ss

Saturday, December 14, 2013

உணவே மருந்து ( 78 )

                                                                        பசி

நமது வாழ்வில் தவிர்க்க முடியாத இரண்டு துன்பங்கள் உள்ளன. இவை இரண்டும் அற்ற மனிதர் யாரையும் நம்மால் காண முடியாது.

அதில் முதலாவது பசி!

அதனால்தான் பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்று சொல்கிறார்கள்.

அது நம்மை வாழ வைக்கிறது. வளர்க்கிறது. நமக்குத் தேவையான பண்டங்களை உண்ண நமக்கு நினைவு படுத்துகிறது.

அப்போது நாம் உணவு எடுத்துக்கொள்ளாவிட்டால் சோர்ந்து விடுவோம். ஆதனால் நமக்குத் தேவையானதை உண்டு வாழ்கிறோம்.

ஆனால் இந்தப் பசியுணர்வால் நன்மை மட்டுமல்ல, தீமைகளும் உள்ளன. ஆதாவது காய்கறி வெட்டும் கத்தி காய்கறிகளை வெட்டும் வரை நன்மை செய்கிறது. அதே கத்தி நம் கைகளுக்குப் பட்டுவிட்டாலோ தீமையில் முடிகிறது.

அதுபோலப் பசியும் அவசியத்துடன் வந்தால் நன்மை விளைகிறது. அவசியமில்லாமல் வந்தால் தீமையில் முடிகிறது.

எப்படி என்று பார்ப்போம்!


நமது உடம்பு நிலையான ஒரு கற்சிலை அல்ல!

அது சதாகாலமும் மாறிக்கொண்டே உள்ளது.

அடிப்படையில் நமது உடம்பும் எண்ணற்ற அணுக்களால் ஆன ஒரு கட்டமைப்பாக இருப்பதால் ஓவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான அணுக்களை வெளியேற்றிக்கொண்டு இருக்கிறது.

தண்ணீர் ஆவியாவதுபோல, எரியும் தீபத்தில் எண்ணெய் தீர்ந்து போவதைப்போல நமது உடம்பும் தேய்ந்து கரைந்துகொண்டே இருக்கிறது.

அந்தக் குறைவை ஈடுசெய்ய நாம் ஏதாவது ஒரு உணவை அவ்வப்போது உண்டுகொண்டே இருக்கிறோம்.

அதனால் நமது உடலின் எடை தகுந்த அளவு பராமரிக்கப்படுகிறது.

பிறப்பு முதல் மரணம் வரை இடைவிடாமல் இது தொடர்கிறது.

இளமைக்காலத்தில் நாம் உண்ட உணவு மூலம் ஏற்றுக்கொள்ளும் சக்தியானது வெளியேற்றும் சக்தியைவிட அதிகமாக இருக்கிறது. காரணம் நமது தேவைகள் அந்தக்கால கட்டத்தில் கூடுதலாகிக்கொண்டே போகிறது.

குறிப்பிட்ட வயதுக்குப் பின்னால் உடலமைப்பின் சிக்கலான கட்டமைப்பு காரணமாகவும் கூடுதல் தேவைகள் நின்று போவதாலும் நமது ஏற்றுக்கொள்ளும் சக்தி வெளியேற்றும் சக்திக்கு இணையாகக் குறிப்பட்ட காலம் வரை இருக்கிறது.

ஓட்டுமொத்தமான உடல் கட்டமைப்பு சீர் குலையத் துவங்கும்போது தேவையும் அதற்குத் தக்க அளவு குறைந்துகொண்டெ வருவதால் ஏற்றுக்கொள்ளும் சக்தியின் அளவும் குறைந்தகொண்டே வருகிறது.

அதன்காரணமாக இளமையில் வளர்ந்தும் வலிமையானதாகவும் மாற்றம் அடைந்த உடம்பு முதமையில் வளர்ச்சியும் வலிமையும் குறைந்துகொண்டே வருகிறது.

இறுதியில் இந்த எற்றுக்கொள்ளும் பண்பும் வெளியேற்றும் பண்பும் செயல்பட முடியாமல் போகும்போது ஒட்டுமொத்த உடல் இயக்கமும் நின்று போகிறது.

அதைத்தான் மரணம் என்கிறோம்.

அப்படி வாழும் பண்பைத்தான் இயக்கத்தைத் தான் உயிர் என்றும் சொல்கிறோம்.

இந்தச் செயல்பாடு அனைவர் வாழ்விலும் ஒரே சீராக நடந்து, வாழ்ந்து, ஒரே சீராக முடிவடைவது இல்லை!

இந்தச் செயல்பாட்டில் சிக்கல் ஏற்படுமளவு உடல் தொடர்பான நோய்கள் அல்லது துன்பங்கள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டு அதைத்தொடர்ந்து வாழும் ஆயுட் காலத்திலும் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.

இத்தகைய வாழ்வுக்கு அடிப்படையாக உடல் இழப்பதற்கு ஈடாக திரும்பவும் உணவின் மூலம் பெறுவதற்கான உந்துதலையே பசி என்கிறோம்.

அது தாயின் கருவறையிலேயே துவங்கி விடுகிறது. மரணம் வரை நீடிக்கிறது.

பசியைத் தீர்துக்கொள்வதற்காக ஆதாவது இழந்த சக்தியை மீட்டுக்கொள்வதற்காக நாம் உண்ணத் தகுந்த பல வகையான உணவு வகைகளை உண்கிறோம்.

அப்படி உண்ணும் உணவுகள் அனைத்துமே ஒரே மாதிரி குணம் படைத்தவை அல்ல. அவற்றின் சுவையும் அதில் அடங்கியுள்ள சத்துக்களும் வேறுபட்டவை.

அதனால் நாம் உண்ணும் உணவைச் சுவை அடிப்படையிலும் அடங்கியுள்ள சத்துக்கள் அடிப்படையிலும் தரம் பிரிக்கிறோம்.

தேவையான அளவு சுவையான மற்றும் சத்தான உணவுகளை உண்பதன்மூலம் நலமாக வாழ்கிறோம்.

அத்தகைய வாழ்வுக்குத் துணைசெய்யும் அற்புதமான பண்பே பசி ஆகும்.

அத்தகைய பசி   நமது வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது. அதன் பயனும் நன்மையாகத்தானே இருக்க முடியும்?

அதுதான் இல்லை! பசியால் நன்மை மட்டுமல்ல தீமையும் விளையும் என்பதே உண்மை ஆகும்.

அது நன்மையா தீமையா என்பதற்கு பசி உருவாவதற்கான காரணங்களே காரணங்களாக அமைகின்றன.

பசி எப்போது தோன்ற வேண்டும்?

நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் குறைவு ஏற்படும்போது  பசி தோன்ற வேண்டும்.

அதைத் தொடர்ந்து நாம் உண்ணும் உணவின் மூலம் இழந்த சக்தி ஈடுசெய்யப்பட வேண்டும்.

அத்தகைய பசி நியாயமான காரணங்களால் ஏற்பட வேண்டும்.

ஆதாவது உழைப்பின்காரணமாக ஏற்படவேண்டும். விளையாடுவதன் காரணமாக ஏற்படவேண்டும். உணவு உண்பதற்கு அவசியமான குறிப்பிட்ட நேரம் கடந்தும் சாப்படாமல் இருப்பதன் காரணமாக ஏற்படவேண்டும்.

அத்தகைய பசிதான் நல்ல பசி ஆகும். அதுதான் நியாயமான பசி ஆகும். அதுதான் நன்மை செய்யயும் பசி ஆகும்.

அத்தகைய பசி ஆகும்போது உண்ணும் உணவுப் பொருட்களின் சுவை பற்றிய உணர்வைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வரும் பசியுணர்வே நன்மை செய்யும் பசி ஆகும்.

அத்தகைய பசி நமது உடம்புக்குத் தேவையான சத்துக்கள் போக உபரியாக எதையும் விட்டு வைப்பது இல்லை.

அதனால் உடம்பின் தேவையும் நாம் கொடுக்கும் சத்துக்களும் ஈடாக இருப்பதால் மிகவும் நன்மையாக அமைகிறது.

அப்படியானால் பசி எப்படித் தீமையை விளைவிக்கும்? ஆம்!.... விளைவிக்கும் என்பதைக் கண்கூடாகக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

ஆதாவது நாம் உண்ணும் உணவு எதுவென்றாலும் அதை நாம் அப்படியே விரும்பி உண்டுவிடுவதில்லை.

சுவையாகவும் உண்கிறோம்.

உணவு சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சுவையான உணவு எகைகளைத் தேர்வு செய்கிறோம்.சுவையான முறையில் தயாரிக்கவும் செய்கிறோம். அதன்மூலம் சுவை உணர்வுக்குத் தீனியை அதிகமாகக் கொடுக்கிறோம்.

ஆதாவது தேவைக்காக உண்ணும் உணவையே சுவையை அதிகரிப்பதன் மூலம் சுவைக்காக உண்பதாக மாற்றுகிறோம்.

அதனால் பசியுணர்வுக்குப் பதிலாக சுவையுணர்வே நாம் உணவு உண்பதற்கு முக்கியக் காரணம் ஆகிவிடுகிறது.

ஆதாவது பசி உணர்வுக்குத் தேவை என்பது பின்னுக்குப் போய் சுவையுணர்வு முன்னுக்கு வந்து முழுமுதல் காரணமாக ஆகி விடுகிறது.

அதன்காரணமாக உடம்புக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ குறிப்பிட்ட நேரத்தில் உண்ண நினைக்கிறோம். நினைத்த நேரத்தில் நினைத்ததை உண்கிறோம்.

அதன் காரணமாகத் தேவைக்கும் அதிகமாக உண்ணும் பழக்கம் ஏற்பட்டு அது உடம்பின் மிகு எடையாகவும் மாறுகிறது.

தேவையற்ற உணவுகளால் அதிகரிக்கும் உடம்பின் எடையே பசிக்கு ஒரு கூடுதல் காரணமாகவும் அமைகிறது.

அதனால் சுவையுணர்வும் கூடுதல் எடையும் காரணமாக நமக்கு ஏற்படும் பசி தீங்கு விளைவிக்கும் பசியாக மாறுகிறது.

அத்தகைய பசி நமது உடம்பில் தேவைக்கு அதிகமான எடைக்கும் அதுதொடர்பான உள்ளுறுப்புக்களின் கூடுதலான வேலைக்கும் உபரியாக உடம்பில் சேரும் குப்பைகளான சத்துக்களுக்கும் அதனால் உருவாகும் பல்வேறு நோய்களுக்கும் காரணங்களாக அமைகின்றன.

ஆகையால் நாம் செய்யவேண்டியதெல்லாம் நல்ல பயன்களைக் கொடுக்கும் பசியைத் தூண்டுவதும் தீய விளைவுகளைக்கொடுக்கும் பசியையும் அதன் காரணங்களையும் ஒழித்துக் கட்டுவதுமே ஆகும்.

அதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் பசிக்காக மட்டுமே உண்ண வேண்டும்.

அப்படி உண்ணக் கூடியவற்றைச் சுவையாக உண்ண வேண்டும்.

சுருக்கமாகச் சொன்ன்னால் சுவையற்ற உணவாக வாழ்வில் எதையும் நினைக்க நமது உணவு முறைகளை அனுமதிக்கக் கூடாது.

யாரொருவர் எதை உண்டாலும் சுவையாக உணர்கிறாரோ அவர் உண்பதுதான் சிறந்த உணவு. அவருக்கு ஏற்படும் பசிதான் நல்ல பசி! நன்மை தரும் பசி!

அத்தகைய நல்ல பசியுணர்வைப் பராமரிப்பதன் மூலம் நலமாக வாழ்வோம்!

சுருக்கமாகச் சொன்னால் நன்மை விளைவிக்கும் பசிக்கு நண்பர்களாகவும் தீங்கு விளைவிக்கும் பசிக்குப் பகைவர்களாகவும் வாழ்வோம்!

நன்மை விளைவிக்கும் பசிக்குக் காரணமாகும் நல்ல உணவு வகைகளை குறிப்பாக இயற்கை உணவு வகைகளை உண்டுவாழ்வோம்.

 தீங்கு விளைவிக்கும் பசிக்குக் காரணமாகும் தவறான உணவு வகைகளை ஒதுக்கித் தள்ளுவோம்!

அத்தகைய நன்மை விளைவிக்கும் பசியை உழைப்பாலும் உடற்பயிற்சியாலும் உணவுக் கட்டுப்பாட்டாலும் பல்வேறு வகையான விரதமுறைகளைக் கடைப்பிடிப்பதாலும் உருவாக்க வேண்டும்.

அதைவிடச் சிறந்த வாழ்க்கை முறை வேறு இல்லை!

3 comments:

 1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மனித மனம் மட்டுமல்ல சகல உயிர் இனங்களும் பசி வர துடிக்கும் ............ருசி மனதின் வேலை ..........
  ரசனை என்பது ருசி தந்தது .........நான் ருசியாய் சாப்பிடுகிற சபைக்கு அதரவு தருபவன் .............பசி ருசி அறியாது.....ருசி அறிவற்றது ..........நீங்கள் கூட ருசியை வெல்வது கடினம் ...வென்றால் நீங்கள் ......ஞாநி

  ReplyDelete
 3. பசி பற்றிய அருமையான பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete