படு தோல்வியும் எச்சரிக்கையும்...!...
கடந்த மாதம் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது!
எங்கள் பண்ணை வீட்டை ஒட்டி அருகில் இருந்த நாய்கள் கட்டும் இடத்திற்குச் சென்றால் கால்களில் சுள் சுள் என்று எதோ கடிப்பது போலவும் ஊர்ந்து செல்வது போலவும் உணரப்பட்டது.
நன்றாக உற்றுப் பார்த்தபோது கீரை விதைகள் அளவுள்ள கருப்பு நிறப் பூச்சிகள் தென்பட்டன.
அவை ஊர்ந்து செல்வது மட்டுமல்ல, பறக்கவும் செய்தன.
முதலில் நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் சில நாட்களில் அதிகமானதோடு நாய்கள்கூட அந்தப் பக்கம் போக மறுக்கும் அளவு தொல்லை அதிகமாகிவிட்டது...
அவையும் நிம்மதியாக இருக்க முடியாமல் தவித்தன. அவற்றின் உடலிலும் நிறையத் தொற்றிக் கொண்டன.
நாங்களும் அந்த இடத்துப் பக்கமே போகமுடியவில்லை...
அதைத் தடுக்க எந்த புகைபோடுவது போன்ற இயற்கை வழியும் பயன்படவில்லை...
கடைசியில் தவிர்க்க முடியாத நிலையில் வளர்ப்புப் பிராணிகளுக்கான மருந்துக் கடையில் நாய்களுக்குத் தடவிக் குளிப்பாட்டவும் அந்தப் பகுதியில் தெளிக்க்கவுமாக பூச்சிக்கொல்லி வாங்கிவந்து பயன்படுத்தினோம்.
அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக மேலும் அதிகரித்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் நுழையவே முடியாமல் போனது.
தவிர நாய்கள் மூலமாக எங்கள் மேலும் தொற்றிக்கொண்டு வீட்டிற்குள்ளும் நுழைந்து தூங்க விடாமல் செய்ததால் கதவுகளைத் திறப்பதற்கே அச்சமாக இருந்தது.
ஒவ்வொரு முறை வீட்டுக்குள் நுழையும்போதும் எங்கள் உடம்பில் ஒட்டியிருக்கிறதா என்று சோதித்தித்துப் பார்த்தபின் நுழைவதே பழக்கமாகி விட்டது.
அதன்பின்பு! அதிரடியாக அதை ஒழித்தே தீருவது என்று களம் இறங்கினோம்....
துவக்கத்தில் பாரதியான் டஸ்ட் என்று சொல்லப்படும் பூச்சிக் கொல்லித் தூளை அந்தப் பகுதிமுழுவதும் இரண்டு முறை தூவினோம்.
பயனில்லை!
அதன்பின் பிராணிகளுக்கான பூச்சிக்கொல்லியை நாய்களுக்கும் தரைக்கும் இரண்டு முறை தெளிப்பான் மூலம் பயன்படுத்தினோம்.
பயன் இல்லை!
ஐந்தாவதாக ரோகோர் என்ற பயிர்களுக்கு அடிக்கும் பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தினோம்.
அப்போதும் பயன் இல்லை!
ஆறாவதாக மொனோக்ரோடோபாஸ் என்ற கொடிய பூச்சிக் கொல்லியை விசைத் தெளிப்பானைப் பயன்படுத்தித் தெளித்தோம். பயன் பூஜ்ஜியம்தான்!
ஏழாவதாக மாலதியான் என்ற பூச்சிக் கொல்லியும் எட்டாவதாக பார்மலின் என்ற மிகக் கொடிய எரியும் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தினோம். ஒன்றும் நடக்கவில்லை....
ஒன்பதாவதாக சுமார் பத்து சென்ட் அளவு பரப்புக்கு தென்னை ஓலைகளைப்பரப்பியும் பந்தம்போல் செய்தும் தீவைத்து சுட்டுப் போசுக்கியும் பார்த்தோம். பயனில்லை!
பத்தாவதாக போரேட் என்று சொல்லக்கூடிய மிகக் கொடிய நாற்றம் சகிக்க முடியாத குருணை வடிவப் பூச்சிக் கொல்லியை அனுமதிக்கப்பட்ட அளவுக்குப் பத்து மடங்கு அதிகமாக ஆதாவது ஐந்து கிலோ அளவுக்குப் பயன்படுத்திப் பார்த்தோம்!
அந்த வாடையால் ஒருவாரம் அங்கு நடமாடவே முடியாத நிலை ஏற்ப்பட்டது. ஆனால் அந்தப் பூச்சிகள் ஒழியவில்லை!
இருபது நாட்களில் பத்துமுறை முயன்றும் ஏற்பட்ட தோல்வியால் மனம் நொந்து போனோம்!
கடைசியில் அது தானாகப் போகும் வரை சகித்தும் தப்பித்தும் இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று விட்டுவிட்டோம்.
அதன்பின்னும் இருபது நாட்களுக்குப் பின்னால் தானாகவே மறைந்து விட்டது!....
ஒ! ...இயற்கை தனது வலிமையை அந்தப் பூச்சிகளைக் கொண்டு நினைவூட்டி விட்டது!
எனக்கு இப்போதெல்லாம் ஒரே கவலைதான்!
ஆதாவது இத்தனை நச்சுப் பொருட்களையும் தாங்கி வாழ்ந்த அந்தப் பூச்சியைப்போல ஒன்று உலகில் தோன்றி அது கடித்தால் மனிதன் உடனே உயிரிழப்பான் என்ற நிலை ஏற்பட்டால் மனித சமுதாயத்தை யாரால் காப்பாற்ற முடியும்?...
இயற்கையின்மேல் மனிதன் தொடுத்துவரும் தாக்குதலால் சூழலில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் அத்தகைய மனிதனை அழித்தொழிக்கும் கிருமிகளை எதற்கும் கட்டுப்படாத கிருமிகளை தோன்றச் செய்துவிட்டால் என்னாவது?
இப்போதைக்கு வெறும் அச்சம்தான்! ஆனால் சாத்தியம் உள்ள அச்சம் என்பதை உணர்கிறேன்.....
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி ஐயா.
நன்றி ஐயா! வணக்கமும் வாழ்த்துக்களும்!...
Deleteஐயா,
ReplyDeleteஅது என்ன வகையான பூச்சி என தெரிந்ததா? புகைப்படம் இட முடியுமா?
நுழையான் என்று கிராமங்களில் சொல்கிறார்கள் நண்பரே! கீரை விதைபோல் இருக்கும். ஊர்ந்தும் செல்லும். பறக்கவும் செய்யும்...
Deleteஅது இப்போது தானாகவே மறைந்து விட்டது...மீண்டும் தென்பட்டால் படம் எடுத்துப் பதிவு செய்ய முயல்கிறேன்.....