ss

Thursday, May 29, 2014

சிறுகதைகள் ( 17 )

அதுதான் அம்மா! 

வளர்மதி இறந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

துக்கம் விசாரிக்க வரத் தாமதமான ஒரு சிலரும் வந்து போய்விட்டார்கள்.

சோகம் இன்னும் நீங்கவில்லை! அவ்வளவு எளிதில் நீங்கக்கூடிய ஒன்றா அது?...

ஆண் பெண் என்று இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவரை இரண்டாவது கணவனாக மணம் செய்து ஒரு முப்பத்தியைந்து ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் முருகேசன்!

அவர்களுடைய தாம்பத்தியத்தில் ஒரு சிறு கீரல்கூட விழாமல் வாழ்ந்த வாழ்க்கை….

தன் மூலம் ஒரு குழந்தை இல்லை என்று மனதாலும் நினைக்காத ஒரு பண்பான வாழ்க்கை…

இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டிய இறுதிக்கட்ட வாழ்க்கை எஞ்சியிருந்த நிலையில் மீள முடியாத நோய்க்குப் பலியானது அவருக்குத் தாங்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.
அவர்களின் திருமணத்தின்போது அவருக்கு வசதி என்று சொல்லும்படி ஒன்றும் இல்லை! ஒரு சிறு நிறுவனத்தில் காவலாளி வேலை….
மனைவி வளர்மதிக்கு அரசு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கும் வரை வாழ்க்கை கடினமாகவே இருந்தது.

அதன் பின்பு சிறு குழந்தைகளாக இருந்த ரஜனீஸ{ம் ரேகாவும் வளர்ந்து ஆளாகவும் ஓரளவு வசதி வரவும் சரியாக இருந்தது.

அவர்களும் படிப்பு  வேலை திருமணம் என்று அனைத்தும் முடிந்து வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொண்டார்கள்.

ஆனால் எதையும் காணும் வாய்ப்பு இல்லாமல் வளர்மதி ஓய்வு பெற்றபின்னால் சில வருடங்கள்கூட வாழாமல் போய்விட்டார்.

முருகேசனுக்கு ஒன்றைத்தான் தாங்க முடியவே இல்லை!

ஆதாவது கண்ணைமூடும் முன்னால் தன்னிடம் எதுவும் சொல்ல வில்லை  என்பதே அது!

அடிக்கடி மகனிடமும் மகளிடமும்  அதையே கேட்டு;ககொண்டிருந்தார். அம்மா உங்களிடமாவது ஏதும் சொன்னாளா என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தது அவர்களுக்கும் பெரும் வேதனையாக இருந்தது!

அவரும் வேலைக்குப் போவது இல்லை! மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சேவை செய்தது தவிர பாடுபட்டது தவிர தனக்கென்று அவர் எதும் வைத்துக்கொள்ளவில்லை.

பாசமுள்ள மனைவி போய்விட்டாள். பிள்ளைகளும் அவரவர் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளோடு வெளியூர்களில் வசிக்கிறார்கள். இனி தான் என்ன செய்வது?....யாரிடம் இருப்பது? தனது வாழ்வுக்கு இனி என்ன ஆதாரம்?...

வேறு சாதியைச் சேர்ந்த ஒரு விதவைப்பெண்ணைத் திருமணம் செய்த அவரை விலக்கி வைத்த உறவினர்கள் விலகியே போய்விட்டார்கள்.

தன்னையும் சேர்த்து அழைத்துக்கொண்டு போகாமல் தன்னைமட்டும் தவிக்க விட்டுப் போய்விட்டாளே என்று மனதுக்குள் வெந்து கண்ணீர் விட்டபடி இருந்தார்.

மகனும் மகளும் அவரவர் இருக்கும் ஊர்களுக்குத் திரும்பும் நாள் நெருங்கி வந்தது.

அப்பாவிடம் வந்து நாங்கள் இங்கேயே இருக்க முடியாதுப்பா! புறப்படுகிறோம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இங்கேயே இருக்கிறீர்களா? எங்களுடன் வந்துவிடுகிறீர்களா என்று கேட்க, அவர் இதயமே வெடித்ததுபோல் பொங்கிப் பொங்கி அழுது விட்டு மீண்டும் அவ எதுவும் சொல்லாமப் போயிட்டா!.... நான் என்ன சொல்லட்டும் என்று மேலும் மேலும் குமுறினார்.

ஏல்லோரும் நல்லா இருங்க என்பதைத் தவிர வேறென்றும் யாரிடமும் கடைசிவரை சொல்லவே இல்லை!

ஒரு வழியா மகனும் மகளும் அவர் எதிர்பார்த்து ஏங்கிய அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டார்கள்.
“அப்பா! ஏன் இதையே திரும்பக் திரும்பக்கேட்கறீங்க? அம்மா எல்லோரும் நல்லா இருங்கன்னு அந்த வேதனையிலும் அடிக்கடி சொன்னாங்க! வேறு என்ன சொல்ல சொல்லியிருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க?

ஏன்னைப்பத்தி ஒண்ணும் சொல்லலியா?...

ஊங்களைப்பத்தி என்ன சொல்லியிருக்கணும்பா?

“ அப்பாவைப் பாத்துக்குங்க அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தாப் போதுமே!...”

“ ஓ!..... அதுதான் உங்க வேதனையா?... அப்படியானா எங்களைப் பத்தி உங்ககிட்டே எதாலும் சொன்னாங்களா?”

“இல்லை”

“ஏன்பா?”

“தெரியலே!”

“ அதுதான் அம்மா!"

“ உங்களை நல்லாப் பாத்துக்கணும்ணு எங்க கிட்டேயோ எங்ககிட்ட எப்பவும்போல இருக்கணும்ணு உங்ககிட்டேயோ அம்மா சொல்லியிருந்தா நீங்க இத்தனை நாள் வாழ்ந்ததுல அர்த்தம்; இல்லாமப் போயிருக்கும்பா!”

“அப்படியா சொல்றீங்க?”

“ஆமாம்பா! அப்படிச் சொல்லியிருந்தா நீங்க இத்தனை காலமும் அம்மாவுக்குத் எங்களுக்கும் தெய்வமா இருந்ததை , இருக்கப் போவதை அவமதிச்சதா ஆகியிருக்கும்! அதுமட்டும் அல்ல, நீங்களும் அம்மாவும் எங்களை நல்ல பிள்ளைகளா வளர்க்கலை என்றும் ஆகியிருக்கும்! அப்படியா அப்பா? நீங்க எங்க அப்பா இல்லையா?..... நாங்க உங்க பிள்ளைகள் இல்லையா?... அம்மா உங்களையும் நீங்க அம்மாவையும் நம்பலையா?..”

சொல்லும்போதே அவன் குரல் உடைந்து தழுதழுக்க ஆரம்பித்து கடைசியில் கதறி விட்டான்!

அவரும் உடன் சேர்ந்து கதரியதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் பேச முடியவில்லை!.....

==================================================================

1 comment:

  1. சும்மா வருமோ சுகதுக்கம் ....சிவபோகசாரம் வரிகளை நினைத்துக் கொண்டேன்

    ReplyDelete