ss

Wednesday, July 16, 2014

பங்கு வர்த்தகம் ( 4 )

பங்கு வர்த்தகம் பற்றி சில கருத்துக்கள்....

நண்பர்களே!

நாட்டு நடப்பையும் உலக நடப்பையும் நிறுவனங்களின் நிலையையும் சரியாகக் கணித்துச் செயல்பட்டால் பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறலாம், அப்படிச் செய்யாததால் நிறையப்பேர் ஏராளமாக இழக்கிறார்கள் என்று தினமும் தொலைக் காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் சொல்கிறார்கள்.

நான் கேட்பது என்னவென்றால் பங்கு வர்த்தகம் செய்யும் எல்லோருமே மிகச் சிறந்த நிபுணர் ஒருவரின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் அனைவரும் லாபம் ஈட்ட முடியுமா ?

ஒரு வருடத்தில் மிக அதிகமாகப் பங்கு வர்த்தகம் செய்து மிக அதிகமாக சம்பாதித்த ஒருவர் என்ன செய்தாரோ அதையே அனைவரும் செய்தால் அனைவரும் அதே அளவு லாபம் ஈட்ட முடியுமா?...

எனது இந்தக் கேள்வியை அடுத்து பல நண்பர்களுடன் நடந்த எனது உரையாடலில் நான் சொன்னவை.....

ஆதாவது சிலர் ஆதாயம் அடைய வேண்டுமானால் பலர் நட்டம் அடைந்தே தீரவேண்டும் என்பது சொல்லப்படாத நிபந்தனை. அப்படியிருக்க அனைவரும் லாபம் ஈட்ட எப்படி முடியும்? அதனால் அதில் எவ்வளவு கற்றறிந்திருந்தாலும் அனுபவம் பெற்றிருந்தாலும் அந்தத் திறனைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சி செய்யலாம். ஈட்டவும் செய்யலாம். ஆனால் பங்கு வர்த்தகத்தில் இழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது! காரணம் வெற்றிபெற்றவர்களின் லாபத்துக்கு அதுதான் அடிப்படை!....

ஒருதடவை நான் சன் நியூஸ் தொலைக் காட்சியில் ஒரு கேள்வி கேட்டேன். அந்த நிபுணர் சொன்ன பதிலுக்கும் நான் கெட்ட கேள்விக்கும் சம்பந்தமே இல்லை.

நான் கெட்ட கேள்வி:

குறைந்த விலையில் வாங்கியவர்கள் மார்கெட் உச்சத்தில் இருக்கும்போது ப்ராபிட் புக் செய்துவிட்டு வெளியில் வந்து விடவேண்டும், விலை வீழ்ச்சி அடைந்துள்ள நேரத்தில் வாங்கவேண்டும் என்கிறீர்களே உச்சத்தில் இருக்கும்போது வாங்குவதற்கும் வீழ்ந்திருக்கும்போது விற்பதற்கும் எப்படி ஆட்கள் கிடைக்கிறார்கள் ? வாங்கி விற்பவர்களும் அல்லது விற்று வாங்குபவர்களும் இந்த சூசைட் பாயிண்டை எப்படி விரும்புகிறார்கள்?

அவர் என்னென்னவோ டெக்னிகல்களைச் சொன்னாரே தவிர நேரடியாக பதில் சொல்ல வில்லை.

இனியொரு கேள்வியும் கேட்டேன்.....

நீங்கள் சொன்னபடி அனைவரும் கேட்டால் அனைவருக்கும் லாபம் கிடைக்குமா என்று....

அப்படி எல்லோரும் கேட்கமாட்டார்கள் என்றுதான் பதில் வந்தது!

ஒருக்கால் கேட்பதாக இருந்தால் நிச்சயம் அனைவருக்கும் இழப்புத்தானே ஏற்ப்படும்?...

ஆக ஒழுங்கற்ற இந்த வரவு செலவில் சரியாக திட்டமிட்டு செயல்படுபவன் காசு பார்க்கலாம். மற்றவர்கள் பற்றிக் கவலைப் படக் கூடாது என்பதே இதற்குப் பதிலாக இருக்க முடியும்!

பங்கு வர்த்தகத்தில் நிபுணர்கள் சொல்வது எல்லாமே பெரும்பாலோர் அதுபற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்ற நிலைமையை ஒட்டித்தான் ஆகும். அனைவரும் அவர்கள் சொல்லும்படி நடக்கமாட்டார்கள் என்பதை அறிந்தே எதோ அனைவரும் லாபம் பார்க்கும் யோசனைகளைத் தாங்கள் சொல்வதுபோலவும் அதைக் கேட்காததால்தான் நட்டப் படுகிறார்கள் என்பதுபோலவும் சொல்லத் தயக்கம் காட்டுவதே இல்லை!


பங்குச் சந்தை பற்றிய பலருடைய கண்ணோட்டம் பலவாக உள்ளது.

எனக்கு அது சம்பந்தமில்லாத தொழிலாக இருப்பதால் அதை எப்படிக் கையாள்வது என்ற கவலை இல்லை.

ஆனால் அதுபற்றிய என்னுடைய ஆழமான பொருளாதாரக் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

தொழில் துவங்குவோர் தங்களின் பற்றாக்குறை மூலதனத்துகாக பங்குகள் வெளியிடுவதும் அதை வாங்குவதும் அதற்காகக் கம்பெனிகள் லாபத்தில் டிவிடெண்ட் வழங்குவதும் அந்த டிவிடெண்ட்அதிகமாக இருக்கும் கம்பெனிகளின் பங்குகள் கூடுதல் விலைக்கு விற்பதும் புரிந்துகொள்ளக் கூடியதும் நியாயமானதும் ஆகும்.

ஆனால் அப்படிக் கம்பெனிகளின் பொருள் உற்பத்திக்கும் லாபத்துக்கும் டிவிடெண்ட்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் நடக்கும் எதுவும் மக்களுக்கோ நாட்டுக்கோ நல்லது அல்ல!

இதுமட்டும் மறுக்க முடியாத உண்மை!...

காரணம் அது தனி மனிதரின் பண வெறியைக் குறிக்கிறதே தவிர அதன்மூலம் எந்தப் பொருள் உற்பத்தியும் நடப்பது இல்லை!

சம்பந்தப் பட்ட நிறுவனங்களின் உயர்வு தாழ்வுக்கோ கமாடிட்டியாக இருந்தால் பொருட்களின் உண்மையான விலை உயர்வு அல்லது தாழ்வுக்கோ சம்பந்தம் இல்லை!....

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதை நடத்துபவரின் திறமைக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ப வருவாயில் குறைவு அல்லது கூடுதல் அதுதான் தொழில் .

சில மோசமான கால கட்டங்களில் சிறு இழப்புகளும் வரலாம்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் செய்யும் ஒரு தொழிலில் சிலர் தான் வருவாய் பார்க்கமுடியும் , பலர் நட்டம் அடைவதைத் தவிர்க்க முடியாது, அந்தத் தொழிலால் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை என்றால் அது தொழில் அல்ல!

சூதாட்டமே!.....

பங்குச் சந்தை அப்படி அல்ல! யாரும் இழப்பைச் சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை, மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது என்று இருந்தால் மனதாரப் பாராட்டுகிறேன்.

நண்பரே! ஒன்றுக்கு விளக்கமளியுங்கள்! பங்கு வர்த்தகத்தில் இழந்தவர்கள் ஒரு வருடத்தில் எவ்வளவு இழக்கிறார்களோ அவ்வளவு பணமும் லாபம் அடைந்தவர்களுக்குப் போகிறதா?
நீங்கள் சொன்ன முறைப்படி பின்பற்றி வர்த்தகம் செய்பவர்கள் அனைவருக்கும் லாபம் உத்திரவாதமாகக் கிடைக்குமா?
ஒரு வழிகாட்டுதல் நிபுணரால் சொல்லப் படுகிறது. அதன்படி அனைவரும் நடந்தால் அனைவருக்கும் லாபம் கிடைக்குமென்றால் இழப்பது யார்?

நான் கேட்டதற்கு நீங்கள்  சரியான பதில் அளிக்கவில்லை நண்பரே! ! நீங்கள் பங்குவர்த்தகத்தைச் சரியாகச் செய்து லாபம் ஈட்டுவது பற்றிய நுணுக்கங்களைச் சொல்கிறீர்கள். ஆனால் நான் கேட்பது ஒட்டு மொத்தமான பங்குவர்த்தகத்துக்கும் அதில் முதலீடும் வர்த்தகமும் செய்பவர்களுக்கும் உள்ள உறவுகளும் பொதுவான வழிகாட்டுதல் பற்றியும்!

ஆதாவது சிலர் ஆதாயம் அடைய வேண்டுமானால் பலர் நட்டம் அடைந்தே தீரவேண்டும் என்பது சொல்லப்படாத நிபந்தனை. அப்படியிருக்க அனைவரும் லாபம் ஈட்ட எப்படி முடியும்? அதனால் எவ்வளவு கற்றறிந்திருந்தாலும் அந்தத் திறனைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சி செய்யலாம். ஈட்டவும் செய்யலாம். ஆனால் பங்கு வர்த்தகத்தில் இழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது! காரணம் வெற்றிபெற்றவர்களின் லாபத்துக்கு அதுதான் அடிப்படை!....

ஒரு திறமையான அனலிஸ்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வரும் வருவாயில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுக்கலாம் அல்லவா?...ஆனால் அவரால் நட்டம் வராது என்பதற்கு என்ன உத்திர வாதம்?....உத்திரவாதம்(செக்யூரிட்டி) கொடுப்பாரா?
நீங்கள் சொல்வதுபோல் அனலிஸ்டுகள் சொல்படி நடந்தால் நஷ்டம் சராசரி இருபது சதம் என்று எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் லாபம்தானே? ஏன் அதுபோல் செய்யக்கூடாது?...

ஆக எந்த வகையிலும் லாபம் என்பது உத்திரவாதம் அல்ல என்று ஆகிறது. நஷ்டம் மட்டும் உத்திரவாதமாக இருக்கும் ஒரு தொழிலை எப்படித் தொழில் என்று சொல்வது? அதனால் அதற்குச் சூதாட்டம் என்ற பெயர் வந்தது!..

ஆதாவது , கப்பலே தவறான திசையில் செல்லும்போது அதில் பயணம் செய்பவர்கள் கப்பலுக்குள் கிடைக்கும் வசதிகளை நினைத்து மகிழ்ச்சி அடைய முடியாது. பங்கு வர்த்தகத்தில் கிடைக்கும் லாப நட்டம் அத்தகையதே!

எப்படி இருந்தாலும் துவக்க காலப் பங்கு வெளியீடுகள் தவிர அதன்பின்பு நடக்கிற வர்த்தகத்துக்கும் உற்பத்திக்கும் சம்பந்தம் இல்லை! மாயமான் வேட்டைதான்!....

பொருள் உற்பத்தி செய்யாமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின்மேல் எந்த மதிப்புக் கூட்டலும் செய்யாமல் நிம்மதியற்ற மன நிலையுடன் பணத்தைப் பெருக்க நடக்கும் போராட்டமான பங்கு வர்த்தகத்தின் ஆழம் தெரியாமல் காலை விட்டு அனைத்தையும் இழந்தவர்கள் அநேகம்பேர்!

இதில் பணம்பார்த்துப் பழகி விட்டால் மாதம் ஒரு லட்சம் சம்பளம் கூடப் பெரிதாகத் தோணாது! F and O வில் ஒரு வாய்ப்பில் பல வருட வருமானத்தைப் பார்த்து விடலாம் என்ற எண்ணமே வரும்!...உழைத்து வாழும் எண்ணத்தை ஒழித்துக் கட்டும் சிறந்த வழி!.....

இதில் ஈடுபட்டுப் பொய்யாகப் பணம் அடைந்தவர்களைப் பார்த்து எண்ணற்றவர்கள் செய்வது அதிவேகப் பாய்ச்சல்! பல்லு முப்பத்திரண்டும் கழன்றாலும் வேகம் குறைவது இல்லை.....

முடிவு துயரம்தான்!

No comments:

Post a Comment