ss

Monday, March 31, 2014

அரசியல் (58)

சீரழியும் தேர்தல்....

நண்பர்களே! 

இந்தத் தேர்தல்கள் வரும்போதெல்லாம் பல முறை பார்த்த ஒரு விஷயம்...

ஆதாவது நாடறிந்த பெரிய தலைகள் பிரச்சாரத்துக்கு வரும்போது.....

பல்லாயிரக் கணக்கான மக்கள் கூட்டம்......

பிரம்மாண்டமான விளம்பரங்கள்.......

அளவற்ற வாகனங்கள்.......

தண்ணீராய்ச் செலவழிக்கப்படும் பெட்ரோல், டீசல்....

அவற்றின்மூலம் முறையற்ற விதத்தில் திரட்டப்படும் கும்பல்.....

ஆறாக ஓடும் சாராயம்......

சீரழியும் சுகாதாரம்
.....

இவ்வளவுமாகச் செய்து ஓட்டுச் சேகரிக்கிறார்களாம்!

இப்படியெல்லாம் செய்தால்தான் மக்கள் ஓட்டுப போடுவார்களா?...

இப்படியெல்லாம் செய்து ஒட்டுக் கேட்பவர்கள்  மக்கள் தொண்டர்களாக இருக்க முடியுமா?....

ஏன் இதைத் தடை செய்யக்கூடாது?...

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்களின் தகுதியையும் தங்கள் கட்சியின் தகுதிகளையும் இருக்கும் குறைபாடுகளையும் அதற்கான காரணங்களையும் அதற்குத் தங்களின் தீர்வையும் சொல்லி அச்சடிக்கப்பட்ட அறிக்கைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் பொது இடங்களில் வைத்து விட்டு அவரவர் வேலையைப் பார்த்தால் என்ன?...

தேர்தல்நாளன்று அவர்களாகவே விரும்பிச் சென்று வாக்களிப்பது தவிர மற்ற சம்பிரதாயங்களையும் ஆடம்பர செலவுகளையும் தடை செய்தால் என்ன?....


Monday, March 24, 2014

எனது மொழி ( 157 )

இது சரியா?...

ஒரு கொடுமையை நினைத்தீர்களா நண்பர்களே?....

அரசாங்கம் ஒரு மனிதனுக்கு என்ன சாதிக்காரன் என்று சான்றிதழ் கொடுக்கிறதோ அந்தச் சான்றிதழில் உள்ள அந்த சாதிப்பெயர் சொல்லி ஒருவரை உரக்க அழைத்தால் அதனால் பயங்கரக் கலவரம்கூட உருவாகலாம்! 

காரணம் அப்படி அழைப்பது அந்த மனிதனை இழிவுபடுத்துவதாகக் கருதப்படுகிறது! 

அது தண்டனைக்கு உரிய குற்றம் என்று சட்டமும் சொல்கிறது! 

அப்படியானால் தனிமனிதர் மற்றொருவரை அழைக்கக் கூடாது என்றும் அப்படி அழைத்தால் தண்டனைக்குரிய குற்றம் என்று இருக்கும் ஒன்றை அரசே எப்படிச் செய்யலாம்? 

அது இழிவும் அவமானமும் ஆகாதா?...

அதை இழிவாகக் கருத ஏன் மக்கள் தவறுகிறார்கள்?...

Monday, March 17, 2014

ஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 30 )

ஆன்மிகம்  - அடிப்படைத் தத்துவங்கள்......

மாபெரும் அண்டம் நாம் அறிந்த, அறியாத அத்தனையையும் உள்ளடக்கியது! 

அது உருவம் என்றால் அதன் உள்ளடக்கமே பரம்பொருள் அல்லது இறை!  

அதில் ஒரு அங்கமாக நம்மை உணர வேண்டும்!

 நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்று உணரவேண்டும்! 

நமக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறதென்று உணரவேண்டும்!

சின்னஞ்சிறியதில் இருந்து பிரம்மாண்டமானது வரை நடக்கும் இயக்கங்களை உணர்ந்து, அதில் நமது மனித இனத்தின் பாத்திரம் என்பது என்ன என்பதை உணர வேண்டும்!

அத்தகைய உணர்வுகள் யதார்த்த உண்மைகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். 

இத்தகைய அறிவுடன் சக மக்களுடனும் சக உயிரினங்களுடனும், இயற்கையுடனும் இயைந்து வாழும் வாழ்வு பற்றிய கலை அல்லது கோட்பாடுதான் ஆன்மிகம்!....

அத்தகைய ஆன்மிகத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஒவ்வொன்றும் ஆன்மிகத் தத்துவங்களே!....

எனது மொழி ( 156 )

நம்பிக்கை...

நமது சிலர் தங்களின் நம்பிக்கைகளைஎல்லாம் தத்ரூபமான உண்மைகள்போல தாங்களும் நம்பி மற்றவர்களையும் கண்மூடித்தனமாக நம்பச் சொல்வார்கள்.

வெறும் நம்பிக்கைகள் நடைமுறை உண்மைகள் ஆகிவிடாது!. 

நம்பிக்கைகளை நடைமுறை உண்மைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்! 

அப்போது சரியான நம்பிக்கைகள் மட்டும் நிலைத்து நிற்கும்! 

மற்றவை கரைந்துபோய்விடும்!...

சோதனைக்கு முன்னால் நிற்க முடியாத நம்பிக்கைகள் அனைத்தும் அல்லது சரியான திசையில் சிந்தித்து உணரப்படாத நம்பிக்கைகள் அனைத்தும் சாராம்சத்தில் அபத்தங்களே!..

அத்தகைய அபத்தங்களை மேலானதாகவும் எத்தகைய சோதனைக்கும் ஈடுகொடுக்கக்கூடிய கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் மட்டமானதாகவும் நினைக்கக்கூடிய அப்பாவிகளாலும் அறிவு குறைந்தவர்களாலும்தான் உலகம் நிறைந்துள்ளது!....


Friday, March 14, 2014

இயற்கை ( 21 )

படு தோல்வியும் எச்சரிக்கையும்...!...

கடந்த மாதம் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது!

எங்கள் பண்ணை வீட்டை ஒட்டி அருகில் இருந்த நாய்கள் கட்டும் இடத்திற்குச் சென்றால் கால்களில் சுள் சுள் என்று எதோ கடிப்பது போலவும் ஊர்ந்து செல்வது போலவும்  உணரப்பட்டது.

நன்றாக உற்றுப் பார்த்தபோது கீரை விதைகள் அளவுள்ள கருப்பு நிறப் பூச்சிகள் தென்பட்டன. 

அவை ஊர்ந்து செல்வது மட்டுமல்ல, பறக்கவும் செய்தன.

முதலில் நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் சில நாட்களில் அதிகமானதோடு நாய்கள்கூட அந்தப் பக்கம் போக மறுக்கும் அளவு தொல்லை அதிகமாகிவிட்டது...

அவையும் நிம்மதியாக இருக்க முடியாமல் தவித்தன. அவற்றின் உடலிலும் நிறையத் தொற்றிக் கொண்டன. 

நாங்களும் அந்த இடத்துப் பக்கமே போகமுடியவில்லை...

அதைத் தடுக்க எந்த புகைபோடுவது போன்ற இயற்கை வழியும் பயன்படவில்லை...

கடைசியில் தவிர்க்க முடியாத நிலையில் வளர்ப்புப் பிராணிகளுக்கான மருந்துக் கடையில் நாய்களுக்குத் தடவிக் குளிப்பாட்டவும் அந்தப் பகுதியில் தெளிக்க்கவுமாக பூச்சிக்கொல்லி வாங்கிவந்து பயன்படுத்தினோம்.

அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக மேலும் அதிகரித்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் நுழையவே முடியாமல் போனது.

தவிர நாய்கள் மூலமாக எங்கள் மேலும் தொற்றிக்கொண்டு வீட்டிற்குள்ளும் நுழைந்து தூங்க விடாமல் செய்ததால் கதவுகளைத் திறப்பதற்கே அச்சமாக இருந்தது.

ஒவ்வொரு முறை வீட்டுக்குள் நுழையும்போதும் எங்கள் உடம்பில் ஒட்டியிருக்கிறதா என்று சோதித்தித்துப் பார்த்தபின் நுழைவதே பழக்கமாகி விட்டது.

அதன்பின்பு! அதிரடியாக அதை ஒழித்தே தீருவது என்று களம் இறங்கினோம்....

துவக்கத்தில் பாரதியான் டஸ்ட் என்று சொல்லப்படும் பூச்சிக் கொல்லித் தூளை அந்தப் பகுதிமுழுவதும் இரண்டு முறை தூவினோம்.

பயனில்லை! 

அதன்பின் பிராணிகளுக்கான பூச்சிக்கொல்லியை நாய்களுக்கும் தரைக்கும் இரண்டு முறை தெளிப்பான் மூலம் பயன்படுத்தினோம்.

பயன் இல்லை! 

ஐந்தாவதாக ரோகோர் என்ற பயிர்களுக்கு அடிக்கும் பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தினோம். 

அப்போதும் பயன் இல்லை! 

ஆறாவதாக மொனோக்ரோடோபாஸ் என்ற கொடிய பூச்சிக் கொல்லியை விசைத் தெளிப்பானைப் பயன்படுத்தித் தெளித்தோம். பயன் பூஜ்ஜியம்தான்!

ஏழாவதாக மாலதியான் என்ற பூச்சிக் கொல்லியும் எட்டாவதாக பார்மலின் என்ற மிகக் கொடிய எரியும் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தினோம். ஒன்றும் நடக்கவில்லை....

ஒன்பதாவதாக சுமார் பத்து சென்ட் அளவு பரப்புக்கு தென்னை ஓலைகளைப்பரப்பியும் பந்தம்போல் செய்தும் தீவைத்து சுட்டுப் போசுக்கியும் பார்த்தோம். பயனில்லை! 

பத்தாவதாக போரேட் என்று சொல்லக்கூடிய மிகக் கொடிய நாற்றம் சகிக்க முடியாத குருணை வடிவப் பூச்சிக் கொல்லியை அனுமதிக்கப்பட்ட அளவுக்குப் பத்து மடங்கு அதிகமாக ஆதாவது ஐந்து கிலோ அளவுக்குப் பயன்படுத்திப் பார்த்தோம்! 

அந்த வாடையால் ஒருவாரம் அங்கு நடமாடவே முடியாத நிலை ஏற்ப்பட்டது. ஆனால் அந்தப் பூச்சிகள் ஒழியவில்லை! 

இருபது நாட்களில் பத்துமுறை முயன்றும் ஏற்பட்ட தோல்வியால் மனம் நொந்து போனோம்!

கடைசியில் அது தானாகப் போகும் வரை சகித்தும் தப்பித்தும் இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று விட்டுவிட்டோம். 

அதன்பின்னும் இருபது நாட்களுக்குப் பின்னால் தானாகவே மறைந்து விட்டது!....

ஒ! ...இயற்கை தனது வலிமையை அந்தப் பூச்சிகளைக் கொண்டு நினைவூட்டி விட்டது!

எனக்கு இப்போதெல்லாம் ஒரே கவலைதான்! 

ஆதாவது இத்தனை நச்சுப் பொருட்களையும் தாங்கி வாழ்ந்த அந்தப் பூச்சியைப்போல ஒன்று உலகில் தோன்றி அது கடித்தால் மனிதன் உடனே உயிரிழப்பான் என்ற நிலை ஏற்பட்டால் மனித சமுதாயத்தை யாரால் காப்பாற்ற முடியும்?...

இயற்கையின்மேல் மனிதன் தொடுத்துவரும் தாக்குதலால் சூழலில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் அத்தகைய மனிதனை அழித்தொழிக்கும் கிருமிகளை எதற்கும் கட்டுப்படாத கிருமிகளை தோன்றச் செய்துவிட்டால் என்னாவது?

இப்போதைக்கு வெறும் அச்சம்தான்! ஆனால் சாத்தியம் உள்ள அச்சம் என்பதை உணர்கிறேன்.....

Thursday, March 13, 2014

உணவே மருந்து ( 82 )


உணவும் விலைமாதும்.....

ஒரு விலை மாதுக்கு ஈடாக குடும்பப் பெண் இருக்க முடியாது! 

அவளைப்போல் தன்னை அழகு படுத்திக்கொள்ள மாட்டாள்!

அவளைப்போல் கவர்ச்சியாக இருக்க மாட்டாள்.

அவளைப்போல மயக்கும் மொழி பேசமாட்டாள்!

அவளைப்போல நாணமற்று நடந்துகொள்ள மாட்டாள்.

அவளைப்போல பலருடன் பலவிதமாக நட்பு வைத்துக்கொள்ள மாட்டாள்.

அவளைப்போல இனிய பொய்யான மயக்கும் மொழியைப் பேசமாட்டாள்.

கண்களையும் மற்ற அங்க அவயங்களையும் கட்டுப்பாடின்றி அலைய விட மாட்டாள்.


மாறாக ......

சாதாரண அழகுடன் காணப்படுவாள்.

கண்டிப்பாகவும் நடந்து கொள்வாள். 

அனைத்து விஷயங்களிலும் அனைத்துக் காலங்களிலும் எளிமையாக, துணையாக , நன்மையே நோக்கமாக இருப்பாள். 

அதன்காரணமாக விலைமாதுவின் தொடர்பு மீளாத் துயரத்திலும்  குடும்ப வாழ்க்கை நன்மையிலும் முடிகிறது...

இதுதான் பொதுவான சித்திரம். 

அதுபோல இன்றைய நவீன உணவுத் தயாரிப்புகளில் பெரும்பாலானவை கண்களுக்கு அழகையும் நாவுக்கு ருசியையும் நுகர்வதற்கு விதவிதமான வாசனையையும் கொண்டு தயாரிக்கப் படுகின்றன.

எண்ணையையும் சர்க்கரையையும் மசாலாக்களையும் வேதிப் பொருட்களையும் உள்ளடக்கி உயர் வெப்பத்தில் வித விதமான பண்டங்களாகத் தயாரிக்கப் படுகின்றன. 

அதற்கு ஈடாக அந்த உணவுப்பொருட்களில் உள்ள நல்ல அம்சங்களைஎல்லாம் பலி வாங்கி விடுகின்றன.

முடிவாக நமது உடலுக்கு அநேக நோய்களுக்குக் காரணமாகித் துயரத்தில் தள்ளி விடுகின்றன.

ஆதாவது ஒரு விலை மாதுவின் நட்பால் விளையும் அதே விளைவு!....

ஆனால் அதற்கு நேர மாறாக இயற்கை உணவுகள் பார்வைக்கும், நாவுக்கும் நுகர்வுக்கும் கவர்ச்சி குறைவாக இருந்தாலும் அதன் உள் கட்டமைப்பு நமது உடல் நலனுக்கு ஏற்றதாகவும் நோய்க்கு மருந்தாகவும் செயல் படுகிறது. 

அதன்காரணமாக நமது நோயற்ற நீண்ட ஆயுளுக்கு அது காரணம் ஆகின்றது!

சுற்றுச் சூழல் கேடுகளுக்குக் காரணமாக இல்லாமல் சூழலை மேலும் மேலும் அழகாக்குகிறது! 

ஆதாவது நல்லதொரு குடும்பப் பெண்ணால் ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் அதே விளைவு!.....

அப்படியானால் நமது நல்வாழ்வுக்கு ஏற்ற உணவு எது என்று சொல்லவும் வேண்டுமா?.....Monday, March 10, 2014

உணவே மருந்து ( 81 )

நெரிசல்.......

நண்பர்களே! 

பல நண்பர்கள் பல நேரங்களில்  இயற்கை உணவு தொடர்பாக சில கருத்துக்களைச்  சொல்கிறார்கள்! 

ஆதாவது இயற்கை உணவு உண்டால் மனதுக்கு உண்ட திருப்தி ஏற்படுவது இல்லை..... பசி தாங்க மாட்டேன் என்கிறது ......என்பது போன்றவைதான் அவை.....

அது உண்மையில் மகிழ்ச்சிக்கு உரிய ஒரு செய்தி ஆகும். 

ஆனால் குறைபோல் நினைக்கிறார்கள். 

அது ஏன் என்று பார்ப்போம்!.

போக்குவரத்து அதிகம் உள்ள நகரச் சாலைகளில் என்ன நடக்கிறது?

அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 வாகனங்களின் அதிகமான போக்குவரத்தால் ஏற்கனவே சுற்றுச் சூழல் மாசால் காற்றில் கலந்துள்ள அசுத்தங்கள் எல்லாம் புகையாகப் பறந்து நம்மை மூச்சுத் திணரவைக்கின்றன.

உழைப்பாலும் வெய்யிலாலும்  வியர்வை வருவதற்குப் பதிலாக அவையில்லாமலே வியர்வை கொட்டுகிறது . மூச்சுத் திணறுகிறது. 

ஒரு கட்டத்தில் அந்த இடத்தை விட்டுத் தப்பித்தால் போதும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. 

அந்த நேரத்தில் அங்கு சென்றதே தவறு என்ற எண்ணம் வருகிறது!

அடிக்கடி இப்படி அவஸ்தையைச் சந்திக்கும் ஒருவருக்கு அந்தச் சூழலில் அங்கு பயணிக்கவேண்டும் என்ற உணர்வே குறைந்துபோகிறது. 

ஆனாலும் தவிர்க்க முடியாமல் திணறிக்கொண்டு விருப்பம் இல்லாமலே பயணம் செய்துகொண்டுதான் இருப்போம். காரணம் நமது வாழ்க்கைத் தேவைகள் அப்படி. 

ஆனால் போக்குவரத்து சுகமாகவும் சுற்றுச் சூழல் மாசு அற்றதாகவும் மனதுக்கும் உடலுக்கும் இதமாகவும் உள்ள இயற்கை அழகு மிக்க ஒரு சாலையில் பயணம் செய்தால் அதற்கு நேர்மாறான உணர்வுகள் ஏற்படும் அல்லவா?

ஆதாவது அந்தச் சாலையில் பயணிக்கவேண்டும் அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது அல்லவா? 

இந்த இரண்டு நிலைகளையும் மாசுபட்ட சமைத்த உணவுகள் மற்றும்  இயற்கை உணவுகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!...

இயற்கையில் கிடைக்கும் உணவுப்பொருட்களைக் கண்டபடி வெப்பத்தாலும், எண்ணையில் பொரித்தும் சின்னாபின்னப் படுத்தி வேதிப் பண்புகளை ஏற்றி, உடல்கூறு இயலுக்கு ஒவ்வாத வகையில் மாசு படுத்தி வயிற்றில் திணிக்கிறோம்!....

அதன்காரணமாக சுவை உறுப்பான நாக்கு ஒன்றைத் தவிர உடம்பில் உள்ள எந்தப் பகுதியும் உறுப்பும் செரிமான மண்டலங்களும் விரும்பாத துன்ப உணவை உணவுப்பாதையில் செலுத்துகிறோம். 

அதை நாக்கு தவிர உணவுப்பாதையின் ஒவ்வொரு அங்குலமும் எதிர்த்துப் போராடுகிறது!...

அதன்விளைவாக அஜீரணம், பசியின்மை, வயிற்றுக் கோளாறு, பல்வேறு விதமான எதிர்மறை உணர்வுகள் பல்வேறு வடிவங்களில் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

பழக்கத்தின் காரணமாக ஒரு சராசரி நிலையில் மந்தமாகவும், பசியில்லாமல் ருசிக்காக உண்ணும் நிலையிலும் வாழ்கிறோம்.  

அதற்கு மாறாக இன்னொன்றையும் பார்க்கவேண்டும்.

இயற்கையில் விளையும் காய்கள், கனிகள், பழச் சாறுகள், கொட்டைப் பருப்புகள், கிழங்குகள், உலர்பழங்கள், பால்பிடித்த தானியங்கள், கரும்புச் சாறு, தேன், முளைக்கட்டிய தானியங்கள், மற்றும் இவைபோன்றவைஎல்லாம் நாவிற்கு சுவை மட்டுமல்ல உடலின் ஒவ்வொரு துணுக்காலும்  ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கப் படும். 

காரணம் அதன் பாதையில் எந்த நெரிசலும் இல்லை. இடையூறும் இல்லை! 

எந்தப் பகுதியும் அவற்றை எதிர்த்துப் போராடுவது இல்லை! 

உள்ளே செல்லும் உணவும் அதை எதிர்பார்த்திருக்கும் அங்கங்களும் நண்பர்களாகக் கொஞ்சுகின்றன. அவற்றின் பயணம் தடையற்றதாக நடைபெறுகிறது. 

அதனால் அடுத்த நேர உணவுக்கான எதிர்பார்ப்பு சமையல் உணவுக்கு முன்பாகவே துவங்கி விடுகிறது!...

ஆதாவது நன்றாகப் பசிக்கிறது என்று பொருள்!

ஆதாவது நன்றாகச் செரிக்கிறது என்று பொருள்! 

ஆதாவது உடல்நலனுக்கு எதிராக உடலின் எந்தப் பாகத்திலும் தவறுகள் நிகழவில்லை என்று பொருள்! 

சுருங்கச் சொன்னால் நமது பயணம் மாசுபட்ட நெரிசலில் சிக்கித் திணறாமல் இனிய பயணமாக இருக்கின்றது என்று பொருள்! 

அதைவிட இன்பம் வேறென்ன வேண்டும்?.....

 

Wednesday, March 5, 2014

தத்துவம் (26)

ஏன் கூடாது?....

ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வேதம் சொல்வதில் உள்ள நல்லவற்றை மிகவும் போற்றுகிறார்கள்.

தங்கள் வேதங்கள் சொல்லும் தவறானவற்றை ஒப்புக்கொள்ளாமல் ஏதாவது வியாக்கியானம் சொல்லிச் சமாளிக்கவே நினைக்கிறார்கள்!

மற்ற  மதங்கள் சொல்லும் நல்லவற்றைக் காண மறுக்கிறார்கள்.

மற்ற மதங்களில் காணும் குறைகளைப் பற்றி இழிவாக விமர்சிக்கிறார்கள்.

இது அனைவரின் பொதுப் பண்பு! 

இதனால் விளையும் நன்மைகள் என்ன?

கசப்புணர்வும் பகைமையுமே!...

அதற்கு மாற்றாக இப்படி ஏன் செய்யக் கூடாது?

ஒவ்வொருவரும் தங்கள் மதங்களில் உள்ள குறைகளைக் களைய முயற்சி செய்யலாம்.

தங்கள் மதங்களிலும் மற்ற மதங்களிலும் உள்ள நல்ல அம்சங்களைப் பொதுவாக நினைத்து மகிழும் அதே நேரம் அனைத்துத் தரப்பிலும் உள்ள தவறான அம்சங்கள் குறித்து நட்பு ரீதியாக உரையாடலாம்.

தங்கள் மதம் சம்பந்தப் பட்ட விழாக்களில் விருந்துக்கு மட்டும் அழைக்காமல் ஆன்மிக விஷயங்களுக்கும் அழைப்பு விடுக்கலாம்.

இதன் காரணமாக அனைத்து மதங்களைப் பின்பற்றும் மக்களிடையே சகோதரத்துவம் வளர்வதால் வேற்றுமைகள் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு மத வேறுபாடுகள் மறைந்து அனைவரும் ஒரே தர்மத்தில் மானிட தர்மத்தில் சங்கமிக்கலாமே!....

Monday, March 3, 2014

உணவே மருந்து ( 80 )

உணவு வகைகள்......

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் நமது உடம்பில் ஏற்ப்படுத்தும் விளைவுகளை மூன்று  விதமாகப் பிரித்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். 

 பொருத்தமான உணவுகள் முதல்வகை. 

அவை செரிமானம் அடையும்போது நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. 

இயற்கை உணவுகளான சமைக்காத காய்கறிகள், கிழங்குகள், பழங்கள், பழச் சாறுகள், முளைக் கட்டிய தானியங்கள், இளநீர் , தேன் முதலானவை.


இரண்டாவது வகை நமது உடல்நலனுக்குப் பொருந்தாத கிருமிகளை உள்ளடக்கிய உணவுகள்...

அவை நம் உடம்பினுள் சென்று பலவிதமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி நோய்களுக்குக் காரணமாகின்றன. 

கெட்டுப் போன உணவுகள், அசுத்தம் நிறைந்த உணவுகள், அசுத்தமான நபர்களால் கையாளப் படும் உணவுகள் போன்றவை இதில் சேரும்.

மூன்றாவது வகை நமது உடம்புக்குத் தேவையில்லாத வேதித் தன்மைகளைக் கொண்ட உணவுகள். 

அவை நோய்க் கிருமிகளை உள்ளடக்கி இருக்காவிட்டாலும் அந்த வேதிப் பண்புகள் நமது உடம்பின் நுண்ணிய இயங்கு கட்டமைப்புகளைச் சிதைக்கின்றன. 

அதனால் பல நோய்கள் தோன்றக் காரணமாகின்றன. 

நெருப்பில் சுடுபவை, எண்ணையில் பொரித்தெடுக்கப் படுபவை, பாஸ்ட் பூட், ஜங்க் புட் எனப்படுபவை, பேக்கரிகளிளிலும் ஆலைகளிலும் உயர் வெப்ப நிலையில் தயாரிக்கப்படும் உணவு வகைகள், சுவைக்காகவும் கெடாமல் இருப்பதற்காகவும்  பலவிதமான வேதிப் பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கப் படும் உணவுப் பொருட்கள் ,  குளிர் பானங்கள், மது வகைகள் இன்னும் பலவும்  இதில் அடங்கும்.  

ஆனால் இத்தகைய மூன்றாவது வகை உணவுகளை ஆதாவது உண்மையில் நமது உடல் நலனுக்குத் தீங்கு செய்யும் குணம் கொண்ட குப்பைகளைச் சிறந்த உணவுகள் என நினைத்து அதற்குக் கூடுதல் செலவும் செய்து உண்கின்ற மடமையை என்ன சொல்வது?

ஆனால் அதுதான் நடக்கிறது!.....