ss

Thursday, June 19, 2014

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 35 )

படைப்புத் தத்துவம் ....ஒரு உரையாடல்...

படைப்பு என்று இருந்தால் அங்கு முக்கியமான இரண்டு இருக்கவேண்டும் அல்லவா? ...

ஒன்று படைக்கப்பட்டது.

இரண்டாவது படைத்தது!

படைக்கப்பட்டது என்று சொல்லப்படும் அனைத்தையும் நாம் அறிவோம்.


ஆனால் படைத்ததைப் பற்றி ஏன் அனைவராலும் அறிய முடியவில்லை?.......

(இந்தக் கேள்வியை நான் முகநூலில் எழுப்பிய போது நடந்த உரையாடலில்.....

மற்றவர் என்பது மற்றவர்களையும் பதில் என்பது என்னையும் குறிக்கும்.....)


மற்றவர்: எல்லாவற்றையும் தாங்கி கொண்டிருப்பது படைத்தது.... அதுதான் சுத்தவெளி.

பதில்:

எல்லாவற்றையும் தாங்கி கொண்டிருப்பது படைத்தது.... அதுதான் சுத்தவெளி என்றால் அதை எப்படி சோதித்து உறுதிப் படுத்துவது தம்பி?......
வேறு பலர் வேறு விதமாகச் சொல்கிறார்களே! அதை என்ன செய்வது?

மற்றவர்:

எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது ணா.
அணைத்து கோள்களையும் தாங்கி இருப்பதும் சுத்த வெளி, கோள்கள் அனைத்தும் சுத்த வெளியில்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பதில்:

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அண்டத்தில் நாம் ஒரு உறுப்பாக வாழ்கிறோம் தம்பி! அது சரியானதே ஆனால் அந்த அண்டத்தையே ஆதாவது உங்கள் மொழியில் சொன்னால் சுத்தவெளியையே படைப்பு என்றால் அது எப்படி?....

மற்றவர்:

அது மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது

பதில்:

இது நல்ல பதில். மனித சிந்தனைக்கு அப்பார்ப்பட்ட ஒன்றை படைப்பு என்று சொல்லக் கூடாது அல்லவா? படைப்பு என்றால் படைப்பாளி இருக்க வேண்டும்.....

 ஆனால் ஆதியும் அந்தமும் இல்லாத பேரண்டம் படைக்கப்பட்டது என்று சொல்லாமல் இயல்பானது என்று சொல்லி இருக்கலாம். பேரியக்கம் என்று சொல்லியிருக்கலாம். பரம்பொருள் என்று மட்டும் சொல்லியிருக்கலாம்.....

 ஆதாவது எதைப் பதிலாகவும் உண்மையாகவும் கொண்டாலும் அது அனைத்து மக்களுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் இணக்கமாகவும் ஆய்வுக்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும்!

ஆய்வுக்கு உட்படுத்தமுடியாது என்று ஒருவர் சொன்னால் அது எப்பேர்ப்பட்ட தத்துவமாக இருந்தாலும் வெறும் மூட நம்பிக்கையாகிவிடும்!..ஆன்மிகத்தை வெறும் மூட நம்பிக்கையாகச் சிறுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாதல்லவா!....

மற்றவர் :

வேதங்களை அறியுங்கள்.. அவை கடவுளால் அருளப்பட்டவை.. அவை உங்களுக்கு உணர்த்தும் உங்கள் கேள்விக்கான விடைகள் அனைத்தினையும்.. மனிதர்களால் இயற்றப்பட்டு, இவை வேதங்கள் என்று சுட்டப்படுவதை விடுத்து, எவையெல்லாம் கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்டது என்றுள்ளதோ அவற்றை படியுங்கள், ஆராயுங்கள்... நிச்சயம் விடை உண்டு..

பதில்:

விடை கிடைக்கவில்லை நண்பரே! அனைத்துத் தத்துவஞானங்களும் மனிதனால் உருவாக்கப் பட்டவையே!...மனிதனால் அல்லாமல் வேறு எந்த வழியில் ஒன்று உருவாகியிருந்தாலும் அதுபோல ஒன்றை நம்மில் யாராவது ஒருவர் அறிந்திருக்க வேண்டும்! நம்மிடையே அப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறாரா?...

மற்றவர்:

நீங்கள் அத்தகைய வேதங்களை படித்ததுண்டா..?

பதில்:

போதுமான அளவு படித்துள்ளேன்.......நீங்கள் எதை நினைத்துக் கேட்கிறீர்களோ அதை முழுக்கப் படித்துள்ளேன்.....

வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதை விட அதை ஏன் யாரும் பின்பற்றுவது இல்லை என்பதைத்தான் முக்கியமாக ஆராயப்பட வேண்டும்!

மற்றவர்:

ரிக், யஜுர், சாமம், அதர்வனம்.... குரான், பைபிள்..?

குர்ஆன் , பைபிள் இரண்டையும் முழுமையாகப் படித்துள்ளேன்.புத்தரின் தம்மம் படித்துள்ளேன்.....

மற்றவர்:

இதில் நீங்கள் படைத்ததை அறிய முடியவில்லையா..?

பதில்:

நான் தனிப்பட்ட மதங்களைப் பற்றி விவாதிப்பது இல்லை. அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளும் ஆன்மிகத்தைப் பற்றி மட்டும் உரையாடுவேன். அக்கரைப் படுவேன்.

நான் மூட நம்பிக்கைகள் அற்ற ஆன்மிகத்தை பின்பற்றுபவன்......

அதனால் ஆய்வுக்கு உட்படாத எந்த நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்வது இல்லை!

மற்றவர்:

அப்படி நீங்கள் ஆய்வு செய்து நிராகரித்தது சிலதை சொல்லலாமா..?

பதில்:

தாராளமாக!.......அப்படிச் சொல்ல முடியாத ஒருநிலையில் அதைப் பற்றிப் பேசுவது குற்றம் என்று நினைக்கிறேன்....அது நானாக இருந்தாலும்...

நான் சொன்னபடி எனது ஆய்வுக் கருத்துக்களைச் சொல்ல என்னால் முடியாவிட்டால் வெற்றுச் சவடால் ஆகிவிடும். அப்படிச் செய்யக்கூடாது. செய்யமாட்டேன் ....

மற்றவர்:

படைக்கப்பட்டது உதாரணம் - உலகம்.

பதில்:

உலகம் எப்போது யாரால் படைக்கப்பட்டது நண்பரே?....

மற்றவர்:

வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்தானே அய்யா? அவர் இயற்பியல்விதிகளுக்கு உட்பட்டு பிரபஞ்ச தோற்றத்தை விவரித்து இருப்பார்.படைக்கப்பட்டதல்ல என்று தெளிவு செய்திருப்பார்

பதில்:

படைக்கப்பட்டது அல்ல என்பதுதான் எனது கருத்தும் நண்பரே!.....அதை யாராலும் மெய்ப்பிக்க முடியாது! கற்பனையான கதைகளைச் சொல்லலாமே தவிர மெய்ப்பிக்க எந்த அடிப்படையும் இல்லை! அறியாத மக்கள் நம்பும் விஷயங்கள் எல்லாம் உண்மையாகிவிடாது!....

 ஒன்று படைக்கப்பட்டது என்றால் அதற்கான மூலப் பொருளாக வேறொன்று இருந்தே ஆக வேண்டும். அந்த மூலப் பொருளை யார் படைத்திருக்க முடியும்?....சரி, அத்தகைய படைப்பாளியின் தோற்றம் எப்படி? அதை யார் படைத்தார்கள் என்று சொல்ல முடியும்?...நிச்சயம் முடியாது...

அப்படிச் சொன்னால் அது மனிதக் கற்பனையைத் தவிர வேறு இல்லை! அதனால் படைப்பு என்கிற கோட்பாடு நவீன அறிவியல் சிந்தனைகளுக்கு முன்னால் தாக்குப் பிடிக்காது!...அதனால் படைப்பு என்கிற கோட்பாடு ஆன்மிகத் தத்துவங்களுக்கு அடிப்படையாகக் கொள்வது சரியல்ல என்பது நிரூபணம் ஆகிறது!....

மற்றவர்:

ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்குவது மனித சக்தியால் சாத்தியம், எதுவுமே இல்லாமல் உருவாக்குவது இறை சக்தியால் மட்டுமே முடியும்..

பதில்:

இதை யார் கண்டு பிடித்தது? யார் மெய்ப்பிப்பது? இது ஒரு மனிதக் கருத்தே!

மற்றவர்:

குர் ஆன், பைபிள் மற்றும் தம்மம் படித்துள்ளதாக கூறினீர்கள்.. அவற்றில் கூறப்பட்டுள்ள கடவுள் தன்மைகளை உங்களால் புரிய முடிந்ததா..?

பதில்:

புரிய முடியாத எதுவும் இல்லை! அப்படி இருக்கிறது என்றால் அதை மற்றவர்கள் எப்படிப் புரிந்தார்கள்?

எந்த மறை நூல்களையும் நான் தனிப்பட விமர்சிப்பது இல்லை! காரணம் அவற்றுக்கான அடிப்படை ஒன்றே! அவை படைப்புத் தத்துவத்தை மையமாகக் கொண்டவை.....

 அவற்றில் உள்ளவை மட்டுமல்ல மற்ற அனைத்து மறை நூல்களில் உள்ளவையும் படைப்புத் தத்துவங்களே!....அவை அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கு விடை அளிக்காது!....அதனால் அவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் விளக்கினால் அதற்கு பதில் சொல்லலாம்....

மற்றவர்:

கடவுள் தன்னைக் குறித்த அறிவை தன்னுடைய வேதங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.. அந்த வேதங்களை நாம் ஆராய்ந்தால், இது மனிதனால் இயற்றப்பட்டதா அல்லது இறைவனால் கொடுக்கப்பட்டதா என்பதை நாம் அறிய முடியும்..

பதில்:

வேதங்கள் தோன்றும் முன்னால் அண்டத்தில் எதுவும் இல்லையா?...அவற்றை யார் படைத்து நிர்வகித்தார்கள்?....

மனிதன் நாகரிக வளர்ச்சி அடைவதற்கு முன்னால் அவனை எந்த வேதங்கள் வழி நடத்தின?

மற்றவர்:

விவாதத்தின் நோக்கம்.. அறிவைத்  தேடிப்  பெறுவதாக இருந்தால் அது பலன் தரும்..

பதில்:

சத்தியமான உண்மை! ஆனால் அவை உண்மைகளை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்! கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருத்தல் கூடாது!....

மற்றவர்:

இவ்வாறான கேள்விகள் நீங்கள் வேதத்தை சிந்திக்கவில்லை என்பதையே காட்டுகிறது.. எல்லாவற்றிற்க்கும் அதில் பதில் உள்ளது..

பதில்:

நான் சும்மா சொல்லவில்லை தம்பி! யாருடைய மனதையும் புண்படுத்தவும் சொல்லவில்லை! உலகம் முழுக்கவும் உண்மையான சகோதரத்துவம் மலரவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவன். அதற்காக ஆன்மிகத்தில் பெருத்த மாற்றங்களைக் கொண்டுவர நினைப்பவன்.....

அணுவுக்கு உள்ளும் அண்டத்தில் எட்டிய வரையும் உள்ள அனைத்தையும் பற்றிச் சரியாக கற்றுக்கொண்டு இருப்பவன்,,,,அதனால் தவறான அடிப்படையில் சிந்திக்கவோ தவறான முடிவை எடுக்கவோ வாய்ப்பு இல்லை! அப்படி இருந்து சுட்டிக் காட்டினால் நான் திருத்திக் கொள்வேன்!
பொறுமையாக அலசுவோம்.

மற்றவர்:

 நாம் ஒர் இரும்புத்துண்டை பாரக்கிறோம்.நம் கண்ணால் பார்க்க முடிவது அதன் வடிவத்தைத்தான் இரும்புத்துண்டின் மூலத்தைத்தேடிக்கொண்டே போனால் அது எலக்ட்ரான்கள் புரோட்டான்கள் நியூட்ரான்கள் ஆனது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.அவற்றை நம் கண்ணால் பார்க்க முடியாது.அதே மாதிரிஇந்த படைப்பும் படைக்கபட்டதையும் கடவுளின் சக்தியே

பதில்:

 உண்மை! அதனால் இரும்புத் துண்டை குறிப்பிட்ட அணு எண்கொண்ட அணுக்களால் ஆனது என்றும் அல்லது அவற்றுள் அடங்கிய எலெக்ட்ரான், புரோட்டான், நியூற்றான்களால் ஆனது என்றும் தானே சொல்ல வேண்டும்?

காரணம் அவை ஆய்வில் உணரப்பட்டவை!. ஆனால் ஆய்வில் உணரப்படாத ஒன்று அவற்றைப் படைத்தது என்று எந்த ஆய்வு உறுதிப் படுத்தும்?...

மற்றவர்:

அருமை நண்பரே....எவன் ஒருவன் தன்னை முழுவதுமாக உணர்கிறானோ அவனுக்கு தான் எல்லா உண்மையும் தெரியும்.

பதில்:

நான் நாத்திகன் அல்ல என்பதை நண்பர்களுக்கு நினைவூட்டுகிறேன்.... ஆதாவது ஆன்மிகத்தைச் சரியான பொருளில் மக்கள் உணரவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டவனாக இருக்கிறேன்....

தன்னை முழுமையாக உணர்ந்தவன் என்று யாராவது ஒருவரைச் சொல்லுங்கள் நண்பரே!.....

இப்படிச் சொல்வதையும் அதைக் கேட்பதையும் ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.... வேறென்ன?....சிந்தியுங்கள்! ஆன்மிகத்தை உண்மையான பொருளில் உணர்வதே சிறந்தது!

மற்றவர்:

விஞ்ஞானிகளே ஒப்பு கொண்டுள்ளனர் இதுகடவுளின் படைப்பு என்று

பதில்:

 எந்த விஞ்ஞானி என்ன ஒப்புக்கொண்டுள்ளார் நண்பரே?...

இப்படி நிறையச் சொல்கிறார்களே தவிர அப்படிச் சொன்ன விஞ்ஞானி யார்? அவர் அப்படிச் சொன்னதற்கு ஆதாரமாக என்ன ஆய்வுகளை மேற்கொண்டார் என்று யாராவது சொன்னார்களா?....அதுதான் முக்கியம்!.....

ஆதாவது கடவுள் வேறு நாம் வேறு என்கிற புத்தி மனிதனுக்கு இருக்கும்வரை அனைத்தையும் படைப்பாகத்தான் நினைப்பான்! ஆனால் அனைத்தையும் கடவுளின் அல்லது பரம்பொருளின் அங்கம் என்பதை உணர்ந்தால் அனைத்தும் தெளிவாகிவிடும்.

அதில் அனைத்து மக்களும் சகோதரர்களே!...அனைத்து உயிர்களும் சொந்தங்களே!...

மற்றவர்:

ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஆராய்ந்து முடிவை அறிவது அறிவியல்,

பதில்:

இல்லை நண்பரே! அது அறிவியலின் உட்கூறுகளே! மற்றபடி அணுவில் இருந்து அண்டம் ஈறாக அனைத்தையும் பற்றிய சரியான கண்ணோட்டமே அறிவியல்!....

மற்றவர்:

அறிவியல் எந்தளவிற்கு நம்பகத்தண்மை வாய்ததென்று கருதுகிறீர்கள் ஐயா?
 உள்ளார்ந்த தேடலில் அறிவியலின் முடிவைவிட,அனுபவத்தின் முடிவையே நம்புகிறேன்.

பதில்:

 அறிவியல் என்பது இயந்திரவியல் மட்டுமில்லை நண்பரே!....உலகையும் வாழ்வையும் அதில் பொதிந்துள்ள சக்திகளையும் உள்ளபடியே வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் கலை.

அது அனைத்தையும் சரியாக ஆய்வு செய்யும் திசையை நமக்கு அளிக்கிறது!

அதுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கே அடிப்படை.

அறிவியல் இல்லாமல் மனிதன் இல்லை!

மற்ற விலங்குகளில் இருந்து பாதை மாறி மற்றவற்றால் முடியாததை எண்ணத்தாலும் மொழியாலும் செயலாலும் சாதிக்கிறோம். அதற்கெல்லாம் காரணம் எதுவோ அதுதான் அறிவியல்!

அறிவியல் என்ற பெயரால் நடக்கும் அநாகரிகங்கள் அல்ல!

அறிவியல் நம்பத் தகுந்ததா என்ற கேள்விக்கே இடம் இல்லை!

நாம் மனிதனாய் வாழ்வதற்குக் காரணமே அறிவியல்தான். அது இல்லையேல் நாமும் இல்லை!

ஆனால் அறிவியலுக்கு முரணான கோட்பாடுகளால் மக்களின் அறிவை முடமாக்கி வாழும் ஒரு பகுதியினர் அறிவியலை இழிவாகப் பேசுவதைத் தங்களின் அறிவாக நினைக்கின்றனர்!

அது மடமை!

அவர்கள் அப்படிப் பேசுமளவு அவர்களின் அறிவை வளர்த்ததுகூட அறிவியல்தான்!

விலங்கு நிலையில் இருந்து மனித நிலைக்கு உயர மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அறிவியல்தான்...

அனுபவங்களால் வரையறுக்கப்படுவதும் ஒழுகு படுத்தப்படுவதும் திட்டவட்டமான நெறிமுறைகளால் கோட்பாடுகளாக மாற்றப் படுவதும்தான் அறிவியல் பாதை! அது எங்கோ இருந்து கிடைப்பதல்ல! அனுபவங்களால் நாம் கற்றுக்கொள்வதே!

மற்றவர்:

big bang theory தெரியுங்களா?இறைவன் அல்லது இறைநிலை என்ற சக்தி நிலை தன்னைத் தானே படைப்புத்தொழிலில் ஈடுபடுத்தி தன்னிலிருந்தே எல்லாவற்றையும் படைத்து நிர்வகித்து மாயையைப் படைத்து தன்னை உணராத நிலையை ஏற்படுத்தி உள்ளது

பதில்:

பிக் பேங் தியரி யில் அண்டத்தை யாரோ படைத்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதா நண்பரே?....

ஒரு மையத்தில் இருந்து வெடித்துச் சிதறிச் செல்லும் பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு புலப்படாத ஒரு புள்ளியில் வாழும் மனிதன் அவன் அறிவியல் வளர்ச்சி அடையாத துவக்க காலத்தில் சொன்ன தத்துவம்தான் படைப்புத் தத்துவம்.

மனிதன் இந்தத் தத்துவத்தைச் சொன்ன காலத்தில் அல்லது அதை நம்பிய காலத்தில் பிக் பேங் தியரியை அறிந்துதான் சொன்னார்களா?

அறிந்துதான் நம்பினார்களா?

அல்லது இப்போது படைப்புக் கோட்பாட்டை நம்பும் அனைவரும் பெருவெடிப்புக் கோட்பாட்டை அறிந்தவர்களா?.....

எதுவும் இல்லையே!.....

படைப்புக் கோட்பாடு ஆன்மிகத்துக்கு ஏற்றது அல்ல!....

அது மூட நம்பிக்கைகளையே வளர்க்கும்!...

மூட நம்பிக்கைகள் இல்லாததே உண்மையான ஆன்மிகம் ஆகும்!....

ஆதாவது எது அனைத்தையும் படைத்தது என்று சொல்கிறார்களோ அந்தக் கற்பனைப் பொருளை விட்டுவிட்டு படைக்கப்பட்டதாக நினைக்கும் அத்தனையையும் உட்பொருளாகக் கொண்ட பரம்பொருளின் ஒரு அங்கமாக நம்மையும் நாம் காணும் உணரும் அனைத்தையும் நினைத்தால் முரண்பாடற்ற ஆன்மிகத் தத்துவம் கிடைக்கும்!....

மற்றவர்:

இதைத்தான் big bang theoryயும் சொல்கிறது .அதை அறிவியல் என்று யோசித்து குழம்பத்தேவையில்லை.

பதில்:

அப்படியானால் பெருவெடிப்புக் கோட்பாடு அறிவியலுக்குச் சம்பந்தம் இல்லாத யாரோ ஒரு சாமியார் ஞானக் கண்ணால் கண்டதாக இருக்குமா?......

படைக்கப்பட்டது என்றால் படைக்கப்பட்ட ஒன்றும் படைத்த ஒன்றும் படைக்கப்பட்ட பொருளுக்கான மூலப் பொருளும் இருக்கவேண்டும்.ஆனால் படைப்புக்கான மூலப் பொருளும் இல்லாமல் எப்படி யாரால் படைக்கப்பட்டது என்கிற ஆதாரமும் இல்லாமல் படைக்கப்பட்டது என்று சொல்வது என்பது தவறு என்பதுதான் இங்கு விவாதப் பொருள்!

அது சரி என்றால் ஏற்றுக்கொள்ளலாம். தவறு என்றால் படைப்பாளியையும் மூலத்தையும் பற்றியும் அதற்கான ஆதாரத்தையும் தெளிவாக்கலாம்.

இரண்டையும் விட்டு வேறு எதுவும் சரியான பதில் ஆகாது!....ஆனால் அதுதான் தொடர்கிறது.....

ஒன்று படைக்கப்பட்டது என்றால் அதற்கான மூலப் பொருளாக வேறொன்று இருந்தே ஆக வேண்டும்.

அந்த மூலப் பொருளை யார் படைத்திருக்க முடியும்?....

சரி, அத்தகைய படைப்பாளியின் தோற்றம் எப்படி?

அதை யார் படைத்தார்கள் என்று சொல்ல முடியும்?...

நிச்சயம் முடியாது!

அப்படிச் சொன்னால் அது மனிதக் கற்பனையைத் தவிர வேறு இல்லை!

அதனால் படைப்பு என்கிற கோட்பாடு நவீன அறிவியல் சிந்தனைகளுக்கு முன்னால் தாக்குப் பிடிக்காது!...

அதனால் படைப்பு என்கிற கோட்பாடு ஆன்மிகத் தத்துவங்களுக்கு அடிப்படையாகக் கொள்வது சரியல்ல என்பது நிரூபணம் ஆகிறது!....

No comments:

Post a Comment