ss

Thursday, September 26, 2013

பல்சுவை ( 18 )

யுரேகா!

நண்பர்களே! 

நான் நீண்ட நாட்களாகவே ஒரு கேள்வியை நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் கேட்பேன். ஆனால் திருப்தியான பதில் கிடைக்கவே இல்லை!

நேற்று முகநூலிலும் இதே கேள்வியை முன் வைத்தேன்.

அங்கும் நிறைவான பதில் கிடைக்கவில்லை! 

அந்தக் கேள்வி இதுதான்...

அதாவது மனிதனைத் தவிர மற்ற பல்வேறு உயிரினங்கள் எந்தப் பயிற்சியும் முன்னனுபவமும் இல்லாமல் தண்ணீரில் நீந்துகின்றன. 

ஆனால் எல்லா உயிரினங்களையும் விடத் தன்னை மேம்பட்டவனாகத் தன்னைத் தானே நினைத்துக் கொள்ளும்  மனிதன் மட்டும் போதுமான பயிற்சியும் முன்னனுபவமும் இல்லாமல் தண்ணீரில் நீந்த முடிவது இல்லை. இது ஏன் என்பதே அந்தக் கேள்வி!


மனிதனின் அளவு சிந்திக்கத் தெரியாத மற்ற உயிரினங்களால் முடிவது மனிதனால் ஏன் முடிவது இல்லை? 

நீரில் நீந்துவது எப்படி என்றும் அதன் நுட்பம் என்ன என்பதும் மனிதனுக்குத் தெரிந்த அளவு மற்ற உயிரினங்களுக்குத் தெரியாது. ஆனாலும் அவை துணிந்து தண்ணீரில் குதித்து நீந்திச் செல்வதைப் பார்க்கிறோம்.

அப்படியானால் ஆறறிவு படைத்த மனிதன் மற்றவற்றைவிட மிகவும் சர்வ சாதாரணமாக நீந்திச் செல்ல வேண்டும்.

ஆனால் அதுபற்றி என்ன புரிந்திருந்தாலும் எப்படியெல்லாம் கைகளையும் கால்களையும் அசைத்து நீந்தவேண்டும் என்று எத்தனை தடவை படித்துப் படித்துச் சொன்னாலும் அப்போதும் மிதவையை இடுப்பில் கட்டாமல் பயத்தால் துடை நடுங்காமல் தண்ணீரை மூக்கின் வழியாக உறிஞ்சி புறையேறாமல் சில நாட்களாவது ஆகாமல் நம்மால் நீந்த முடிவது இல்லை! 

இதற்கு விடை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் ஆராயும்போது சில விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டி வந்தது. 

அதில் முதலாவதாக மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள முக்கியமான அடிப்படை வேறுபாடு என்ன என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டேன்.

ஆதாவது உலகில் வாழும் மற்ற எல்லா உயிரினங்களும் இயற்கைப் போக்கில் தோன்றி வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்க மனிதன் மட்டும் அதற்கு அப்பால் பரிணாம வளர்ச்சி என்ற தனித் தன்மையுடைய முறையில் வளர்ச்சியடையும் வாய்ப்பப் பெற்றான். 

பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதன் அடைந்த அறிவாற்றல் அளவற்றதாக  இருக்க ஏன் மற்ற உயிரினங்களுக்கு எளிதான ஒன்று மனிதனுக்கு மட்டும் இயலாத ஒன்றாக உள்ளது என்று யோசிக்க வேண்டியதும் அவசியமாயிற்று.

நீச்சல் என்பது மனம் மற்றும் அறிவு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. உடல் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட. அதனால் பரிணாம வளர்ச்சியின் காரணமாக உடல் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றி யோசிக்கவேண்டியதாயிற்று!

அதன்காரணமாக இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது! 

ஆதாவது பரிணாம வளர்ச்சிக்கு முன்பு மற்ற உயிரினங்களுக்கும் மனித     இனத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஆனால் பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனித உடலில் மாற்றங்கள் துரிதமாக நடந்தன.

நான்கு கால்களால் நடந்து கொண்டிருந்த மனிதன் தன் முன்னங்கால்களை பூமியில் இருந்து விடுவித்துக் கைகளாகப் பயன்படுத்த ஆரம்பித்தான்!

அதன்காரணமாக நிமிர்ந்து நிற்பதும் நடப்பதும் ஓடுவதும் சாத்தியமாயிற்று! 

கைகளின் பயன்பாட்டிhல் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி இன்றளவும் வளர்ந்து நவீன மனிதனாக ஆக்கியிருக்கிறது. 

ஆனால் இந்த வளர்ச்சிப் போக்கில்  ஏற்பட்ட மாற்றமே மனிதனால் தண்ணீரில் நீந்த இயலாதவனாய் ஆக்கியது. 

ஆதாவது மற்ற உயிரினங்களைப் போலவே நான்கு கால்களில் நடக்கும் வரை மனிதனாலும் தண்ணீரில் பயிற்சி இன்றி நீந்திச் செல்ல முடிந்தது. 

ஆனால் நிமிர்ந்து நடக்கப் பழகிய பின்னால் அது இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. 

காரணம் மனிதன் உள்ளிட்ட நான்கு கால்களால் நடந்த பாலூட்டிகள் தரையில் எப்படி நடக்க முடிந்ததோ தரையில் எப்படி ஓட முடிந்ததோ அப்படியே இயங்குவதன் மூலம் தண்ணீரிலும் நீந்த முடியும் என்பதற்கு இணக்கமாக உடலமைப்பைக் கொண்டிருந்தன.

ஆனால் பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதன் நான்கு கால்களால் நடக்கவும் ஓடவும் இயலாதவன் ஆனதால் அந்த முறையில் தண்ணீரில் இயங்கவும் இயலாதவனாக ஆகிவிட்டான்.     

நான்குகால் பிராணிகள் தரையில் எப்படி இயங்குகின்றனவோ அப்படியே இயங்கினால் நீரிலும் நீந்தலாம் என்பதுதான் விதியாக இருக்கிறது. 

அதனால் தான் நான்குகால் பிராணிகளின் குட்டிகள்கூட தரையில் நடக்கத் துவங்கியதுமே நீரிலும் நீந்தும் தகுதி பெற்று விடுகின்றன. 

ஆனால் நிமிர்ந்து நடக்கவும் ஓடவும் செய்கிறமாதிரி நீரில் செய்தால் நீந்த முடியாது. 

ஆனால் மனிதன் தண்ணீரில் விழுந்தால் உடனே தப்பி ஓடும் முயற்சியாக தரையில் செய்வதைப் போலவே கால்களைக் கீழ் நோக்கி செலுத்துவதையும் தலையை மேலே உயர்த்துவதையும் இயல்பான ஒன்றாக ஆக்கிக்கொண்டான். 

அதன்காரணமாக மனிதன் இப்போது நடக்கிறமாதிரி அல்லது ஓடுகிற மாதிரி ஒரு இயக்கத்தைக் கொண்டு நீந்த முடியாமல் தண்ணீரைக் குடித்து விட்டு தத்தளித்து அதன்பின் மூழ்கியும் போகிறான்.

ஆனால் மனிதன் தன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக முன்போல நீந்த முடியாவிட்டாலும் தனது உடல் மாறுதலுக்கு ஏற்ப நீந்தும் முறையிலும் மாற்றம் செய்து தண்ணீரில் நீந்தும் தனது தகுதியை மட்டும் நிலை நிறுத்ததிக்கொண்டான். 

ஆனால் பரிதாபம் என்னவென்றால் மற்ற உயிரினங்களின் இயல்பான இயக்கம் நீந்துவதற்கப் பயன்பட்டதுபோல மனிதனின் இயல்பான இயக்கம் நீந்துவதற்குப் பயன்படாமல் போனதால் மனிதனுக்கு மட்டும் தனது உடலமைப்புக்கு ஏற்ப நீந்திப் பழகவேண்டியதும் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியதம் அவசியமாக ஆகி விட்டது.

ஆனால் மற்ற பிராணிகளுக்கு அந்த அவசியம் இல்லாமல்போய்விட்டது. அவை எப்போதும்போல எந்தப் பயிற்சியும் இல்லாமல் நீந்தி விளையாடிக்கொண்டே உள்ளன.!

Wednesday, September 25, 2013

அரசியல் ( 53 )

அன்னா ஹசாரே பற்றிய ஒரு உரையாடலில் எனது கருத்துக்கள்.....

அன்னா ஹசாரே எங்கே?.....

யாரோ ஒருவர் ஜன் லோக்பால், ஜன் லோக்பால் என்று சொல்லிக்கொண்டே பாயைப் பிராண்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்!.........

நண்பரே! இவர்மேல் மிகவும் மரியாதை வைத்ள்ளீர்கள்போல!... இந்த மண்குதிரை ஆற்றைக் கடக்கும் என்று நம்பிகிறீர்களா?....

இவர் ஒரு பொம்மலாட்ட பொம்மை! சுய மூளை இல்லாதவர்!....

ஊழல் பேர்வழிகளைக்கூட இன்னும்கொஞ்ச காலம் சகித்துக்கொள்ளலாம். இவரைப்போன்ற ஆஷாட பூதிகளை நம்பினால் ஊழல் எதிர்ப்பு என்பது அர்த்தமற்ற ஒன்றாகிவிடும்!....

தன் முயற்சியில் தோல்வி அடைந்த ஒரு காரணத்தால் இவர் இகழ தக்கவர் அல்ல \\\\\\ நிச்சயம் நான் அப்படி இகழ்பவன் அல்ல நண்பரே!....தனி மனிதன் ஒரு இயக்கமாகிவிட மாட்டார்! இவர் தனி மனிதனான தன்னைத்தான் முன் நிறுத்தினார் தவிர எப்போது மக்களை முன் நிறுத்தினார்? தனக்குப் பின்னால் கும்பலை எதிர்பார்த்தவர்தான் இவர்! ஊடகங்களின் விளம்பரத்தால் பெரிதுபடுத்தப்பட்டவர்! ஊழலுக்கு எதிரான இவருடைய கொள்கையைப் பற்றிக் கொஞ்சம் யாராலும் சொல்வீர்களா?....

இவர் புகழேணியின் உச்சியில் இருந்தபோதுகூட நான் இவரை மதித்தது இல்லை! காரணம் இவர் மக்களுக்காக என்ன சொன்னாரோ அது நிறைவேற இவர் வைத்திருக்கும் வழி இவருக்கே தெரியாது என்பதுதான்!

தனி மனிதர்கள் சமூகத்தில் சிறப்பான பாத்திரம் வகிக்கலாம். ஆனால் தனிமனிதர் ஒரு இயக்கம் ஆகக்கூடாது! அதுதான் தனிநபர் வழிபாடாகவும் தனிநபர் சர்வாதிகாரமாகவும் மாறுகிறது!. அதுமட்டுமல்ல அந்தத் தனி நபருக்கு ஏற்ப்படும் கதி அந்த இயக்கத்துக்கும் ஏற்ப்படும்.இந்த வகையில் மக்கள் எண்ணற்றவர்களிடம் ஏமாந்தாகி விட்டது! இனியுமா?....

எவன் ஒருவன் மக்களைப் பற்றிச் சிந்திக்கிறானோ , தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறானோ அவன் அரசியல்வாதி ஆகிறான். அவன் எத்தகையவன் என்பதுதான் முக்கியம்! எல்லோரையும் நிந்திப்பது நமக்கு நாமே காறித் துப்பிக்கொள்வது ஆகும்!.


இவர் தளர்ந்துபோய் படுத்துக்கொண்டால் இவருடைய இயக்கம் என்னவாகும்?(அப்படி ஒன்று இருந்தால்தானே ஏதாவது ஆவதற்கு என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது)

நான் மீண்டும் சொல்கிறேன் நண்பர்களே!

இவர் தோல்வி அடைந்த பின்னால் பழிப்பவன் நான் அல்ல!

ஆரம்பம் முதலே இவர் ஒரு போலி என்பதை நான் சொல்லி வருகிறேன்.

என்னமோ ஊழலை ஒழிக்கப் பிறந்த அவதார புருஷராக இவரை நினைத்த சிலர் அவரை விமர்சிப்பதைத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாய் புலம்பிப் பயன் இல்லை!

நாட்டில் ஊழலை ஒழிக்க என்ன வழி என்று இவர் ஏதாவது திட்டம் உருவாக்கினாரா?

அதன்கீழ் மக்களைத் திரட்ட ஏதேனும் முறையான இயக்கத்தைத் துவக்கினாரா?

ஊழல் ஒழிப்பு மட்டுமல்ல தேசப்பற்று மிக்க அனைவரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டம் நடத்த ஏதேனும் முயற்சி செய்தாரா?...

என்ன விஷயம்?

காந்தியவாதி என்ற பெயரை வைத்துக்கொண்டு தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொன்னால் அது பெரிய இயக்கம் ஆகிவிடுமா?

தேசியக் கொடியை அவமரியாதை செய்ததற்கு இவர்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்!

அவரை மதிப்பவர்கள் அவருடைய கொள்கைகளையும் திட்டங்களையும் விளக்கவேண்டும்!

அதைவிட்டுத் திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே கூட்டத்தில் ஓடும் திருடனைப்போல ஊழல் ஊழல் என்று சொல்லிக்கொண்டே ஊழல் பேர்வழிகளைச் சார்ந்து கதை நடத்தும் ஒருவரை நாடே நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

 ஊழல் எதிர்ப்பு உணர்வை மழுங்கடிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒருவர்தான் அன்னா ஹசாரே! அதனால்தான் ஊழல் பெருச்சாளிகளும் நாட்டை கொள்ளை அடிக்கும் கும்பல்களும் எல்லாம் இந்தத் தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுத்தன. அதன்மூலம் மக்களை சரியான முறையில் போராடாமல் இவரை நினைத்து நீற்றுப்போகச் செய்தன.அவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதன்மூலமும் பேச்சுகளுக்கு அழைப்பு விடுப்பதன்மூலமும் இவரை மக்களின் ஏகபோகப் பிரதிநிதியாகக் காண்பித்து கடைசியில் புஷ்வாணமாக்கினார்கள்.....

அவருடைய ஒன்றுக்கும் உதவாத நடைமுறைகளும் அவருக்கு அளிக்கப்பட விளம்பரமும், மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவருக்கு ஊழல் அரசுகள் கொடுத்த முக்கியத்துவமும், அவருடைய தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இயக்கம் இல்லாமல் இருந்தும் அவரை ஒரு சக்திமானாகச் சித்தரித்ததும் விட வேறு பெரிய ஆதாரங்கள் என்ன வேண்டும்?...

ஒரு எலியைப் பற்றிக்கூட தவறான கருத்தை நான் சொல்ல மாட்டேன் நண்பரே!

நாட்டைப் பீடித்திருக்கும் பெருநோயான ஊழலுக்கு எதிரான ஒரு இயக்கத்தையா தூற்றப்போகிறேன்?

யாருக்காக அப்படி ஒரு தவற்றைச் செய்ய வேண்டும்?

எந்த ஒரு தவறும் நடக்கின்ற அடிப்படைகளைத்தான் ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும்!

இவர் எப்படி நம்பகமானவர் என்பதை எந்த ஆதாரங்களை வைத்து நம்புவது?.....

அப்படிப்பட்ட ஆதாரங்கள் இல்லாமையே இவர் நம்பத் தகாதவர் என்பதற்கு மேலும் ஒரு முக்கியமான ஆதாரம்!

நாட்டைப் பற்றியும் நாட்டு நிலைமைகள் பற்றியும் அவலங்களுக்குக் காரணங்கள் பற்றியும் அவற்றைச் சரி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் இவருடைய பார்வை என்ன? இவருடைய அரசியல்தான் என்ன? இவர்பின்னால் தேசபக்தர்கள் ஏன் அணி திரளவில்லை? ஏன் இவர் கேலிப் பொருளானார்? என்பதுபற்றியும் எதுவும் சொல்லாமல் ஒரு மனிதரை மகத்தானவர் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?

நாட்டைப் பீடித்திருக்கும் ஊழல் என்பது பல தவறுகளின் விளைவே!

அவை ஒன்றுக்கொன்று வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை...

ஊழலை ஒழிக்கவே அதற்கு முன்னால் வேறு பலவற்றை ஒழிக்க வேண்டும்.

அதனால் ஊழல் ஒழிப்பு என்பது மட்டும் தனியாக இன்றுள்ள நிலையில் சாத்தியம் அல்ல.

சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் நாற்றத்தைமட்டும் தடுக்க முடியாது!

அதனால்தான் நாட்டை நல்ல பாதையில் வழிநடத்தும் முன்னோடிகள் யாராக இருந்தாலும் அவர் நாட்டின் அனைத்து நிலைமைகளையும் கணக்கில்கொண்டு திட்டம் வகுத்து மக்களை வழிநடத்தக் கூடியவராக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன்.

அது ஹசாரேயாக இருந்தாலும் சரியே!

அதற்கு முதல் ஆதரவு கொடுக்க நான் தயார்!

ஆனால் அப்படி இல்லை என்பதுதான் இன்றைய நிலை!....
September 21 at 2:41pm · Like

ஊழலுக்கான காரணத்தை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது!

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால் ஊழல் ஒழிந்திருக்கும் என்றால் அதை நம்பவேண்டும் என்றால் இப்போதுள்ள சட்டங்களைஎல்லாம் முழுமையாகப் பயன்படுத்தி அது இயலாமல் போயிருக்க வேண்டும்.

அப்படியெல்லாம் இதற்கு முன் உள்ள சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திவிடவில்லை!

ஆகையால் லோக்பால் மசோதா நிறைவேறியிருந்தாலும் அதுவும் பரணில் போடப்படும் பழைய துணிகளில் ஒன்றாகத்தான் ஆகியிருக்கும்.

சட்டங்களைப் புத்தகங்களில் வரைந்தால் மட்டும் போதும் என்றால் இப்போதுள்ள சட்டங்களே போதும்!

ஆனால் அதைக் கையாளும் துறை சட்டவிரோதிகளின் கைகளில் இருந்தால் அந்தச் சட்டம் என்ன செய்யும்?....

தவறுகளுக்குக் காரணமான சமூகக் காரணிகளை ஒழித்துக் கட்டாமல் தவறுகளை ஒழித்துக்கட்ட முடியாது!

ஒரு குடிகாரன் குடியை நிறுத்தாமல் அதற்குச் செலவான பணத்தைச் சேமிக்க முடியாது!

அவன் சேமிக்கவேண்டும் என்றால் அதற்கு முன் நிபந்தனை அவன் குடிகாரனாக இருந்து மாறவேண்டும்....

அப்படித்தான் இதுவும். ஊழலில் இருந்து மக்கள் விடுதலை அடையவேண்டும் என்றால் ஊழலுக்கான காரணிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்!

அத்தகைய சமூக சிந்தனை கொண்டவர்களின் தேசபக்த இயக்கம்தான் நாட்டுக்கு அவசரத் தேவை!

அத்தகைய ஒரு இயக்கமாக ஒன்றை உருவாக்காமல் எந்த முயற்சியும் பயன் அளிக்காது!.....
September 21 at 4:47pm · Like · 2

ஆதாவது இற்றுப்போன தடியைக்கொண்டு எந்தப் பாம்பையும் அடிக்கமுடியாது! அதுபோல அடிப்படை வலுவற்ற கட்டமைக்கப்படாத எந்த ஒரு இயக்கமும் அரசை எதிர்த்துப் போராட முடியாது! அப்படியிருக்க ஒரு தனி மனிதனின் பெயரால் எந்த விரிவான செயல் திட்டமும் இன்றி அரசை எதிர்த்துப் போராட முடியும் என்று நினைக்கும் மனோபாவத்தைத்தான் நான் எதிர்க்கிறேன். அத்தகைய மனோ பாவத்துக்கு ஹசாரே நடவடிக்கைகள் பயன்பட்டதால்தான் அவரை விமர்சிக்கவேண்டியதாக உள்ளது! உண்மையில் அது அவருக்கு எதிரான தாக்குதல் என்பதைவிட அந்த உணர்வுள்ள மக்களுக்கும் அதை ஊழலுக்கு எதிரான பயனுள்ள நடவடிக்கையாக நம்பும் ஊழல் எதிர்ப்பாளர்களான நல்லவர்களின் தவறான நம்பிக்கைக்கும் எதிரான தாக்குதல் ஆகும்! ஹசாரே எனக்கோ என்னையொத்த எண்ணம் படைத்தவர்களுக்கோ எதிரி அல்ல! அதனால் அதைத் தனிமனித வழிபாட்டுக்கு ஈடான தனிமனிதக் குரோதமாகக் கருத முடியாது!.
September 23 at 1:34pm · Like

நான் எப்போதும் தனிப்பட்ட நபர்களை விமர்சிப்பது இல்லை!

காரணம் தனிநபர்களை விட அவர்கள் பங்கேற்கும் சமூக இயக்கம்தான் முக்கியம்!

அப்படி ஒரு இயக்கமாக ஒரு தனிப்பட்ட மனிதரை முன் நிறுத்தும்போது அங்கு விமர்சிக்க கொள்கை கோட்பாடுகளோ திட்டங்களோ இருக்காது!

அப்போது அந்த நிலையில் அந்த மனிதர்தான் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டும்.

தனிநபர்களை முன் நிறுத்தும் ஒவ்வொரு இயக்கத்துக்கும் அதுதான் நடக்கும்!

அந்த வகையில் தான் அன்னா ஹசாரே இயக்கத்தைப் பார்க்க முடியும்!

அவருடைய பெயரைச் சொல்லாமல், அவருடைய கோரிக்கைகளைச் சொல்லாமல், அவருடைய போராட்டங்களைச் சொல்லாமல் அவருடைய இயக்கத்தைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?.

அது தனிநபர் விமர்சனம் ஆகாது!

தனி நபர் விபர்சனம் என்றால் அவரது தனிப்பட்ட வாழ்வையோ நடவடிக்கைகளையோ ஒழுக்கம், நேர்மை, நாணையம் போன்றவற்றையோ விமர்சித்திருக்க வேண்டும்.

அப்படி அல்லாமல் சமூக சிந்தனையோடு செய்யப்படும் விமர்சனங்களை தனி நபர் துவேசமாகவோ காழ்ப்புணர்வாகவோ கருத முடியாது!....

அப்படிக் கருதினால் அது சரியான அரசியல் பார்வையோ புரிதலோ அல்ல!.
23 hours ago · Like

அவரைப் பற்றிய அத்தாட்சிகள் இந்தப் பதிவுக்கு முக்கியம் அல்ல!

அரசு கொடுக்கும் பட்டங்களெல்லாம் பெரிய விஷயமில்லை என்று அனைவருக்கும் தெரியும்!

அவருடைய இயக்கம் எப்போது எந்த முறையில் தோற்றுவிக்கப்பட்டது?

அதன் அமைப்பு மக்களுக்கும் தலைமைக்கும் எத்தகைய இணைப்பையும் உறவையும் கொண்டிருந்தது?

அந்த அமைப்பு ஊழலைப் பற்றியும் அதன் ஊற்றுக்கண் பற்றியும் அதை ஒழிப்பதற்கான வழிகள் பற்றியும் அதில் மக்களின் பங்களிப்பு பற்றியும் என்ன சொல்கிறது?

நாடு முழுக்க உள்ள ஊழலை ஒழிக்க ஈடுபாடு கொண்டிருக்கும் பலதரப்பட்டவர்களை ஒன்றிணைக்க என்ன பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அரசை நிர்பந்திக்க எத்தகைய போராட்டங்களை நடத்த எந்த மட்டத்தில் கூடி என்னென்ன திட்டங்கள் வகுக்கப்பட்டன?

எந்த ஸ்தாபன பலத்தை வைத்து மக்களின் பிரதிநிதியாக அரசுடன் மோதினார்?

அவருடைய எந்தப் பலத்தை வைத்து அரசு அவருக்கு மரியாதை கொடுத்தது?.....

அரசு பல வகையிலும் இழுத்தடித்தபோது அதில் சோர்வடையாமல் ஏன் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவில்லை?

துவக்கத்தில் கொஞ்சம் வளைந்து கொடுத்த அரசு அதன்பின் சண்டித்தனம் செய்தபோது இவரால் ஏன் ஒன்றும் செய்ய முடியவில்லை?

இவருடைய போராட்டம் தோல்வி அடைந்ததற்கு ஐவரும் அரசும்தவிர மக்கள் எவ்வகையில் காரணம்?....
22 hours ago · Like

ராணுவக் கட்டுக்கோப்புடன் சரியான கொள்கை கோட்பாட்டுடன் மக்களை அணிதிரட்டினால்...// இதற்கான சாத்தியக்கூறு இந்த தேசத்தில் மிக குறைவு ..\\\\\\அப்படித் திரட்டாதவரை ஊழலுக்கு நாடு அடிமையே!.....
22 hours ago · Like

தனிமனிதத் துதிப்பாடல் என்று நான் சொல்வது பொதுவாக நாட்டுமக்கள் பின்பற்றிவரும் பொது வாழ்வு பற்றிய மன நிலையை! அதன் ஒரு பகுதியாகத்தான் அன்னா ஹசாரே பற்றிய மக்களின் மனப்பாங்கும்! அது உங்களையும் சேர்த்துக் குறித்துவிட்டதுபோலும்?.... வேறு வழி இல்லை! வீட்டின்மேல் மரம் விழுந்தால் அது ஓட்டையும் பாதிக்கவே செய்யும்....
21 hours ago · Like

தமிழ்நாட்டில் நாராயணசாமி நாயுடு என்பவர் தலைமையில் விவசாய சங்கம் ஒன்று மிக வலுவாக இருந்தது! அதன் வீழ்ச்சி தான் ஹசாரே போராட்டம் பயன்தராது என்று நான் துவக்கத்திலேயே முடிவு செய்ததற்குப் பலமான முன்னுதாரணமாக இருந்தது!....

தேசிய கொடியை தாங்கி பிடிக்க இந்த முதியவரை விட தகுதியானவர் இன்று இன்று தேசத்திலேயே குறைவு...\\\\\தேசியக் கோடி ஒரு இயக்கத்தின் கொடி அல்ல! அதை யார்வேண்டுமானாலும் ஏந்திச் செல்லலாம்! ஆனால் அரசை எதிர்க்கும் போராட்டத்தில் ஒரு பதாகையாகப் பயன்படுத்த முடியாது!.... யாராவது ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தால் சரி! அதைவிட நீதி மன்றங்களே அதைக் கண்டித்துத் தடுத்திருக்க வேண்டும்!.....
41 minutes ago · (25.9.2013 3.30 p m )

Saturday, September 21, 2013

விவசாயம் ( 66 )

என்ன கொடுமை இது!...

இது பாசன வாய்க்காலில் ஓர் இடம்....

தண்ணீர் செல்லாத காலங்களில் அதில் தழைக்கின்ற புல் பூண்டுகளை கால்நடைகள் மேயும்.

அதனால் அங்கு மாடுகளின் சாணமும் காய்ந்துபோன வரட்டிகளும் கிடக்கும்.

சாணம் நிலத்துக்கு எருவாகவும் வரட்டி அடுப்புக்கு எரிபொருளாகவும் பயன்படும்.

ஆனால் இன்று....




சாராய பாட்டில்களும் பிளாஸ்டிக் பைகளும்தான் சிதறிக் கிடக்கின்றன...

சாராய பாட்டில்கள் மண்ணுக்கு உரம் ஆகுமா?

பிளாஸ்டிக் பைகள் அடுப்பெரிக்க உதவுமா?....

என்ன கொடுமை இது?....

Friday, September 20, 2013

விவசாயம் ( 65 )

களத்து மேட்டுல.....

முன்பெல்லாம் விவசாயிகள் தங்கள் நிலத்திலேயே களம்போட்டு அறுவடைசெய்து தானியங்களைப் பிரித்து காயவைத்து விற்பார்கள்....

களத்துமேட்டில் காசு பார்த்தார்கள்....

ஆனால் இப்போது தானியங்களைக் காயவைக்கக்கூட வியாபாரிகளின் களங்களுக்குக் கொண்டு சென்றால்தான் உண்டு! 

காரணம் களமும் இல்லை! அதில் தாம்பு ஓட்டி பம்பல் செய்யச் சிறு தானியங்களும் இல்லை! 

தாம்பு ஓட்ட மாடுகளும் இல்லை!....

தாம்பு ஓட்டும் ஆட்களும் இல்லை!....

இதுதான் நகளத்து மேட்டுல.....

முன்பெல்லாம் விவசாயிகள் தங்கள் நிலத்திலேயே களம்போட்டு அறுவடைசெய்து தானியங்களைப் பிரித்து காயவைத்து விற்பார்கள்....

களத்துமேட்டில் காசு பார்த்தார்கள்....




ஆனால் இப்போது தானியங்களைக் காயவைக்கக்கூட வியாபாரிகளின் களங்களுக்குக் கொண்டு சென்றால்தான் உண்டு! 

காரணம் களமும் இல்லை! அதில் தாம்பு ஓட்டி பம்பல் செய்யச் சிறு தானியங்களும் இல்லை! 

தாம்பு ஓட்ட மாடுகளும் இல்லை!....

தாம்பு ஓட்டும் ஆட்களும் இல்லை!....

இதுதான் நவீன மக்காச் சோளக் களம்.....

Thursday, September 19, 2013

விவசாயம் ( 64 )

சாதனை படைத்த வண்டி.....

நண்பர்களே! 

இந்தப் படத்தில் உள்ளது இரட்டை மாட்டு வண்டி.

இதுவரை பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளில் இதை விடச் சிறந்த வண்டி வேறொன்றும் இல்லை என்பது எனது அனுபவம்....

 கட்டை வண்டி என்று சொல்லக்கூடிய வண்டிதான் காலங்காலமாகப் புழக்கத்தில் இருந்தது. 

அதைக்கொண்டுதான் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விவசாய வேலைகளையும் சரக்குப் போக்குவரத்தையும் செய்தார்கள். 

அந்தக் கால கட்டங்களின் தேவைக்கும் இருந்த பாதை வசதிக்கும் கட்டை வண்டி மிகவும் ஏற்றதாக இருந்தது. 

 வண்டியின் தரத்தை வைத்து அதிக பட்சம் ஒண்ணேகால் டன் எடையுள்ள பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொர இடத்துக்குக் கொண்டு செல்லலாம். 

அந்த வண்டி அதிக பட்சம் மரத்தைக் கொண்டும் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அச்சு, பட்டா, கும்பக்கட்டு , அச்சாணி கயிறு கட்டும் வளையங்கள் போன்றவை இரும்பைக் கொண்டும் செய்யப்பட்டன. 

ஆனால் அந்த வண்டிகள் அடிக்கடி தேய்மானம் அடைவதும் உடைவதுமாக பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். 

அதனால் எல்லா ஊர்களிலும் வண்டிப் பட்டறைகள் அக்காலத்தில் தவறாமல் இருக்கும். 

ஆனால் காலம் மாற மாற அறிவியல் வசதிகளும் பாதை வசதிகளும் பெருகப் பெருக கட்டை வண்டிகளில் மாற்றம் தேவைப்பட்டது. 

அதிக பாரம் ஏற்றக் கூடியதாகவும் அதிகநாள் உழைக்கக்கூடியதாகவும் பராமரிப்பு வேலைகள் அதிகம் இல்லாததாகவும் ஆன வண்டிகள் தேவைப்பட்டன.


அதன் தொடர்ச்சியாக டயர் வண்டி என்று சொல்லப்படும் வேறு விதமான வண்டிகள் உருவாக்கப்பட்டன.

அவை பெரும்பாலும் இரும்பையும் அடிப்பலகை , நுகம் போன்றவை மட்டும் மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்டன. சக்கரங்கள் டயர்கள் இணைக்கப்பட்ட நவீன சக்கரங்களாக அமைந்தன. 

அச்சின்மீது பேரிங்குகள் பொருத்தப்பட்டன. 

அப்படி மாற்றம் செய்யப்பட்ட டயர்வண்டிகளில் மிகவும் சிறப்பானது இந்த வகை வண்டிகள் ஆகும்.

இதில் நான்கு டன்கள் வரை பாரம் ஏற்றிச் செல்ல முடியும். 

இழுக்கும் மாடுகளின் இழுவைத்திறன் சிறப்பாகப் பயன்படுகிறது.

பராமரிப்பு செலவு என்பதே சொல்லும் அளவில் கிடையாது. 

அவ்வப்போது காற்று அடிப்பதும் வருடக் கணக்கில் ஒரு தடவை டயர் மாற்றுவதும்தான் முக்கியமான பராமரிப்பு வேலைகள். 

மற்றபடி பெரிதாக இருக்காது. அவ்வப்போது பெயிண்ட் அடித்தால் போதும். 

இந்த வண்டிகள் சரக்குப் போக்குவரத்துக்கும் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு கொண்டு செல்லவும் விவசாய நிலங்களுக்கு குளத்து வண்டல்மண் அடிக்கவும் மகத்தான சேவை செய்தன.

இது அறிமுகம் ஆகி ஐம்பது வருடங்களில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. 

ஆனால் பசுமைப்புரட்சிக் காலத்தில் இயந்திரப் பயன்பாடும் வேதி உரம், பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் வந்த பின்னால் மனித உழைப்பும் கால்நடை உழைப்பும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து விவசாயத் தொழிலாளர்களின் உழைப்புத் திறன் மாற்றியமைக்கப்பட்டு இயந்திரங்களைச் சார்ந்ததாக மாற்றப்பட்டது. 

அதனால் கூடுதல் உழைப்புத் திறன் தேவைப்பட்ட மாட்டு வண்டி பயன்பாடு, மாட்டு உழவுப் பணி இவையெல்லாம் பழங்கதையாகி வருகின்றன. 

இதன் விளைவாக அற்புதமான இந்த டயர் வண்டிப் பயன்பாட்டை மூன்று சக்கர , நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் சுலபமாகத் துடைத் தெரிந்து விட்டன. 

காய்கறிச் சந்தைகளில் இந்த டயர் வண்டிகள் நூற்றுக் கணக்காக குவிந்திருந்தது போய் இப்போது கண்களில் காண்பதே அரிதாகப் போய் விட்டது! 

அந்த அளவு மோட்டார் வாகனங்கள் புழக்கத்துக்கு வந்து விட்டன. 

இந்த டயர்வண்டிகளுக்கு நேர்ந்த கதிதான் நாட்டுமாடுகளின் அழிவுக்கும் ஒருபகுதி காரணம் எனலாம்.

காரணம் நாட்டு மாடுகள் உழைப்பின்மூலம்தான் விவசாயிக்கு அதிகப் பயன் கொடுக்க முடியும். 

ஆனால் இந்த வண்டிகள் புழக்கம் மற்றும் மாடுகளைக் கொண்டு உழவு செய்யும் பழக்கம் ஒழிந்து வருவதால் நாட்டுமாடுகளின் பயன்பாடும் குறைந்து அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த கட்டை வண்டிகளின் பயன்பாட்டை இந்த டயர் வண்டிகள் வந்து முடிவுக்குக் கொண்டு வந்தன. 

ஆனால் அப்பேர்ப்பட்ட சாதனை படைத்த இந்த டயர்வண்டிப் பயன்பாட்டை ஐம்பதே ஆண்டுகளில் சிறுரக மோட்டார் வாகனங்கள் முடிவுக்குக் கொண்டுவந்து விட்டன. 

இந்த வண்டி மறைந்து வருவது மிகவும் கவலைக்குரியது ஆகும். 

காரணம் இவை இல்லாமல் நாட்டு மாடுகள் இல்லை! 

ஜல்லிக் கட்டும் ரேக்ளா பந்தயமும் இதில் ஈடுபாடுள்ள சிலர் இருக்கும் வரை இன்னும் சில ஆண்டுகள் இருக்கலாம். 

ஆனால் அவை மட்டும் நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதற்கான நிரந்தர வழிகள் அல்ல! 

நாட்டுமாடுகள் காக்கப்படவேண்டுமானால் அவற்றைப் பயன்படுத்தும் வண்டி வாகனங்கள் புழக்கத்தில் இருக்க வேண்டும். 

அப்படி இல்லையேல் இந்த வண்டிகளுடன் சேர்ந்து நாட்டு மாடுகளும் மறைந்து விடும்!....

மாட்டுக்கு வால் எந்தப்பக்கம் என்று கேட்பவர்கள் எல்லாம் இக்காலத்தில் அதிகமாக நாட்டு மாடுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். 

அவையெல்லாம் கவைக்கு உதவாத கற்பனைகளே! 

உண்மையாகவே நாட்டுமாடுகள் நீடிக்கவேண்டுமானால் ......

மாடுகளைக் கொண்டு உழ வேண்டும்! 

இந்த வண்டிகளின் எண்ணிக்கை முன்போல அதிகரிக்கவும் பயன்படவும் வேண்டும். 

அதற்கேற்ற முறையில் வேலையாட்களும் கிடைக்க வேண்டும்....

அதற்கு வாய்ப்பு உள்ளதா?....






Wednesday, September 18, 2013

உணவே மருந்து ( 67 )

மாப்பிள்ளைகளே ஜாக்கிரதை!

நாம் வேண்டாததை வாயில் போட்டுவிட்டால் என்ன செய்கிறோம்? 

உடனே காறிக் காறித் துப்புகிறோம்! 

காரணம் என்ன?

அதை நமது நாக்கு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது! 

அதைத் தொடர்ந்து மனமும் அதை வெளியேற்றவே துடிக்கிறது!

அப்படியானால் நிறையப்பேர் அப்படி வாயில் ஒன்றையும் போடாமலேயே அடிக்கடி காறிக் காறித் துப்புகிறார்களே அது ஏன்?...


அதுவும் நியாயமான காரணத்தால்தான்! 

ஆதாவது அவர்கள் வாயில் வேண்டாதவையெல்லாம் உமிழ் நீரில் கலந்துள்ளது என்று பொருள்! 

அதனால்தான் அவசியமான உமிழ்நீரையும் சேர்த்துத் துப்பிக்கொண்டே இருக்கிறார்கள்! 

இத்தகைய கெட்ட பழக்கம் யாரிடம் இருந்தாலும் அவர்களிடம் ஒன்று அதற்கான கெட்ட பழக்கம் இருக்கிறது. அல்லது அது தொடர்பான நோயும் சேர்ந்து உள்ளது என்று அறிந்துகொள்ளலாம். 

ஆதாவது புகையிலை, பான்பராக், சாராயம், அதிகமான புகை போன்ற கெட்ட பழக்கங்கள் இருக்க வேண்டும்...

அதனால் நோய் ஏற்கனவே இருக்கும் . அல்லது நோயை வரவழைத்துக் கொள்வார்கள்...

அது நல்ல ஒழுக்கமானவர்களுக்கு அழகல்ல! 

நான் ஒருபக்கம் மாப்பிள்ளை பார்க்கப்போய் அவன் அடிக்கடி காறித் துப்பிக்கொண்டிருந்ததைப் பார்த்து அவனை ரிஜெக்ட் செய்திருக்கிறேன்!...

மாப்பிள்ளையாக நினைப்பவர்களே ஜாக்கிரதை!...

விவசாயம் ( 63 )

புதுவகை வேலி.....

நண்பர்களே!

இந்தப் படத்தில் உள்ள தாவரத்தின் பெயர் தெரியவில்லை...

ஆனால் நிறைய வீடுகளிலும் மற்ற இடங்களிலும் பார்க்கலாம்.

நாங்கள் எங்கள் தோட்டத்தின் நுழைவாயிலில் இரு பக்கமும் வளர்த்துள்ளோம். 

அதன் அழகையும் அடர்த்தியையும் பார்த்து விட்டு மேலும் ஒரு இருநூறு அடி தூரத்துக்கு வேலிபோல் ஓரத்தில் நட்டுள்ளோம்.

காரணம் அது பார்க்க அழகாக இருப்பதோடு உயிர் வேலியாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையே!...

எவ்வளவு தூரம் நடவேண்டுமோ அவ்வளவு தூரத்துக்கு சொட்டு நீர்க் குழாயைப் போட்டு அடிக்கு ஒரு செடி இருக்குமாறு நட்டு விட்டால் மிக அடர்த்தியாகவும் அழகாகவும் வளர்ந்து விடும். 

இதில் ஒரு சிறப்பு என்ன வென்றால் இந்தத் தாவரத்தை ஆடுகள் தின்னாது. 

அப்படியே தின்றாலும் நல்லதாகப் போயிற்று. சில ஆடுகளுக்குத் தீனியும் கிடைத்துவிடும். 

தவிர இதை நோய்கள் தாக்குவதும் இல்லை!



மூலிகைப் பூச்சி விரட்டி தயாரிப்புக்கு இது பயன்படாலாம் என்ற எண்ணமும் எனக்கு உண்டு!...

சோதித்துப் பார்க்கலாம்...

நாற்றுக்களுக்காக எந்த சிரமமும் படவேண்டியது இல்லை! 

வளர்ந்த செடிகளின் நுனிகளை சின்னச் சின்னக் கிளைகளாக வெட்டி நடவு செய்தால் போதும் அருமையாகத் தழையும்! 

இது பற்றி உங்கள் கருத்து என்ன? இதன் பெயர் என்ன?....

Monday, September 16, 2013

அரசியல் ( 52 )

இது என்ன ஜனநாயகம்!

அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் இவர் என்று கட்சிகள் அறிவிக்கின்றன!

பாராளுமன்றத் தேர்தலில் மெஜாரிட்டி பெரும் கட்சியின் அல்லது கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அணித் தலைவரை அல்லது தனி மெஜாரிட்டி பெரும் கட்சித் தலைவரைத் தேர்வு செய்வார்கள்.

அவர்தான் பிரதமர் என்பது அரசியல் சட்டம்!  

ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே இன்னார்தான் பிரதமர் அல்லது இன்னார்தான் முதல்வர் என்று வேட்பாளர்களாக அறிவிப்பது நாளை தேர்ந்தெடுக்கப்படப்போகும் உறுப்பினர்களின் உரிமையைப் பறிப்பது ஆகாதா?

அவர்களுக்கு ஓட்டுப் போடும் மக்களின் உரிமைகளை அவமதிப்பது ஆகாதா?

இது என்ன ஜனநாயகம்?....

Wednesday, September 11, 2013

விவசாயம் ( 62 )

கருணை மனம்....

நமது மக்களின் மனதில் ஒடிக்கொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது கருணை அல்லது இரக்கம் அல்லது ஜீவகாருண்யம்!

ஆனால் அதன் பொருளை உண்மையாகவே அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்!

எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்த வேண்டும் என்கிறார்கள். கொல்லாமையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறாhகள். மாமிசம் உண்ணவேண்டாம் பாவம் என்கிறார்கள்.

மாடுகளைக் கொல்லாமல் பராமரிக்கவேண்டும் என்கிறாhகள். காரணம் கேட்டால் மாடுகள் பாடுபடுகின்றன, பால் கறக்கின்றன,  அந்த நன்றிக்காக அவை பயனற்றுப் போன பின்னாலும் தீனி போட்டுப் பராமரிக்கவேண்டும் என்கிறாhகள்.

ஆனால் ஆடு, பன்றி, கோழி, எருமை இவற்றைப்பற்றியெல்லாம் ஒன்றும் வாய்திறப்பது இல்லை! 

பால் கறக்காத, பாடுபடாத மாடுகளைப் பற்றயும் ஒன்றும் சொல்வது இல்லை.

எந்தெந்த உயிரினங்களைக் கொல்லலாம், எந்தெந்த உயிரினங்களைக் கொல்லக் கூடாது என்றெல்லாம் சொல்வது இல்லை! 


பால் கறப்பதற்காக அல்லது வயலில் வேலை செய்வதற்காக ஒருவர் மாடு வாங்;குகிறார் என்றால் அந்த மாடு பால் வற்றிய பின்னால் அல்லது அந்த வேலைக்காக வாங்கிய மாட்டுக்கு வேலை இல்லை அல்லது தீவனம் இல்லை என்றால் அவற்றை யார் பாதுகாப்பார்கள் என்ற கேள்விக்கெல்லாம் பதிலே கிடையாது! 

மாடுகளைக் கொல்பவர்களையும் மாமிசத்தை உண்பவர்களையும் குற்றம் சொல்கிறார்களே தவிர கொல்வதற்காக விற்பவர்களை ஒன்றும் சொல்வதில்லை!

சரி அதுதான் போகட்டும் இந்தக் கருணாமூர்த்திகள் எல்லா உயிர்களையும் நேசிக்கவேண்டும் எவ்வுயிரையும் கொல்லக்கூடாது என்று சொல்கிறார்களே தவிர இவர்கள் எந்தெந்த உயிர்களை எப்படி நேசிக்கிறார்கள் என்று பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கும்.

மாடு கொல்லப்படுவதால் வருந்தும் இவர்கள் எருமைகள் கொல்லப்படுவதை எண்ணி வருத்தப்படுவது இல்லை!

ஒரு பூனை கொல்லப்பட்டால் வருந்தும் இவர்கள் பாம்பு கொல்லப்பட்டால் வருத்தப்படுவது இல்லை!

தேள், பூரான், குளவி, எறும்பு, கொசு, ஈ, இவையெல்லாம் கூட்டங் கூட்டமாகக் கொல்லப்பட்டாலும் யாரும் வருந்துவதாகக் காணோம். மாறாக. தேவைப்பட்டால் அவர்களும் கொல்லவே செய்கிறார்கள்.

மற்ற உயிரினங்கள்தான் போகட்டும் மாடுகளுக்காகக் கவலைப்படும் இவர்கள் மனிதர்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? மனிதருள்ளும் வேண்டியவர்களுக்காக ஒரு விதமாகவும் வேண்டாதவர்களுக்கு ஒரு விதமாகவும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒருவிதமாகவும் சம்பந்தமில்லாதவர்களுக்கு ஒரு விதமாகவும் விதவிதமாக தங்கள் இரக்க உணர்வை வெளிப்படுத்துவார்கள்.

நமக்குத் தொடர்பில்லாத வெளிநாடுகளில் நடக்கும் மனிதருக்கு எதிரான கொடுஞ் செயல்களை இவர்கள் கண்டுகொள்வது இல்லை! போர்களில் எராளமானவர்கள் கொல்லப்படுவது பற்றியெல்லாம் இவர்கள் வருந்துவதோ எதிர்ப்புக் குரல் எழுப்புவதோ இல்லை!

இத்தகையவர்களின் கருணையெல்லாம் உயிரினத்தின் உருவத்தையும் அவற்றுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பையும் இவர்களது நம்பிக்கையையும் அவை தொடர்பான பயன்பாட்டையும் பொறுத்தே அமையும் 

மற்றபடி ஒவ்வொரு விநாடியும் எண்ணற்ற உயிர்களை அழித்தே ஒவ்வொரு உயிரினமும் வாழ்ந்து வருகின்றன என்ற அடிப்படை உண்மைகளையெல்லாம் அவர்கள் கணக்கில் கொள்ளப்போவது இல்லை!

இதில் உள்ள கொடுமை என்னவென்றால் இவர்கள் எல்லா உயிரினங்களின் மேலும் அக்கரையும் கருணையும் உள்ளவர்கள் போலும் மற்றவர்களுக்கு அந்த மாதிரியான கருணை உணர்வு கொஞ்சம்கூட இல்லை என்பதுபோலும் நினைத்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருப்பதே! 

 இவர்களின் கொள்கைப்படி உலகில் கொல்லாமையைக் கடைப் பிடிப்பது எப்படி என்ற கேள்விக்கும் இவர்களிடம் சரியான பதில் வராது! 

நாம் சொல்லும் அறிவு பூர்வமான எpளக்கங்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அவர்கள் சொல்கின்ற அபத்தமான கோட்பாட்டின்படி மற்றவர்கள் நடக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

அதனால் அவர்களின் கோரிக்கைகளை உலக சமுதாயம் என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. மதிக்கப்போவதும் இல்லை! அதனால் கொல்லாமை கொல்லாமை என்று கிளிப்பிள்ளைகளைப்போல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு எது சாத்தியமோ அந்த வழி நடப்பதே சிறந்தது! 

ஆதாவது மனிதருக்குத் தொடர்புள்ள மனிதர்கள் நேசிக்கக்கூடிய மனிதருக்குத் தீங்கு விளைவிக்காத மனிதருக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பயன்படும் நிலையில் உள்ள எந்த உயிரினங்களையும் கொல்லாமல் இருக்கலாம். இருக்கவேண்டும்.

ஆனால் சிலவகை உயிரினங்களை உணவுக்காகவும் சிலவகை உயிரினங்களை அவற்றின் தீங்கு கருதியும் கொல்வது தவிர்க்க முடியாது!

வேறு எண்ணற்ற நுண்ணுயிர்களைக் கொல்ல விருப்பம் இல்லாவிட்டாலும் நம்மை அறியாமல் அல்லது தவிர்க்க இயலாத தேவைகளால் கொல்லவேண்டியதுள்ளது. அதையும்  தவறாகக் கருத முடியாது.

நாம் உண்ணாத ஆனால் வேலைக்காக வைத்திருக்கும் பிராணிகளை இறுதி வரை பராமரித்து ஆதரிக்க வேண்டும். அல்லது அத்தகைய உயிரினங்கைளப் பராமரிக்க மட்டும் அரசே பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

நாம் செய்யக்கூடியதெல்லாம் வளர்ப்புப்பிராணிகளிடம் அவற்றின் ஆயுள்வரையும் உணவுக்காகவும் வேலைக்காகவும்  வளர்ககும் பிராணிகளிடம் அவை கொல்லப்படும் வரையும் அன்பாக இருப்பதும் துன்புறுத்தாமல் இருப்பதுமே ஆகும்.

காரணம் மனித இனத்துக்கு இயற்கையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறை அதுவே! 

அதை உணராமல் சொல்லப்படும் கருணை சம்பந்தப்பட்ட எந்தக் கருத்துக்களும் சமுதாயத்தில் செல்லுபடி ஆகாது!  நடைமுறைக்கும் ஒத்து வராது! 

எனது மொழி (147)

நண்பர்களே!

பசுமேல் கொள்ளும் அக்கரை மற்ற கால்நடைகளின்மேலும் கொள்ள வேண்டும்! கால்நடைகளை அவை வாழும்வரை துன்புறுத்தாமல் இருக்கும்படி கேட்டுக்கொள்வதும் பின்பற்றுவதும் மீறுபவர்களைத் தண்டிப்பதும் மட்டுமே நடை முறை சாத்தியம் ஆகும். 

அதை விட்டு அவற்றைக் கொல்லக் கூடாது என்பது பச்சாத்தாப உணர்வைக் காட்டுமே தவிர நடைமுறையில் சாத்தியம் இலை! 

காரணம் கால்நடைகளை வளர்ப்பதே வேலைக்காகவும், மாமிசத்துக்காகவும், பாலுக்காகவும் தோலுக்காகவும்தான்! 

இந்நிலையில் உலகமக்கள் பெரும்பாலோரால் காலங்காலமாகப் பின்பற்றப் படும் ஒரு உணவுப் பழக்கத்தை யாரால் மாற்ற முடியும்?

Tuesday, September 10, 2013

விவசாயம் ( 61 )

நண்பர்கள் வேடத்தில்  எதிரிகள்! 

நண்பர்களே!

இயற்கை வேளாண்மை மீண்டும் திரும்ப விடக்கூடாது என்று நினைக்கும் ஒரு கூட்டம் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் பயன் இருக்காது என்பதால் அதை ஆதரிப்பது என்ற போர்வையில் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

அது அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சிகளில் வைக்கப்பட்ட ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்பட்டது என்ற விளம்பரத்துடன் விற்கப்பட்ட கலன்களில் இருந்து நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் இந்திரஜால வித்தைகளாகச் செயல்படும் என்று ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது வரை பல வேடங்களில் நடந்துகொண்டு உள்ளது!...



அதன் எதிரொலி சமூக வலை தளங்களிலும் பிரதி பலிக்கிறது. 

அவற்றில் கசப்பான உண்மைகளைவிட இனிப்பான பொய்கள் விரைவில் பரவுகிறது!

அதன் காரணமாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது என்பதை நம்பி இயற்கை அல்லாத போலிகளைப் பயன்படுத்துவார்கள்.....

ஆதாவது பாட்டில்களிலும் டின்களிலும் வேதிப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தியதற்குப் பதிலாக அதே பாட்டில்களில் அடைக்கப்பட்ட  இயற்கைத் தயாரிப்பு என்று பெயர் சூட்டப்பட்ட பயனற்ற ஆலைத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வார்கள்....

அதே போல நாட்டில் இயந்திரப் பயன்பாட்டின் காரணமாக நாட்டுமாடுகளின் பயன்பாடு குறைந்துபோய் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை பெருமளவு உள்ள நிலையில் அவை பயன்படாது , அவற்றின் சாணமோ மூத்திரமோ இயற்கை வேளாண்மைக்கு ஒத்து வராது என்று சொல்வதன்மூலம் இருக்கும் இயற்கை எரு வாய்ப்புக்களையும் வீணடிக்கச் சொல்கிறார்கள்.

நாட்டில் உள்ள கோடானு கோடிக் கணக்கான விவசாய நிலங்கள் கலப்பின மாடுகளின் கழிவுகளையும் கோழிப்பண்ணைக் கழிவுகளையும் பயன்படுத்திவரும் நிலையில் அவற்றைப் புறக்கணித்துவிட்டு அவ்வளவு நாட்டுமாட்டுச் சாணத்துக்கும் மூத்திரத்துக்கும் எங்கே போவது?

அந்தப் பகட்டான பிரச்சாரத்தை நம்பிச் செயலில் இறங்குபவர்கள் நடைமுறை அனுபவம் இல்லாத படித்த ஆனால் வேளாண்மையில் ஈடுபாடுகொண்ட புதிய தலைமுறையாகத்தான் அதிகம் இருக்கும். 

ஆனால் நடைமுறை உண்மைகள் வேறாக கசப்பாக இருப்பதைப் பார்க்கும் அவர்கள் இயற்கை வேளாண்மை ஒத்து வராது என்ற முடிவுக்கு வந்து கேடுகெட்ட வேதிப் பொருட்களைச் சார்ந்த விவசாயம் என்னும் படுகுழியில் மீண்டும் விழும் அபாயம் அதிகம் இருக்கிறது!

அதனால் இயற்கை வேளாண்மை பற்றி சொல்லப்படும் அல்லது விளம்பரப்படுத்தப்படும்  எதையும் தீர ஆராய்ந்து எழும் பல ஐயங்களைப் போக்கிக்கொண்ட பின்பே ஏற்றுக்கொள்வது சாலச் சிறந்தது! 

இல்லாவிட்டால் இயற்கை வேளாண்மைக்கு எதிரான சக்திகள் தொடர்ந்து வெற்றிபெற வாய்ப்புக்களை நாமே உருவாக்கிக் கொடுத்தவர்கள் ஆவோம்.

Saturday, September 7, 2013

விவசாயம் ( 60 )

சாணம்! .....இது சரியல்ல!...

நண்பர்களே! 

கால்நடைகளின் சாணம் மண்ணிற்குச் சிறந்த எரு எண்பது அனைவரும் அறிந்ததே! 

அதனால்தான் ஆடு, மாடு, கோழி, எருமை, பன்றி, கழுதை என எந்த ஒன்றின் சாணக் கழிவுகளையும் மண்ணில் எருவாக இட்டு இயற்கை முறையில் நல்ல விளைச்சலைப் பெற முடிகிறது. 

அதனால்தான் விவசாயிகளில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு வகையில் கால்நடைகளைச் சார்ந்தே இருக்கின்றனர்.

ஆனால் பசுமைப் புரட்சியும் இயந்திரப் பயன்பாடும் நடைமுறைக்கு வந்த பின்னால் கால்நடைகளுக்கு வேலை இல்லாமல், அவற்றிடம் வேலை வாங்க ஆட்கள் இல்லாமல் கால்நடைகளே இல்லாமல் விவசாயம் செய்பவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை என்று ஆகி விட்டது! 

அதன் பயனாக வேதிப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததும் மண் வளம் இழந்து களர்த் தன்மை அடைந்து வருவதும் மீண்டும் பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்பவேண்டும் என்ற உணர்வு வளர்ந்து வருவதும் அனைவரும் அறிந்ததே!...

அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் இயற்கை வேளாண்மை , அதன்மூலம் இயற்கையாக விளைந்த நஞ்சில்லா உணவு வகைகள் என்ற உணர்வு வேகமாக அதிகரித்து வருகிறது! 

ஆனால் இயற்கை வேளாண்மை என்பது தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கும் பொருட்களை நம்பிச் செய்யப்படுவது அல்ல! 

மண்ணை வளப்படுத்த இயற்கையான முறைகள் என்னென்ன உண்டோ அத்தனையையும் முயற்சிக்க வேண்டும். 


முக்கியமாகக் கால்நடைகளின் சாணம் மற்றும் மூத்திரக் கழிவுகளை முழு அளவில் பயன்படுத்த வேண்டும். 

தற்காலங்களில் சாணக் கழிவுகளை வீணடிக்கும் போக்கு அதிகமாக உள்ளது!

முன்னர் நாங்கள் இளவயதாக இருந்த காலங்களில் கிலோமீட்டர் கணக்கில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நடந்தே செல்வோம். 

அப்போதெல்லாம் வழியில் சாணம் கிடந்தால் அதை விட மாட்டோம். அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டு வந்து சொந்த நிலத்தில் இடுவோம். 

கைகளுக்கு அடங்காத அளவு நிறைய இருந்தால் அங்கே இருக்கும் எருக்கு, ஆவாரை போன்ற செடிகளின் கிளைகளை ஒடித்துப் பரப்பி அதன்மேல் சாணத்தை நிறைய வைத்து ஏந்திச் சென்ற அனுபவம் எல்லாம் உண்டு!...

ஆனால் தற்காலத்தில் அப்படி நடந்து செல்வாரும் இல்லை! வழியில் சாணம் கிடந்தாலும் அதைச் சீந்துவாரும் இல்லை!....

அந்தக் காலத்தில் தோட்டங்களில் ஆட்டுக் கிடை, மாட்டுக்கிடை என்று சாகுபடி நிலத்திலேயே பட்டிபோட்டு ஆடு மாடுகளைக் கட்டுவார்கள். 

அதன்காரணமாக கால்நடைகளின் சாணக் கழிவுகளும் மூத்திரக் கழிவுகளும் உடனுக்கு உடன் மண்ணில் கலக்கப்பட்டது. 

ஆதாவது பாட்டிக்குப் பக்கத்திலேயே ஒரு கலப்பை கிடக்கும். காலை எழுந்தவுடன் ஆடு மாடுகளை இடம் மாற்றி வேறிடத்தில் கட்டிவிட்டு அல்லது வேலைகளுக்கும் மெய்ச்சலுக்கும் அனுப்பிவிட்டு உடனே அந்தக் கலப்பையைப் பயன்படுத்தி உழுது விடுவார்கள்....

அதன்மூலம் அந்த சாணக் கழிவுகள் கொஞ்சமும் சேதப்படாமல் மண்ணில் சேருவதோடு. எண்ணற்ற நுண்ணுயிரிகள் நிலத்தில் பெருகி வளப்படுத்தத் துணை செய்கிறது. 

ஆனால் தற்காலத்தில் வேதி உரங்களைப் பயன்படுத்துவதுபோலவே கால்நடைக் கழிவுகளையும் உடனே மண்ணில் சேர்க்கும் வழக்கத்துக்குப் பதிலாக ஆங்காங்கே குவித்து வைத்து ஆறுமாதம் ஒரு வருடத்துக்குப் பின்னால் வண்டி வாகனங்களைப் பயன்படுத்தி ஒரேயடியாக அள்ளிச் சென்று நிலத்தில் இடுகிறார்கள். 

அந்த இடைக்காலத்தில் நீண்ட காலம் குவியலாகக் கிடக்கும்போது அதன் சாரம் இழந்து பகுதிச் சத்துக்களை இழந்து சக்கையாகி விடுகிறது! 

அதன்பின்பு நிலத்தில் இட்டு உழவு செய்து தாமதிக்கும் அளவு மேலும் சாரம் இழக்கிறது!

அதனால் மண்ணுக்குக் கிடைக்கவேண்டிய பயனுள்ள சத்துக்கள் வீணடிக்கப்படுகிறது. 

நிலத்தில் கோடிக்கணக்கான பயனுள்ள நுண்ணுயிர்களுக்கும் மண்புழுக்களுக்கும் உணவாகி அவற்றின்மூலம் மண் வளப்படுவதற்குப் பதிலாக நுண்ணுயிர்களற்ற கட்டாந்தரையாக நீண்டகாலம் வைக்கப்படுகிறது! 

அதனால் இயற்கை வேளாண்மையில் ஆர்வம் காட்டும் ஒவ்வொருவரும் அறியவேண்டிய முக்கியமான விஷயம் கால்நடைக் கழிவுகளைத் தாமதம் இன்றி விவசாய நிலத்தில் கலந்துவிடவேண்டும். 

அப்படிச் செய்யாமல் விட்டால் சாண எருவே வீணாகிறது என்பதற்குப் பதிலாக. அப்படிச் செய்தால் பயன் இரட்டிப்பு ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!....

சாணக் கழிவுகள் குவியலாகக் கொட்டிக்கிடந்தது வீணாக்கவேண்டிய பொருள் அல்ல! 

மண்ணைப் பொன்னாக்கும் மாமருந்து என்பதை உணர்ந்து அதை உரிய முறையில் கையாள வேண்டும்......

Friday, September 6, 2013

விவசாயம் ( 59 )

வண்டல் மண்ணும் விவசாயமும்...

நண்பர்களே! 

அந்தக் காலத்தில் பல்லாயிரக் கணக்கான ஏரி குளங்களை கஷ்டப்பட்டு உருவாக்கினார்கள்.

அதன்மூலம் தண்ணீர் விரையம் ஆகாமல் தடுக்கப்பட்டதோடு பாசனத்துக்கும் பயன்படுத்தப்பட்டு பயிர் விளைவிக்கப்பட்டது! 

அதில் இன்னொரு முக்கியமான பயனும் நிகழ்ந்தது.

ஆதாவது மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பேருக்கு காரணமாக நிலத்தின் மேற்பகுதியில் படிந்துள்ள கால்நடைக் கழிவுகள், தாவரக் கழிவுகள் ஆகியவற்றையெல்லாம் வெள்ளநீர் கரைத்துக்கொண்டு வரும்.

அத்தகைய சத்தான நீர் வெறுமனே கடலுக்குச் செல்லாமல் ஏரிகுளங்களில் தேக்கப்பட்டு தெளிந்த நீர்மட்டும் அளவுக்கு அதிகம் இருந்தால் வெளியேற்றப்பட்டது.

இதனால் ஏறி குளங்களில் ஏராளமான சத்துக்கள் நிறைந்த வண்டல் படியும்.


அப்படிப் படியும் வண்டலை கோடையில் நீர் வற்றி ஏரி குளங்கள் காய்ந்திருக்கும்போது அள்ளிச் சென்று விவசாய நிலங்களில் இடுவார்கள். 

அதனால் நிலங்கள் பயிர்செய்வதால் இழக்கும் சத்துக்கள் மீண்டும் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டன.

ஆனால் தற்காலத்தில் மழையளவு குறைந்ததாலும் ஏரி குளங்கள் சரியாகப் பராமரிக்கப்படாததாலும் அத்தகைய பயனை விவசாய நிலங்கள் பெரும்பாலும் இழந்து விட்டன.

அதே போல ஆறுகளைத் தடுத்துக் கட்டப்படும் அணைகளும் பெருமளவு சத்தான வண்டல் மண்ணை தடுத்து நிறுத்துகின்றன. 

ஆனால் அத்தகைய சத்து மிகுந்த வண்டல் மண்ணைச் சரிவரப் பயன்படுத்தாததால் அணைக்கட்டுக்களின் நீர் கொள்ளும் திறன் குறைவதோடு பயனுள்ள வண்டல் மண்ணும் வீணடிக்கப்படுகிறது! 

அதனால் அணைக்கட்டுகளில் படிந்துள்ள வண்டல் படிவுகளையும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் அள்ளிச் செல்ல அனுமதிப்பதன்மூலம் அணைக்கட்டுகள் தூர்வாரப் படுதல், விவசாய நிலங்களுக்கு நல்ல எருச் சத்துக்கள் கிடைத்தால் என்ற இரட்டைப் பயன் கிடைக்கிறது! 

இதையெல்லாம் கணக்கில் கொண்டு ஏரி குளங்களையும் அணைக்கட்டுகளையும்  இயற்கை வேளாண்மைக்கு உதவிகரமாகப் பயனுள்ள முறையில் பயன்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! 

எடுக்குமா?....