ss

Wednesday, July 2, 2014

உணவே மருந்து ( 86 )

உணவில் தானியத்தின் பங்கு!

நண்பர்களே! 

உலகில் உணவு உற்பத்தி என்று கணக்கிடும்போது வருடத்துக்கு இத்தனை கோடி டன்கள் விளைந்தன என்று தானியங்களைத்தான் முதன்மையாகக் குறிப்பிடுகிறார்கள்! 

கோதுமை, நெல், சோளம், பார்லி, சிறுதானியங்கள் , அந்தந்த சூழலுக்கு ஏற்ப விளையும் தானியங்கள்,  இவற்றைத்தான் குறிப்பிடுகிறோம். 

காரணம் அவைதான் நமது உணவில் பெரும்பங்கு வகிக்கின்றன! 

ஆதாவது நாம் உண்ணும் உணவில் பெரும் பகுதியாகத் தானிய உணவுதான் விளங்குகிறது. 

அந்தத் தானிய உணவுகளுக்குப் பக்கத் துணையாகவும் சுவை கூட்டவுமே பருப்பு காய்கறி பழ வகைகள் பயன்படுத்தப் படுகின்றன. 

மனிதன் ஆதியில் நெருப்பின் பயனை அறியாத காலத்தில் பழங்களையும் கிழங்குகளையும் கொட்டைகளையும் மட்டுமேதான் உண்டு வாழ்ந்திருப்பான். அப்போது தானியங்கள் அனைவருக்கும் உணவாகக் கூடிய அளவிலும் இல்லை! அதை சமைக்காமல் உண்ண இயலாததாகவும் இருந்தது. 

அதேபோல அவன் உண்ணக்கூடிய இயற்கை உணவு கிடைக்காதபோது மற்ற வேட்டையாடும் விலங்குகளைப் போல் தானும் வேட்டையாடிப் பச்சை மாமிசத்தை உண்டும் வந்தான். 

ஆனால் காலத்தின் கட்டாயத்தாலும் தோன்றிவளர்ந்த காலங்களில் வாழ்வதற்குப் போதுமான சத்துக்கள் கிடைத்ததாலும் பெரும்பாலான நேரங்களில் பழங்களையும் கிழங்குகளையும் பச்சையாக உண்ணக்கூடிய அனைத்தையும் உண்டே வாழ்ந்தான். காரணம் அவைதான் சுவையாக இருந்தன. 

ஆனால் மனிதன் நெருப்பின் பயனை அறிந்தபின்பு நிலைமை மாறிப் போய்விட்டது. 

நெருப்பினால் சுடப்பட்ட அனைத்தும் சுவை கூடுதலாக இருந்தது. 

அதில் குறிப்பாக மாமிசம் சுவை கூடுதலாக உணரப்பட்டதால் முக்கிய உணவாக மாறுகிறது. 

ஆனால் அதன்பின் சமைத்து உண்ணும் வகையில் தானியங்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.

திரும்பத் திரும்பப் பயிர்செய்யகூடியதாக இருந்ததாலும் சமைத்து உண்டால் சுவையாக இருந்ததாலும் ஒரே இடத்தில் தங்கி விவசாயம் செய்ய ஏற்றதாக இருந்ததாலும் தானியஉணவுப் பயன்பாடு வளர்ந்து காடு திருத்தி நாடாக்கி வேளாண்மை செய்வதற்கு முக்கியக் காரணமும் ஆயிற்று!

தானிய உணவும் மாமிச உணவும் முன்னுக்கு வந்ததாலும் பழங்களைத் தவிர மற்ற  பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகளை விட அவை சுவையாக இருந்ததாலும் நீண்ட நாட்களுக்குச் சேமித்துவைக்க உகந்ததாக தானியங்கள் இருந்ததாலும் தானிய உணவு முதலிடத்தைப் பிடித்து விட்டது! 

ஆனால் கோடிக்கணக்கான வருடங்கள் உண்டு வந்த தானியம் அல்லாத உணவைக் குறைத்துக் கொண்டதாலும் தானிய உணவை அதிகப்படுத்தியதாலும் மனித இனத்தின் உடலியல் வாழ்வில் எந்த விளைவுகளும் ஏற்ப்படவில்லையா?

ஏற்பட்டது என்றே நினைக்கிறேன்.

ஆதாவது தானியம் அல்லாத உணவுகளில் கிடைத்து வந்த சத்துக்களுக்குப் பதிலாக தானிய உணவில் அடங்கியுள்ள சத்துக்களை முதன்மையாகச் சார்ந்து வாழும் நிலை ஏற்ப்படுகிறது. 

இரண்டும் ஒரே மாதிரியான சேர்மானங்களைக் கொண்டவை அல்ல! 

ஆனாலும் இயற்கையான பழங்களையும் காய்கனி கிழங்குகளையும் ஓரளவு உண்டு வந்ததன்காரணமாகவும் தானியங்களும் முழுமையாகக் காய்ந்து உலர்வதற்கு முன்னதாகப் பச்சையாகவும் உண்ணப்பட்டதாலும்  கடினமான உழைப்பை ஆதாரமாகக் கொண்டு வாழவேண்டிய சூழல் இருந்ததாலும் உணவு மாற்றத்தின் விளைவுகள் நீண்ட நெடுங்காலம் கடுமையானதாக உணரப்பட வில்லை!

காலப் போக்கில் உழைப்பு குறைந்துகொண்டே வந்தது.

சமையல் உணவு வகைகளின் உச்சகட்டமாக எண்ணற்ற விதங்களில் உணவுகள் சிதைத்து உண்ணப்பட்டன. 

பழங்களைத் தவிர இயற்கையாக அப்படியே உண்ணும் வழக்கம் கிட்டத்தட்ட நின்றுபோய் விட்டது. 

மொத்த உணவில் பழங்களின் பங்கு இயற்கை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் இல்லை! 

உழைப்பும் குறைந்ததாலும் உழைப்புக் குறைவை சமூக அந்தஸ்தாக நினைக்கும் பண்பாடு வளர்ந்தாலும் அதுகாலமும் தீங்கு விளைவிக்காமல் இருந்த உணவு மாற்றம் தீங்காகத் தலைதூக்க ஆரம்பித்தன.

ஆதாவது தானியம் அல்லாத உணவுகள் குறைந்து தானிய உணவுகள் அதிகரித்ததன் மோசமான விளைவுகள் உணரப்பட்டன. 

ஆதாவது நோய்களுக்குக் காரணங்களாகத் தானிய உணவுகள் முன்னிறுத்தப் பட்டன! 

நோய்களுக்கான பத்தியமாக பல்வேறு சமையல் உணவுகள் தடுக்கப்பட்டன! 

நோய்க் காலங்களில் உண்ணத் தக்க முக்கிய உணவாகப் பழங்களும் காய்கறி வகைகளும் முன்வைக்கப்பட்டன.

காரணம் நமது உடல் தேவைகளுக்குத் தேவையான அத்தனையும் தானிய உணவில் இல்லை என்பதும் அதில் அடங்கியுள்ள பல மிகையான சத்துக்கள் உடலில் அதிகமாகச் சேர்ந்து நோய்களாக மாறுகின்றன என்பதுமே!. 

அப்படியானால் மனிதனின் உணவுப் பழக்கங்கள் தொடர்பான வரலாறு நமக்கு என்ன கற்பிக்கிறது?

ஆதாவது தானியங்களை முக்கிய உணவாகக் கொள்வதும் பழங்கள் காய்கறிகளை தானிய உணவுக்குப் பக்க உணவுகளாகப் பயன்படுத்துவதும் தவறு என்கிற பாடத்தைக் கற்பிக்கிறது! 

ஆதாவது பழங்களையும் காய்கறிகளையும் முக்கிய உணவாகவும் தானிய உணவுகளைப் பக்க உணவுகளாகவும் கொள்வதே சிறந்தது என்ற பாடத்தைக் கற்பிக்கிறது!

அதுமட்டுமல்ல, நீண்ட நெடுங்காலம் இந்தத் தவறான விளைவுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிவந்த பழங்கள் அல்லாத இயற்கை  உணவுகள் மறைந்துபோனதால் ஏற்பட்ட தீய விளைவுகள்,  இயற்கை உணவுகள்தான் மனிதனுக்கு ஏற்ற உணவுகள் என்றும் பாடம் கற்பித்து இருக்கிறது!

மாமிச உணவும் தானிய உணவைப்போலவே நமக்கு வேண்டிய சத்துக்களை மிதமிஞ்சிக் கொடுப்பதாலும் சமைப்பதால் நேரும் தீங்குகளை உள்ளடக்கியதாக இருப்பதாலும் இவை இரண்டையும் அல்லாத உணவு வகைகளும் இயற்கை உணவுகளும் குறிப்பாகப் பழங்களே மனிதருக்கு ஏற்ற மிகச் சிறந்த உணவு என்று நிரூபிக்கப் படுகிறது!.....

அதனால் மக்களின் உணவுப் பழக்கங்கள் தானிய உணவுக்கும் அதன் ஒரு பகுதியான பருப்புக்கும் மாமிச உணவுக்கும் மிகக் குறைந்த அளவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அவையல்லாத உணவுகளுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

அதன்காரணமாக வருங்காலத்தில் உலக உணவு உற்பத்தி முறை தானியங்களுக்கு முக்கியத் துவம் கொடுக்காமல் தானியமல்லாத உணவுகளை வழங்கவல்ல செடிகளையும் பயிர்களையும் மரங்களையும் வளர்ப்பதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

தானியப் பயிர்களுக்கு செலவிடப் படும் பாசன நீர் அனைத்தையும் பயன்படுத்தி அதைவிட இரு மடங்கு அதிகப் பரப்புள்ள கனிதரும் மரங்களையும் செடிகளையும் பயிரிடலாம். 

அதன்காரணமாக நிலத்தைப் பாழ்படுத்தும் விவசாயத்தை மாற்றியமைத்து மண்ணைப் பசும் சோலைகளாக்குவதுதான் விவசாயம் என்று ஆக வேண்டும். 

அந்தத் திசையில் உணவு முறை மாற்றமும் விவசாய மாற்றமும் நிகழ்ந்தால் உலகில் பசுமையால் நிறைந்து அதன் விளைவால் மழை வளமும் அதிகமாகும் 

சங்கிலி போன்ற தொடர்விளைவு நேர்ந்து அற்புத உலகாகவும் வாழ்க்கையாகவும் இருக்கும்!....

சிந்திக்க வேண்டும்!....


















No comments:

Post a Comment