்கிற ஒரு நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்! 

இப்படிப்பட்ட நிலையில் வாழ்வதற்கு வெட்கமும் அவமானமும் அடையவேண்டும்! 

அதுதான் உண்மையான சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்க முதல் படியாக அமையும்!


எனதருமை மூவண்ணக் கொடியே! 

இன்று உன்னை வணங்கிக் கோடானு கோடி மக்கள் கொண்டாடுகிறார்கள்! 

அதைப்பற்றி ஒன்றும் அறியாமல் பலகோடி மக்கள் இன்றும் காடு கழனிகளில் உழைத்துக்கொண்டுள்ளார்கள்! 

எண்ணற்ற மக்கள் அணிவகுத்துப் பணிந்து நிற்க எண்ணற்ற கரங்கள் இன்று உன்னை வானில் ஏற்றி மகிழ்கின்றன!

ஆனால் அவற்றில் பல கரைபடிந்த கரங்கள் , வாழத் தகுதியில்லாதவர்களின் கரங்கள்!

அதைத் தடுக்கக் கையாலாத நிலையை உணர்ந்து தேசபக்தர்களின் சார்பின் தலை குனிந்து உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்!

எனது மொழி ( 144 )

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கமும் வாழ்த்துக்களும்!

தூய்மையான இறைப் பற்றாளர்களும் தூய்மையான இறை மறுப்பாளர்களும் எனக்குப் பிடித்தமானவர்கள்! 

காரணம் அவர்களால் உலகம் நலம் பெறும்!

மற்ற போலி இறைப் பற்றோ போலி இறை மறுப்போ என்னால் மதிக்கப் பெறாது! காரணம் இரண்டுமே மக்களை ஏமாற்ற மட்டுமே பயன்படும்!

Thursday, August 8, 2013

உணவே மருந்து ( 64 )

முளைக் கட்டிய பாசிப் பயற்றில் இயற்கைமுறைக் குழம்பு! 

இப்படி ஒரு குழம்பை நீங்கள் சாப்பிடிருக்கிறீர்களா?

தயாரிப்பு முறை:

தேவையானவை: தேங்காய், தனியா, சீரகம், பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை,கொத்துமல்லி, பூண்டு , சின்ன வெங்காயம், உப்பு.

அத்துடன் முளைக்கட்டி நன்கு முளை விட்ட பாசிப் பயறு.

சமைக்காமல் செய்வதால் பூண்டும் சின்ன வெங்காயமும் மிகவும் குறைவாகத்தான் சேர்க்கவேண்டும்.

முதலில் சொல்லப்பட்டவற்றில் தக்காளியில் பாதியையும் கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் தவிர மற்றதை நன்றாக ஆட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதனுடன் முளைக் கட்டிய பாசிப் பயற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும். 


அத்துடன் மீதித் தக்காளியையும் கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் நறுக்கி மேலே தூவி விடவும். (உண்ணும்போது கலக்கிக் கொள்ளலாம்! 

இதை அனைத்துத் தானிய வகைகளால் செய்யப்பட்ட  சாதத்துடனும் கலந்து சுவையாகச் சாப்பிடலாம். 

சாதம் சேர்க்காமல் தனியாகவும் உண்ணலாம். 

இதேபோல முளைக்கட்டிய நிலக்கடலை முத்துக்களைக் கொண்டும்  செய்யலாம். 

சமைத்துத்தான் உண்ணவேண்டும் என்ற அவசியம் இருப்பவர்கள் இதில் ஒரு பகுதியை எண்ணையோ தாளிப்போ இல்லாமல் அடுப்பில் வைத்து வேகவைத்து மட்டும் சாப்பிடலாம். 

சமைத்து உண்மைவர்கள் இதேபோல வேறு பயறு வகைகளையும் பயன்படுத்திச் செய்யலாம்.

அதன் சுவையைச் சொல்லி முடியாது! 

சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சுவையைச் சொல்லவும்! 

Wednesday, August 7, 2013

உணவே மருந்து ( 63 )

இயற்கைமுறையில் தயாரித்த முள்ளங்கிக் குழம்பு சாதம்.

தேவையானவை:தேங்காய், தனியா,  சீரகம், பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை,கொத்துமல்லி, பூண்டு , சின்ன வெங்காயம், உப்பு.

அத்துடன் நறுக்கி வேகவைக்கப்பட்ட முள்ளங்கி, தேவையான அளவு சாதம்.

சமைக்காமல் செய்வதால் பூண்டும் சின்ன வெங்காயமும் மிகவும் குறைவாகத்தான் சேர்க்கவேண்டும்.

முதலில் சொல்லப்பட்டவற்றில் தக்காளியில் பாதியையும்  கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும்
தவிர மற்றதை நன்றாக ஆட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதனுடன் வெந்த முள்ளங்கியையும் சாதத்தையும் சேர்த்துக் கலக்க வேண்டும். 

அத்துடன் மீதித் தக்காளியையும் கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் நறுக்கி மேலே தூவி விடவும். (உண்ணும்போது கலக்கிக் கொள்ளலாம்! 

சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சுவையைச் சொல்லவும்! 

(சிறுநீரகக் கல், சர்க்கரை நோயாளிகள் கவனிக்க) 

Saturday, August 3, 2013

எனது மொழி ( 143 )


இது என்ன நியாயம்?

இந்த உலகு அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது !

அப்படியானால்  எந்த வகையிலும் ஒன்றையொன்று கொல்லுதல் கூடாது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. 

காரணம் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை முறையும் உயிரினப் பண்புகளும் தேவைகளும் வேறுபட்டவையாகவும் முரண்பட்டவையாகவும் உள்ளன. 

சில உயிரினங்களின் அழிவு வேறு சில உயிரினங்களின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையாக உள்ளது. 

எனவே வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவு, பாதுகாப்பு, வாழ்விடம் சமூக நலன் போன்றவை தவிர மற்ற காரணங்களுக்காகவோ காரணமே இல்லாமலோ பிற உயிரினங்களின் வாழ்வில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. 

ஆனால் சிந்திக்கத் தெரியாத உயிரினங்கள் அதன்படி நடக்கின்றன. 

சிந்திக்கத் தெரிந்த மனிதன் மட்டும் எல்லாவற்றுக்கும் மேலான நாகரிகம் படைத்த மனித இனம் மட்டும் இழிவான முறையில் வரைமுறையற்ற அழித்தொழிப்பைச் செய்து வருகிறது.

இது என்ன நியாயம்?

Thursday, August 1, 2013

உணவே மருந்து ( 62 )

வெண்பூசனி இயற்கை மோர்க்குழம்பு.

நண்பர்களே!

இது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அடுப்பில் வைக்கப்படாத வெண்பூசணி மோர்க்குழம்பு!

சிறுநீரகக் கல் உள்ளவர்களும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்த அருமையான சுவையான உணவு!