வானகம் (நம்மாழ்வாரின் உயிர்ச் சூழல் நடுவம்) ஒரு பார்வை......
நண்பர்களே!
கடந்த 12.10.14 அன்று வானகம் முழுமையும் நண்பர்களுடன் சுற்றிப் பார்த்தேன்.
முந்தின நாள் இரவே அங்கு சென்று விட்டதால் இரவு உரையாடலின்போது வானகம் உருவான வரலாற்றையும் ஓரளவு அறிந்தேன்....
வானகத்தைப் பற்றி நினைத்திருந்ததற்கும் நேரடியாகப் பார்த்ததற்கும் வேறுபாடுகள் இருந்தன.
அப்படி உண்மை நிலைக்கு மாறான சித்திரம் தொடர்ந்து மனதில் இருக்க வேண்டாமே என்கிற எண்ணமும் அங்கு சென்று பார்த்து வருவதன்மூலம் நமது பங்களிப்பு எதையாவது செய்ய முடியுமா என்ற தாக்கமும்தான் அங்கு சென்ற உணர்வுக்குக் காரணங்கள்!
அங்கு சென்றபின்னால் என் மனதில் உருவான எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவுள்ள சற்று தூரத்தில் எல்லாத் திசைகளிலும் மலைகள் சூழ்ந்த ஒரு வறண்ட பகுதியாக வானகத்தின் அமைவிடம் இருக்கிறது!...
இயற்கை வேளாண்மைக்கும் சுற்றுச் சூழல்மேம்பாட்டுக்கும் ஒரு தலைமை மையமாக இருக்கப்போகும் இடத்தை இந்த வட்டாரத்தில் ஐயா ஏன் தேர்வு செய்தார்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.
அவருடைய தேர்வு மிகவும் சரியே என்ற முடிவுக்குத்தான் வந்தேன்.
காரணம் நாட்டில் வளம் குறைந்த பகுதிகள் ஏராளமாக இருக்கும் நிலையில் வளமான பகுதிகளில் பண்ணையை நிறுவி பயிற்சி அழிப்பது சிறந்த பயனை அளிக்காது என்று நினைத்திருக்கிறார்!
காரணம் அந்தப் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வறண்ட பூமிகளில் வாழும் மக்களுக்கோ வேளாண்மைக்கோ முழுமையாகப் பயன்படாது என்பதே!...
ஆனால் வறண்ட பூமியில் பண்ணையை அமைப்பதன்மூலம் அதைத் திறம்படப் பண்படுத்தி வளமான பண்ணையாக மாற்றிக் காட்டுவதன்மூலம் நாட்டின் பின்தங்கிய அனைத்துப் பகுதிகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக பண்ணை விளங்கவேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார்!
பின்தங்கிய பூமியையே மிகச் சிறந்ததாக மாற்றிக் காட்டினால் வளமான பூமிகள் மேலும் வளம் மிக்கதாக மாற்றுவது எளிதாகும் அல்லவா?...
அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது வானகம் அமைந்துள்ள அமைவிடம் மிகச் சரியானதே!.....
வானகத்தை உருவாக்கும்போது எந்த மாதிரி வளர்க்கத் திட்டமிட்டார்கள் என்பது தெரியவில்லை!
ஆனால் எப்படிச் செய்திருக்கவேண்டுமோ அப்படிச் செய்யவில்லை என்பது மட்டும் தெரிகிறது!....
காரணம் அப்படிச் செய்திருந்தால் இப்போது இருப்பதைவிட சிறப்பாக இருந்திருக்கும்!
அப்படிச் சிறப்பான ஒரு நிலையை விரைவில் எட்ட முடியாமல் போனதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்!
சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம்
சொல்லியவண்ணம் செயல்
என்ற திருக்குறள் சொல்வதுபோல சுலபமாக குறைகளைச் சொல்லிவிட முடியும் அதை முன்னின்று செய்பவர்களுக்குத்தான் அதன் சுமை என்னவென்று தெரியும்.
அதனால் அதன் குறைபாடுகளைச் சொல்வது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல!
வருங்காலத்தில் ஐயா கண்ட கனவுகளை மெய்ப்பிக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே!...
ஏற்கனவே செய்திருக்கவேண்டிய பணிகள்....
பண்ணை அமைந்ததும் கிணறுகள் அல்லது ஆழ்குழாய்க் கிணறுகள் போதுமான அளவு அமைத்து குறைந்த பட்சம் பத்து ஏக்கர் நிலத்தையாவது சொட்டுநீர்ப் பாசனத்தின்கீழ் கொண்டு வந்திருக்கவேண்டும்.
அதில் பெரும்பகுதியில் வறட்சி தாங்கிப் பயன்தரும் மரங்கள் நடப்பட்டிருக்க வேண்டும்.
ஆதாவது மா, முருங்கை, நாவல் போன்றவை.
அவற்றுக்குள் ஊடு பயிராகக் காய்கறிச் செடிகளும் பிற பயிர்களும் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
அப்படிச் சாகுபடி செய்வதையே வேளாண் பயிற்சிக்கும் வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
மரங்கள் வளர்ந்து அவற்றுக்கு இடையில் பயிர் செய்ய முடியாத நிலை வரும்போது அந்தப் பத்து ஏக்கர் நிலத்தையும் நிரந்தர வருவாய் தரும் பகுதியாக விட்டு விட்டு வேளாண்மை செய்யும் பகுதியை விஸ்தரித்து இருக்கலாம்.
அதில் முதலில் செய்த மாதிரியே வேறு வகை மரக் கன்றுகளை நடவு செய்து அவற்றுக்கு இடையில் வேளாண்மையும் பயிற்சியும் நடந்திருக்க வேண்டும்.
இந்த மாதிரி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் கால்நடைகள், உழு கருவிகள், வேலையாட்களைத் திட்டமிட்டு பயன்படுத்தி இருக்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால் துவக்கத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு செலவுக்குப் பின்னால் பண்ணை தற் சார்பு நிலைக்கும் உபரி நிலைக்கும் உயர்ந்திருக்கும்!.
அதுபோக எஞ்சியிருக்கும் முழு நிலத்தையும் இதே போலப் படிப படியாக உயர்த்தி கனவை நனவாக்கியிருக்க முடியும்!
இப்படிப் பட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாக பண்ணையைச் சுற்றிலும் மிகச் சிறந்த உயிர்வேலியும் உருவாகியிருக்கும்.
நான்கு அல்லது ஐந்து கட்டங்களாக பண்ணையை முழு அளவில் உருவாக்கும் அதே நேரம் ஒவ்வொரு அபிவிருத்திப் பகுதிக்கும் ஒரு பண்ணைக் குடில் அமைத்து அதை மற்ற குடில்களுடன் வாகனம் செல்லக்கூடிய பாதைகளால் இணைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் ஆள் போக்குவரத்தும் சரக்குப் போக்குவரத்தும் எளிதாக இருந்திருக்கும்!
இப்படிப்பட்ட திசையில் பண்ணையை உருவாக்கியிருந்தால் நாடெங்கிலும் இருந்து வருகை தரும் விவசாயிகள் பண்ணையைத் தங்களுக்கு ஒரு மாதிரிப் பண்ணையாகக் கருதி தங்கள் பகுதியிலும் இதன் கிளைகளைத் துவங்கும் விதத்தில் திட்ட வேலைகள் அமைந்திருக்கும்.
விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் இத்தகைய முறையை அமலாக்கவும் எடுத்துக் காட்டாக இருந்திருக்கும்!
ஆனால் அப்படிப்பட்ட திசையில் பண்ணை உருவாகாமல் போனதால் வருகை தரும் விவசாய ஆர்வலர்களுக்கு நம்பகமான உதாரணத்தை அங்கு காட்ட முடியவில்லை!
இந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப விவசாயம் செய்யும் ஒரு விவசாயி இயற்கை வேளாண்மையின் மேல் நாட்டம்கொண்டு வானகம் வருவாராயின் தனது விவசாயத்தைவிட மேலான ஒன்று இயற்கை முறையில் அங்கு நடந்துகொண்டிருப்பதாக நினைப்பாரா?
விவசாயத்தைப் பற்றிய முன் அனுபவம் இல்லாத ஆனால் அளவு கடந்த ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அங்கு பயிற்சி பெற வருகிறார்கள். அவர்கள் கோட்பாடு ரீதியாக மனமாற்றம் அடைகிறார்களே தவிர நடைமுறைப் பயிற்சி போதுமான அளவு கிடைப்பது இல்லை!
ஆனால் ஏற்கனவே விவசாயம் செய்கின்ற விவசாயிகள் அங்கு வந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று பார்த்தால் நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது!
வரும் விவசாய அனுபவம் இல்லாதவர்களிடம் எதிர்பார்ப்பு கற்றுக்கொள்வது மட்டுமாகவே இருக்கும்.
ஆனால் விவசாயம் செய்துகொண்டு இருப்பவர்களின் எதிர்பார்ப்பு தங்களின் நடப்பு நிலைமைகளைவிடக் கூடுதலாக இருக்கும்!
அதுமட்டுமல்ல அவர்களின் பல ஐயங்களை நிவர்த்தி செய்தாகவேண்டும்.
அப்போதுதான் அவர்களின் உணர்வுகள் பழைய நிலையில் இருந்து புதிய இயற்கைமயமான ஒரு வேளாண்மைக்கு மாறிச் செல்லும்.
அப்படி அவர்கள் திருப்தி அடையாவிட்டால் எதிர்மறையான கருத்துக்களின் பிரச்சாரகர்கள் ஆகிவிடுவார்கள்.
அதனால் வானகத்தை வருங்காலத்தில் மகத்தான ஒன்றாக மாற்றவும் துவக்கத்தில் செய்திருக்கவேண்டும் என்று நான் சொன்ன பணிகளைக் காலதாமதமாகவாவது நிறைவேற்றவும் வேண்டுமானால் சில வேண்டுகோள்களை முன்வைக்கிறேன்.
உடனடியாக கனிகளும் காய்களும் நிழலும் கொடுக்கக்கூடிய மர வகைகளை குறிப்பிட்ட அளவு உருவாக்கவேண்டும். வருடம் முழுக்க அங்கு வருபவர்கள் பறித்து உண்ணும் விதத்தில் வகைகள் தேர்வு செய்யப்படவேண்டும்.
களப்பயிற்சிக்காக ஒதுக்கப்படும் நிலத்தில் வெறும் பயிற்சியாக மட்டும் இல்லாமல் அதன் பயனை பின்னால் வருகை தரும் மற்றவர்கள் உணரும் விதத்தில் களப்பணியும் பயிற்சியும் இருக்கவேண்டும்.
காடுகள் என்பது அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் தானாகவே உருவாவதும் அரசு , வனத் துறையினரின் மூலம் நாற்றுக்கள் நடப்பட்டோ விதைகள் விதைக்கப்பட்டோ உருவாவதும் ஆகும்.
அதைத் தனியார் நிலங்களில் செலவு செய்து உருவாக்குவது முடியாது!
காரணம் வருவாயின்றி செலவுகள் செய்ய முடியாது.
அதனால் பயனுள்ள மரங்களைத் தேர்வு செய்தே காடுபோல் உருவாக்கவேண்டும்.
பண்ணை வேலைக்கு என்றே விவசாயத் திறன் வாய்ந்த ஒருவரின் தலைமையில் ஒரு குழு செயல்பட வேண்டும்.
அந்தக் குழு பண்ணைப் பணிகளைச் செய்பவர்களாகவும் பயிற்சிக்கு வருபவர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் கடினமான நிலைகளில் இருந்து எளிமையான வாழ்க்கைக்கு மாறிச் செல்லும் விதத்தில் உழைப்பைக் குறைக்கும் கருவிகளும் கட்டுமானங்களும் வாகனங்களும் நடைமுறைக்கு வந்தன.
அதனால் மனித உழைப்பு குறைந்தும் செலவு மிக்கதுமாக மாறிவிட்டது.
இந்த நிலையில் செலவு அதிகம் பிடிக்கக்கூடிய எதையும் செய்யாமல் நிரந்தரமாக நீடித்து உழைக்கும் வகையில் கட்டுமானங்கள் தங்குமிடங்கள் உட்பட இருக்க வேண்டும்.
பண்ணையின் பயன்பாட்டுக்கென அனைத்து வேலைகளுக்கும் போக்குவரத்துக்கும் உழவுப் பணிகளுக்கும் பயன்படுத்தும் விதமாக ஒரு சிறு ரக சரக்கு வாகனமும் பவர்டில்லர் என்று சொல்லக்கூடிய சிறு டிராக்டரும் இருக்க வேண்டும்.
அதன் ஓட்டுனர் அனைத்து பணிகளுக்கும் பயன்படக்கூடியவராக இருக்க வேண்டும்.
இத்தனை பணிகளும் திட்டமிட்டுச் செய்யும்போதே பாசனத்துக்கான தண்ணீர் உருவாக்கமும் மின்சார இணைப்பும் உரிய காலத்தில் உரிய முறையில் செய்யப்படவேண்டும்.
பண்ணையில் அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் சேமிப்புக் குட்டைகள் தவிர இன்னும் தேவையான இடங்களில் அமைக்கவேண்டும்.
அவை அதிகமான நீர் கொள்ளும் திறனுடையவையாக இருத்தல் நலம் .
அந்தக் குட்டைகளின் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரைப் பண்ணைக்கு முழுமையாகப் பயன்படுத்தும் விதமாகத் திட்டமிட வேண்டும்.
ஆதாவது பண்ணைக் குட்டைகள் இருக்கும் இடங்களை அனுசரித்துக் கிணறுகளும் ஆழ்குழாய்க் கிணறுகளும் அமைய வேண்டும்.
அதனால் ஒரு மழை கிடைத்தாலும் அதன் பயன் நீண்ட நாட்களுக்குப் பண்ணைக்குக் கிடைக்கும்.
இவ்வளவும் செய்யும்படியான பணிகள் சாதாரண முயற்சிகளால் செய்ய முடியாது!
இயற்கை வேளாண்மையை குறிக்கோளாகக் கொண்ட எண்ணற்ற நண்பர்களின் ஆதரவுடனும் பங்களிப்புடனும்தான் செய்ய முடியும்.
அதற்காக ஒவ்வொருவரும் தான் வானகத்துக்கு எந்த விதத்தில் பயன்பட முடியும் என்று சிந்தித்து அதைச் செயலாக்க வேண்டும்.
உழைப்பைக் கொடுப்பவர்கள் உழைப்பைக் கொடுக்கலாம்.
தொழில் நுட்பத்தைக் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்.
தங்களிடம் உள்ள ட்ராக்டர், ஜே சி பி போன்ற வாகனங்களைத் தேவையான நேரங்களில் அளித்து உதவலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள இயற்கை வேளாண்மையின் மேலும் இயற்கையின்மேலும் பற்றுள்ள நண்பர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை அளிக்கலாம்!....
இத்தகைய திசையில் பயணிப்பதை விட ஐயா நம்மாழ்வார் அவர்கள் காட்டிய வழியை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை!
வானகத்தின் வெற்றி உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு விஷயமாக மாறவேண்டும்!
வறண்ட பகுதியில் ஒரு வானகம் அடையும் வெற்றி தஞ்சை போன்ற வளமான பகுதிகளில் ஒரு வானகத்தின் கிளையைத் தோற்றுவிக்க வேண்டும்!
அதன் தொடர்ச்சியாக எல்லாப் பகுதிகளிலும் கிளைகள் தோன்றி அது இயற்கை வேளாண்மையின் முடிவான வெற்றியாக அமைய வேண்டும்!......
அதுவே ஐயா அவர்கள் கண்ட கனவு என நான் நினைக்கிறேன்.....
===============================================================
நம்மாழ்வார் ஐயா அவர்களின் மறைவுக்குப் பின் நான் எழுதிய இந்த முதல் கட்டுரையையும் இதனுடன் சேர்த்துப் படிப்பது நல்லது நண்பர்களே!....
http://www.drumsoftruth.com/2014/04/74.html