ss

Thursday, September 26, 2013

பல்சுவை ( 18 )

யுரேகா!

நண்பர்களே! 

நான் நீண்ட நாட்களாகவே ஒரு கேள்வியை நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் கேட்பேன். ஆனால் திருப்தியான பதில் கிடைக்கவே இல்லை!

நேற்று முகநூலிலும் இதே கேள்வியை முன் வைத்தேன்.

அங்கும் நிறைவான பதில் கிடைக்கவில்லை! 

அந்தக் கேள்வி இதுதான்...

அதாவது மனிதனைத் தவிர மற்ற பல்வேறு உயிரினங்கள் எந்தப் பயிற்சியும் முன்னனுபவமும் இல்லாமல் தண்ணீரில் நீந்துகின்றன. 

ஆனால் எல்லா உயிரினங்களையும் விடத் தன்னை மேம்பட்டவனாகத் தன்னைத் தானே நினைத்துக் கொள்ளும்  மனிதன் மட்டும் போதுமான பயிற்சியும் முன்னனுபவமும் இல்லாமல் தண்ணீரில் நீந்த முடிவது இல்லை. இது ஏன் என்பதே அந்தக் கேள்வி!


மனிதனின் அளவு சிந்திக்கத் தெரியாத மற்ற உயிரினங்களால் முடிவது மனிதனால் ஏன் முடிவது இல்லை? 

நீரில் நீந்துவது எப்படி என்றும் அதன் நுட்பம் என்ன என்பதும் மனிதனுக்குத் தெரிந்த அளவு மற்ற உயிரினங்களுக்குத் தெரியாது. ஆனாலும் அவை துணிந்து தண்ணீரில் குதித்து நீந்திச் செல்வதைப் பார்க்கிறோம்.

அப்படியானால் ஆறறிவு படைத்த மனிதன் மற்றவற்றைவிட மிகவும் சர்வ சாதாரணமாக நீந்திச் செல்ல வேண்டும்.

ஆனால் அதுபற்றி என்ன புரிந்திருந்தாலும் எப்படியெல்லாம் கைகளையும் கால்களையும் அசைத்து நீந்தவேண்டும் என்று எத்தனை தடவை படித்துப் படித்துச் சொன்னாலும் அப்போதும் மிதவையை இடுப்பில் கட்டாமல் பயத்தால் துடை நடுங்காமல் தண்ணீரை மூக்கின் வழியாக உறிஞ்சி புறையேறாமல் சில நாட்களாவது ஆகாமல் நம்மால் நீந்த முடிவது இல்லை! 

இதற்கு விடை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் ஆராயும்போது சில விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டி வந்தது. 

அதில் முதலாவதாக மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள முக்கியமான அடிப்படை வேறுபாடு என்ன என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டேன்.

ஆதாவது உலகில் வாழும் மற்ற எல்லா உயிரினங்களும் இயற்கைப் போக்கில் தோன்றி வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்க மனிதன் மட்டும் அதற்கு அப்பால் பரிணாம வளர்ச்சி என்ற தனித் தன்மையுடைய முறையில் வளர்ச்சியடையும் வாய்ப்பப் பெற்றான். 

பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதன் அடைந்த அறிவாற்றல் அளவற்றதாக  இருக்க ஏன் மற்ற உயிரினங்களுக்கு எளிதான ஒன்று மனிதனுக்கு மட்டும் இயலாத ஒன்றாக உள்ளது என்று யோசிக்க வேண்டியதும் அவசியமாயிற்று.

நீச்சல் என்பது மனம் மற்றும் அறிவு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. உடல் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட. அதனால் பரிணாம வளர்ச்சியின் காரணமாக உடல் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றி யோசிக்கவேண்டியதாயிற்று!

அதன்காரணமாக இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது! 

ஆதாவது பரிணாம வளர்ச்சிக்கு முன்பு மற்ற உயிரினங்களுக்கும் மனித     இனத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஆனால் பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனித உடலில் மாற்றங்கள் துரிதமாக நடந்தன.

நான்கு கால்களால் நடந்து கொண்டிருந்த மனிதன் தன் முன்னங்கால்களை பூமியில் இருந்து விடுவித்துக் கைகளாகப் பயன்படுத்த ஆரம்பித்தான்!

அதன்காரணமாக நிமிர்ந்து நிற்பதும் நடப்பதும் ஓடுவதும் சாத்தியமாயிற்று! 

கைகளின் பயன்பாட்டிhல் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி இன்றளவும் வளர்ந்து நவீன மனிதனாக ஆக்கியிருக்கிறது. 

ஆனால் இந்த வளர்ச்சிப் போக்கில்  ஏற்பட்ட மாற்றமே மனிதனால் தண்ணீரில் நீந்த இயலாதவனாய் ஆக்கியது. 

ஆதாவது மற்ற உயிரினங்களைப் போலவே நான்கு கால்களில் நடக்கும் வரை மனிதனாலும் தண்ணீரில் பயிற்சி இன்றி நீந்திச் செல்ல முடிந்தது. 

ஆனால் நிமிர்ந்து நடக்கப் பழகிய பின்னால் அது இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. 

காரணம் மனிதன் உள்ளிட்ட நான்கு கால்களால் நடந்த பாலூட்டிகள் தரையில் எப்படி நடக்க முடிந்ததோ தரையில் எப்படி ஓட முடிந்ததோ அப்படியே இயங்குவதன் மூலம் தண்ணீரிலும் நீந்த முடியும் என்பதற்கு இணக்கமாக உடலமைப்பைக் கொண்டிருந்தன.

ஆனால் பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதன் நான்கு கால்களால் நடக்கவும் ஓடவும் இயலாதவன் ஆனதால் அந்த முறையில் தண்ணீரில் இயங்கவும் இயலாதவனாக ஆகிவிட்டான்.     

நான்குகால் பிராணிகள் தரையில் எப்படி இயங்குகின்றனவோ அப்படியே இயங்கினால் நீரிலும் நீந்தலாம் என்பதுதான் விதியாக இருக்கிறது. 

அதனால் தான் நான்குகால் பிராணிகளின் குட்டிகள்கூட தரையில் நடக்கத் துவங்கியதுமே நீரிலும் நீந்தும் தகுதி பெற்று விடுகின்றன. 

ஆனால் நிமிர்ந்து நடக்கவும் ஓடவும் செய்கிறமாதிரி நீரில் செய்தால் நீந்த முடியாது. 

ஆனால் மனிதன் தண்ணீரில் விழுந்தால் உடனே தப்பி ஓடும் முயற்சியாக தரையில் செய்வதைப் போலவே கால்களைக் கீழ் நோக்கி செலுத்துவதையும் தலையை மேலே உயர்த்துவதையும் இயல்பான ஒன்றாக ஆக்கிக்கொண்டான். 

அதன்காரணமாக மனிதன் இப்போது நடக்கிறமாதிரி அல்லது ஓடுகிற மாதிரி ஒரு இயக்கத்தைக் கொண்டு நீந்த முடியாமல் தண்ணீரைக் குடித்து விட்டு தத்தளித்து அதன்பின் மூழ்கியும் போகிறான்.

ஆனால் மனிதன் தன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக முன்போல நீந்த முடியாவிட்டாலும் தனது உடல் மாறுதலுக்கு ஏற்ப நீந்தும் முறையிலும் மாற்றம் செய்து தண்ணீரில் நீந்தும் தனது தகுதியை மட்டும் நிலை நிறுத்ததிக்கொண்டான். 

ஆனால் பரிதாபம் என்னவென்றால் மற்ற உயிரினங்களின் இயல்பான இயக்கம் நீந்துவதற்கப் பயன்பட்டதுபோல மனிதனின் இயல்பான இயக்கம் நீந்துவதற்குப் பயன்படாமல் போனதால் மனிதனுக்கு மட்டும் தனது உடலமைப்புக்கு ஏற்ப நீந்திப் பழகவேண்டியதும் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியதம் அவசியமாக ஆகி விட்டது.

ஆனால் மற்ற பிராணிகளுக்கு அந்த அவசியம் இல்லாமல்போய்விட்டது. அவை எப்போதும்போல எந்தப் பயிற்சியும் இல்லாமல் நீந்தி விளையாடிக்கொண்டே உள்ளன.!

2 comments:

  1. எனக்கு ஒரு சந்தேகம். பறவைகளெல்லாம் பறக்கின்றன. ஆனால் எல்லா மிருகங்களாலும் ஏன் பறக்க முடியவில்லை?

    ReplyDelete
    Replies
    1. எளிய சந்தேகம் நண்பரே!

      ஆதாவது ஒன்று மேலே பறக்கவேண்டும் என்றால் அது தனது எடையை விடக் கூடுதலான சக்தியை புவி ஈர்ப்புக்கு எதிராகப் பூமியை நோக்கிச் செலுத்தி ஆக வேண்டும்.

      ஆதாவது காற்றின் மேல் கீழ்நோக்கிச் செலுத்தும் அழுத்தம் தன்னுடைய எடையை விட அதிகமாக இருக்க வேண்டும்.

      அதைச் செய்யப் பறவைகளின் மற்றும் பறக்கும் பூச்சிகளின் உடலமைப்பும் இறக்கை அமைப்பும் ஏற்றதாக இருக்கின்றன.

      அதனால் முடிகிறது!

      மனிதனுக்கு அப்படிப்பட்ட உடல் அமைப்போ இறக்கை வசதியோ இல்லை.

      அதனால் முடிவதில்லை!

      ஆனால் இயந்திர ஆற்றலைப் பயன்படுத்தி இதே கோட்பாட்டின் படி விண்ணில் பறக்கிறோம்.

      Delete