ss

Wednesday, October 9, 2013

உணவே மருந்து ( 68 )

காலத்தின் கட்டாயம் 

இயற்கை உணவுக் கோட்பாடு பபற்றிக் கணக்கின்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்பது நிறைய நண்பர்கள் அறிவார்கள். 

அவற்றையெல்லாம் இங்கு கொண்டுவந்து குவிப்பது கடினம். 

முந்தைய பதிவுகளைப் பாருங்கள்! 

இனியும் தனிப் பதிவுகளாகவும் கட்டுரைகளாகவும்  அவ்வப்போது பார்ப்போம்! 

 மனித இனம் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் இயற்கையான உணவுகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றி வளர்ந்து வாழ்ந்து கோடிக்கணக்கான ஆண்டுகள் பூமியில் நிறைந்திருக்கின்றன என்பதை முதலில் அனைவரும் கணக்கில்கொள்ள வேண்டும்.  

மனிதன்மட்டுமே பரிணாம வளர்ச்சியின் விளைவாகப் பிற உயிரினங்களை விட்டு தனிப்பாதையில் பிரிந்து வேறுபட்ட முறையில் வளர்ந்தான்.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நெருப்பின் பயனையும் அதில் சுடப்படும் உணவுகள் சுவை கூடுதலாக இருப்பதையும் உண்பதற்கு எளிமையாக இருப்பதையும் அறிகிறான்.

அதன்பின்புதான் கடந்த காலங்களில் அது பலவிதமான மாறுதல்களுக்கு உட்பட்டு இன்று பாஸ்ட் பூட் காலத்தில் போய்க்கொண்டு இருக்கிறது. 

இத்தனை மாறுதல்களுக்கும் உணவு உட்பட்டதற்குக் காரணம் சுவையும் எளிமைப் படுத்தலுமே! 

ஆனால் அதற்கு விலையாக உண்ணும் உணவு சிதைக்கப்பட்டு வேதிப்பண்புகள் ஏற்றப்பட்டு குறைந்த அளவில் இருந்து மிக அதிகமான அளவு வரை உடல்நலனுக்கு எதிராக மாற்றப்பட்டு பல இன்னல்களுக்கும் நோய்களுக்கும் ஆளாகி வருகிறோம். 

இன்று நம்மிடையே உள்ள நோய்கள் பெரும்பாலானவற்றுக்கு நமது உணவு முறையின் கோளாறும் உடல் உழைப்பு இன்மையும் உடற்பயிற்சி இன்மையுமே காரணங்கள் ஆகும். 

முன்னர் இருந்ததைவிட சராசரி ஆயுள் அதிகரிப்புக்குக் காரணம் மருத்துவ அறிவியல் வளர்ந்ததும் பட்டினி குறைந்ததும் உணவு நிறையக் கிடைத்ததும் ஆகும்! 

அதே சமயம் பெரும்பாலோர் நோயாளிகளாகவும் மருத்துவத்தையும் மருந்துகளையும் சார்ந்து வாழ்பவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்! 

இந்த அவலத்தைப் போக்க வேண்டுமென்றால் நமது வாழ்வும் உணவுமுறைகளும் இயற்கைக்கு நெருக்கமானதாக மாறவேண்டும் என்பது தவிர்க்க முடியாத தேவை ஆகும்!

இயற்கை உணவுக் கோட்பாட்டை உள்ளபடியே அனைவரும் உணரவேண்டுவது காலத்தின் கட்டாயம். 

அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல!.....

No comments:

Post a Comment