ss

Thursday, October 31, 2013

தத்துவம் ( 19 )

விதியும் மதியும் 

விதியை மதியால் வெல்ல முடியுமா?

இந்தக் கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது.

ஒரு சாரார் முடியும் என்பதும் மற்றவர்கள் முடியாது என்பதும் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் வாதமாகும்.

ஆனால் இன்றளவும் ஒரு பொது முடிவுக்கு வரவே இல்லை! 

அனைவரும் ஒரே உலகில் ஏறக்குறைய ஒரேவிதமான அடிப்படை வாய்ப்புகளைக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் இந்த விஷயத்தில் ஏன் முரண்படுகிறோம்? 

விதி என்றால் என்ன? 

அறிவியல் விதிகளா? உடற்கூறு இயல் விதிகளா? கணித விதிகளா? இயற்பியல் விதிகளா? வேதியியல் விதிகளா? வானியல் விதிகளா? 

இவைகளும் இன்னும் இவைபோன்றiயும்தான் விதிகள் என்றால் அதை யாரால் மாற்ற முடியும்? நிச்சயம் முடியாது! 

காரணம் இவை மனிதனால் அறியப்பட்ட விதிகள். மனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல.

ஆனால் வேறு சில விதிகள் உள்ளன. 

ஆதாவது அவை மனிதன் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்குமாக தானே உருவாக்கிக்கொண்டவை.

ஆதாவது அரசியல் சட்டங்கள், சமூக  ஒழுங்கைக் காக்க உருவாக்கிக் கொள்ளும் பல்வேறு வகையான விதிகள். சமூக அமைப்புகளும் நிறுவனங்களும் தங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக உருவாக்கிக்கொள்ளும் விதிகள், விளையாட்டு விதிகள், போக்குவரத்து விதிகள் இன்னும் பல உள்ளன.

இவையெல்லாம் மாற்றக்கூடிய விதிகள். 

காரணம் மனிதன் தனது தேவைக்காக உருவாக்கிக்கொண்டவை!

 அந்தத் தேவைகள் காலாவதியானால் அந்த விதிகளை நீக்கி விட்டு வேறு பொருத்தமான விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம். 

இந்த இருவகையான விதிகளையும் நாம் அறிவோம். 

அவற்றில் ஒரு வகையை நாம் வெல்ல முடியாதென்பதையும் மறுபகுதியை நினைத்தபோது வெல்லலாம் என்பதையும் நன்றாக அறிவோம்.

ஆனால் பலர் இந்த இரண்டு வகையிலும் சேராத ஒன்றை விதி என்றும் அதை வெல்ல முடியும் என்றும் வெல்ல முடியாது என்றும் பட்டி மன்றம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

அது என்ன விதி? 

அந்த விதியின் தோற்றுவாய் என்ன?

அந்த விதியின் தேவை என்ன? அந்த விதி மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது? 

எந்த ஒழுங்கு முறைக்கும் வாழ்வு முறைக்கும் இணக்கமாக இல்லாத முன் கூட்டி அறிய முடியாத முன்னறிந்து தடுக்க முடியாத நடந்து முடிந்த பின்னால் மட்டும் பேசப்படும் நிகழ்வுகளைத்தான் அத்தகையவர்கள் விதி என்று சொல்கிறார்கள்.

அப்படிச் சொல்லப்படும் விதி என்பதை நம்புபவர்கள் ஒரு அணியாகவும் நம்பாதவர்கள் ஒரு அணியாகவும் பிரிந்து மோதிக்கொள்வதைக் காணலாம்.

அப்படிப்பட்ட விதியை நம்புகின்றவர்களை விதி என்றால் என்ன என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியாத அனைத்தையும் விதி என்பார்கள். அதை யாராலும் வெல்ல முடியாதென்றும் சொல்வார்கள். 

இன்னதென்று தெரியாத ஒன்றை வெல்வதற்கு அங்கு என்ன இருக்pறது?

இல்லாத பாம்பை அடிப்பதற்கு தடிக்கு என்ன தேவை இருக்கின்றது?

ஆதாவது தோல்வி அடைந்தால் அதை விதி என்பார்கள். வெற்றி பெற்றால் தோல்வியடைந்தவனின் விதி என்பார்கள். 

தீராத நோய் வந்தால் அதை விதி என்பர்கள்.

செத்துப் போனாலும் விதி என்பார்கள். 

விபத்து நடந்தால் விதி என்பர்கள்.

தொழிலில் நட்டம் ஏற்பட்டால் விதி என்பர்கள். 

அவர்களிடம் விதி என்றால் என்ன என்று ஒற்றை வரியில் விளக்கம் கேட்டால் சொல்லவே மாட்டார்கள். 

ஆனால் ஒன்றைமட்டும் நிச்சயம் சொல்லத் தவறமாட்டார்கள். 

ஆதாவது விதியை யாராலும் வெல்லவெ முடியாது என்று!

இவர்கள்தான் இப்படி என்றால் விதி என்ற ஒன்றை மதியால் வெல்லலாம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள. 

இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதற்கும் அந்த இல்லாத ஒன்றை மதியால் வெல்லலாம் என்று சொல்வதற்கும் என்ன பெரிய வேறு பாடு இருக்கிறது?

இல்லாத ஒன்றுக்காக வாதப் பிரதிவாதம் செய்யும் இவர்கள் விதி என்ற வார்த்தை எங்கெல்லாம் கையாளப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அந்த இலக்கியப் படைப்பாளிகள் சொன்னர்கள். அதனால் விதி வெல்ல முடியாதது என்று சொல்வார்கள்.

ஆனால் தவற்றை யார் சொன்னாலும் அது தவறுதான் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை!  

ஒரு கோணத்தில் பார்த்தால் அவர்கள் சொல்லும் விதியை மதியால் வெல்லலாம் என்பது உண்மையாகவே தெரியும். 

ஆனால் யாருடைய மதி என்பதுதான் பிரச்சினை!

யார் இன்னதென்று தெரியாத விதி என்ற வார்த்தையைக் கண்டும்  அதன் மூலம் எதையெதையோ கற்பனை செய்துகொண்டும் பயத்துடன் வாழ்கிறார்களோ அவர்கள்தான் அந்த விதியை வெல்லக் கூடியவர்கள்!

ஆதாவது யார் விதியை நம்புகிறார்களோ  யார் விதியை வெல்ல முடியாது என்று அடித்துச் சொல்கிறார்களோ அவர்கள்தான்  விதியை வெல்லவும் வேண்டும். 

அப்படி முடியாது என்று சொன்ன ஒன்றை முடியும் என்று அவர்களே நடத்திக் காட்ட அவர்களுக்குப் பயன்படும் உபாயம்தான் மதி என்கிற அறிவாற்றலாகும்.

இன்னதென்று சொல்ல முடியாத ஒன்றை இன்னதென்று புரியாத ஒன்றை அவர்கள் நம்பியதற்குக் காரணம் அவர்களின் அறிவாற்றலுக்கு வேலை கொடுக்காததே ஆகும். 

அப்படிக் கொடுத்திருந்தால் தாங்கள் பயப்படுகின்ற அனைத்தையும் தங்களுக்குத் தெரியாத அனைத்தையும் வருகின்ற துன்பங்கள் அனைத்தையும் தங்களால் விதி என்று சொல்லிப் பயந்து பயந்து செத்ததோடு அந்த விதியை வெல்லவும் முடியாது என்ற சொல்ல மாட்டார்கள்.

ஆகையால் விதியை நம்பும் அவர்கள்தான் மதியைக்கொண்டு அதை வெல்லவும் முடியும்!

ஆம்! அவர்கள் சொல்லும் விதி என்கின்ற பொய்யிலிருந்து அவர்கள் மட்டுமே வெற்றிகரமாக வெளியில் வர முடியும்! 

மற்றவர்களுக்கு அந்தப் பணி இல்லை! 

இல்லாத ஒன்றாகத் தாங்கள் நினைக்கும் ஒன்றை வெல்ல அங்கு என்ன இருக்கிறது?  

2 comments:

  1. உங்களின் கருத்துரைக்காக : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
  2. மதி மிகு மந்திரியின் கையில் உயிர்உள்ள பட்டாம்புச்சி
    மன்னனிடம் கேட்டான்
    என் கையில் உள்ள பட்டாம் பூச்சிக்கு உயிர் உள்ளதா ?
    இல்லையா ?
    மன்னன் என்ன பதில் சொல்லி இருப்பான் ஐயா ?

    ReplyDelete