நோயறி திறன் ............
நண்பர்களே!
முன்பெல்லாம் உடல் நிலை சரி இல்லை என்று நாட்டு வைத்தியரிடமும் ஆங்கில மருத்துவரிடமும் செல்வோம்.
இருவருமே என்ன செய்கிறது என்று கேட்பார்கள்! நாடி பார்ப்பார்கள்.
தினசரி வாழ்க்கையில் உடம்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று கேட்பார்கள்.
தூக்கம், மலஜலம், பசி, போன்றவை எப்படி என்று விசாரிப்பார்கள்.
கண்களையும் விரல் நகங்களையும் நாக்கையும் கவனிப்பார்கள்.
அதன்பின்னால் நாட்டு வைத்தியர் நாட்டு மருந்துகளையும் ஆங்கில மருத்துவர் ஆங்கில மருந்துகளையும் கொடுப்பார்கள். தேவைப்பட்டால் ஆங்கில மருத்துவர்கள் ஊசிமூலமும் மருந்து செலுத்துவார்கள்.
இதன்காரணமாக ஓரளவு முதல் சற்றுக் கடுமையான நோய்கள் வரை குணப்படுத்தப்பட்டன.
காரணம் அவர்கள் நோயாளிகளைச் சோதிப்பதில் இருந்தும் விசாரிப்பதில் இருந்தும் அது என்ன நோய் என்றும் என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலும் சரியாகவே முடிவெடுத்தார்கள்!
நாட்டு மருத்துவத்தால் நோய்களைக் குணப்படுத்த முடிந்தது என்றாலும் அந்த நோய் குணமாகும்வரை வலியைப் பொறுத்துக்கொள்வதும் அவர்கள் சொல்லும் பத்திய உணவைப் பின்பற்றுவதும் கடினமாக இருந்தது.
இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் உடனடியாக வலியை நிறுத்தவும் தூங்கவைக்கவும் உதவியதோடு உணவில் பத்தியம் என்ற கடும் நிபந்தனையையும் விதிப்பதில்லை! நோயைக் குணமாக்க அதிக காலமும் எடுத்துக் கொள்வது இல்லை.
பக்க விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையாலும் உடனடி நிவாரணம் என்ற பயனாலும் மக்கள் மெல்ல மெல்ல ஆங்கில மருத்துவம்தான் சிறந்தது என்ற மனமாற்றத்துக்கு ஆளானார்கள்.
இந்த நிலையில் பெரும்பாலும் இலவச மருத்துவமாகச் செயல்பட்டு வந்த நாட்டு மருத்துவம் பலவீனமடைந்தது இயல்பானதே!
தவிர வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பொருளாதாரத் தேவைகள் நாட்டு வைத்தியர்களை மருத்துவத்தில் இருந்து மெல்ல மெல்ல விரட்டியது!
அதோடு நிறையப்பேர் மருத்துவத்தொடு மாந்திரீகம், செய் வினை யந்திரத் தகடு போன்ற பலவற்றைச் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிக்கும் வேலையும் அதிகரித்ததால் நாட்டு வைத்தியம் மக்களிடம் இருந்து மறையத் தொடங்கியது.
அதே சமயம் ஆங்கில மருத்துவம் மந்திரமும் இல்லாமல் மாயமும் இல்லாமல் நோய்களை குணப்படுத்தியதால் மக்கள் அதன்பக்கம் அடியோடு சாய்ந்தார்கள்.
அதனால் ஆங்கில மருத்துவத்துக்கும் மருத்துவர்களுக்கும் ஏற்பட்ட கிராக்கி இன்றளவும் நீடிக்கிறது.
துவக்க காலத்தில் நாட்டு வைத்தியத்தால் முடியவில்லை அல்லது பொறுமை இல்லை என்ற காரணங்களால் ஆங்கில மருத்துவர்களிடம் நோயாளிகள் சென்றதால் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ஆனாலும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்ததால் வருவாய் நிறையக் கிடைத்தது.
அந்த மருத்துவர்களும் தங்களை ஒரு தலைசிறந்த மருத்துவராக மக்கள் மதிக்கவேண்டும் என்று விரும்பியதால் தங்களின் மருத்துவத் திறனை சிறப்பாக வளர்த்துக் கொண்டார்கள்.
அதன்காரணமாக அவர்களின் நோய்கள் பற்றிய அனுமானமும் நோயறி திறனும் பெரும்பாலும் சிறப்பாக இருந்தன.
அதன் விளைவாக மருத்துவர்கள் சமூகத்தின் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டார்கள்.
ஆங்கில மருத்துவர் ஆகவேண்டும் என்பது நன்றாகப் படிக்கும் பிள்ளைளின் எதிர்காலக் கனவும் ஆனது. இன்றும் அதுதான் நிலை!
இந்நிலையில் ஆங்கில மருத்துவத்துக்கும் மருத்துவர்களுக்கும் தேவை அதிகரிக்க அதிகரிக்க அங்கு செல்லும் மக்கள் கூட்டமும் அதிகரித்தது.
அதன் காரணமாக அவர்களுடைய மூளைக்கு அதிக வேலையும் ஏற்பட்டது.
தவிர அவர்களின் நோயரி திறனை மீறிப் பல நோய்கள் கட்டுப்பட மறுக்கும் விளையும் அடிக்கடி ஏற்பட்டன.
அதன்காரணமாக அவர்களின் வேலைப் பழுவைக் குறைக்கவும் அனுமானத்தை உறுதிசெய்துகொள்ளவேணடியதுமான தேவை ஏற்பட்டது.
இந்த நிலைக்குக் கைகொடுத்தது நவீன மருத்துவமும் நோயறியும் முறைகளும் ஆய்வுக்கூட ஆய்வு முறைகளும்....நவீன உபகரணங்களும்.....
துவக்கத்தில் மருத்துவர்களின் கடினமான மருத்துவப் பணிக்குத் துணையாக வந்த சோதனை முறைகளும் சோதனைக் கருவிகளும் நாளடைவில் இளைஞனின் தோளில் ஏறிய மாயக் கிழவனைப்போல விரும்பினாலும் புறக்கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன!
அதுமட்டுமல்ல அவை மருத்துவரின் நோயறிதிறனை பலவீனப் படுத்தி அது இல்லாமல் அவர் இல்லை என்ற நிலைக்கு மருத்துவர்களை இளைய பங்காளி ஆக்கிவிட்டது.
அது மட்டுமல்லாமல் அவை ஆய்வு உதவியை மட்டும் செய்யாமல் மருத்துவர்களின் பைகளைப் பணத்தால் நிரப்பும் புண்ணிய காரியத்தையும் செய்தன!
மருத்துவர்களின் நோயறி திறனைத் துடைத்தெறிய வேறு என்ன வேண்டும்?
அது வெற்றிகரமாக நிறைவேறியது!
அதனால் இன்றைய மக்கள் மருத்துவரின் நோயறி திறனால் எளிதாகக் குணம் பெற்ற நிலை மாறி சின்னச் சின்ன உபாதைகளுக்கேல்லாம் ஆய்வுக் கருவிகளுக்கும் சேர்த்துக் கப்பம் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது!
அதனால் இன்றைய கால கட்டத்தில் இன்ன நோய் என்று அறிவதற்குப் பதிலாக, உறுதி செய்வதற்குப் பதிலாக ஒன்றும் இல்லை என்று சாதாரணமாக யூகிக்க வேண்டியவற்றுக்கெல்லாம் ஆய்வுக் கட்டணமாகக் கொள்ளையடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது!
இந்த நிலையில் மருத்துவர்களின் நோயறி திறன் மீட்கப்படுமா?
பெரும்பாலான சாதாரண நோய்களுக்கெல்லாம் கொள்ளை கொடுக்கும் மக்களின் பண விரயமும் மன உழைச்ச்சலும் தடுக்கப்படுமா?
யார் பதில் சொல்லப் போகிறார்கள்?
இதற்குத் தீர்வு என்ன?