ss

Wednesday, June 11, 2014

அரசியல் ( 71 )

நல்லது அல்ல! ஆனால் நல்லது.....!

நமது நாட்டு அரசியலைப் பற்றி நினைத்தால் குமட்டுவது தவிர்க்க முடியாதது!...

காரணம் அத்தகைய உயர்ந்த அரசியல் நடந்ததும் நடப்பதுமே!

அந்த மாதிரி தவறான அரசியல் பண்பில் மிக முக்கியமானது ஒரு மனிதர் எப்பேர்ப்பட்ட சிறப்புக்களை உடையவராக இருந்தாலும் மிகக் கேவலமான வாழ்வு வாழ்ந்த ஒருவரிடம் தேர்தலில் தோல்வியைச் சந்திப்பது!

ஆதாவது தோற்றவர் மிக உயர்ந்தவர் என்பதும் தோற்கடித்தவர் மிகவும் தாழ்ந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்தாலும் இது நடக்கிறது!

இது மிகக் கேவலமான ஒன்று அல்லவா?

இது என்ன மாதிரி அரசியல்?

இதை எப்படி ஜனநாயகம் என்பது?

இதற்குக் காரணம் என்ன?

காரணம் ஒன்றே ஒன்றுதான்!

அவர்கள் வாக்களிக்கும் வேட்பாளர் எத்தகையவர் என்பது முக்கியம் அல்ல!
அவர் எந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் நிற்கிறார் என்பதே முக்கியம்!...

ஆதாவது வெற்றிவாய்ப்பு உள்ள கட்சியின் சார்பாக நின்றிருந்தால் வெற்றி கிடைக்கும் .

இல்லாவிட்டால் தோல்வி நிச்சயம்!

அதிலிருந்து என்ன தெரிகிறது?

தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யும்போது வேட்பாளர் என்கிற தனி நபரை விட  அவர் சார்ந்துள்ள கட்சிதான் முக்கியம் என்று நினைக்கிறார்கள் என்பதே!

அதன் காரணமாகத்தான் நல்லவர்கள் மண்ணைக் கவ்வுவதும் கெட்டவர்கள் வெல்லுவதும் நடக்கிறது!

நல்லவர்கள் தோற்பதும் கெட்டவர்கள் ஜெயிப்பதும் நல்லதா?

நிச்சயம் நல்லது அல்ல! மக்களுக்குக் கேடானது! 

ஆனாலும் அது ஏன் நடக்கிறது?

இந்த இடத்தில் நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். 

மக்கள் கெட்டவர்கள்தான் வேண்டும் என்று விரும்பி வாக்களிப்பது இல்லை!.

ஆனாலும் வாக்களிக்கிறார்கள் என்றால் அவர்கள் கெட்டவர்கள் என்பதற்காக அல்ல! 

அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை விட அவர்கள் நிற்கும் கட்சி எது என்பதைப் பார்த்தே வாக்களிக்கிறார்கள்.

காரணம் அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களால் ஆவது ஒன்றும் இல்லை! அவர்கள் சார்ந்துள்ள கட்சி சொன்னபடிதான் அவர்கள் நடக்க முடியும் என்பதே!

அது நல்லதா?....

கெட்டவர்களைத் தேர்வு செய்வதும் நல்லவர்களைப் புறக்கணிப்பதும் நல்லது அல்ல! 

ஆனால் அவர்களைப் பொருட்படுத்தாமல் கட்சிகளைப் பார்த்து வாக்களிப்பது மிகவும் நல்லதே!.....

ஆதாவது தனி நபர்களைப் பார்க்காமல் கட்சிகளைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் செயல் மிகச் சிறந்ததே!....

காரணம் என்னவென்று பார்ப்போம்!.....

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் அனைவரும் நல்லவர்களாகவே இருந்தாலும் அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சமூகப் பார்வை உடையவர்களாகவும் அரசியல் அனுபவம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களால் ஒரு நாட்டின் அரசை எப்படி பொதுக் கொள்கையுடன் அமைக்க முடியும்?.... 

அவர்களில் யார் எந்த மாதிரிப் பொறுப்புக்குத் தகுதியுடையவர்கள் என்று யார் முடிவு செய்வது?

அவர்களில் யாருக்கு பிரதேச, தேசிய, சர்வதேசப் பிரச்சினைகளைப் பற்றியும் மக்களின் தேவைகளைப் பற்றியும் பொருளாதாரத் திட்டங்கள் பற்றியும் தெரிந்திருக்க முடியும்?

அவர்களில் எத்தனை பேருக்கு தேசிய சர்வ தேச அரசியல் பற்றிய தெளிவு இருக்கும்?

அதனால் நாடு முழுக்க அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தனிநபர் தகுதிகளைப் பார்த்துத் தேர்வு செய்தாலும் அவர்களால் ஒன்று பட்டுப் பொது நோக்குடன் திட்டமிட்டுச் செயல்பட முடியாது! 

அதன் விளைவாக யாரோ ஒரு வலிமை மிக்க நபரின் சர்வாதிகாரத்துக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லாவிட்டால் சிதறிப்போய் விடுவார்கள். 

அதனால் யாதொரு பயனும் நேராது!...

அப்படியானால் நல்லவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படவும் நல்லவர்கள் மட்டுமே ஆட்சி அமைக்கவும் வாய்ப்பே இல்லையா?

நிச்சயம் இருக்கிறது!...

எப்படி?

ஆதாவது ஒரு வேட்பாளர் மக்கள் பிரதிநிதியாகச் செயல்பட முழுத் தகுதியானவரா என்பதை அவர் சார்ந்துள்ள கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும். 

அப்படித்தானே இப்போதும் நடக்கிறது?

நிச்சயம் கிடையாது!

இப்போது கட்சிகள் வேட்பாளரின் தகுதிகளாக அவருடைய சிறப்புக்களைப் பார்ப்பது இல்லை. 

மாறாக அவர் கண்மூடித் தனமாகக் கட்சித் தலைமைக்குக் கீழ்ப்படிபவராகவும் தேர்தலில் செலவு செய்ய வசதி உள்ளவராகவும், மக்களை எதையாவது சொல்லி ஏமாற்றக் கூடியவராகவும் இருந்தால் போதுமானதாக இருக்கிறது.

அப்படியானால் நல்லவர்கள் எப்படித்தான் வருவது?

மக்கள் தனி நபர்களைப் புறக்கணித்து எந்தக் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்களோ அந்தக் கட்சிகளின் தகுதி பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதும் மக்களை ஏமாற்றும் கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் எது, மக்கள் நலனில் அக்கரை கொண்ட கட்சி எது என்று உணர்ந்து ஆதரிப்பதும் ஆகும்! 

ஒவ்வொரு கட்சியின் கொள்கைகள் என்ன கோட்பாடுகள் என்ன அமைப்பு முறைகள் என்ன உள்கட்சியில் ஜனநாயகம் என்ன கட்சியில் கீழிருந்து மேல்மட்டம்வரை தவறுகளுக்கு எதிரான திட்டவட்டமான சட்ட திட்டங்கள் என்ன போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். 

பொதுவாழ்வில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்காத குணம் கொண்டவர்களாக மக்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

அப்போதுதான் அரசியல் கட்சிகள் தங்கள் அணிகளையும் தங்களால் தேர்தலில் நிறுத்தப்படுபவர்களையும் மிகச் சிறந்த சமூக சேவகர்களாக இருக்குமாறு  பார்த்துக்கொள்வார்கள்....

அப்போதுதான் அரசியல் என்ற பெயரால் மக்களை ஏமாற்றி வரும் கட்சிகள் துடைத்தெரியப்பட்டு நாட்டுப் பற்றும மக்கள் நலனும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட மக்கள் அனைவரையும் ஒருதாய் மக்களாகப் பாவிக்கும் கட்சிகள் மட்டும் அரசியலில் நிலைத்திருக்க முடியும்! 

அப்போதுதான் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, அதன் அணிகள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட  சாக்கடை அரசியலை விட்டு நாட்டுப் பற்றையும் உலக நலனையும் அடிப்படையாகக் கொண்ட உயர்ந்த அரசியலைப் பின்பற்றுவார்கள்! 

அப்படி நடக்காவிட்டால் தவறான அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்கப்பட்டுப் புதிய நல்ல அரசியல் சக்திகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. 

அப்போது மட்டுமே மக்கள் வாக்களிக்கும்போது வேட்பாளர்கள் சிறந்த அரசியலையும் சிறந்த தனிநபர் தகுதிகளையும் கொண்டிருப்பார்கள்!....

அதனால் இன்று மக்கள் தனிநபர் தகுதிகளைப் பார்க்காமல் கட்சிகளுக்காக ஓட்டளிப்பது இப்போது தவறாக இருந்தாலும் ஒரு நல்ல மாற்றத்தின் முதல் படியாகக் கருத வேண்டும். 

அதன்காரணமாக தனி நபர் வழிபாடு என்ற அரசியல் ஒழிக்கப்பட்டு உண்மையான ஜனநாயகம் மலரும்!...மலர வேண்டும்! 

No comments:

Post a Comment